“இரண்டு மூணு வருடங்களுக்கு முன்னாலே வந்திருந்தீங்கன்னா அப்போதைய கதையே வேறு” என்கிறார் நியாஸ் அகமது. அவரது கடை டெல்லியின் லால் சவுக்கில் இருக்கிறது. அப்போதெல்லாம் பாஸ்மினா சால்வைகள் வேண்டும் வேண்டும் என்று பல இடங்களிலிருந்து தேவை அதிகமாக இருந்திருக்கிறது. நியாஸ் அகமதும் அவரைப் போன்ற மற்ற கடைக்காரர்களுக்கும் இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் இந்த சால்வைகளை விற்க முடிந்திருக்கிறது. அவர்களுக்குக் கொஞ்சம் லாபமும் கிடைத்திருக்கிறது.
பாஸ்மினா கம்பளி சால்வைகளைப் பற்றி நான் 2016 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். சாங்தாங்கி வெள்ளாடுகளின் ரோமங்களிலிருந்து தயாராகி சில்லறை விற்பனை கடைகளுக்கு போகும் அந்த கம்பளி சால்வைகளைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். அப்போது இந்தியாவையும் மத்திய ஆசியாவையும் இணைக்கும் சில்க் சாலையைப் பற்றித் தெரிந்துகொண்டேன். பாஸ்மினா கம்பளி சால்வைகளும் பட்டும் இந்த பாதையின் வழியாக நடைபெறும் வியாபாரத்தில் கொண்டாடப்படும் சரக்குகள் ஆகும்.
சாங்தாங்கி வெள்ளாடுகளை சாங்பா நாடோடி இடையர்கள் வளர்க்கிறார்கள். அவர்கள் திபெத் பீடபூமிக்கு மேற்கில், காஷ்மீரின் லடாக் நகரின் கிழக்குப் பகுதியில் இந்தியா - சீனா எல்லைக்கு அருகில் வசிக்கிறார்கள். கடல் மட்டத்துக்கு 4000, 5000 மீட்டர்களுக்கு மேலே உள்ள அவர்களின் குடியிருப்புகளில் வாழ்வதே சிரமமானது. பாஸ்மினா வெள்ளாடுகள், செம்மறியாடுகள், சில எருதுகள் ஆகியவற்றுக்கான மேய்ச்சல் பகுதிகளை கண்டறிவதே மிகவும் சிரமம். செப்டம்பர் முதல் மே மாதம் வரையிலும் நீடிக்கிற குளிர்காலங்களில் இங்கே உயிர் வாழ்வதே மிகவும் சிரமம். எரிபொருளை சேமித்தல், குழந்தைப் பராமரிப்பு, சமைத்தல், நூற்தல், என நீண்ட வேலை நாட்கள் இங்கே உண்டு.
ஒவ்வொரு சங்பா குடும்பத்திலும் குறைந்த பட்சம் 80 முதல் 100 வரையிலான விலங்குகள் இருக்கும். பெரும்பாலோர் 100 முதல் 150 வரையும் வைத்திருப்பார்கள் . சிலர் 300க்கும் மேலாக வைத்திருப்பார்கள். பொதுவாக, வெள்ளாடுகளையும் செம்மறியாடுகளையும் சம எண்ணிக்கையில் வைத்திருப்பார்கள். ஒரு சாங்தாங்கி வெள்ளாட்டிலிருந்து ஒரு குடும்பத்துக்கு 200 முதல் 300 கிராம் வரையிலான ரோமம் ஒரு வருட காலத்தில் கிடைக்கும்.
குளிர் நடுக்கத்தோடு உதித்த, 2016 ஆம் ஆண்டின் மார்ச் மாதக் காலைப்பொழுது அது. நான் பென்சென் செரிங் என்பவரைப் பார்த்தேன். அவர் தனது ஆட்டு மந்தையை தென்கிழக்கு சாங்தாங் பகுதியிலிருந்து ஹான்லே மற்றும் சுமூர் நகரங்களுக்கு இடையில் கொண்டு வந்திருந்தார். லே பகுதியில் கூட்டுறவு சொசைட்டி இருக்கிறது. அனைத்து சாங்தாங் ஆடு மேய்ப்பவர்களும் இணைந்து அதனை உருவாக்கியிருக்கின்றனர். அரசால் நடத்தப்படுகிற லடாக் மலை மேம்பாட்டு கவுன்சிலோடு அந்த சொசைட்டி இணைக்கப்பட்டிருக்கிறது. அது ஆடு மேய்ப்பவர்களிடமிருந்து நிச்சயிக்கப்பட்ட விலைக்கு ரோமத்தை நேரடியாக வாங்கிக் கொள்கிறது. முன்பு எல்லாம் இடைத்தரகர்கள் இருந்தார்கள். அவர்கள் நியாயமான விலையை தர மாட்டார்கள். தற்போது ஒரு கிலோ ரோமத்துக்கு கிலோ 2500 முதல் 2700 வரை தருகிறார்கள்.நான்கைந்து வருடங்களாக இந்த விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஏனென்றால் இந்த ரோமத்துக்கான கிராக்கி குறைந்திருக்கிறது. பாஸ்மினா கம்பளி அல்லாத மற்ற வகையான கம்பளி சால்வைகளும் கம்பளி ஆடைகளும் பஞ்சாப் மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்து சந்தைக்கு வந்திருக்கின்றன. அது பாஸ்மினா கம்பளி வியாபாரத்தைப் பாதித்திருக்கிறது.
ஹான்லே நகருக்கு 40 கிலோமீட்டர்கள் தள்ளி நான் பெமா சொகெட் என்பவரைப் பார்த்தேன். அவரது ஆறு குழந்தைகளில் மூத்த மகள் டெஹ்சன். 23 வயதானவர். அவர் தனது குடும்பத்தின் தொழிலை தொடர்ந்து செய்வதற்கு விரும்புகிறார். “ எங்களது பாரம்பரியத்தை முன்னேக்கி கொண்டு செல்பவர் அவர்”என்கிறார் பெமா. விலங்குகள் என்றால் டெஹ்சனுக்கு கொள்ளை ஆசை. அவற்றை மேய்ப்பது என்பதும் அவருக்கு பிடித்த விசயம்.
ஆனால், எல்லோரும் அப்படி இல்லை. செங்பா ஆடு மேய்ப்பவர்களில் பலர் தாங்கள் பயன்படுத்திய தற்காலிக கூடாரங்களை விற்றுவிட்டார்கள். தாங்கள் பராமரித்து வந்த மந்தைகளையும் விற்றுவிட்டார்கள். வேறு தொழில்களுக்கு மாறுகிறார்கள். அல்லது லே நகருக்கு இடம் பெயர்ந்து விடுகிறார்கள். பெமாவின் மூத்த மகன் கூட ட்ரக் வாகன ஓட்டுநர் ஆகிவிட்டார். சாலை போடுகிற பணிகளில் இன்னொரு மகன் சுமைப் பணியாளராக இருக்கிறார். இன்னொரு மகள் லே நகரில் உள்ள ஒரு அலுவலகத்தில் பணி செய்கிறார். “ எனது நகரங்களில் உள்ள எனது குடும்ப உறுப்பினர்கள் சாதாரண வேலைகளைச் செய்பவர்களாக மாறிவிட்டார்கள்” என்கிறார் பெமா.
லே நகரில் நான் காஷ்மீர் வியாபாரிகளைச் சந்தித்தேன். அவர்கள் பாஸ்மினா ஆட்டு ரோமத்தை கூட்டுறவுகளிடமிருந்து எட்டாயிரம் ரூபாய், ஒன்பதாயிரம் ரூபாய்களுக்கு எல்லாம் வாங்குவதைப் பார்த்தேன். சில நேரங்களில் இருபதாயிரம் ரூபாய் அளவுக்குக் கூட விலை ஏறும். அது அந்த ரோமத்தின் தரத்தையும் அதற்குக் கிடைக்கிற கிராக்கியையும் பொறுத்தது. ரோமம் நீளமாக இருக்கவேண்டும். அதன் தடிமன் மெலிதாக இருக்கவேண்டும். அதுவே தரமான ரோமம். கிழக்கு லடாக் பகுதியிலிருந்து வரும் ரோமம் தான் மிகவும் தரமானது என்று அவர்கள் எனக்குச் சொன்னார்கள்.
நான் ஸ்டான்சின் டோல்மா என்பவரையும் லே நகரத்தில் பார்த்தேன். அந்தப் பெண்மணி கையால் நூல் நூற்பவர். அந்தக் கைத்தொழிலை அவர் நிறுத்திவிட்டார். “ எங்க வேலை தற்போது விசைத் தறிகளிடம் பணிந்துவிட்டது” என்று அவர் வெட்கத்துடன் சொல்கிறார். மிஷின்கள் செய்வது போல தனது கைவேலையால் வேகமாக செயல்பட முடியாது என்று நினைக்கிறார் அவர். நூல் நூற்பதில் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிற சக்கரங்கள் இருக்கின்றன. அவற்றை ‘என்தர்’ என்பார்கள். அவற்றில்தான் கம்பளி ரோமங்கள் சால்வை உருவாக்குவதற்கான நூலாக மாற்றமடையும். ஆனால், தற்போது நூல் நூற்பதற்கான விலை மதிப்புள்ள இயந்திரங்கள் வந்துவிட்டன. அவற்றை வாங்கும் அளவுக்கு வசதி உள்ள குடும்பங்கள்தான் வாங்க முடியும். அந்த இயந்திரங்கள் தற்போது பாரம்பரியமான சக்கரங்களோடு போட்டியிடுகின்றன. பழைய ஸ்ரீநகரின் நவ்கத்தா, ரெய்னவாரி பகுதிகளின் குறுகலான சந்துகளில் இந்த நவீன இயந்திரங்கள் ஓடுகிற சப்தங்களை நான் கேட்டிருக்கிறேன்.
பாஸ்மினா சால்வைகள் நெய்து முடிக்கப்பட்டவுடன், கையால் வண்ணம் தீட்டப்படுகின்றன. அதற்கான பட்டறைகள் ஸ்ரீநகரில் உள்ளன. வண்ணம் தீட்டுபவர்கள் ஒரு சால்வைக்கு 150 முதல் 200 ரூபாய் வரை சம்பாதிப்பார்கள். மற்ற கம்பளி ஆடைகளுக்கு வண்ணம் தீட்டுவதன் மூலம் மாதம் 15 ஆயிரம் - 20 ஆயிரம் ரூபாய் அவர்களால் சம்பாதிக்க முடியும். வண்ணம் தீட்டப்பட்ட சால்வைகளை கழுவுவதற்கு சீலம் நதிக்கரைக்கு அனுப்புவார்கள்.
அதற்குப் பிறகு சால்வைகளில் கைவேலைகள் தொடங்கும். கைவேலை அலங்கரிப்புகள் தலைமுறை தலைமுறையாக செய்யப்படுகிற கலை வடிவம். ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள கண்டார்பால் வட்டாரத்திலும் பாராமுல்லா மாவட்டத்தின் பண்டிபூர் மற்றும் சோபூர் தாலுகாக்களிலும் இத்தகைய கைவேலை கலைஞர்கள் உள்ளனர். ஊசியைப் பயன்படுத்தி செய்யப்படும் சில வேலைப்பாடுகள் இருக்கின்றன. பாஸ்மினா சால்வைகள் தான் அவர்களின் வாழ்வாதாரம். கலை வடிவங்களை ஊசி மூலம் பின்னுவதற்கு கம்பளி நூலை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். பட்டு நூலை பயன்படுத்தி பின்னப்படும் கலை வடிவங்களின் விலை அதிகம்.
“எங்களால் ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரங்கள்தான் வேலை செய்ய முடியும். கண்கள் களைப்படைந்துவிடும்.” என்கிறார் நசீர் அகமது. அவர் ஒரு கைவினைக் கலைஞர். ஐம்பது வயதைக் கடந்திருக்கிறார். ஊசி மூலம் வேலை செய்வதை நாள் முழுவதும் செய்ய முடியாது. பல கைவினைக் கலைஞர்கள் வயல்களில் விவசாயக் கூலி வேலைகளையும் செய்கிறார்கள். பாஸ்மினா சால்வைகளை மொத்தமாக எடுத்து வியாபாரம் செய்கிறவர்களிடமிருந்து ஒரு நாளைக்கு 200 ரூபாய் முதல் 300 வரை கிடைக்கும் என்கிறார் அகமது. அது அவருக்குத் தரப்படுகிற கலைவடிவத்தைப் பொறுத்தது. “ இந்தக் கலைத் திறமை எங்களுக்கு இயல்பாகவே வருகிறது. எங்களால் கம்யூட்டரைத் தோற்கடிக்க முடியும்” என்கிறார் அவர்.
அலங்காரப் பூ வேலைகள் அல்லது கைவேலைகள் செய்யப்பட்ட சால்வைகள் ஸ்ரீநகரில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் எடுத்துச் செல்லப்படும். அவர்கள் சில்லறை வியாபாரிகளுக்கும் மற்ற இந்திய நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்வார்கள்.
லால் சவுக்கில் உள்ள நியாஸ் அகமதின் கடைக்கு நான் 2018 நவம்பரில் போனேன். “ சால்வைகள் அடுத்தகட்டம் என்பது விலைகளின் உயர்வு. ஒரு சால்வையில் அதிகமான கலைவடிவங்கள் இருந்தால் அந்த சால்வையின் விலையும் அதிகரிக்கும். முழுவதும் கலைவடிவங்களாக உள்ள ஒரு சால்வையின் விலை ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 அல்லது 6 லட்சங்கள் வரை உயரும். கலைவடிவங்களே இல்லாத சால்வை பத்தாயிரம் ரூபாய்தான். சால்வையின் ஓரங்களில் மட்டும் கலைவடிவங்கள் போட்டவை 30ஆயிரம் அல்லது 40 ஆயிரம் வரை போகும்” என்கிறார் அவர்.
தமிழில் த நீதிராஜன்