இந்தப் பகுதியில் விவசாயிகளின் துயரங்களும் அதன் விளைவுகளும் அதிகரித்து வருவதால், ஜனவரி 2017இல், பண்ணை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் அடங்கிய மக்கள் சிவில் உரிமைகள் சங்கத்தின் குழுவினர், டெல்டா பகுதியில் நடக்கிற, இந்த இறப்புகளுக்கான காரணங்கள் குறித்து விசாரித்தது.
"டெல்டாவின் மூன்று மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூரில் நடைபெற்ற, 50 திடீர் மரணங்கள் மற்றும் தற்கொலைகளைப் பற்றி நாங்கள், ஆய்வு செய்தோம்" என்கிறார் திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடி நகரில் உள்ள இருதய நோய் நிபுணர் மற்றும் சமூக ஆர்வலர் டாக்டர் பாரதிச்செல்வன்.
டெல்டாவில் இதுபோன்ற சம்பவங்களை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று டாக்டர் செல்வன் கூறுகிறார். "இறந்தவர்களில் பெரும்பாலோருக்கு முன்பே இதயநோய் பிரச்சினைகள் இருந்ததாக தகவல்கள் இல்லை; பலர் இளம் வயதினர். விவசாயப் பிரச்சனைகள் மற்றும் குடும்பப் பிரச்சனைகளோடு நம்மால் இவற்றை தொடர்புபடுத்தி ஆராய முடியும். அரசாங்கம் அதை ஏற்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், திடீர் உணர்ச்சிவசப்படலும், பிரச்சனைகளின் காரணமான மன அழுத்தமும், பொருளாதாரப் பிரச்சனைகளும் இந்த மரணங்களுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று நம்புவதற்கு நமக்கு காரணங்கள் உள்ளன ” என்று அவர் கூறுகிறார். " இங்கே விவசாய நெருக்கடி மோசமடைந்து வருகிறது. அரசாங்கமோ இதைப் பற்றிய கவலை இல்லாமல் அக்கறையற்று இருக்கிறது” என்கிறார் அவர்.
நிலவுகிற வறட்சியோடும் விவசாயப் பிரச்சனைகளோடும் துயரங்களுடன் இந்தச் சம்பவங்களுக்குத் தொடர்பு இல்லை என்று தமிழக அரசு கூறுகிறது. இது உள்ளூர் பிரச்சினைகள் என்றும் உடல் நலம் தொடர்பான பிரச்சினைகள் என்றும் இல்லையென்றால் தற்செயலான மரணங்கள் என்றும் தமிழக அரசு இதனை விளக்குகிறது. உள்ளூர் விவசாயிகளிடையே உள்ள அமைப்புகளின் மதிப்பீடுகளின்படி, 2017 ஜனவரி முதல் ஜூன் வரை மாரடைப்பு காரணமாக 200 க்கும் மேற்பட்ட திடீர் மரணங்கள் இருந்தபோதிலும், அரசு அதன் விளக்கத்தில் உறுதியாக இருக்கிறது.
ஆனால், விவசாயிகளைப் பொறுத்தவரை, இவை தற்கொலைகளுக்கு மேலானவை. ஜனவரி 5, 2017 அன்று மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய அறிவிப்பின்படி, 2016 ஆம் வருடத்தின் டிசம்பர் மாதத்தில் மட்டும், 106 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இறப்புகளில் பெரும்பான்மையானவை காவிரி டெல்டாப் பகுதி அமைந்துள்ள, எட்டு மாவட்டங்களில் நடந்துள்ளன. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த மாவட்டங்களில் வாழ்கின்றனர்.
மாநில அரசு இந்த தற்கொலைகளை விவசாய நெருக்கடி தொடர்பானவை என்பதை ஏற்க மறுத்தாலும், இப்பகுதியில் இவ்வளவு குறுகிய காலத்தில் அதிர்ச்சியால் நடந்த வரிசையான மரணங்களுக்கு வறட்சி ஒரு மிகப்பெரிய காரணம் என்று தெரிகிறது. மார்ச் 2017 இல் அரசாங்கமே தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 21 மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவித்தது.
அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் தமிழ்நாடு, கடலோர ஆந்திரா, தெற்கு கர்நாடகா மற்றும் கேரளா முழுவதும் வழக்கமாக மழையைத் தரும் வடகிழக்கு பருவ காலம் 2016 இல் தோல்வியடைந்தது. அந்த பருவ காலத்தில் பெய்யும் மழை, பொதுவாக, எட்டு மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா விவசாயிகளுக்கு நெல் வளர உதவுகிறது. குளிர்காலத்தில் பயிர்கள் வளர்வதற்கு, வேறு எந்த இந்திய மாநிலத்தையும் விட, ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும், வடகிழக்கு பருவமழையை சார்ந்துள்ளது.
இந்த பிராந்தியத்தில் சில மாவட்டங்களில் இப்போது ஜூலை முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவ மழைக்கு முந்தைய மழை பெய்துள்ளது. ஆனால், 2016 ஆம் ஆண்டில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையில் 60 சதவீத பற்றாக்குறையை அரசு பதிவு செய்தது. இரு பருவ காலங்களிலும் போதுமான மழை இல்லாமல் பாதிக்கப்பட்டது தமிழ்நாடு. 2016 குளிர்காலத்தில் நெல் விதைப்பு 30 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்தது. நெல் உற்பத்தி 60 சதவீதத்துக்கு அதிகமாக குறைந்தது என்று மாநில அரசின் விவசாயத் துறையின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.