ஆண்கள் மரங்களை வெட்டி சாலையில் போட்டிருக்கின்றனர். 70, 80 மரங்கள் இருக்கும். முதல் நாள் இரவு அவர்கள் சந்தித்து பராமரிப்பில்லாத சாலைக்காக போராட முடிவெடுத்திருந்தனர். லலித்பூர் மாவட்டத்தில் அவர்கள் வாழும் பெலோனிலோத் கிராமத்திலிருந்து 40 கிலோமீட்டர் தெற்கே லலித்பூர் டவுனுக்கும் 90 கிலோமீட்டர் வடக்கே ஜான்சி நகரத்துக்கும் செல்லும் அச்சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. முன்னதாக அவர்கள் அதிகாரிகளுக்கு மனுக்கள் எழுதி போராடி வந்தனர். இப்போதுதான் முதன்முறையாக சாலையை மறித்திருக்கின்றனர்.
முதல்நாள் மாலை, கிராமத்தின் பிற பெண்களிடமிருந்து இப்போராட்டத்தை பற்றி தெரிந்து கொண்டார் 25 வயது ராஜாபெட்டி வன்ஷ்கர். காலை முழுவதும் காதுகளை கூர்மையாக்கி அவர் வைத்திருந்தார். ஆனால் எந்த தகவலும் இல்லை. 1900 பேர் வசிக்கும் கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட லோதி சாதி மக்கள் வாழும் பகுதியிலிருந்து சற்று தள்ளி வாழும் பட்டியல் சாதி சமூகமான பேசர் சாதியை சேர்ந்தவர் ராஜாபெட்டி. சித்தார்த் நகர் மாவட்டத்தின் ஜம்லா ஜாட் கிராமத்திலிருந்து பெலோநிலோத் கிராமத்துக்கு அவர் இடம்பெயர்ந்து 12 வருடங்கள் ஆகிவிட்டன. மூங்கில் கூடைகள் பின்னி மாதந்தோறும் 1000 ரூபாய் குடும்பத்துக்கு சம்பாதித்துக் கொடுக்கிறார்.
அவரின் எட்டு வயது மகனும் ஐந்து வயது மகளும் பள்ளிக்கு சென்று விட்டார்கள். கணவர் விவசாய வேலைக்கு சென்றுவிட்டார். ரொம்ப நேரம் கழித்து அவருக்கு ஏதோ சத்தம் கேட்டது. “11 அல்லது 12 மணி போல, வெற்றி முழக்கங்களை நான் கேட்டேன். ஜிந்தாபாத் என முழங்கும் குரல்கள் கேட்டது. பிற்பகலில் அடிகுழாயருகே பிற பெண்களை நான் சந்தித்தபோது, என்ன நடந்தது என்பதை மீரா தேவியிடமிருந்து தெரிந்து கொண்டேன். மாவட்ட துணை நீதிபதி இரண்டு நாட்களில் சாலையை சரி செய்வதாக உறுதி அளித்திருந்தார்,” என்கிறார் ராஜாபெட்டி.
லோதி சாதியினரின் வீடுகளிலிருந்து 100 மீட்டர் தொலைவில் இருக்கும் பேசர் சாதி குடியிருப்பில் முதல் வீடு மீரா தேவி வன்ஷ்கருடையது. அவர் வீட்டு ஜன்னல்களிலிருந்து ஆண்கள் போராடும் ஊரின் மையப்பகுதி தெரியும். சமையலறை ஜன்னலில் அவர் எட்டிப் பார்த்தார். “சாலை மேல் ஆண்கள் அமர்ந்து எந்த வாகனத்தையும் செல்ல அனுமதிக்கவில்லை. பிறகு நீதிபதியம்மா வந்தார்,” என்கிறார் 51 வயது மீரா தேவி. “சற்று நேரம் பேசினார். பிறகு கிளம்பிவிட்டார். கதவருகே நான் வந்தபோது வெளியே இருந்த இளைஞர்கள், போராட்டம் முடிந்ததெனவும் இரு நாட்களில் சாலை கட்டிக் கொடுக்கப்படுமென்றும் சொன்னார்கள். உண்மையாக இருக்க வேண்டுமென நம்புகிறேன்,” என்கிறார் அவர்.
“மோசமாக இருந்த கிராமங்கள் கூட இப்போது நன்றாக இருக்கின்றன,” என்னும் 23 வயது சந்தியா வன்ஷ்கர், “எங்கள் ஊரை பாருங்கள். உடைகளை வெளியே துவைக்கும்போது தூசு வந்து உடைகளில் படிகிறது. ஒரு திரையை கட்டி துவைக்க வேண்டியிருக்கிறது. நாங்கள் பின்னும் மூங்கில் கூடைகளிலும் தூசு சேர்கிறது.” சந்தியாவின் தந்தையும் இரண்டு சகோதரர்களும் கூலி வேலை செய்கின்றனர். அவரும் அவரின் தாயும் வீட்டை பார்த்துக் கொள்கின்றனர். மூங்கில் கூடைகள் செய்து சிறிது பணமும் ஈட்டுகின்றனர்.
மூன்று பெண்களும் சாலை கட்டப்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றனர். மேடு பள்ளமாக இருப்பதாலும் கரடுமுரடான பயணத்தாலும் மட்டும் அவர்கள் அப்படி சொல்லவில்லை. தார் போடாத சாலை கிளப்பும் தூசியால் வெறுத்துப் போய் அப்படி சொல்கின்றனர்.
போராட்டம் முடிந்தபிறகு, சில ஆண்கள் பேசுவதற்கு வெளியே அமர்ந்தனர். 53 வயது நானிபாய் லோதி அவரின் 60 வயது கணவர் கெஹார் சிங்கை மதிய சாப்பாட்டுக்கு அழைக்க வந்தார். சில மாதங்களுக்கு முன் கெஹார் சிங் சாலையில் சென்றபோது ஒரு வாகனம் சென்ற வேகத்தில் சாலையில் இருந்த ஜல்லிக் கல் பறந்து அவர் மீது பட்டுவிட்டது. “அப்போதிலிருந்து அவரை கவனமாக இருக்க நான் கேட்டிருக்கிறேன்,” என்கிறார் நானிபாய். வெளிப்படையான காயம் இல்லையெனினும் வலி இருப்பதாக கெஹார் சிங் சொல்லியிருக்கிறார். “எங்கு பார்த்தாலும் தூசாக இருக்கிறது,” என தொடர்கிறார் நானிபாய். “தண்ணீரிலும் உணவிலும் தூசு இருக்கிறது. வெளியே இருக்கும் அறையை (சாலையை பார்த்தது போல் இருக்கும் அறை) பயன்படுத்தவே முடிவதில்லை. கண்களில் தூசு விழுகிறது. கண் கலங்குகிறது. நான் தும்முகிறேன். எனக்கும் என் கணவருக்கும் சுவாசிப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது.” அவர்களின் இரு மகள்களுக்கு மணம் முடிந்துவிட்டது. 32 மற்றும் 30 வயதாகும் இரு மகன்கள் தில்லியில் வேலை பார்க்கிறார்கள். தில்லியை பற்றி நானிபாய் சொல்கையில், “அங்கும் நிலைமை நன்றாக இல்லை என கேள்விப்பட்டேன். ஆனால் அது கூட ஒரு பெரிய நகரம். எங்கள் கிராமத்தில் ஏன் இத்தனை மாசு இருக்க வேண்டும்?” எனக் கேட்கிறார்.
கோபமிருந்த போதிலும் போராட்டத்தில் சென்று நானிபாய் கலந்து கொள்ளவில்லை. “பெண்கள் வீடுகளை விட்டு வெளியே போக மாட்டார்கள்,” என்கிறார் அவர். “எது எப்படியிருந்தாலும் எங்களுக்கு ஒன்று மட்டும்தான் தேவை: ஒரு புதிய சாலை.” மாவட்ட துணை நீதிபதி வந்து போராட்டத்தை முடித்து வைத்த தகவலை அவரும் கேள்விப்பட்டிருந்தார். “சாலை போடப்படும் என உறுதியளித்திருக்கிறார். பார்ப்பதற்கு அவர் நேர்மையான அதிகாரி போல் இருந்ததால் அது நடக்கலாம்,” என்கிறார். “ஒரு வேளை பிரச்சினை நீடித்தால், நான் பொதுப்பணித்துறைக்கு எழுதச் சொல்வேன். எல்லா கிராமங்களும் முன்னேறுகையில் எங்கள் கிராமம் மட்டும் ஏன் முன்னேறக் கூடாது? நான் கூட வெளியே சென்று போராடலாம்….”
சந்தியா அதிகமாக கற்பனை செய்யவில்லை: “ஊரின் மையத்தில் பெரிய மனிதர்கள் அமர்ந்திருக்கிறார்கள். நாம் அங்கே செல்லக் கூடாது.” மேலும் ராஜாபெட்டி, “அங்கு செல்வதிலிருந்து யாரேனும் எங்களை தடுப்பார்களா என தெரியவில்லை. ஏனெனில் நாங்கள் இதுவரை முயன்றதில்லை. எங்களுக்கு தேவையானதெல்லாம்,” பெருமூச்சுவிட்டபடி, “இந்த தூசிலிருந்து விடுதலை,” என்கிறார்.
2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை போராட்டம் நடந்தது. சாலை இன்னும் போடப்படவில்லை.
தமிழில்: ராஜசங்கீதன்