சேதுவின் மனைவி ஆறாயி ஒரு ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்திருந்தால் அவரைப் பிணமாகத் தான் பார்த்திருக்க வேண்டும். ஆறாயி வீட்டிற்குள் நுழைவதற்கும், சேது கழுத்தில் தூக்குக் கயிறை மாட்டிக் கொள்ளவும் சரியாக இருந்தது.

“கொஞ்சம் தவறியிருந்தால் செத்திருப்பேன்” என்கிறார் சேது என்கிற கே. லேகன். குறு விவசாயியான சேது தன்னுடைய விபரீத விளையாட்டு நிறைவேறாமல் போனதற்குப் பெருமூச்சு விடுகிறார். ஆறாயி அலறி கதறியதால், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் விரைந்து வந்து, சேதுவை தரைக்கு இறக்கினார்கள். அந்தக் கணம் அத்தோடு கடந்தது.

அது நவம்பர் 6, 2016. ஐம்பதுகளில் இருந்த சேது தன்னுடைய ஒன்றரை ஏக்கர் நிலத்திற்குப் போனார். எப்படித் தன்னுடைய நெற்பயிரை காக்கப் போகிறோம் என்கிற எண்ணமே அவருக்கு வேதனை தந்தது. தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் தாயனூரில் உள்ள அவரின் களை இழந்த வயலின் காட்சியே அவரைக் குலைத்தது. இரண்டாம் முறையாக விதை விதைத்தும் நெற்கதிர்கள் முளைவிடவே இல்லை.

“நான் மாலை வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். என் மனைவியும், மகன்களும் வேறு வயல்களில் கூலி வேலைக்குப் போயிருந்தார்கள். எப்படி வாங்கிய கடன்களை அடைப்பது, எப்படி வாழ்க்கையை ஓட்டுவது என்றெல்லாம் யோசித்தேன். என்ன செய்வது என்றே புலப்படாத நிலையில் தற்கொலை முடிவை எடுத்தேன்.” என்கிற சேதுவுக்கு மாவட்ட கூட்டுறவு வங்கி, தனியார் கடனாளர்கள் ஆகியோரிடம் வாங்கிய கடன் ஒன்றரை லட்சம் உள்ளது

சேதுவின் தற்கொலை முயற்சி நடந்து சில மாதங்கள் கழித்து, ஏப்ரல்-மே 2017 மாதங்களில் காவிரி டெல்டா பகுதியை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். வாயில் எலிகளைக் கவ்வியபடியும், மனித மண்டை ஓடுகளை ஏந்தியபடியும், தரையில் தவழ்ந்தும், புரண்டும் பல்வேறு முறைகளில் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். தங்களுடைய கடனை தள்ளுபடி செய்யவேண்டும் எனப் போராடினார்கள். இந்தப் பகுதியை சேர்ந்த பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள், பிறர் அதிர்ச்சி தாளாமல் மாரடைப்பில் இறந்து போனார்கள்.

ஜனவரி 2017-ல் மனித உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பினர் (People’s Union For Civil Liberties) இந்தப் பகுதிக்கு வருகை தந்தார்கள். விவசாயச் செயற்பாட்டாளர்கள், சமூகச் சேவகர்கள், மாணவர்கள், மருத்துவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழு இப்பகுதியில் ஏற்பட்ட ஐம்பது திடீர் மரணங்கள், தற்கொலைகள் குறித்து ஆய்வு செய்தார்கள். உள்ளூர் விவசாய அமைப்புகள் மாரடைப்பால் ஜனவரி-ஜூன் 2017 காலத்தில் இறந்து போனவர்கள் எண்ணிக்கை இருநூறு இருக்கும் என்கின்றன. டிசம்பர் 2016 மாதத்தில் மட்டும் 106 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு ஜனவரி 5, 2017-ல் அனுப்பிய நோட்டீஸ் மூலம் தெரிய வருகிறது.

இவையெல்லாம் தமிழகத்தைப் பூதாகரமான பிரச்சனை சூழ்ந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. கிழக்குத் தமிழ்நாட்டில் நதியும், கடலும் சந்திக்கும் செழிப்பான பகுதியான காவிரி நதிப்படுகையில் உள்ள ஒவ்வொரு கிராமத்தின் விவசாயிகளும் தண்ணீர் பிரச்சினை முழுத் தலைவலியாக ஆகிவிட்டது என வேதனையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இது மனிதர்கள் உருவாக்கிய பிரச்சினை என்று அவர்கள் அழுத்தி சொல்கிறார்கள். இயல்பான பஞ்ச வருடங்களை விட இந்த வருட நிலைமை மோசமாக உள்ளது. 

PHOTO • Jaideep Hardikar

தாயனூர் கிராம விவசாயிகள் பெரும் பஞ்சத்தைக் குறித்துப் பேசுகிறார்கள். இடமிருந்து வலம்: இன்பராஜ், சுப்பிரமணியம் குமார், சேது, ஆரோக்கியச் சாமி, பி.முத்துராஜா  

“இதற்கு முன் இப்படி ஒரு பஞ்சத்தை நாங்கள் பார்த்ததே இல்லை” என்கிறார் சேதுவின் நண்பரும், சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயியுமான சுப்பிரமணியம் குமார். காவிரி டெல்டாவின் பல்வேறு விவசாயிகளும் அவர் சொன்னதையே சொன்னார்கள்.

காவிரி எனும் பெருநதியின் ஒன்றரை கிலோமீட்டர் அகலமுள்ள படுகை தமிழகத்தின் சமவெளிகள் முழுக்க ஆறு மாதங்களாக வறண்டு கிடக்கிறது. அதன் சிறிய, பெரிய துணை நதிகளும் அவ்வாறே மே 2017 வரை ஆறு மாதங்களாக நீரற்று வறண்டு தவிக்கிறது. பிற மாதங்களிலும், போர்வெல் கிணறுகள் ஆழமாகத் தோண்டப்படுகின்றன. தண்ணீர் மட்டமோ தோண்டப்படும் வேகத்தை விடத் துரிதமாகக் குறைந்து கொண்டே போகிறது. நீடித்த, நிலையான வேலைவாய்ப்பை நினைத்து கூடப் பார்க்க முடியாத அளவுக்கு வேலை கிடைப்பதே பெரும்பாடாக உள்ளது. வேறு எந்த வழியும் இல்லாமல், நகரங்களை நோக்கி மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். இல்லை என்றால், ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டப்பணிகள் நடைபெறும் ‘நூறு நாள் வேலைகளில்’ கோடரியை தூக்கிக்கொண்டு மக்கள் பங்குபெறுகிறார்கள்.

ஸ்ரீரங்கம் தாலுகாவில் உள்ள சேதுவின் கிராமமான தாயனூருக்கு பயணமானோம். உற்சாகம் வழியும் திருச்சி நகரில் இருந்து இருபத்தி ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தக் கிராமத்தில் கவலை வழிய சேது, சுப்பிரமணியம், பிற விவசாயிகள் அமர்ந்திருந்தார்கள். ஓரிரு பருவமழைகள் பொய்த்த பின்னர் வரும் பஞ்சங்களை விட மிக மோசமான பேரிடரை தாங்கள் எதிர்கொண்டிருப்பதாக அனைவரும் சொல்கிறார்கள்

“நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே இருக்கிறது. நதியில் தண்ணீர் பாய்வதே இல்லை. நிலத்தடி நீர் குறைந்து கொண்டே இருக்கிறது. மழைப்பொழிவு பொய்த்துக் கொண்டே இருக்கிறது.” என்று இரண்டு ஏக்கரில் நெல் பயிரிட்டிருக்கும் இன்பராஜ் கூறுகிறார். கட்டளை எனும் காவிரியின் துணை நதியின் கரையில் இருக்கும் கிராமத்திலேயே இந்த நிலைமை.

PHOTO • Jaideep Hardikar

இரண்டு ஏக்கரில் நெல் பயிரிடும் இன்பராஜ் வளமை மிகுந்த காவிரி டெல்டாவின் விவசாயப் பொருளாதாரம் இன்றைக்கு எப்படிப் பஞ்சத்தால் உருக்குலைந்து போயிருக்கிறது எனப் பகிர்ந்து கொள்கிறார்.

இன்பராஜும், அவரின் மூன்று சகோதரர்களும் தங்களுடைய வயலில் உள்ள போர்வெல் கிணறை மூழ்கடிக்க முடிவு செய்துவிட்டதாகச் சொல்கிறார். மொத்தமாக ஒரு லட்சம் அதாவது தலைக்கு 25,000 ஆகும் எனக் கணக்கிடுகிறார். “தண்ணீர் ஐநூறு அடிக்குப் போய்விட்டது. அதனால் இன்னம் கூடச் செலவாகலாம்” என்கிறார் இன்பராஜ். இருபது வருடங்களுக்கு முன்னால் 100-150  அடியில் கிடைத்துக் கொண்டிருந்த தண்ணீர் மூன்று மடங்கு கீழே போய்விட்டது என்கிறார்கள் விவசாயிகள்.

“எங்கள் வயல்களுக்கும், கால்நடைகளுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், அதை உறிஞ்சி திருச்சி, சுற்றுப்புற நகரங்களுக்கு விநியோகிக்கிறார்கள். இதோடு நெடுஞ்சாலையில் ரியல் எஸ்டேட் புதிதாக முளைத்து இருக்கிறது. இந்தப் புது விருந்தாளி இன்னமும் தண்ணீர் கேட்கிறார்.” என்று இன்பராஜ் வெறுமை மாறாமல் சொல்கிறார்.

சேது, ஆறாயி வாழ்க்கையில் அந்த நவம்பர் மாத தற்கொலை முயற்சிக்கு பின்னர் எதுவும் மாறிவிடவில்லை. வீட்டு உத்தரத்தில் கயிறு மாட்டி, தற்கொலை செய்து கொள்ள முயன்று காப்பற்றப்பட்ட பிறகு சேதுவின்  நிலைமை இன்னமும் மோசமாகி விட்டது. சேதுவை போன்ற நிலமில்லாத, குறு விவசாயிகள் பஞ்சத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதிர்ஷ்டவசமாகச் சேது உயிரோடு இருக்கிறார். இப்பகுதியில் பலருக்கு அந்தப் பேறில்லை.

கடந்த ஆண்டு டெல்டாவில் மழை பொய்த்துப் போனது. நதியில் தண்ணீர் பாயவில்லை. பக்கத்து மாநிலமான கர்நாடகாவும் பஞ்சத்தில் சிக்கிக்கொண்டு, இரண்டாவது வருடமாகத் தண்ணீர் திறந்து விட மறுத்தது. நிலத்தில் தூவிய விதைகள் முளைக்கவில்லை. நெல், கரும்பு,சிறு தானியங்கள் எல்லாம் காய்ந்து போயின. தண்ணீர் இல்லாததால் மக்களுக்கு வேலை கிடைக்கவில்லை. மக்களுக்கு வேலை கிடைக்காமல் போனதால் வருமானம் இல்லாமல் போனது. கடன்கள் கழுத்தை நெரிக்க, நிலம், கால்நடைகள் விற்கப்பட்டன. நகைகள் அடமானம் வைக்கப்பட்டன.

நம்பிக்கை குறைந்து, வாழ்க்கையில் கவலை கூடுவதால், குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய பல்வேறு விஷயங்களைச் செய்ய முடியாமல் பீதி பெருகுகிறது. இது விவசாயியை அதிர்ச்சிக்கு தள்ளி மாரடைப்புக்கோ, தற்கொலைக்கோ தள்ளுகிறது.

PHOTO • Jaideep Hardikar

சோழர்கள் கட்டிய இரண்டாயிரம் ஆண்டுப் பழமையான, வலிமைமிக்க அணைக்கட்டு காவிரி டெல்டாவின் வாழ்வாதாரம். பனிக்காலத்தில் அணை முழுமையாக வற்றிப் போயிருக்கிறது. காவிரி நதியும் மௌனித்து விட்டது. 

கழுத்தில் தூக்குக் கயிற்றைச் சுற்றிக்கொண்டு மரணத்தில் வாசலில் நின்ற அந்தக் கணங்களைத் தயக்கத்தோடு சேது நினைவுகூர்கிறார். இந்த உலகத்தின் துயர்களில் இருந்து தான் மட்டும் தப்பித்து விட முயன்றதை குற்றவுணர்ச்சியோடு பேசுகிறார். தான் சேர்த்து வைத்த பிரச்சினைகளைத் தன்னுடைய மனைவி, குடும்பத்தினர் மட்டும் எதிர்கொள்ள விட்டுவிட எண்ணியதற்காக வருத்தப்படுகிறார். தன்னுடைய சக விவசாயிகள், நண்பர்கள் இத்தனை பிரச்சினைகளுக்கு நடுவே, மனந்துவளாமல் போராடுகையில் தானும் உயிரோடு இருப்பதால் நிம்மதியாக உணர்கிறார் சேது.

தாயனூரில் சற்றே செழிப்பான விவசாயிகள் தங்களுடைய பயிர்களைப் போர்வெல்லில் எட்டிப்பார்த்த கொஞ்சம் நீர்வரத்தை கொண்டு காப்பாற்றிக் கொண்டார்கள் என்கிறார் சுப்பிரமணியம். ஆனால், சேதுவிடம் போர்வெல் இல்லை. "அன்று என் வயலின் நிலைமையைக் கண்ணால் பார்க்க கூட முடியவில்லை. விதைகள் முளைக்கவே இல்லை. மழையே பொழியவில்லை." என்று அந்த நவம்பர் மாதத்தின் வெறுமையான நினைவுகளில் மூழ்குகிறார் சேது.

அதிர்ச்சி, பதற்றம், அவநம்பிக்கை சேர, "நான் அடைக்க வேண்டிய கடன் அவ்வளவு இருக்கிறது. இப்போதைக்கு கடன்களை எல்லாம் திருப்பித் தரமுடியும் எனத் தோன்றவில்லை." என்கிறார் சேது.

நாம் சேதுவை சந்தித்த நாளன்று அவரின் மனைவி, மூத்த மகன் வேலைக்கு வெளியூருக்கு போயிருந்தார்கள். அவரின் மகளுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. அவரின் இளைய மகன் பள்ளி மாணவன். இந்தக் குடும்பத்துக்கு மிச்சமிருக்கும் ஒரே சொத்து ஒரு நாளைக்கு மூன்று லிட்டருக்கு குறைவாகப் பால் கறக்கும் ஜெர்சி பசு. தீவனம் இல்லாமல் அந்தப் பசுக் களையிழந்து காட்சியளிக்கிறது.

"எங்களிடம் மீதமிருக்கும் ஒரே சொத்து இதுதான். இன்னும் எத்தனை நாளைக்கு இதைக் காப்பாற்ற முடியும் என்று தெரியவில்லை." என்கிறார் சேது.

புகைப்படங்கள்: ஜெய்தீப் ஹர்தீகர்

மொழிபெயர்ப்பு: பூ.கொ.சரவணன்

விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர். You can contact the translator here:

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.

Other stories by Jaideep Hardikar