"இன்று மதுபானக்கடைகள் டீ கடைகளைப் போல எல்லா இடத்திலும் பரவலாக இருக்கிறது.முன்பெல்லாம் தொலைவில் இருந்ததால் மக்கள் அங்கு செல்வதற்கு சற்று சிரமப்பட்டனர், ஆனால் இன்று 3கி.மீக்கு ஒரு கடை இருப்பதால் அவர்களால் செல்லமுடியாவிட்டாலும் ஆட்டோ ஓட்டுநர்கள் வீட்டுக்கே வந்து மதுபானத்தை கொடுக்கின்றனர்."
ஏப்ரல் 18 ஆன இன்று 32 வயதான காட்டுநாயக்கன் ஆதிவாசி இனத்தை சேர்ந்த ம.வி சாந்தினி பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க 2கி.மீ தொலைவிலுள்ள அரசு பள்ளிக்கு செல்கிறார். அவர் முன்வைக்கும் கோரிக்கை, "பதவிக்கு வரும் அரசு எதுவாயினும், பாட்டில்களால் நொறுக்கப்பட்ட எங்கள் வீடுகளின் அமைதியை மீட்டுத்தாருங்கள்” என்பதே.
15-17 வீடுகளைக் கொண்ட குக்கிராமமான மச்சிகொல்லியில் வசிக்கிறார் சாந்தினி. அவருக்கு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார என்பதே தெரியாது என்கிறார். இக்குக்கிராமமானது தமிழ்நாட்டின் நீலகிரி மக்களவை தொகுதியிலுள்ள கூடலூர் வட்டதிதிலுள்ள தேவரசோலை பேரூராட்சியின் கீழ் வருகிறது. 2014ன் கணக்குப்படி இங்குள்ள மொத்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 12.70லட்சம்.
வெற்றி பெறும் வேட்பாளர் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தெளிவான பார்வை இவர்களிடம் உள்ளது. மாநிலத்திலுள்ள பல வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களின் பெண்களைப் போல சாந்தினியும் பெருகிவரும் அரசின் மதுபான கடைகள் மூலம் பாதிக்கப்பட்டுள்ளார். 2002 முதல் அரசு மட்டுமே மதுபானங்களை தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் (TASMAC) மூலம் விற்பனை செய்கிறது.
எங்களது ஊரிலுள்ள பெரும்பாலான ஆண்கள் விவசாய கூலிகளாக உள்ளனர். அவர்களுடைய ஊதியத்தை குடித்தே செலவு செய்கின்றனர். அவர் பெரும் ரூ250 மதுவிற்கும் குடும்பத்திற்கான உணவிற்கும் போதுமானதாக இல்லை. இந்நிலையில் தான் வீட்டில் பிரச்சனை உண்டாகிறது என்கிறார் 3 குழந்தைகளின் தாயான சாந்தினி.
ஆதிவாசிகள் நெல், பழங்களிலிருந்து மது தயாரிப்பது வழக்கம். ஆனால் அரசாங்கம் கள்ளச்சாராயம் தயார் செய்வதை தடை செய்த போது இவர்கள் டாஸ்மாக் கை நாட தொடங்கினர். இன்று ஆதிவாசிகள் வாழும் பகுதிகளுக்கு அருகிலேயே டாஸ்மாக் கடைகள் வந்துவிட்டது என்கிறார் சென்னையைச் சேர்ந்த வளர்ச்சி ஆர்வலர் அ.நாராயணன்.
டாஸ்மாக்- ன் 2016-2017 க்கான நிகர ஆண்டு வருமானம் 31,418 கோடி . மாநிலத்தின் வருமானத்தில் இது ஒரு கணிசமான தொகை . எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முழு மதுவிலக்கை அமுல்படுத்த போவதில்லை. அதிகபட்சம் விற்பனை நேரம் குறைக்கப்படலாம் என்கிறார் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு.
தமிழ்நாட்டில் மதுக்கடைகள் டாஸ்மாக் மட்டுமோ அல்லது தனியாருக்கு ஏலம்விடப்பட்ட பார்களுடனோ சேர்த்து தான் இருக்கிறது. பார்களை நடத்துவதில் ஏராளமான தில்லுமுல்லு நடக்கிறது. பெரும்பாலான பார்களை உள்ளூர் அரசியல்வாதிகளே நடத்துகின்றனர் என்கிறார் நீதிபதி சந்துரு. தற்போது வரை போதை பழக்கத்தை தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்கிறார் நாராயணன். மதுப்பழக்கம் ஒரு பெரும் பிரச்சனையானாலும் டாஸ்மாக் ஆல் வரும் வருவாயை பார்க்கும் போது அரசு புலியின் வாலை பிடித்துக்கொண்டு இருக்கிறது என்று தெரிகிறது.
2019-2020 ம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டின் படி மொத்தம் 5,198 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஆனால் முதலில் இவ்வெண்ணிக்கை 7,896 ஆக இருந்தது. அரசோ, மாநிலத்தின் மது பிரச்சனையை கட்டுப்படுத்தும் நோக்கில் இக்கடைகள் மூடப்பட்டது என்கிறது. நீதிபதி சந்துரு பிற காரணங்களையும் சுட்டிக்காட்டுகிறார். அதில் ஒன்று 2017ல் வந்த உச்சநீதிமன்ற உத்தரவு, தேசிய அல்லது மாநில நெடுஞ்சாலைக்கு 500மீ சுற்றளவில் இருக்கும் மதுக்கடைகளை மூடச் செய்தது. சில இடங்களில் சாலைகளின் பெயரை மாற்றுவதன் மூலம் மீண்டும் கடைகளை திறக்க அரசு வழி செய்தது. சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி கடைகளை மீண்டும் திறந்தனர். உண்மையில் இந்த கடைக்குறைப்ப மொத்தம் 10%மே இருந்தது. சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் பள்ளி, கல்லூரிகளுக்கும் வழிபாட்டு தலங்களுக்கும் அருகில் இருக்கிறது இவை மூடப்பட வேண்டும் என்கிறார் நாராயணன்.மதுவினால் ஏற்படும் பிரச்சனை எந்தவொரு வேட்பாளரும் கண்டுகொள்ளாத ஒன்று. திமுகவின் சார்பில் அ.ராசாவும் அஇஅதிமுக வின் சார்பில் மு.தியாகராஜனும், பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் அசோக்குமாரும் போட்டியிடுகின்றனர்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பத்தின் பெண்களுக்கு தொழில் துவங்க ரூ ஐம்பதாயிரம் வழங்கப்போவதாகவும், 50லட்சம் மக்களுக்கு ரூ.பத்தாயிரம் மாத சம்பளத்தில் தனியார் நிறுவனங்களின் மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்படுமெனவும், MGNREGA வின் வேலை நாட்கள் 150 ஆக உயர்தப்படும் என்கிறது.
அஇஅதிமுக வின் தேர்தல் அறிக்கையில் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களும், ஆதரவற்ற பெண்களுக்கும், வருமானமற்ற விதவை பெண்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், ஆதரவற்ற முதியோர்களுக்கும் மாதம் ரூ 1500 வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளரும் மதுவிலக்கு குறித்து எதுவும் கூறவில்லை. உண்மையில் தேர்தலில் கவனத்தை ஈர்க்கும் பிரச்சனையாக அது இல்லை. ஒருவேளை தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சில நேரங்களில் இவை குறித்து பொதுக்கூட்டத்திலும் அவையிலும் பேசப்படலாம் என்கிறார் நீதிபதி சந்துரு.
மதுவினால் கொடுமையை அனுபவிக்கும் சாந்தினிக்கு தனது குழந்தைகளுக்கு உணவு அளிப்பதற்கு கூட பணம் இல்லை என்கிறார். அதனால் உடல்நலம் சரியில்லாமல் போனாலும் மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்வதற்கு பணம் இல்லை என்கிறார்.
அவரது கிராமத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கூடலூர் நகரில் அரசு உதவி பெறும் தனியாருக்குச் சொந்தமான அஸ்வினி சுகாதாரத் திட்டம் ஆதிவாசிகளுக்கு மானிய விலையில் சேவைகளை வழங்குகிறது. சாந்தினியின் துயரத்திற்கு அதன் நிறுவனர் டாக்டர் சைலஜா தேவி கடந்த சில ஆண்டுகளில் மதுபானம் தொடர்பான பிரச்சனைகளின் காரணமாக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என்கிறார். மூன்றில் ஒரு பெண் குடும்பத்தில் மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற பிரச்சனைகளுடன் வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பழங்குடியினரிடையே உள்ள மது அருந்துதல், மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்ய இந்நிறுவனத்தை தூண்டுகிறது என்கிறார். சில பெண்களும் மது அருந்துகின்றனர், ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.மேலும் அவர் டாஸ்மாக் கடைகள் பரவலாக எல்லா இடத்திலும் இருக்கிறது, இது எங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது என்கிறார்.சாந்தினி போன்ற பெண்களுக்கு வாழ்க்கையையே நிலைகுலைய வைக்கும் பிரச்னையாக இருக்கும் மது, வேட்பாளர்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை
சாந்தினியின் அத்தையான குல்லி "டாஸ்மாக் கடைகள் இருக்கும் தெருவில் பெண்களும், குழந்தைகளும், அமைதியுடன் நடக்க முடிவதில்லை. அரசு ஆதிவாசி பெண்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு முதல்படி டாஸ்மாக் கடைகளை மூடுவது" என்கிறார்.
ஆளும் மத்திய அரசை பற்றி என்ன நினைக்கிறார் என்று கேட்டதற்கு குல்லி, "நாங்கள் காடுகளில் வாழ்கிறோம் இங்கு டிவியோ செய்தித்தாளோ இல்லை, எங்களுக்கு அவர்களைப் பற்றி என்ன தெரியும்? எங்களது வாழ்க்கை எங்களது வாழ்வாதாரத்தை நம்பியுள்ளது, பட்டினியின்றி இருக்கவே நாங்கள் முயற்சிக்கிறோம்” என்கிறார்.
இந்த கிராமத்திற்கு ஓட்டு சேகரிப்பதற்கு எந்த ஒரு கட்சியும் இன்று (ஏப்ரல் 10) வரை வரவில்லை. அவர்கள் விரைவில் இங்கு வருவர் அப்போது எங்களுக்கு டீயும் பிஸ்கட்டும் கிடைக்கும் என்கிறார் குல்லி.
அரசாங்கத்தின் மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கை ஒருபுறமிருக்க ஏப்ரல் 18 ஆன இன்று சாந்தினி வாக்களிக்கப் போகிறார். ஆனால் குல்லி வாக்களிக்கப் போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி கேட்டபோது சாந்தினி எது எங்களுக்கு நல்ல வாக்கு என்பது பற்றி ஆதிவாசிகளாகிய எங்களுக்கு ஒன்றும் தெரியாது ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் நாங்கள் வாக்களிக்கத் தவறுவதில்லை, அதனால் இன்றும் வாக்களிக்க போகிறேன் என்கிறார்.
தமிழில்: சோனியா போஸ்