கோர்டப்பு தெய்வத்தைப் போல வேடமிட்டவர்களின் நடனத்தைக் காண பெருமுடே கிராமத்தின் அந்த பெரிய வீட்டின் முன் அனைவரும் கூடியிருக்கிறார்கள். கம்பீரமான ஆடை, அணிகலன்கள் மற்றும் முகத்தில் பூசப்பட்ட மஞ்சள் வண்ணத்துடன் – அவர் மிரட்சியை ஏற்படுத்துகிறார்.
அந்த வீட்டின் உரிமையாளர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, சாமியாடிக்கு சடங்கு எண்ணெயைக் கொடுத்து குளிக்கச் செய்கிறார்கள். அவருக்கு உள்ளூர் தலித் சமூகத்தின் பண்பாட்டு நாயகரான கோர்டப்புவைப் போன்ற ஒப்பனை செய்யப்பட்ட பிறகு, அவரது குடும்பத்தினர் மகுடத்தை சூட்டுகின்றனர். கோர்டப்புவின் வீரத்தை பறைசாற்றும் வாய்மொழிக் கதைகளைக் கேட்க அனைவரும் தயாராகின்றனர். அப்போது இரவு மணி 10:30.
கழுத்துப் பட்டி, வளையல்கள், மகுடம், வெண்கலம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட முகக்கவசம், ஒளிவட்டம் பொருத்தப்பட்ட மரம், உலோகத்தாலான தலையணி, தென்னையோலைகள், மலர்கள், கிளிஞ்சல்கள், மூங்கில் மற்றும் துணியாலான அணிகலன்கள், கால்களின் வெண்கலத்தாலான தண்டைகள் ஆகியவற்றை அணிந்துகொண்டு, கையில் நெருப்பெரியும் தீவட்டையைத் தாங்கியபடி – கோர்டப்பு தெய்வம் நடனமாடினார்.
பத்தாண்டுகளுக்கு முன்னால், தக்ஷின கன்னடா மாவட்டத்தின் மங்களூர் தாலுக்காவில், இவ்வகை நடனத்தை ஆடிய கலைஞரின் பெயரை என்னால் நினைவுகூர முடியவில்லை. ஆனால், அதே தாலுக்காவின் படுபேரார் கிராமத்தைச் சேர்ந்த சாமியாடியான தயானந்த் கதால்சர், “நீங்கள் தெய்வத்தின் மீது நம்பிக்கை வைத்தால், அது உங்களுக்கு ஆறுதலைத் தரும்...” என்று சமீபத்தில் கூறினார்.
பத்தாண்டுகளுக்கு முன்னால், அன்றைய இரவில், சாமியாடி வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் குதித்து நடனமாடி தனது சக்தியைக் காட்டினார். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவரிடம் ஏன் என்னை அழைத்தாய் என்று அவர் கேட்டார். சாமியாடியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தீவட்டியைப் பிடித்திருக்க, அதன் நெருப்பைத் தொட்டு சாமியாடி தனது கைகளில் பூசிக்கொண்டார். ”சில நேரங்களில் அவர்கள் தகதகக்கும் தனலின் மீது நடப்பார்கள் அல்லது நெருப்பினூடாக ஓடுவார்கள் அல்லது எரிந்து கொண்டிருக்கும் கற்பூரத்தை வாயில் போட்டு விழுங்குவார்கள். இவை எல்லாமே அச்சம் மற்றும் பிரமிப்பை உருவாக்குவதற்காக செய்யப்படுவது” என்கிறார் கதால்சர்.
நிகழ்ச்சியை நடத்தும் குடும்பத்தினர், சாமியாடிகளுக்கு இளநீர், அரிசி, கோழிகள், கரும்பு போன்ற உணவுகளை காணிக்கையாக அளிக்கின்றனர். காணிக்கைகளால் சாமியாடிகள் சாந்தமடைந்ததும் கை விசிறிகளுடன் அமர்கின்றனர். அவரிடம் ஆசி பெற வரும் மக்களுக்கு குங்குமம், பாக்குமரப்பூவை வழங்குகின்றனர். சிலர் தங்களின் குடும்ப நிலத் தகராறு, நல்ல அறுவடைக்கான வாய்ப்பு, திருமண வரன்கள், உடல்நல பிரச்னைகள் போன்றவற்றிற்கு சாமியாடிகளிடம் தீர்வு கேட்கின்றனர். இப்போது சாமியாடி குறிகளையும், அவற்றுக்கான பரிகாரங்களையும் தெரிவிக்கிறார். “கோலாவில் [நிகழ்ச்சி] பங்கேற்கும் மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கும் அவர் தீர்வு தருகிறார்,” என்கிறார் கதால்சர்.
டிசம்பர், மே மாதங்களுக்கிடையே கோலா எனப்படும் திருவிழாக் காலங்களின் போது 75 முதல் 100 முறை கதல்சார் சாமியாடி உள்ளார். கர்நாடகாவின் தக்ஷிணா கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் இந்நிகழ்ச்சிகள் பிரபலம். மூத்த சாமியாடிகள் ஒரே இடத்தில் 2 முதல் 3 நாட்களுக்கு தொடர்ந்து இரவு பகலாக சாமியாடுவதால் நிகழ்ச்சி நடத்தும் ஒரே குடும்பத்தினர் மற்றும் பிற காணிக்கைகள் மூலம் ரூ.15,000 முதல் ரூ. 50,000 வரை பெறுகின்றனர். குறிப்பிட்ட சில பாரம்பரியமான பகுதிகளில் இதுபோன்ற நிகழ்வுகளில் அதற்கான தெய்வங்களுடன் வெவ்வேறு சாமியாடிகள் பங்கேற்கின்றனர்.
“எனது கொள்ளு தாத்தா, தாத்தாவிடமிருந்தும், பிறகு தந்தைக்கு சாமியாடும்போது உதவிகளை செய்தும் கற்றுக் கொண்டேன்,” என்கிறார் கதல்சர். “நான் கோலாவைச் சுற்றியே வளர்ந்தேன். இக்கலை வடிவத்தின் மீது எனக்கு எப்போதுமே ஆர்வம் உள்ளது. சிறிய பங்கேற்புடன் தான் தொடங்கினேன். எனது குடும்பத்தில் கிட்டத்தட்ட எல்லா தெய்வங்களையும் போல சாமியாடுவிட்டேன்.”
44 வயதாகும் கதால்சர் கர்நாடக துலு சாஹித்ய அகாடமியின் தலைவராக உள்ளார். அஞ்சல்காரராகவும், வானொலி தொகுப்பாளராகவும் (பக்தி நிகழ்ச்சிகளுக்கு) இருந்துள்ளார். குடும்பத்திற்குள் மட்டுமே இது கற்றுத் தரப்படுகிறது. “இது ஒரு பரம்பரை பயிற்சி, எனவே இதுகுடும்பத்திற்குள் மட்டுமே இருக்கிறது.”
தெய்வங்களுக்கும், பூதங்களுக்கும் இடையேயான வேறுபாட்டை, சில வார்த்தைகளை மாற்றி கதால்சர் காட்டுகிறார். இயற்கை சக்தியில் தோன்றியது அல்லது தெய்வீகமானதை தெய்வம் என்கிறார். முன்னோர்கள் அல்லது விலங்குகளின் வடிவில் வருவதை பூதம் என்றும் சொல்கின்றனர்.
“பல்வேறு சமூகங்களுக்கு என சொந்தமான பூதங்கள் அல்லது தெய்வங்கள் உள்ளன” என்கிறார் அவர். பூதங்கள் விலங்கு குணங்களை கொண்டவை – உதாரணத்திற்கு, சில பழமையான பூதங்கள் காட்டுப் பன்றிகள், புலி வடிவங்களாக இருக்கும். பழங்கால விவசாயிகள் இதுபோன்ற விலங்குகளைக் கண்டு அஞ்சினர். காலப்போக்கில் துலுவ மன்னர்களுக்கு என ராஜேந்திரா [அரச] பூதம், ஜூமாதி அல்லது ரக்தேஷ்வரி [துர்க்கை அன்னையைப் போன்றது] போன்றவை தெய்வீக குணத்தை கொண்டிருந்தன.”
தெய்வங்களுக்கும், பூதங்களுக்கும் இடையே வேறுபாடு இல்லை என்கிறார் பேரா. பி.ஏ விவேகா ராய். மங்களூர் பல்கலைக்கழகத்தில் கன்னட இலக்கியம் மற்றும் நாட்டுப்புறவியல் பேராசிரியராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். “இரண்டு சொல்லாடலுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது,” என்கிறார் அவர். துலுவா பண்பாட்டில் வழிபடப்பட்ட கிராம தெய்வங்களைத்தான் இரண்டும் குறிக்கின்றன. இரண்டு வார்த்தைகளுமே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தவை.”
பிராமண சாதி அல்லாதவர்களால் வழிபாடு செய்யப்பட்ட சிறுதெய்வங்களின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் காலனி ஆதிக்கம் மற்றும் உயர் சாதி வரலாற்றாளர்களால் தெய்வம் என்பது பூதமாக மாற்றப்பட்டது. “தெய்வம் என்ற வார்த்தைக்கு சத்தியம் என்று பொருள், அதுவே பூதம் என்றால் துலுவில் கடந்த காலம், மரணித்தவை என்று பொருள். இவை இரண்டுமே சமஸ்கிருதத்தில் இருந்த சொற்கள்தான்,” என்கிறார் கர்நாடக நாட்டுப்புறவியல் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், மங்களூர் பல்கலைக் கழகத்தின் கன்னடத்துறை முன்னாள் பேராசிரியருமான பேரா. கே. சின்னப்ப கவுடா. “இலக்கிய கோணத்தில், பாடல்களில் பார்த்தாலும் பூதம் என்றால் நாயகன் என்றுதான் பொருள். பேய் கிடையாது. உண்மையில் பூத வழிபாட்டின் முக்கியத்துவத்தைக் குறைத்தது பிராமணர்கள், மிஷனரிகள் மற்றும் காலனியர்கள்தான்.”
பிராமணர்கள் தவிர மற்ற துலு சமூகத்தினரில் பெரும்பாலானோர் பாரம்பரியமாக கோலா எனும் சாமியாட்டத்தில் ஈடுபட்டனர் என்கிறார் பேரா. ராய். போர்களில் உயிரிழந்த தலித் சமூகங்களைச் சேர்ந்த நாயகர்கள் அல்லது உயர் சாதியினரால், மன்னர்களால் கொல்லப்பட்டவர்களைத் தான் நாயகர்களாக வைத்து சில பழங்கதைகள் பேசுகின்றன. தொன்றுதொட்டு வரும் பிற கதைகள் மற்றும் சாமியாட்டங்கள் பிற சாதியினர், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட மற்ற சமூகத்தினரையும் இணைத்துள்ளன என்கிறார் பேரா. ராய்.
“15ஆம் நூற்றாண்டிலிருந்து பூதங்களுக்கான சடங்குகள் செய்யும் கருத்து நிலவி வருகிறது. 14ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரை துலுநாட்டை ஆட்சி செய்த துளுவ மன்னர்கள் பெரும்பாலும் சமணர்கள். அவர்களுக்கு பூத வழிபாட்டில் நம்பிக்கை இல்லை. பூதங்களை வழிபட்டவர்களில் முதன்மையானவர்கள் நிலச்சுவான்தார் சமூகங்களான பண்டுகள் போன்றோர். சமணர்களும் பெரும் நிலத்தை சொந்தமாக்கியதால் அவர்களும் பூத வழிபாட்டைத் தொடங்கினர். 1970ஆம் ஆண்டு நில சீர்திருத்தச் சட்டம் [1961ஆம் ஆண்டு கர்நாடகாவில் கொண்டு வரப்பட்டது] வந்தபோது பல பண்டுகளும் தங்களது பெரிய நிலங்களை இழந்தனர். பிற துளுவ சமூகத்தினர் நிலத்தைப் பெற்று மரபைத் தொடர்ந்தனர்,” என்கிறார் பேரா. ராய்.
“பல இந்து கோயில்களில் இருந்து பூதங்களை பிராமணர்கள் கையகப்படுத்தியதுடன், பூத சிவாலயங்களை புதுப்பிப்பது, தொடக்க சடங்குகளை நடத்துவது, பூத வழிபாட்டில் பிராமணிய முறையிலான சில வழிபாடுகள், சம்பிரதாயங்களைச் செய்வது என பூதங்களுக்கான சடங்குகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தொடங்கினர்…”
பம்படா சமூகம் எனும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் கதால்சர். அவரைப் போன்ற கோலா சாமியாடிகள் எப்போதுமே ஆண்கள்தான். அந்த குடும்பத்தின் பெண்கள் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடுவார்கள் - நாட்டுப்புறப் பாடலை அவர்கள் பாடுகின்றனர் (நெல் அறுக்கும்போது, வீட்டில் ஓய்வுநேரத்தில், திருவிழாக்களில், முன்பு கள் இறக்கும்போது பாடிய பாடல்கள்). “நாட்டுப்புறப் பாடல்களின் இலக்கிய மரபிற்கு சொந்தக்காரர்கள் தலித் பெண்களே,” என்கிறார் பேரா. கவுடா. “பூதங்கள் / தெய்வங்களின் தோற்றம், பரவல், சாகசங்கள் குறித்து இந்த நாட்டுப்புறப் பாடல்கள் விளக்குகின்றன. சாமியாடி சமூக பெண்களால் வாய்வழி மரபாக இவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியின் நாட்டுப்புற அறிவின் ஆதாரமாக இவர்களே இருக்கின்றனர்.”
“வயலில் விவசாயம் செய்யும்போது என் தாயும், பாட்டியும் நாட்டுப்புற பாடல்களைப் பாடுவார்கள். ஆனால் என் மனைவிக்கு நன்றாக தெரியாது என்பதால் நான் அவற்றை மனப்பாடம் செய்தேன்,” என்கிறார் கதால்சர். “ஆலயங்கள், சாமியாடும் இடங்களில் முன்பெல்லாம் பெண்கள் அனுமதிக்கப்பட்டதில்லை. சுற்றுப்புற பகுதிகளில்தான் அவர்கள் கூடுவார்கள். இன்று அனைத்து பகுதிகளிலும் அனுமதிக்கப்படுகின்றனர். இன்றும் சில இடங்களில் பூதங்கள் / தெய்வங்களிடமிருந்து பிரசாதம் பெற பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.”
கதால்சரின் மனைவி ஷைலஜா முன்னாள் அரசுப் பள்ளி ஆசிரியர். இப்போது இல்லத்தரசியாக உள்ளார். அவர்களின் ஒரே மகன் கீர்த்தன் 9ஆம் வகுப்பு படிக்கிறான். அவன் மூன்றாண்டுகளுக்கு முன் தனது முதலாவது சாமியாடலுக்கு முயற்சித்தான்.
நாட்டுப்புறப் பாடல்கள் பாடிய பிறகு, தெய்வம் / பூதம் தயாராகிறது. முதன்மை சாமியாட்டம் தொடங்குகிறது. “இது நாட்டுப்புற சடங்கு, சாதனங்கள், ஆடை அலங்காரங்கள், நடனம், பாடல், தந்திர வார்த்தைகள், காணிக்கைகள், மந்திரங்கள், சந்தனம், சாம்பல் போன்ற புனித பொருட்களை விநியோகித்தல் என சடங்கு நாடகத்தை கொண்டது,” என்கிறார் பேரா. ராய்.
“இது கோபம், எதிர்ப்பின் கூறுகளைக் கொண்ட சடங்கு நாடகம்,” என்கிறார் பேரா. கவுடா. “கோயில்களில் உள்ள இறைகள் அமைதியாக இருப்பதையும், பூதங்கள் ஆக்ரோஷமாக இருப்பதையும் கவனியுங்கள். தலித் சமூகத்தினர் சந்திக்கும் அநீதிகள், அழுத்தங்களின் வரலாற்றை இது பிரதிபலிக்கிறது.”
ஆடைகளையும், அணிகலன்களையும் ஒன்றாகச் சேர்த்தால், 60 – 70 கிலோ வரை இருக்கக்கூடும். தலையில் வைக்கும் மகுடம் 10 அடி வரை உயரம் கொண்டது. இத்தகைய எடையை எப்படி சுமக்க முடிகிறது, கால் அசைவுகளை எப்படிச் சரியாக செய்ய முடிகிறது என்று கதால்சரிடம் கேட்டால் சிரிக்கிறார். “என் தந்தை கவனித்து, கற்றுக் கொண்டதைப் போல நானும் கவனித்தேன், என் பிள்ளையும் கவனித்து கற்றுக் கொள்வான். எந்த பள்ளிக்கும் சென்று இக்கலை வடிவத்தை நாங்கள் கற்பதில்லை. எந்த குருவும் கிடையாது. இது முற்றிலும் கவனித்துச் செய்வது. இசைக்கருவிகளின் ஓசை, வெப்பம், ஆடைகள் - அனைத்தும் [தெய்வம் / பூதமாக] மாறுகின்றன.”
பத்தாண்டுகளுக்கு முன்பான அன்றைய இரவில், கோர்டப்பு தெய்வத்துடன் ராகு குளிகாவும் ஆடப்பட்டது. வெறித்தனமான முறையில் அரிசி பொரி, பச்சையாக கோழியை தின்பது ஆகியவையும் அவற்றின் அங்கம். பலி கொடுக்கப்பட்ட கோழியின் இரத்தத்தை அவர் குடித்தார். சாமியாடி பலமான ஆடைகள் அல்லது முகமூடிகள் போடுவதற்கு முன்பே கழுத்தில் சில பூமாலைகள், சில உடல் ஓவியங்கள் செய்து கொண்டு தயாராகிவிட்டார். மேடை இல்லாமல் கூட்டத்திற்கு நடுவே நகர்ந்து பார்வையாளர்களுடன் நேரடியாக உரையாடினார். இசைக் கலைஞர்களுடன் கோபம் வருவது போல சில சமயங்களில் நடிப்பது, ‘ஆட்கொள்ளப்பட்டதாக’ ஓடித் திரிவது, பிறகு பார்வையாளர்களால் கண்டிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படுவது என்று அவர் பல மணி நேரங்கள் ஆடினார்.
கோலாவின் இறுதியில் தெய்வம் / பூதம் கோயிலைச் சுற்றி நடக்கிறது, அமர்கிறது, இளைப்பாறுகிறது. கை விசிறியுடன் இருக்கும் அவரிடம் மக்கள் ஆசி பெற வருகின்றனர். மெல்ல இரவு முடியும்போது சாமியாடி பல பாத்திரங்களைச் செய்கிறார் - வனப் பாதுகாவலராக (உள்ளூர் சிறுதெய்வங்களுக்கு என புனிதமான தோப்புகள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன), உள்ளூர் பிரச்சனைகளை தீர்க்கும் கிராமப்புற நீதிமன்றமாக, பலரது ஆழ்ந்த உளவியல் உணர் தூய்மைக்கான இடமாக, கதை சொல்லியாக, தலித் சமூகத்தின் மறக்கப்பட்ட நாயகர்களின் நினைவை எழுப்புவதாக என பன்முகம் கொள்கிறார்.
தமிழில்: சவிதா