"இப்போது எங்களுக்கு கிடைக்கும் சிறிய வேலைகள் கூட இந்த வேளாண் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டால் எங்களுக்கு கிடைக்காமல் போகும்", என்று வருத்தப்படுகிறார் தாராவந்தி கவூர்.
அவர் பஞ்சாபில் உள்ள கிலியன்வாலி கிராமத்தில் இருந்து மேற்கு தில்லியில் உள்ள திக்ரி போராட்ட களத்திற்கு வந்துள்ளார். பத்தின்டா, ஃபரிக்கோட், ஜலந்தர், மோகா, முக்த்சர், பாட்டியாலா மற்றும் சங்கூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஜனவரி 7ஆம் தேதி இரவு இங்கு வந்த 1500 விவசாயத் தொழிலாளர்களில் தாராவந்தி மற்றும் சுமார் 300 பெண்கள் ஆகியோரும் உள்ளனர். இவர்கள் அனைவரும் பஞ்சாப் கேத் மஸ்தூர் யூனியனில் உறுப்பினர்கள், இந்த அமைப்பு தலித் மக்களின் வாழ்வாதாரம், நில உரிமை மற்றும் சாதிப்பாகுபாடு தொடர்பான பிரச்சனைகளுக்காக செயல்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் வாழ்வாதாரத்திற்காக விவசாய நிலங்களை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான பெண்களில் அவரும் ஒருவர் - நாட்டிலுள்ள 1443 லட்சம் விவசாயத் தொழிலாளர்களில் குறைந்தது 42 சதவிகிதம் பேர் பெண்கள்.
70 வயதாகும் தாராவந்தி முக்த்சர் மாவட்டத்தில் உள்ள மாலாவுட் தாலுகாவில் இருக்கும் தனது கிராமத்தில் கோதுமை, நெல் மற்றும் பருத்தி வயல்களில் உழைப்பதன் மூலம் நாளொன்றுக்கு 250 முதல் 300 ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார். ஆனால் முன்பு இருந்ததைப் போல இப்போது வேலைகள் கிடைப்பதில்லை என்று பசுமைப்புரட்சி வந்தது முதலாகவே தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர் என்று 1960கள் மற்றும் அதன் பின்னர் பஞ்சாபில் ஏற்பட்ட பிற விவசாய மாற்றங்களுக்கு இடையில் விவசாய இயந்திரமயமாக்கல் பஞ்சாபில் பரவலாகிவிட்டது குறித்து அவர் கூறுகிறார்.
"எனக்கு வயதாகி இருக்கலாம், ஆனால் நான் பலவீனமாகவில்லை. வேலைக் கொடுத்தால் கடினமான வேலைகளைக் கூட என்னால் செய்ய முடியும்", என்று அவர் கூறுகிறார். ஆனால் இயந்திரங்கள் எல்லாவற்றையும் கையகப்படுத்திவிட்டன. என்னை போன்ற விவசாய தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பது சிரமம் தான். எங்கள் குழந்தைகள் உணவின்றி தவிக்கின்றனர். நாளொன்றுக்கு ஒரு முறை தான் எங்களால் சரியான உணவு கொடுக்க முடியும். எங்களது பெரும்பாலான பணிகளை ஏற்கனவே எங்களிடமிருந்து எடுத்துக் கொண்டு எல்லா வரம்புகளையும் தாண்டிய அரசாங்கம் எங்கள் வாழ்க்கையை வாழும் நரகமாக மாறிவிட்டது", என்று அவர் கூறுகிறார்.
வயல்களில் இப்போது குறைவான நாட்களே வேலை கிடைப்பதால் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் தளங்களுக்கு சென்று விடுகின்றனர் என்று அவர் கூறுகிறார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கிராமப்புற இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைக்கு உத்தரவாதம் அளிக்கிறது - பஞ்சாபில் ஒரு நாளுக்கான சம்பளம் 258 ரூபாய். "ஆனால் இன்னும் எத்தனை காலம்?" என்று அவர் கேட்கிறார். "நாங்கள் நிலையான வேலைகளை கோருகிறோம். நாங்கள் தினசரி வேலையை கோருகிறோம்", என்று அவர் கூறுகிறார்.
தாராவந்தி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். "இது எங்களுக்கு எப்போதுமே மாறுபட்டதாகத் தான் இருந்தது. மேலும் நாங்கள் ஏழைகள்", என்று அவர் கூறுகிறார். "அவர்கள் (உயர்சாதியினர்) எங்களை சமமாகக் கருதுவது இல்லை. எங்களை மற்றவர்கள் மனிதர்களாகக் கூட நடத்துவதில்லை. எங்களை ஒரு பூச்சியையும் புழுவையும் போலத்தான் பார்ப்பார்கள்", என்று அவர் கூறுகிறார்.
ஆனால் நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களில் வர்க்கம், சாதி மற்றும் பாலின பாகுபாடு ஒவ்வொரு நாளும் வலுவாக வளர்ந்து வருகிறது, என்று அவர் கூறுகிறார். "இந்த முறை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வந்திருக்கிறோம். இப்போது நாங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். இந்த வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும். அனைவரும் ஒன்றுபட்டு நீதியை கோருவதற்கான நேரமிது", என்று அவர் கூறுகிறார்.
விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020
,
விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020
மற்றும்
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020
ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று சட்டங்கள். 2020 ஜூன் 5 அன்று அவை ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும்
குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை
யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.
விவசாயிகள் மற்றும் விவசாயத்தின் மீது பெரு நிறுவனங்களுக்கான அதிகார பரப்பை மேலும் இச்சட்டங்கள் அதிகப்படுத்தும், அது விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் அனைவரும் பார்க்கின்றனர். மேலும் இச்சட்டங்கள் விவசாயிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய உற்பத்தி சந்தைப்படுத்தல் குழு, மாநில கொள்முதல் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய முக்கியமான ஆதரவுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன.
"இச்சட்டங்களில் மாற்றங்களை (திருத்தங்களைச்) செய்வோம் என்று அரசாங்கம் கூறுகிறது", என்று தாராவந்தி கூறுகிறார். ஆனால் அவர்கள் முன்னர் எங்களிடம் கூறியதுபோல சட்டங்கள் சரியாக இருந்தால் இப்போது அவர்கள் ஏன் மாற்றத்தைப் பற்றி பேச வேண்டும்? இதன் பொருள் அவர்கள் இயற்றிய சட்டங்கள் ஒருபோதும் நல்லது அல்ல என்பதுதான்", என்று அவர் கூறுகிறார்.
தமிழில்: சோனியா போஸ்