”இவை எல்லாம் எதை பற்றி எனக்கு தெரியாது. அநேகமாக மோடியுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். இங்கு நான் உணவுக்காக வருகிறேன். பசியோடு தூங்குவதை பற்றி நாங்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை,” என்கிறார் 16 வயது ரேகா (இக்கட்டுரையில் இருக்கும் பலரை போல் அவரும் தன் முதல் பெயரை பயன்படுத்தவே விரும்புகிறார்). அவர் ஒரு குப்பை பொறுக்கும் தொழிலாளி. குப்பைகளில் இருப்பவற்றில் பயன்படுத்தக் கூடியவற்றை பிரித்தெடுப்பவர். வடக்கு தில்லியின் அலிப்பூரில் வாழ்கிறார். சிங்கு போராட்ட தளத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பகுதி.
செப்டம்பரில் அமலான மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நவம்பர் 26 தொடங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் ஹரியானா தில்லி எல்லையில் இருக்கும் ஒரு தடுப்பில் அவர் இருக்கிறார். போராட்டம் பலதரப்பட்ட மக்களை ஈர்த்திருக்கிறது. விவசாயிகள், ஆதரவாளர்கள், ஆர்வமுடையவர்கள் போன்ற பலர். இன்னும் பலர் விவசாயிகளும் குருத்வாராக்களும் நடத்தும் சமூக சமையற்கூடங்களில் கிடைக்கும் இலவச உணவுகளுக்காகவே வருகின்றனர். சமையற்கூடங்களில் வேலை பார்ப்பவர்கள் பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் வரவேற்கின்றனர்.
அவர்களில் பல குடும்பங்கள் நடைபாதையிலும் குப்பங்களிலும் வசிப்பவர்கள். அவர்கள் போராட்டங்களுக்கு வருவதே உணவுக்காக மட்டும்தான். காலை 8 மணி தொடங்கி இரவு 9 மணி வரை நாள் முழுக்க உணவு வழங்கப்படுகிறது. சோறு, பருப்பு, பகோடா, லட்டு, ரொட்டி தண்ணீர், பழச்சாறு எல்லாமும் கிடைக்கிறது. மருந்துகள், போர்வைகள், சோப்புகள், காலணிகள், உடைகள் முதலிய பல பொருட்களையும் தன்னார்வலர்கள் இலவசமாக வழங்குகின்றனர்.
23 வயது ஹர்ப்ரீத் சிங்கும் ஒரு தன்னார்வலர். பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் குமான் கலன் கிராமத்தை சேர்ந்தவர். அறிவியல் பட்டப்படிப்பு படிப்பவர். “சட்டங்கள் தவறானவை என நாங்கள் எண்ணுகிறோம்,” என்கிறார் அவர். “பண்படுத்தப்பட்ட இந்த நிலங்களுக்கு எங்களின் முன்னோர்களே உரிமையாளர்கள். இப்போது அரசு எங்களை வெளியேற்ற முயலுகிறது. நாங்கள் இந்த சட்டங்களை ஆதரிக்கவில்லை. நாங்கள் ரொட்டி சாப்பிட விரும்பாவிட்டால், யாரால் எங்களை கட்டாயப்படுத்த முடியும்? இந்த சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.”தமிழில்: ராஜசங்கீதன்