உஸ்மானாபாத் மாவட்டத்தை இந்தாண்டு கோவிட்-19 இரண்டாவது அலை தாக்கியபோது, கதவுகள் மட்டும் அடைக்கப்படவில்லை, அவர்களுக்கு தடைகளையும் ஏற்படுத்தியுள்ளது. துளஜாபூர் வட்டாரத்தில் துளஜா பவானி கோயில் மூடப்பட்டது நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
கோவிட்-19 தொற்றில் மரணத்தின் பிடியிலிருந்து தப்பிய ஜெய்சிங் பாட்டில் பாதுகாப்பான காலம் வரும் வரை கோயிலுக்குச் செல்லப் போவதில்லை என உறுதி ஏற்றுள்ளார். “நான் ஒரு பக்தன்,” என்கிறார் அவர். “நான் மக்களின் நம்பிக்கையை மதிக்கிறேன். ஆனால் இதுபோன்ற பெருந்தொற்று காலத்தில் கோயிலைத் திறப்பது நல்லதல்ல.”
துளஜா பவானி கோயில் டிரஸ்டில் எழுத்தராக பணியாற்றுகிறார் 45 வயது பாட்டீல். “இந்தாண்டு பிப்ரவரி மாதம் நூற்றுக்கணக்கானோர் நிற்கும் வரிசையை நிர்வகிக்க சொன்னார்கள்,” என்கிறார் அவர். மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற யாத்திரை தளங்களில் இதுவும் ஒன்று என்பதால் தினமும் இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருகின்றனர். “பக்தர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்கின்றனர். கோயிலுக்குள் அவர்கள் செல்வதை தடுத்தால் அடித்துவிடுவார்கள். கூட்டத்தை நிர்வகிக்கும்போதுதான் எனக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டது.”
மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் உதவியோடு இரண்டு வாரங்களுக்கு மேல் அவர் இருந்துள்ளார். அவரது இரத்த ஆக்சிஜன் அளவு 75-80 சதவீதம் வரை ஏற்ற இறக்கம் கண்டுள்ளது. 92 சதவீதத்திற்கு குறைவாக இருந்தாலே கவலைக்குரியது என்கின்றனர் மருத்துவர்கள். “நான் எப்படியோ உயிர் பிழைத்துவிட்டேன்,” என்கிறார் ஜெய்சிங். “மாதங்கள் ஆகியும் நான் சோர்வாகவே உணர்கிறேன்.”
அவருக்கு உடல்நிலை பாதிக்கப்படுவதற்கு ஒரு மாதம் முன்பு அவரது 32 வயது சகோதரர் ஜெகதீஷ் இதேபோன்று உடல்நலம் குன்றினார். இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 80 சதவீதத்திற்கு கீழ் குறைந்து அவர் கிட்டதட்ட மூன்று வாரங்கள் மருத்துவமனையில் இருந்துள்ளார். “அவர் கோயிலில் அர்ச்சகராக இருக்கிறார்,” என்கிறார் ஜெய்சிங். “கோவிட் பாதித்த பக்தர் அருகே சென்றபோது அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. எங்கள் இருவருக்குமே மோசமான அனுபவமாக இருந்தது.”
இந்த அனுபவத்திற்கு கொடுத்த விலையும் அதிகம். இரு சகோதரர்களுக்கும் சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் செலவாகியுள்ளது. “அதிர்ஷ்டவசமாக நாங்கள் உயிர் பிழைத்துவிட்டோம். ஆனால் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர், குடும்பமே சீரழிகிறது. நீங்கள் எவ்வளவு முயன்றாலும் மனித இடைவெளி என்பது கோயில்களில் சாத்தியமே இல்லை,” என்கிறார் ஜெய்சிங்.
துளஜா பவானி கோயில் 12ஆம் நூற்றாண்டின் புனித தலம் என நம்பப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் ரூ.400 கோடி அளவிற்கு வருமானம் வருகிறது என்கிறார் துளஜாபூர் வட்டாட்சியரான சவுதாகர் டண்டாலி. துளஜாபூர் தாலுக்காவின் பொருளாதாரமே அக்கோயிலை நம்பியே உள்ளது. இனிப்பு கடைகள், புடவை கடைகள், மளிகை கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், அர்ச்சகர்களின் வீட்டுத் தேவைகள் என அனைத்தும் இங்கு வரும் பக்தர்களால் கிடைக்கும் வருவாயை நம்பியுள்ளது.
கோவிடிற்கு முன்பு கோயிலுக்கு சராசரியாக தினமும் சுமார் 50,000 பேர் வருவார்கள் என்கிறார் டண்டாலி. “நவராத்திரி பண்டிகையின்போது [செப்டம்பர்- அக்டோபர்], தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரள்வார்கள்,” என்கிறார் அவர். ஒருமுறை ஒரே நாளில் ஏழு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கோயிலில் திரண்டனர்.
ஒரு நாளுக்கு 2,000 பேர் மட்டுமே துல்ஜா நகருக்குள் நுழையும் வகையில் பக்தர்களுக்கு முன்அனுமதிச் சீட்டு வழங்க தாலுக்கா அலுவலகம் முடிவு செய்தது. இந்த எண்ணிக்கை மெல்ல உயர்ந்து 2021 ஜனவரி முதல் தினமும் 30,000 பார்வையாளர்கள் வந்தனர்
யாத்ரிகர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் உஸ்மானாபாத்திற்கு வெளியிலிருந்து வருபவர்கள் தான் என்கிறார் டண்டாலி. “அவர்கள் மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா போன்ற பல இடங்களிலும் இருந்தும் வருகின்றனர்.”
கோவிட்-19 முதல் அலைக்கு பிறகு 2020 நவம்பர் மத்தியில் கோயில் மீண்டும் திறக்கப்பட்டது ஆபத்தை ஏற்படுத்தியது. முதல் அலையின்போது கோயிலுக்கு அதிகளவு பக்தர்கள் குவிந்து தொற்று எண்ணிக்கையை அதிகப்படுத்தினர்.
2020 மார்ச் மாதம் கோயில் மூடப்பட்டதுடன், சில நாட்களில் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. எனினும் அம்மனைக் காண பக்தர்கள் வந்து கொண்டே இருந்தனர். “அவர்கள் முதன்மை வாயிலில் நின்றபடி வணங்கிச் சென்றனர்,” என்கிறார் பெயர் தெரிவிக்க விரும்பாத மாவட்ட அலுவலர் ஒருவர். “ஊரடங்கிலும் பக்தர்கள் துளஜாபூர் வந்தனர். ஏப்ரல்-மே [2020] மாதங்களில் ஒரு நாளுக்கு 5000க்கும் மேல் வந்ததால் தொற்று எண்ணிக்கை இங்கு குறையவில்லை.”
2020 மே இறுதியில் துளஜாபூர் அர்ச்சகர்கள் சுமார் 3,500 பேரிடம் மாவட்ட நிர்வாகம் பரிசோதனை செய்ததில் 20 சதவீதம் பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியானது, என்கிறார் டண்டாலி. ஜூனிலிருந்து துளஜாபூருக்குள் நுழைபவர்கள் கோவிட் தொற்று இல்லை என்ற அறிக்கையுடன் வர வேண்டும் என தாலுக்கா நிர்வாகம் அறிவுறுத்த தொடங்கியது. “இதுவே நிலைமையை கட்டுப்படுத்தியது,” என்கிறார் டண்டாலி. “முதல் அலையில் துளஜாபூர் மோசமாக பாதிக்கப்பட்டது.”
இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
சில சடங்குகளும் கரோனா வைரஸ் பரவுவதற்கு உதவியது. அவற்றில் ஒன்று அர்ச்சகர்களின் குடும்பப் பெண்கள் தயாரிக்கும் பூரண போளி எனும் இனிப்பு தட்டை ரொட்டி. போளி செய்வதற்குத் தேவையான பொருட்களுடன் வரும் பக்தர்கள் சிலவற்றை மட்டும் தின்றுவிட்டு, மிச்சத்தை அம்மனுக்கு காணிக்கையாக கொடுக்கின்றனர்.
கோவிடிற்கு முன்பெல்லாம் 62 வயது மந்தாகினி சாலுங்கி தினமும் 100க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பூரண போளி செய்தார். அவரது 35 வயது மகன் நாகேஷூம் கோயிலில் அர்ச்சகராக உள்ளார். “பண்டிகைக் காலங்களில் எவ்வளவு செய்யப்படும் என மதிப்பீடு கூட செய்தது இல்லை. என் வாழ்நாள் முழுவதும் இதைச் செய்து வருகிறேன்,” என்கிறார் அவர். “என் வாழ்வில் முதல்முறையாக இப்போது சிறிது ஓய்வு கிடைத்துள்ளது. ஆனால் முதல் அலையின் போது மக்கள் கொஞ்சம் வந்து கொண்டிருந்தனர்.”
பூரண போளி செய்வது எளிய வேலை கிடையாது. சரியான சுவையுடன், போளியை வட்டமாக தட்டி சூடான கல்லில் இருபக்கமும் போட்டு எடுக்க வேண்டும். “துல்ஜாபூரில் கைகளில் சூடு அடையாளம் இல்லாத ஒரு பெண்ணையும் பார்க்க முடியாது,” என்கிறார் நாகேஷின் 30 வயது மனைவி கல்யாணி. “நாங்கள் இப்போது ஓய்வில் இருக்கிறோம் என்றாலும், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.”
நாகேஷ் குடும்பத்தினர் இத்தொழிலை பரம்பரையாக செய்து வருகின்றனர். இது ஒன்றே அவர்களின் வருவாய் ஆதாரம். “பக்தர்கள் பருப்பு, எண்ணெய், அரிசி, பிற மளிகைப் பொருட்களையும் கொண்டு வருவார்கள்,” என்கிறார் அவர். “அவற்றில் சிலவற்றை மட்டும் பயன்படுத்தி, அவர்களுக்கு பிரசாதமாக தருவோம். மிச்சத்தை வீட்டுப் பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்வோம். பக்தர்களின் சார்பாக நாங்கள் பூஜை செய்யும்போது, அவர்கள் எங்களுக்கு உபகாரம் செய்கின்றனர். நாங்கள் [அர்ச்சகர்கள்] மாதம் ரூ.18,000 வரை ஈட்டுவோம். இப்போது அனைத்தும் நின்றுவிட்டது.”
மக்களின் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோயில் திறக்கப்படுவதை தான் ஆதரிக்கவில்லை என்று கூறி உடனடியாக தன் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துகிறார். “பொருளாதாரத்தை மீட்க மக்களின் உயிரை பணயம் வைக்கக் கூடாது. அசாதாரண சூழலை நாங்கள் புரிந்து கொள்கிறோம்,” என்கிறார் அவர். “எங்களுக்கு சிறிது நிவாரணம் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன்.”
துளஜாபூரிலிருந்து பயணிகளை வெளியேற்ற அர்ச்சகர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளின் உதவியை தாலுக்கா அலுவலகம் கோருகிறது. “தலைமை அர்ச்சகரின் உதவியோடு நாங்கள் சடங்குகளைத் தொடர்கிறோம்,” என்கிறார் டண்டாலி. “கடந்தாண்டு நவராத்திரியின் போதுகூட எங்களுக்கு பக்தர்கள் வரவில்லை. துளஜாபூருக்கு வெளியிலிருந்து யாரையும் நாங்கள் கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. அஹமத்நகரிலிருந்து [புர்ஹன்நகர் தேவி கோயில்] ஆண்டுதோறும் கோலாகலமாக பல்லக்கு வரும், ஆனால் இம்முறை எங்கும் நிற்காமல் காரில் அனுப்ப சொல்லிவிட்டோம்.”
2020 அக்டோபர் முதல் அலை ஓய்ந்தபோது, மக்கள் பாதுகாப்புகளை துறந்து பெருந்தொற்று என்பது கடந்த கால நிகழ்வு என்று நினைத்தனர்.
துளஜாபூர் கோயிலை மீண்டும் திறக்க வலியுறுத்தி 2020 நவம்பர் முதல் வாரம் போராட்டம் நடைபெற்றது. மாநில சட்டமன்ற எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) தலைமையில் போராட்டம் நடைபெற்றது. “விடுதிகள், உணவகங்கள், பார்கள் திறக்கப்பட்டன. ஆனால் கோயில் மட்டும் ஏன் திறக்கப்படக் கூடாது? ” என்கிறார் பாஜகவின் உஸ்மானாபாத் மாவட்டச் செயலாளரான குல்சந்த் வியாவஹாரி. “மக்களின் வாழ்வாதாரம் அதைச் சார்ந்துள்ளது. கோயில்களில் மட்டும் தான் கோவிட் பரவுமா?”
துளஜாபூரில் பொருளாதாரம், அரசியல், நம்பிக்கை ஆகியவை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தது என்கிறார் பெயர் தெரிவிக்க விரும்பாத தாலுக்கா அலுவலர் ஒருவர். “இதை தனியாக பிரிக்க முடியாது,” என்கிறார் அவர். “நம்பிக்கையை விட பொருளாதாரத்தை வலியுறுத்துவது மக்களுக்கு வசதியாக உள்ளது. உண்மையில் மூன்றும் சேர்ந்துதான் கோயில் மூடப்பட்டதை எதிர்க்கின்றன.”
மகாராஷ்டிரா முழுவதும் கோயில்களைத் திறக்க வலியுறுத்தி நடைபெற்ற பிரச்சாரங்கள் வெற்றி பெற்றன. 2020 நவம்பர் மத்தியில் கோயில்களைத் திறக்க முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அனுமதித்தார்.
ஒரு நாளுக்கு 2,000 பேரை மட்டுமே முன் அனுமதிச் சீட்டுடன் துளஜாபூர் நகருக்குள் நுழைவதற்கு உள்ளூர் நிர்வாகம் முடிவு செய்தது. இந்த எண்ணிக்கை மெல்ல அதிகரித்து 2021 ஜனவரி முதல் தினமும் 30,000 என அதிகரித்தது. இது நிர்வகிக்க கடினமாக இருந்தது என்கிறார் ஜெய்சிங். “30,000 பேருக்கு அனுமதிச் சீட்டு வழங்கியபோது, 10,000 பேர் அனுமதியின்றி உள்ளே நுழைய சண்டையிட்டனர். அம்மனைப் பார்க்க தொலை தூரத்திலிருந்து வரும் பக்தர்கள் மறுப்பிற்கான எந்த காரணத்தையும் ஏற்பதில்லை,” என்கிறார் அவர். “இரண்டாவது அலை தணிந்த பிறகும் நாம் மனநிறைவுடன் இருக்க முடியாது. வைரசைக் குறைத்து மதிப்பிடுவது சிலருக்கு எளிதாக இருக்கலாம். உங்களுக்கு அந்த அனுபவம் ஏற்படும் வரை புரியாது.”
துளஜாபூர் கோயிலில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தவுடன் உஸ்மானாபாத் மாவட்டத்தில் கோவிட் பாதித்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. பிப்ரவரியில் இம்மாவட்டத்தில் 380 பேருக்கு கோவிட் தொற்று பதிவானது. மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை ஒன்பது மடங்கு உயர்ந்து சுமார் 3,050 என இருந்தது. ஏப்ரலில் இது மேலும் உயர்ந்து 17,800 பேர் என பதிவாகி உஸ்மானாபாத் சுகாதார உள்கட்டமைப்பிற்கு சுமையாக மாறியது.
“துளஜாபூர் கோயிலைத் தவிர உஸ்மானாபாத்தில் வேறு எந்த இடத்திலும் இவ்வளவு கூட்டம் கூடுவதில்லை,” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத மாவட்ட அலுவலர். “கோவிட்-19 இரண்டாவது அலையின் தீவிரத்தை சந்தேகிப்பதற்கு ஒன்றுமில்லை. இது கும்பமேளாவிற்கு [உத்தரபிரதேசத்தில்] நிகரானது. ஆனால் சிறிய அளவிலானது.”
இரண்டாவது அலையின்போது துளஜாபூர் அர்ச்சகர்களிடம் கோவிட்-19 பரிசோதனை செய்தபோது, 32 சதவீதம் பேருக்கு பாசிடிவ் வந்தது. சுமார் 50 பேர் இறந்துவிட்டதாக சொல்கிறார் டண்டாலி.
உஸ்மானாபாத்தில் மொத்தமுள்ள எட்டு தாலுக்காக்களில் துளஜாபூர் தாலுக்கா தொற்று மற்றும் மரண எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. உஸ்மானாபாத் தாலுக்காவில் தொற்று மற்றும் மரண எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்குக் காரணம், அம்மாவட்டத்தின் மிகப்பெரிய பொது மருத்துவமனை அங்கு தான் உள்ளது. அங்கு தான் மாவட்டத்தின் ஆபத்தான நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.
மராத்வாடாவின் வேளாண் பிராந்தியத்தில் உஸ்மானாபாத் வருகிறது. அங்கு வறட்சி, கடன் சுமை, துயரம் போன்றவை அதிகமானதால், மகாராஷ்டிராவிலேயே விவசாயிகளின் அதிகம் தற்கொலை செய்துகொள்ளும் பகுதியாக உள்ளது. ஏற்கனவே பருவநிலை மாற்றம், தண்ணீர் தட்டுப்பாடு, வேளாண்மை நெருக்கடி போன்றவை சூழ்ந்துள்ள நிலையில் இம்மாவட்ட மக்களால் உடல்நலத்திற்காக போதிய மருத்துவ உள்கட்டமைப்பைச் சார்ந்திருக்க முடிவதில்லை.
இந்தாண்டு ஏப்ரலில், துளஜா பவானி கோயில் மீண்டும் மூடப்பட்டு அங்குள்ள சந்துகள் வெறிச்சோடி, கடைகள் அடைக்கப்பட்டு, இரண்டாவது ஆண்டாக விநோதமான அமைதி நிலைக்கு திரும்பியது.
“கோயிலை இவ்வளவு காலம் மூடி வைப்பது [அரசியல் ரீதியாக] மிகவும் ஆபத்தானது,” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத மாவட்ட அலுவலர். “இது சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தலாம்.”
பொருளாதாரம் சுழற்றி அடித்தாலும், துளஜாபூர் மக்கள் பாதுகாப்பாக இருக்கவே முடிவு செய்துள்ளனர்.
43 வயதாகும் சந்தீப் அகர்வால் நகரில் மளிகை கடை நடத்துகிறார். அவர் பேசுகையில், கோவிடிற்கு முந்தைய காலத்தில் அன்றாட விற்பனை ரூ.30,000 வரை இருக்கும் என்றும் இப்போது அது முற்றிலும் சரிந்துவிட்டது என்றார். “நாட்டில் பெரும்பாலானோர் தடுப்பூசி போடும் வரை கோயில் திறப்பதை நான் விரும்பவில்லை,” என்று மூடப்பட்ட கடைகளுக்கு முன் நின்றபடி அவர் சொல்கிறார். “நாம் ஒருமுறை தான் வாழ்கிறோம். பெருந்தொற்றில் உயிர் பிழைத்துவிட்டால், பொருளாதாரத்தை மீட்டுக் கொள்ளலாம். கோயிலைத் திறப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள் உஸ்மானாபாத்தில் வசிக்கவில்லை.”
அகர்வாலின் கருத்து சரியே.
துளஜா பவானி கோயிலினின் மஹந்தான (மூத்த அர்ச்சகர்) துகோஜிபுவா கோயில் எப்போது திறக்கும் எனக் கேட்டு ஒரு நாளில் நாடெங்கிலும் இருந்து குறைந்தது 20 தொலைப்பேசி அழைப்புகளையாவது பெற்றுவிடுகிறார். “மக்களின் உயிர் ஆபத்தில் உள்ளது என்று நான் அவர்களிடம் சொல்லி வருகிறேன். 2020, 2021 ஆண்டுகளை மருத்துவத்திற்கு அர்ப்பணித்துவிட்டதாக நாம் நினைத்துக் கொள்வோம்,” என்கிறார் அவர். “உங்கள் நம்பிக்கைக்கு [உங்களுக்கும்] இடையே வைரஸ் வரப்போவதில்லை. நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருந்து அம்மனை வழிபடுங்கள்.”
எனினும் துளஜா பவானி பக்தர்கள் அம்மனின் அருளைப் பெறுவதற்கு தனியாக வந்து கோயில் நுழைவாயிலை தொட்டுச் செல்கின்றனர் என்று மஹந்த் என்னிடம் தெரிவிக்கிறார்.
துகோஜிபுவா பேசி முடிக்கும்போது அவரது தொலைப்பேசி அழைக்கிறது. அது துளஜாபூரிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புனேவைச் சேர்ந்த பக்தருடையது.
“சாஷ்டாங்கமான நமஸ்காரம்,” என்று அவரை பக்தர் வாழ்த்துகிறார்.
“எப்படி இருக்கிறீர்கள்?” என மஹந்த் கேட்கிறார்.
“கோயிலை விரைவில் திறக்க வேண்டும்,” என்கிறார் புனே பக்தர். “கடவுள் ஒருபோதும் தவறு செய்யப்போவதில்லை,” என்கிறார் இவர். “நாம் நேர்மறையாகவே சிந்திப்போம். நம்மிடம் என்னவெல்லாம் இருக்கிறதோ, அவை துளஜா பவானி கொடுத்தது. மருத்துவர்கள் கூட இறைவனையே நம்பச் சொல்கின்றனர்.”
அவரை சமாதானப்படுத்த துகோஜிபுவா இணைய வழியில் பூஜையை பார்க்குமாறு கூறுகிறார். கோவிட்-19 ஊரடங்கு தொடங்கியது முதலே கோயிலின் சார்பில் சடங்குகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
ஆனால் அந்த பக்தர் சமாதானம் அடையவில்லை. “கோயில் கூட்டங்களால் ஒருபோதும் கோவிட் வரப்போவதில்லை,” என்று அவர் அர்ச்சகரிடம் கூறுகிறார். கோயில் மீண்டும் திறக்கும் நிமிடத்தில் 300 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து செல்வதாக அவர் உறுதியளிக்கிறார்.
தமிழில்: சவிதா