கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு குளிர்கால காலை வேளையில் அமைதியான வனவிலங்கு முகாமில் அமைக்கப்பட்டிருக்கும் கூடாரத்தில் கோண்டு ஓவியக் கலைஞரான மிதிலேஷ் குமார் சியாம் தனது பளிச்சிடும் வண்ண ஓவியங்களை ஒரு பெரிய மர மேசையில் விரித்து வைத்திருந்தார். அவர் மத்திய பிரதேசத்தின் கன்ஹா தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள பதங்கரில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாம்னி கிராமத்தில் உள்ள முகாமுக்கு காலையில் தனது குடும்பத்தின் பழைய காரில் வந்து சேர்ந்தார்.
அவரது தெளிவான மற்றும் நுணுக்கமான ஓவியங்களில் மரங்கள், பறவைகள், புலிகள் மற்றும் பிற வனவிலங்குகள் இருந்தன மேலும் அவரது கோண்டு சமூகத்தின் வளமான புராணங்களும், நவீனத்துவத்தின் யதார்த்தங்களும் இருந்தன. "சிலநேரங்களில் நான் எங்கள் நாட்டுப்புறக் கதைகளின் அடிப்படையில் வரைகிறேன். இது எங்களது பிரதான தெய்வமான பாதா தேவ் ('எல்லாம் வல்ல இறைவன்') பாணாவாக (மூன்று நரம்புகள் கொண்ட இசைக்கருவி) உருவகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் எனது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விசயங்கள் மற்றும் நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்டு அவற்றை வரைகிறேன். என் கற்பனையில் இருந்தும் என் கனவில் இருந்தும் கூட நான் சித்திரம் வரைகிறேன்", என்கிறார் 27 வயதாகும் மிதிலேஷ்.
மற்ற கோண்டு சித்திர கலைஞர்களைப் போலவே மிதிலேஷும், உள்ளே நிரப்பப்படும் நுணுக்கமான சித்திரங்களுக்கு தனக்கென ஒரு பாணியை வைத்திருக்கிறார் - அது ஒரு ஓவியத்தில் பெரிய வடிவங்களில் புள்ளிகள், கோடுகள் மற்றும் சிறிய வளைவுகளைக் கொண்டு நிரப்புவதாகும். பண்டிகை காலங்களில் கோண்டுகள் தங்களின் மண் வீட்டின் முகப்பை பாரம்பரியமாக சித்திரம் வரைந்து அழகுபடுத்துவது வழக்கம் இது அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்று அவர்கள் நம்புகிறார்கள் என்று என்னிடம் கூறினார். இப்படி அவர்களின் தெய்வங்கள், புராணங்கள் மற்றும் புனைவுகளை விளக்கும் சுவரோவியம் 'கோண்டு பிட்டி சித்திரா' என்று அழைக்கப்படுகிறது. "இதற்கு நாங்கள் பயன்படுத்தும் வர்ணங்கள் இயற்கையிலேயே கிடைக்கக்கூடியது - செடிகளின் இலைகளில் இருந்து பச்சை, பந்து பூவிலிருந்து ஆரஞ்சு, சூரியகாந்தியில் இருந்து மஞ்சள், ரோஜாவிலிருந்து அடர் இளஞ்சிவப்பு, மாட்டுச்சாணத்திலிருந்து (கோபரிலிருந்து) அரக்கு, வெண்சாந்திலிருந்து வெள்ளை மற்றும் கருப்பு களிமண்ணிலிருந்து கருப்பு ஆகியவை பெறப்படுகிறது", என்று அக்கலைஞர் விளக்குகிறார்.








