அந்தக் குழுவில் கிட்டத்தட்ட அனைவருமே பெண்கள்தான் - பெரும்பாலும் அறுபது வயதைக் கடந்தவர்கள்; கையில் கோடரியும் மண்வெட்டியும் வைத்திருந்தார்கள். தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தின் திருவையாறு தாலுகாவில் வரும் கீழதிருப்பந்துருத்தி கிராமத்தில் நாங்கள் இருந்தோம். கைகளில் கருவிகளோடு வயதான பெண்கள் நிற்கும் காட்சி நாங்கள் எதிர்பாராதது.

தஞ்சாவூர் நகரத்திலிருந்து கீழதிருப்பந்துருத்தி சுமார் 40 கிலோமீட்டர் இருக்கும். மே மாத வெயில் வாட்டி எடுக்க, குறுகலான சந்துகளின் ஊடே செல்கையில் நாங்கள் கண்ட சில காட்சிகள், இந்தியாவின் வளர்ச்சிக்கதை என்று நம்பிய சிலவற்றை உடைத்து, அந்தக் கதையின் மற்றொரு பக்கத்தை எங்களுக்குக் காட்டியது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அனைத்து பெண்களும் வேலை செய்துகொண்டிருந்தனர். முக்கால்வாசி பெண்கள் பலவீனமாகவும் சோர்வடைந்தும் காணப்பட்டனர். அனைத்து பெண்களும் ஒன்று நிலமற்ற கூலிகளாக இருந்தார்கள்; அல்லது குறு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அனைவரும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருந்தார்கள்; குறிப்பிடத்தக்க அளவில் தலித்துகள் இருந்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வயதான ஆண்களையும் பார்க்க முடிந்தது.

“இந்தக் குழுவில் கிட்டத்தட்ட 100 பெண்கள் இருக்கிறார்கள்”, என்றார் கிராம பஞ்சாயத்து உறுப்பினரான ஜே.ஆனந்தி. 42 வயதான அவர்தான் அந்தக் குழுவின் தலைவர்.

அந்தப் பெண்கள் வேலை செய்வதுபோல் என்னிடம் எந்தப் புகைப்படமும் இல்லை. காரணம், எங்களைக் கண்டதும் அவர்கள் வேலை செய்வதை நிறுத்திவிட்டு என்னையும் என்னோடு வந்தவரையும் சூழ்ந்துகொண்டார்கள். எங்களை அரசாங்க அதிகாரிகள் என்று அவர்கள் நினைத்துக் கொண்டுவிட்டார்கள் என்பது புரிய எனக்கு சில நிமிடங்கள் ஆயின. “எப்பொழுது எங்களுக்கு சேர வேண்டிய பணத்தைக் கொடுப்பீர்கள்?”, என்று கேட்டார்கள்.

இரண்டு மூன்று மாதங்களாக மாநில அரசாங்கம் அவர்களுக்குக் கூலி தராமல் வைத்திருக்கிறது. “பத்தாயிரத்திலிருந்து பதினைந்தாயிரம் வரை அரசாங்கம் எங்களுக்குத் தர வேண்டியிருக்கிறது”, என்று சிலர் கூறினர். ஏன் கூலி பாக்கி வைத்திருக்கிறது என்று கேட்டதற்கு மத்திய அரசைக் கைகாட்டினர். ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நிதியை மாநிலங்களுக்கு ஒதுக்குவதில் மத்திய அரசு  தாமதம் காட்டியிருக்கிறது. இன்னொரு காரணம், 2016 டிசம்பரில் முதல்வர் ஜெ.ஜெயலலிதா இறந்ததிலிருந்து தமிழக அரசியலில் நிச்சயமற்ற சூழல் நிலவி வருகிறது.

ஒரு காலத்தில் மண்வளம் மிகுந்து செழித்த இந்த காவேரி டெல்டா பகுதி இன்று கடுமையான வறட்சியில் துவண்டு போயுள்ளது. காவேரி டெல்டாவில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பலநூறு கிராமங்களில் ஒன்றுதான் கீழதிருப்பந்துருத்தி. தென் மேற்குப் பருவமழை ஜூலை முதல் செப்டம்பர் வரை இந்தப் பகுதிகளில் பெய்யும். இந்த வருடம் அதுவும் பொய்த்துவிட்டது. 2016-லும் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை வரும் என்று காத்திருந்தால், அதுவும் பொய்த்துவிட்டது. விளைவு, அறுவடை அதளபாதாளத்தில் விழுந்தது. அதோடு சேர்ந்து வருவாயும் குறைந்தது, வேலையும் இல்லாமல் போனது.

PHOTO • Parth M.N.

ஒரு காலத்தில் மண்வளம் மிகுந்து செழித்த இந்த காவேரி டெல்டா பகுதி இன்று கடுமையான வறட்சியில் துவண்டு போயுள்ளது. காவேரி டெல்டாவில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பலநூறு கிராமங்களில் ஒன்றுதான் கீழதிருப்பந்துருத்தி

கீழதிருப்பந்துருத்தியைச் சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் வேலை தேடி வேற்றூர்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டார்கள். “அதிக கூலி வேண்டி தஞ்சை, கோவை, திருப்பூர், சென்னை நகரங்களை நோக்கி சிதறி ஓடிக்கொண்டிருக்கிறோம்”, என்று ஆனந்தி விரக்தியுடன் கூறினார். மழை வந்தால் மட்டுமே அவர்களும் திரும்பி வருவார்கள். “இந்த வருடம் [2016-17] விவசாயத்திலிருந்து வருவாயே இல்லை. இதோ இந்த வயதான பெண்களெல்லாம் உடலை வருத்தி உழைத்தால்தான் அவர்களுக்கு அடுத்த வேளை உணவு. மிகவும் சவாலான காலகட்டம் இது”, என்று பெருமூச்சு விட்டார்.

“என்ன வேலை செய்துகொண்டிருக்கிறீர்கள்?”, என்று கேட்டேன். “புதர்களை அப்புறப்படுத்தி கிராம சாலையை விரிவுபடுத்தும் வேலை. திருவிழா வருகிறதே, அதற்காக”, என்றார். “வயதான பெண்மணிகளெல்லாம் வேலை செய்கிறார்களே?”, என்று கவலையுடன் கேட்டேன்.  குரலில் சுரத்தில்லாமல் அவர் சொன்னார், “பெண்கள் மட்டுமா? ஊரிலுள்ள அனைவரும் உடலை வருத்திக்கொண்டிருக்கிறார்கள். வந்திருக்கிற வறட்சி அப்படி”.

கடந்த இரண்டு வருடங்களாகவே விவசாயம் சரியாக நடைபெறவில்லை, என்று ஆனந்தி எங்களிடம் கூறினார். ஆறுகளிலும் கால்வாய்களிலும் தண்ணீர் இல்லை; பருவமழையும் பெய்யவில்லை; சரி ஆழ்துளைக் கிணறு இருக்கிறதே என்றால் நிலத்தடியிலும் தண்ணீர் இல்லை. விளைவு, விவசாயம் சார்ந்த வாழ்வும் பொருளாதாரமும் நிலை குலைந்து விழுந்துவிட்டது.

“இதோ இந்த 100 நாள் வேலைதான் எங்களின் ஒரே துணை. இப்பொழுது, இந்த நொடியில் எங்கள் கையில் ஒரு பைசா கூட இல்லை”, என்று ஒரு பெண்மணி கைவிரித்துக் காட்டினார். தமிழ்நாடு அரசு இந்தத் திட்டத்தை 150 நாட்களுக்கு அதிகரித்துள்ளது. இருந்தாலும் இந்தப் பகுதிகளில் மக்கள் இதை ‘100 நாள் வேலை’ என்றுதான் அழைக்கிறார்கள்.

மாணிக்கவல்லி என்னும் பெண்மணி, “என் பிள்ளைகள் அனைவரும் வேலை தேடி இடம்பெயர்ந்துவிட்டனர். நான் மட்டும்தான் இங்கு இருக்கிறேன்”, என்றார். தனக்கு 62 வயது ஆகிறது என்றார், ஆனால் பார்ப்பதற்கு இன்னும் வயதானவராகத் தெரிந்தார். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சில இளம் பெண்களும் அங்கு வேலை செய்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு வீட்டில் சிறு குழந்தைகள் இருக்கிறார்கள், அவர்களை வேறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

“ஒவ்வொரு உறுப்பினரும் நாளொன்றுக்கு 120 முதல் 150 ரூபாய் சம்பாதிப்பார்கள்”, என்றார் ஆனந்தி. ஆனால் கூலி நேரத்திற்கு வழங்கப்படுவதில்லை. “இரண்டு மாதங்களாகக் கூலி கொடுக்காமல் வைத்திருக்கிறார்கள் தெரியுமா? இரண்டு மாதங்கள்!”, என்று முறையிட்டார்.

ஒவ்வொரு கிராமமாக சென்றோம். காவேரி டெல்டா பகுதி முழுவதும் சுற்றினோம். அனைத்து இடங்களிலும் வயதான பெண்களும் ஆண்களும் 100 நாள் வேலையைத் துணைகொண்டு வறட்சியுடன் போராடிக்கொண்டிருந்தார்கள். எங்கெல்லாம் வேலை இருக்கிறது என்று தேடித் தேடி சென்று வயதான பெண்மணிகள் உடலை வருத்தி உழைத்துக்கொண்டிருந்தார்கள். துயரம் மிகுந்த காட்சிகள் அவை.

“100 நாள் வேலையில் கிடைக்கும் பணம் கண்டிப்பாகப் போதாது. ஆனால் சுற்றி வேறு பிழைப்பே இல்லை என்னும்போது கிடைத்ததைப் பிடித்துக்கொண்டு வாழ வேண்டியிருக்கிறது. என்ன செய்வது?”, என்று புஷ்பவல்லி என்பவர் குறைபட்டுக்கொண்டார். நிலமற்ற விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர் அவர். அவர் அப்பொழுது கேட்ட ஒரு கேள்வி இப்பொழுதும் மனதை உறுத்துகிறது.

“நிலம் வைத்திருப்பவர்களே வாழ்வாதாரமின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கே அப்படியென்றால் நிலமற்ற எங்களைப் போன்றவர்களின் கதி? கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?”

புகைப்படங்கள் : ஜெய்தீப் ஹார்டிகர்

Related stories: Distress and death in the delta and Between life and death – a drought

( தமிழில் : விஷ்ணு வரதராஜன் )

Jaideep Hardikar

Jaideep Hardikar is a Nagpur-based journalist and writer, and a PARI core team member.

Other stories by Jaideep Hardikar