"சுந்தர்பானில் ஒவ்வொரு நாளும் எங்கள் பிழைப்புக்காக நாங்கள் போராடுகிறோம். கொரோனா வைரஸ் ஒரு தற்காலிகமான முட்டுக்கட்டையை எங்களுக்கு உருவாக்கியிருந்தாலும், நாங்கள் பிழைத்துக்கொள்வோம் என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் வயல்களில் உருளைக்கிழங்கும், வெங்காயமும் விளைகிறது. சுரைக்காயும், புடலங்காயும் முருங்கைக்காயும் இருக்கிறது. விளைந்த நெல்லுக்கும் எங்களிடம் பஞ்சமில்லை. எங்களது பகுதியில் உள்ள குளங்களில் மீன்கள் நிறைய இருக்கின்றன. அதனால், நாங்கள் பட்டினியால் செத்துப்போக மாட்டோம். அதற்கான காரணம் எதுவும் இங்கு இல்லை ”என்கிறார் மவுசானி எனும் பகுதியைச் சேர்ந்த சரல் தாஸ் .
நாடு தழுவிய பொது அடைப்பு நடைமுறையில் இருப்பதால், நாடு முழுவதும் உணவுப் பொருள்களின் விநியோகத்தைச் சீர்குலைத்திருக்கிறது. ஆனால், மவுசானியைப் பொறுத்தவரையில் அந்தக் கவலை இங்கே தேவையில்லை. இந்திய சுந்தர்பான் காடுகளின் மேற்குப் பகுதியில் 24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு இது. " பொது அடைப்பு காலமாக இது இருப்பதால், இங்கிருந்து ஒவ்வொரு நாளும் படகுகளில் நம்கானா அல்லது காக்ட்விப் பகுதிகளில் உள்ள சந்தைகளுக்குக் காய்கறிகளும் மற்ற விளைபொருள்களும் போகும். தற்போது அவ்வாறு போக முடியாது" என்கிறார் தாஸ்.
மவுசானியிலிருந்து 20 முதல் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நம்கானா மற்றும் கக்ட்விப்பில் உள்ள மொத்த விற்பனைச் சந்தைகளுக்கான சில காய்கறிகளை எடுத்துக்கொண்டு ‘ அவசர காலத்திற்கான ‘சிறப்புப் படகுகள்’ செல்கின்றன. இந்தப் படகு பயணத்துக்கு சுமார் 30 நிமிடங்கள் ஆகும். அங்கிருந்து கொல்கத்தாவுக்கு விளைபொருட்களைக் கொண்டு செல்லும் ரயில்களும் லாரிகளும் இப்போது இயங்கவில்லை.
மவுசானியில் விளையும் பயிர்களில் நெல்லும், பாகற்காயும் வெற்றிலையும் முக்கியமானவை. கொல்கத்தாவின் சந்தைகளில் மவுசானியின் அரிசியும் பாகற்காயும் வெற்றிலையும் எல்லோரும் கேட்டு வாங்கும் பொருள்கள். மவுசானி தீவில் உள்ள பாக்தாங்கா கூட்டுறவு பள்ளியில் எழுத்தராக பணிபுரியும் 51 வயதான தாஸ் கூறுகையில், “ மவுசானியின் சிறப்பான விளைபொருள்கள் வேறு எங்கிருந்து நமக்கு கிடைக்கும் என்பது நகரத்தின் பிரச்சனை” என்கிறார் பாக்தங்கா கூட்டுறவு பள்ளியில் ஒரு ஊழியராக பணியாற்றுகிற தாஸ். அவர் அந்தக் கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். அதனை குத்தகை விவசாயிகளிடம் வாடகைக்கு விட்டிருக்கிறார்.







