“இந்திய குடியரசுத் தலைவருக்கும் உண்ண உணவு வேண்டும். உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது விஷயமல்ல. உங்களால் பணத்தை உண்ண முடியாது, உணவு வேண்டும்,” என்கிறார் சிகந்தர் குலாம் நபி ஷேக். “உங்களுக்கு யார் உணவு தருவார்?,” என அவர் கேட்கிறார்.
டோம்பிவ்லியில் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார் 36 வயது ஷேக். 2018 நவம்பர் 25ஆம் தேதி அவர் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் நகர்ப்புற ஆதரவை உருவாக்கும் மனுவில் கல்யாண்-டோம்பிவ்லி இரட்டை நகர (மத்திய மும்பையின் தாதரிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர்) சகாக்களுடன் இணைந்து கொண்டார்.
ராம்நகர் ஆட்டோ நிறுத்தத்தில் உள்ள டோம்பிவ்லி (கிழக்கு) நிலையத்திற்கு வெளியே காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஓட்டுநர்கள் திரண்டனர். நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையிலான ‘விவசாயிகளுடன் தேசம்‘ எனும் பதாகையுடன் 7-8 ஆட்டோ ஓட்டுநர்கள் நண்பர்களுடன் சேர்ந்து வைத்தனர்.
மற்றவர்கள் இந்தி, ஆங்கிலம், மராத்தி மொழிகளில் மனுவின் நகல்கள் கொண்ட கையேடுகளுடன் மேசையில் அமர்ந்திருந்தனர். குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் இந்த மனுவில் விவசாயிகளின் பிரச்சனைகள் மற்றும் பிற தொழிலாளர் குழுக்களின் பிரச்னைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
மும்பை புறநகர் ரயில் குழுமத்தின் மையப் புள்ளியாக டோம்பிவ்லி ரயில் நிலையம் இருக்கிறது. அன்றாடம் ஆயிரக்கணக்கான பயணிகள் பரந்துவிரிந்த மும்பையின் பெருநகரப் பகுதியை கடப்பதற்காக இந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். மற்ற புறநகர் ரயில் நிலையங்களைப் போலவே டோம்பிவ்லி கிழக்கு ரயில் நிலையத்திற்கு வெளியேயும் துணிகள், ஆபரணங்கள், எழுதுபொருட்கள் போன்றவை விற்கப்படுகின்றன. வங்கிகள், ஏடிஎம்கள், அச்சு சேவைகளும் உள்ளன. நடைபாதை வியாபாரிகள் அமர்ந்து கைப்பேசி உறைகள், பழங்கள், காய்கறிகள் போன்ற எண்ணற்ற பொருட்களை விற்பனை செய்கின்றனர். தேநீர் கடைகளும், பயிற்சி வகுப்புகளும் கூட உண்டு.
கூட்டத்தில் திரியும் மக்களின் கவனத்தை பெறுவதற்கு நீங்கள் கட்டாயம் ஏதேனும் செய்தாக வேண்டும்.








