ஷிவானிகுமாருக்கு வயது 19தான். ஆனாலும் காலம் கடந்து கொண்டிருப்பதாக நினைக்கிறார்.
அவரின் குடும்பம் நான்கு வருடங்களுக்கு திருமணப் பேச்சு எடுக்காதபடி எப்படியோ சமாளித்துவிட்டார். அத்தகைய வாய்ப்பு ரொம்ப காலம் நீடிக்காது. “எத்தனை காலத்துக்கு அவர்களை தடுக்க முடியுமென எனக்கு தெரியவில்லை,” என்கிறார் அவர். “என்றோ ஒருநாள் இது முடிவுக்கு வர வேண்டும்.”
பிகாரின் சமஸ்டிப்பூர் மாவட்டத்திலுள்ள அவரின் கங்சாராகிராமத்தில் பெண்கள் வழக்கமாக பத்தாம் வகுப்பு முடிப்பதற்கு முன்பே திருமணம் செய்து கொள்வார்கள். 17, 18 வயதுகளிலேயே திருமணம் நடந்துவிடும்.
ஷிவானி (எல்ல பெயர்களும் மாற்றப்பட்டிருக்கின்றன) எப்படியோ தாக்குப்பிடித்து விட்டார். இளங்கலை வணிகவியல் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். கல்லூரிக்கு செல்வது அவரின் விருப்பங்களில் ஒன்று. ஆனால் தனியாக இருக்க வேண்டியிருக்கும் என அவர் யோசித்திருக்கவில்லை. “என்னுடைய தோழிகள் அனைவரும் திருமணம் செய்துவிட்டார்கள். என்னுடன் வளர்ந்த, பள்ளிக்கு வந்த பெண்கள் அனைவரும் சென்றுவிட்டார்கள்,” என்கிறார் அவர். சொந்த வீட்டிலிருந்து வெளிப்படையாக பேச முடியாதென்பதால் அண்டை வீட்டிலிருந்து ஒரு மதியவேளையில் பேசினார். அங்குமே வீட்டின் கொல்லைப்புறத்தில் ஆடுகள் ஓய்வெடுக்கும் பகுதியிலிருந்துதான் பேசினார். “கொரோனா வந்த சமயத்தில், என்னுடைய கடைசி தோழியும் திருமணம் செய்துவிட்டார்,” என்கிறார் அவர்.
ஷிவானியின் சமூகத்தில் மிக அரிதாகவே கல்லூரி சென்று படிக்கும் வாய்ப்பு பெண்களுக்கு கிடைப்பதாக சொல்கிறார். ரவிதாஸ் என்கிற (சமர் சாதியின் உட்பிரிவு) மகாதலித் சமூகத்தை சேர்ந்தவர். மகாதலித் என்பது 2007ம் ஆண்டு பிகார் அரசால் மிகவும் ஆதாயமற்ற 21 பட்டியல் சாதிய சமூகங்களுக்கு வழங்கப்பட்ட கூட்டுப்பெயர் ஆகும்.
மணம் முடிக்கவில்லை என சமூகம் கற்பிக்கும் களங்கமும் குடும்பத்தினர், அண்டை வீட்டார் போன்றோர் கொடுக்கும் தொடர் அழுத்தமும் அவரின் தனிமையை சுற்றி சுவராக எழும்பிக் கொண்டிருந்தது. “நான் படித்தது போதும் என்கிறார் என் தந்தை. ஆனால் நான் ஒரு காவல்துறை அதிகாரியாக விரும்புகிறேன். எனக்கு லட்சியம் இருக்குமென்று கூட அவர் யோசிக்கவில்லை. படித்துக் கொண்டே இருந்தால், யார் என்னை கட்டுவார் எனக் கேட்கிறார்,” என்கிறார் அவர். “எங்களின் சமூகத்தில் உள்ள ஆண்கள் கூட சீக்கிரமே திருமணம் செய்து கொள்கின்றனர். சில நேரங்களில் விட்டுவிடலாமா என்று கூட யோசிப்பேன். ஆனால் இத்தனை தூரம் வந்தபிறகு, என் கனவை அடையவே நான் விரும்புகிறேன்.”







