மார்ச் 23 ஆம் தேதி அன்று தெற்கு பெங்களூருவில் உள்ள கட்டிட தளத்திற்கு தங்களது புதிய வேலைக்கு வந்த போது அமோதாவுக்கும் ராஜேஷுக்கும் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதைப் பற்றி தெரியாது.
ஜே.பி நகர் சுற்றுப்புறத்தில் உள்ள கட்டுமான தளத்தில் பணிகளை துவங்குவதற்கான அவர்களது திட்டம், கோவிட் 19யை முன்னிட்டு ஊரடங்கு அறிவித்ததால் பாதிக்கப்பட்டது. அவர்கள் கொரோனாவைப் பற்றி அறிந்திருக்கவில்லை - இப்பொழுதும் அவர்களுக்கு எதுவும் தெரியாது. "யாரோ எங்களிடம் கவனமாக இருக்கும்படி கூறினர், ஆனால் எதைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும் என்று கூட எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு தெரிந்ததெல்லாம் எங்களுக்கு வேலை இல்லை என்பது தான்", என்று ஏப்ரல் மாதத் துவக்கத்தில் நாங்கள் அவர்களை முதலில் சந்தித்தபோது அமோதா கூறினார்.
23 வயதே ஆகும் அமோதா மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், மூன்று வயதாகும் ரக்ஷிதா மற்றும் ஒரு வயதாகும் ரக்ஷித். இவர்களுக்கான வாழ்வாதாரத்தை கொடுப்பதற்காக, வழக்கமாக இவர்கள் பெங்களூருவில் இருக்கும் கட்டுமான தளத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த இளம் குடும்பம் ஜே.பி நகரிலுள்ள கட்டுமான தளத்தில் மார்ச் 23ஆம் தேதி முதல் எந்த வேலையும் இல்லாமல், ஊதியமும் இல்லாமல், மிகக்குறைந்த உணவினை வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறது. மின்சாரம் மற்றும் தண்ணீர் கூட இவர்களுக்கு ஒழுங்காக கிடைப்பதில்லை. "ஒப்பந்ததாரர் தான் மீண்டும் வருவதாக கூறி செல்கிறார், அவர் நாளை வருவார் என்று எங்களிடம் கூறினார். அவரும் வந்து சென்று கொண்டுதான் இருக்கிறார். எங்களுக்கு அவரை பற்றி அவ்வளவு தெரியாது அவர் யார், என்ன செய்கிறார், அவரது பெயர் கூட எங்களுக்கு தெரியாது", என்று அமோதா கூறுகிறார்.






