“எனக்கு ட்ராக்டர் ஓட்டத் தெரியும்,” என்கிறார் சர்ப்ஜீத் கவுர். அவர் குடும்பத்தின் வெள்ளை நிற ட்ராக்டரை இரண்டு மாதங்களுக்கு முன் எடுத்துக் கொண்டு பஞ்சாபின் ஜஸ்ரவுர் கிராமத்திலிருந்து ஹரியானா-தில்லி எல்லையில் இருக்கும் சிங்கு பகுதிக்கு 480 கிலோமீட்டர் ஓட்டி வந்திருக்கிறார். “நான் மட்டும் ஓட்டி வந்தேன்,” என்கிறார். அவரின் கிராமத்தை சேர்ந்த பிறர் அவரவர் விவசாய சங்கங்கள் கொடுத்த ட்ராலிகளில் ஏறி போராட்ட களத்துக்கு வந்திருக்கின்றனர்.

ஜஸ்ரவுரை விட்டு கிளம்பும் முன் 40 வயது சர்ப்தீஜ் வேளாண் சட்டங்களை பற்றி பேசியும் அவற்றை எதிர்த்து போராடியும் இருந்திருக்கிறார். அம்ரிட்சர் மாவட்டத்தின் அஜ்னாலா தாலுகாவில் 2159 பேர் வசிக்கும் அவரின் கிராமத்தில் வீடுதோறும் சென்று சட்டங்களுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்திருக்கிறார். நவம்பர் மாதம் 25ம் தேதி ஊரிலிருந்து கிளம்பிய 14 ட்ராக்டர் ட்ராலிகளில் அவரும் சேர்ந்து கொண்டார். ஜம்ஹூரி விவசாய சங்கம் (இந்தியா முழுவதும் 200 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்திருக்கும் விவசாய சங்க கூட்டமைப்பில் ஒன்று)  ஒருங்கிணைத்த பயணத்தில் அதிகாலையே கிளம்பி நவம்பர் 27ம் தேதி சிங்குக்கு வந்து சேர்ந்தார்.

தற்போது சர்ப்ஜீத், முன்னெப்போதும் நடந்திராத வகையில் குடியரசு தினத்தன்று நடக்கவிருக்கும் ட்ராக்டர் ஊர்வலத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார். சிங்குவுக்கு வடக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குந்த்லி எல்லையிலிருந்து ஊர்வலம் தொடங்கவிருக்கிறது. “அதில் என் ட்ராக்டருடன் நான் கலந்து கொள்கிறேன்,” என்கிறார் அவர்.

ஹரியானாவின் சிங்கு மற்றும் திக்ரி, உத்தரப்பிரதேசத்தின் காசிப்பூர் ஆகியவை லட்சக்கணக்கான விவசாயிகளும் எண்ணற்ற விவசாய சங்கங்களும் போராடும் களங்களில் முக்கியமானவை. மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டுமென போராட்டம் நடக்கிறது. “வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை, முதியவர்களோ இளையோரோ ஆண்களோ பெண்களோ இங்கிருந்து செல்வதாக இல்லை,” என்கிறார் சர்ப்ஜீத்.

“யாரும் என்னை இங்கு வரச் சொல்லவில்லை. யாரும் என்னை இங்கு பிடித்து வைக்கவில்லை,” என்கிறார் பிற ட்ராக்டர்களுடன் வரிசையில் நிறுத்தப்பட்டிருக்கும் அவரின் ட்ராக்ட்ரருகே நின்றபடி. “பல ஆண்கள் போராட்டத்துக்காக என் ட்ராக்டரில் வந்திருக்கின்றனர். அவர்களை நான் கூட்டி வந்தேன் என சொல்வீர்களா?” என பெண்களும் முதியவர்களும் போராட்டத்தில் இருத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர் என சொன்ன உச்சநீதிமன்ற நீதிபதிக்கு (ஜனவரி 11 அன்று)  பதிலளிக்கும் விதத்தில் சொன்னார்.

Sarbjeet Kaur: 'Women are the reason this movement is sustaining. People in power think of us as weak, but we are the strength of this movement'
PHOTO • Tanjal Kapoor
Sarbjeet Kaur: 'Women are the reason this movement is sustaining. People in power think of us as weak, but we are the strength of this movement'
PHOTO • Tanjal Kapoor

’இந்த இயக்கம் நீடிப்பதற்கு பெண்களே காரணம். அதிகாரத்தில் இருப்பவர்கள் நாங்கள் பலவீனமானவர்கள் என நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள்தான் இந்த இயக்கத்துக்கான பலம்’

“இந்த இயக்கம் நீடிப்பதற்கு பெண்களே காரணம்,” என்கிறார் சர்ப்ஜீத். ”அதிகாரத்தில் இருப்பவர்கள் நாங்கள் பலவீனமானவர்கள் என நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள்தான் இந்த இயக்கத்துக்கான பலம். விவசாய நிலங்களை பெண்களான நாங்கள்தான் பார்த்துக் கொள்கிறோம். நாங்கள் பலவீனமானவர்கள் என இவர்கள் எப்படி நினைக்க முடியும்? நான்தான் விதைக்கிறேன். அறுவடை செய்கிறேன். கதிரடிக்கிறேன். பயிர்களை வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்கிறேன். விவசாயம், குடும்பம் என இரண்டையும் நான்தான்  கவனித்துக் கொள்கிறேன்.

சர்ப்ஜீத்தை போல கிராமப்புற இந்தியாவின் 65% பெண்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ விவசாய வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

சர்ப்ஜீத்தின் கணவருக்கு சொந்தமாக ஐந்து ஏக்கர் நிலம் ஜஸ்ரவுர் கிராமத்தில் இருக்கிறது. அதில் அவர்கள் கோதுமையையும் நெல்லையும் விளைவிக்கின்றனர். உள்ளூர் மண்டிகளில் விளைச்சலை விற்று வருடத்துக்கு 50000லிருந்து 60000 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். சர்ப்ஜீத் கடினமாக உழைத்தாலும் அவருக்கென சொந்தமாக நிலம் இல்லை. 2 சதவிகிதத்துக்கும் குறைவான இந்தியப்பெண்கள்தான் அவர்கள் உழைக்கும் நிலங்களின் உரிமையை கொண்டிருக்கின்றனர். (விவசாயப் பொருளாதாரத்தில் நிலவும் இத்தகைய இடைவெளிகளை சரிசெய்ய எம்.எஸ்.சுவாமிநாதன் முன்மொழிந்த பெண் விவசாயிகளுக்கான உரிமை மசோதா 2011 சட்டமாக்கப்படவேயில்லை.)

அவரின் கணவர் நிரஞ்சன் சிங் போராட்டக் களத்துக்கு அவ்வப்போது வந்து செல்வார். சில நாட்களுக்கு முன் கிராமத்துக்கு சென்றுவிட்டார். இரண்டு மகள்களையும் இரண்டு மகன்களையும் கொண்ட சர்ப்தீத் அவர்களின் எதிர்காலத்துக்குதான் இங்கிருக்கிறார் என்றும் போராட்டம் முடியும் வரை இருக்கப் போவதாகவும் சொல்கிறார். “மண்டிகள் மூடப்பட்டுவிட்டால், எங்களின் நிலத்திலிருந்து எப்படி நாங்கள் வருமானம் ஈட்ட முடியும்? என் குழந்தைகள் எப்படி படிப்பார்கள்?” எனக் கேட்கும் அவர், அரசு ஒழுங்கமைக்கும் மண்டிகளை ஓரங்கட்டும் சட்டத்தை சுட்டிக் காட்டுகிறார்.

விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று சட்டங்கள். 2020 ஜூன் 5 அன்று அவை ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு  எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக  அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன.

மூன்று சட்டங்களும் பெரு வணிக நிறுவனங்கள் விவசாயம் மற்றும் விவசாயிகள் மீது பெரும் அதிகாரம் கொள்ள வாய்ப்பு வழங்குவதாக விவசாயிகள் நினைக்கின்றனர். விவசாயிக்கு முக்கிய ஆதாரங்களாக இருக்கும் குறைந்தபட்ச ஆதார விலை, வேளாண்பொருள் சந்தைப்படுத்தும் குழு, அரசு கொள்முதல் ஆகிய விஷயங்களை ஆகியவற்றை இந்த சட்டங்கள் மட்டுப்படுத்துகின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.
Sometimes, Sarbjeet gives children an others at the protest site a ride on her tractor, which she learnt to drive four years ago
PHOTO • Tanjal Kapoor
Sometimes, Sarbjeet gives children an others at the protest site a ride on her tractor, which she learnt to drive four years ago
PHOTO • Tanjal Kapoor

சில நேரங்களில் களத்தில் இருக்கும் குழந்தைகளையும் பிறரையும் தன் ட்ராக்டரில் ஓட்ட விடுகிறார்

போராட்டக்களத்தின் உணவகங்களில் சர்ப்ஜீத் சமைக்கிறார். சாலைகளை சுத்தப்படுத்துகிறார். துணி துவைக்கிறார். அவரை பொறுத்தவரை அந்த வேலைகளை சேவைகளாக பார்க்கிறார். ட்ராக்டரின் ட்ராலியிலேயே உறங்குகிறார். அருகே இருக்கும் கடைகளின் கழிவறைகளை பயன்படுத்திக் கொள்கிறார். “இங்கிருக்கும் மக்கள் உதவும் மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கின்றனர். எங்களை அதிகமாக நம்புகின்றனர். கடை சாவிகளை கூட கழிவறை பயன்படுத்த எங்களிடம் கொடுத்துவிட்டு செல்கிறார்கள். மாதவிடாய் நாப்கின்கள் கிடைக்கிறது. வெவ்வேறு அமைப்புகள் வந்து மருந்துகளை விநியோகிக்கின்றன,” என்கிறார் அவர். சில நாட்களில் யாரிடமாவது சைக்கிளை கடன் வாங்கி அப்பகுதியை சுற்றுகிறார் சர்ப்ஜீத்.

“நான் இங்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். அனைவரும் ஒரு பெரிய குடும்பம் போல் வாழ்கிறோம். வெவ்வேறு கிராமங்களிலிருந்து வந்திருக்கிறோம். வெவ்வேறு பயிர்களை விளைவிக்கிறோம். ஆனால் இந்த நோக்கத்துக்காக ஒன்றுபட்டிருக்கிறோம். இந்த இயக்கத்தால் என் குடும்பம் பெரிதாகி இருக்கிறது. இதற்கு முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு நாங்கள் ஒன்றுபட்டிருக்கிறோம். இந்த ஒற்றுமை பஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதிகளில் மட்டுமில்லை. நாட்டின் எல்லா விவசாயிகளும் இன்று ஒன்றுபட்டிருக்கின்றனர். யாரும் எங்களை ஒருங்கிணைக்கவில்லை. மேற்பார்வையிடவும் இல்லை. நாங்கள் அனைவருமே தலைவர்கள்தான்.”

சில நேரங்களில் குழந்தைகளை ட்ராக்டரில் சர்ப்ஜீத் ஓட்டிச் சென்று காட்டுகிறார். நான்கு வருடங்களுக்கு முன் அவர் ட்ராக்டர் ஓட்டக் கற்றுக் கொண்டார். “என் கணவர் ஓட்டுவார். எனக்கும் ஆர்வம் வந்தது. ஆகவே அவரை எனக்கும் கற்றுக் கொடுக்கச் சொன்னேன். அவரும் கற்றுக் கொடுத்தார். என் வீட்டிலோ கிராமத்திலோ எவரும் நான் ட்ராக்டர் ஓட்டுவதற்கும் இப்போது இங்கு ஓட்டுவதற்கும் ஒன்றும் சொல்லவில்லை,” என்கிறார் அவர்.

“நான் ஓட்டும்போது பறப்பதை போல் உணர்கிறேன்,” என்கிறார். “பெண் அவளின் உரிமைகளுக்காக வாழ்க்கை முழுவதும் போராடுகிறாள். எங்களுக்காக போராட மற்றவர்கள் வேண்டுமென இன்னும் மக்கள் நினைக்கின்றனர். இப்போது சமூகத்தை எதிர்த்து அல்ல, அரசை எதிர்த்தே நாங்கள் போராட வேண்டும்.”

தமிழில்: ராஜசங்கீதன்

Snigdha Sony

ସ୍ନିଗ୍ଧା ସୋନି ପରୀ ଶିକ୍ଷାରେ ଜଣେ ପ୍ରଶିକ୍ଷାର୍ଥୀ ଏବଂ ଦିଲ୍ଲୀ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟରେ ସାମ୍ବାଦିକତାରେ ସ୍ନାତକ ଅଧ୍ୟୟନ କରୁଛନ୍ତି।

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Snigdha Sony
Translator : Rajasangeethan

ରାଜସଙ୍ଗୀତନ୍‌ ଚେନ୍ନାଇରେ ରହୁଥିବା ଜଣେ ଲେଖକ। ସେ ଏକ ଅଗ୍ରଣୀ ତାମିଲ ସମାଚାର ଚାନେଲରେ ସାମ୍ବାଦିକ ଭାବେ କାର୍ଯ୍ୟରତ ଅଛନ୍ତି।

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Rajasangeethan