“பொம்மைகளை எப்படி ஆட்டிவைக்க வேண்டும் என்று என் விரல்களில் கம்பிகளை கட்டி அப்பா சொல்லித் தந்தார்,” என்கிறார் அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளை பகிரும் 74 வயது பிரேம்ராம் பட்.
“பொம்மலாட்ட நிகழ்ச்சிக்கு அவர் செல்லும் பல்வேறு கிராமங்களுக்கும் எனக்கு ஒன்பது வயதிருக்கும்போதே அழைத்துச் செல்வார்,” என்கிறார் அவர். “நான் டோல் அடிப்பேன். மெல்ல எனக்கு பொம்மலாட்டத்தில் ஆர்வம் வந்தது. என் தந்தை லாலுராம் பட் அவற்றை எப்படி அசைப்பது என்று கற்றுத் தந்தார். நானும் அவற்றை கையாளத் தொடங்கினேன்.”
மேற்கு ஜோத்பூரின் பிரதாப் நகர தெருவோர குடிசைப் பகுதியில் பிரேம்ராம் வசிக்கிறார். 70 வயது மனைவி ஜூக்னிபாய், மகன், மருமகள், அவர்களின் 3 முதல் 12 வயது வரையிலான நான்கு குந்தைகளுடன் அவர் வசிக்கிறார். அவர்களின் குடும்பம் பட் (ராஜஸ்தானில் ஓபிசி என பட்டியலிடப்பட்டுள்ளது) சமூகத்தைச் சேர்ந்தது. நாக்பூர் மாவட்டத்திலிருந்து 100 ஆண்டுகளுக்கு முன்பு பல பட் குடும்பங்கள் ராஜஸ்தானின் ஜோத்பூர், ஜெய்பூர், ஜெய்சால்மர், பிகானிர் போன்ற பல்வேறு நகரங்களில் குடிபெயர்ந்ததாக சமூகத்தில் மூத்தவர்கள் சொல்கின்றனர்.
“பொம்மை செய்வதற்கும், பொம்மலாட்டத்திற்கும் எனக்கு எந்த பயிற்சியும் அளிக்கப்படவில்லை. என் தந்தையின் நிகழ்ச்சியைப் பார்த்து இக்கலையை கற்றுக்கொண்டேன்,” என்கிறார் 39 வயது சுரேஷ். அவர் பிரேம்ராமுடன் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று 10 வயது முதல் நிகழ்ச்சிகளில் உதவி வருகிறார். வீட்டில் பொம்மைகள் செய்ய அவர் உதவுகிறார். “எனக்கு 15 வயதானபோது பொம்மலாட்டத்தை கற்றுக் கொண்டேன். நான் தனியாகவே கிராமங்களுக்குச் சென்று நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினேன்,” என்கிறார் அவர்.
12 வயது மகன் மோஹித் இப்போது அவருடன் வருகிறான். “எந்நேரத்திலும் ஏதாவது வேலை கிடைக்கும், மோஹித் என்னுடன் டோல் வாசிப்பான்,” என்கிறார் சுரேஷ். “அவன் 5ஆம் வகுப்பு படிக்கிறான். ஆனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன [பெருந்தொற்று – பொதுமுடக்கம் காரணமாக].”
இப்போது அந்த வேலை கிடைப்பதும் அரிதாகிவிட்டது. நீண்ட காலமாக ராஜஸ்தானின் உணவகங்களுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தான் பொம்மலாட்ட பார்வையாளர்கள். அவர்களுக்காக மூன்று பேர் கொண்ட குழு ஒரு மணி நேர நிகழ்ச்சியை நடத்தும் - ஒருவர் பொம்மைகளைக் கையாளுவார், மற்றவர்கள் ஹார்மோனியம், டோலக் வாசிப்பார்கள். இந்நிகழ்ச்சிகளில் அரச சூழ்ச்சிகள், மோதல்களை விளக்கி, நாட்டுப்புற பாடல்களைப் பாடுவார்கள் (துணை காணொலியை காணவும்).
இந்நிகழ்ச்சிகள் மூலம் ஒவ்வொருவருக்கும் மாதத்திற்கு 3-4 முறை தலா ரூ.300 முதல் ரூ.500 வரை கிடைக்கும். பொதுமுடக்கத்தினால் இந்த வாய்ப்பு நின்று போனதால் பொம்மலாட்டகாரர்கள் தெருவோரங்களில் நிகழ்ச்சி நடத்தி சுமார் ரூ.100-150 வரை சம்பாதிக்கின்றனர். வைக்கோல்-வெல்வெட் பொம்மைகள் செய்து கொஞ்சம் வருமானம் பார்க்கின்றனர். (பார்க்க: ஜெய்ப்பூர் பொம்மை செய்பவர்கள்: புற்கூரையின் கீழ் சிக்கியுள்ளனர் )
பொதுமுடக்கத்தின் போது மளிகை மற்றும் பிற தேவைகளுக்கு தொண்டு நிறுவனங்களை நம்பியிருந்தனர். மாநிலம் முழுவதும் தற்போது தடைகள் தளர்த்தப்படுவதால் அவர்களின் வேலை தற்போது மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.
ஜோத்பூரின் பிரதாப் நகர் நடைபாதை குடிசையில் வசிக்கும் 38 வயது மஞ்சு பட் பொம்மைகளுக்கு துணிகளை தைக்கிறார், ஆபரணங்கள் செய்கிறார். அவரது 41 வயது கணவர் பன்வாரி லால் பட் அவற்றைக் கொண்டு பொம்மலாட்டம் நடத்துகிறார்.
“இக்கலை இறந்து வருகிறது,” என்கிறார் அவர். “முன்பெல்லாம் மாதத்திற்கு 3-4 காட்சிகள் நடத்துவோம். கரோனாவிலிருந்து எங்களுக்கு பெரும்பாலும் வேலையில்லை. அரசு மட்டுமே இப்போது இக்கலையை காக்க வேண்டும். எங்களால் முடியாது. இப்போது புதிய வகை பொழுதுபோக்குகள் வந்துவிட்டன. எங்கள் நிகழ்ச்சியை யாரும் பார்ப்பதில்லை.”
அவர்களின் பாரம்பரிய கதையும் சிதைந்து வருகின்றன என்கிறார் அவர். “எங்களிடம் உண்மைக் கதைகள் உள்ளன. படித்தவர்கள் எங்களிடம் வந்து கதைகளை கேட்கின்றனர். அவர்கள் விரும்பியபடி கூட்டி கழித்து தொலைக்காட்சி நாடகம், நாடகம், திரைப்படம் எடுக்கின்றனர். அவற்றில் நிறைய பொய்களும், கொஞ்சம் உண்மையும் உள்ளன.”
தொலைக்காட்சி, கைப்பேசிகள், புதிய தொழில்நுட்பங்கள் தன்னைப் போன்ற கலைஞர்களின் பெருமையை குறைத்துவிட்டன என்று பிரேம்ராமும் கூறுகிறார். “எங்கள் முன்னோர்கள் அரசவைகளில் மன்னர்களை, பேரரசர்களை பொழுதுபோக்க வைத்தனர். அதற்குப் பதிலாக ஒரு வருடத்திற்கு போதிய உணவு தானியங்கள், பணம், பல்வேறு பொருட்கள் கிடைத்தன. என் தந்தையும், தாத்தாவும் கிராமம், கிராமமாக சென்று மக்களை பொழுதுபோக்கினர். கிராமத்தினர் இப்போதும் எங்களை மதிக்கின்றனர். ஆனால் உலகம் மாறிவிட்டது. முன்பைப் போல இப்போது யாரும் எங்கள் கலையை மதிப்பதில்லை. அது இறந்துகொண்டிருக்கிறது. நான் பொம்மலாட்டத்தை இனிமேல் இரசிக்கப் போவதில்லை.”
தமிழில்: சவிதா