மூக்குக்கண்ணாடி வழியாக உற்றுப் பார்த்துக் கொண்டே, துணிக்குள் சிறிய வட்டக் கண்ணாடியை வைத்துத் தைக்கிறார் டம்மிகமல் கசிமியா. “இந்த சங்கிலித் தையல் மிகவும் கடினமான வேலை. ஏனென்றால் இந்தக் கண்ணாடி நழுவிவிடாமல் இதைத் தடுத்துத் தைக்க வேண்டும்” என்று தன் வீட்டில் அமர்ந்தபடியே சொல்கிறார். தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிட்டிலிங்கி பள்ளத்தாக்கில் இருக்கும் இரண்டு லம்பாடி குடியிருப்புகளில் ஒன்றான அக்கரெ காட்டு டண்டாவில் இருக்கிறது அவரது வீடு.
தனது 60 வயதில் இருக்கும் டம்மிகமல் அல்லது கம்மி 12 வருடங்களாக இன்னொரு மேலும் தீவிரமான நழுவல் நிகழாமல் காப்பாற்றி வருகிறார். அவருடைய தோழி ஆர். நீலாவுடன் சேர்ந்து அவர்கள் சமூகத்து இளம் லம்பாடி பெண்களுக்கு கட்டெரைக் கற்றுக்கொடுத்து அதை அவர்களது இனத்தின் பொது நினைவிலிருந்து நழுவாமல் பார்த்துக் கொள்கிறார். உறுதியான, தொடர்ச்சியான இந்த வருமானம் வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்து போவதிலிருந்து இம்மக்களைப் பாதுகாக்கிறது.
பொதுவாக லம்பாடி பெண்கள், கட்டிடத் தொழிலுக்கும், சிட்டிலிங்கியில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திருப்பூர் ஜவுளி மில்களுக்கும் இடம்பெயர்ந்து செல்வார்கள். இந்தச் சமூகத்து ஆண்கள் கேரளாவில் கட்டிடத் தொழிலுக்கும், மரம் வெட்டும் வேலைக்கும் செல்வது வழக்கம். சராசரியாக, ஆண்களோ பெண்களோ, இப்படி இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களின் மாத வருமானம் 7000 முதல் 15000 வரை இருக்கும்.
தமிழ்நாட்டில், திருவண்ணாமலையிலும், தர்மபுரியிலும்தான் (பின்தங்கிய சமூகம் என்று வரையறுக்கப்பட்ட) லம்பாடி சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். சிட்டிலிங்கியில், கிராமப் பஞ்சாயத்து அதிகாரி 924 லம்பாடிச் சமூகத்தினர் (மற்ற மாநிலங்களில் பஞ்சாராஸ் என்று அழைக்கப்படுகிறார்கள்) வாழ்வதாகச் சொல்கிறார். ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் நிலத்தை வைத்திருக்கும் சிட்டிலிங்கி லம்பாடி சமூகத்தினர், மழையை நம்பி பயிர் செய்கிறார்கள். கடந்த 30 வருடங்களாக, கரும்பு, நெல் போன்ற பணப் பயிர்களின் மீது கவனம் திரும்பியது. மழை பொய்த்ததால், பணத்திற்கான தேவை அதிகமாகி 15 நாட்களிலிருந்து ஒரு வருடம் வரை இடம்பெயர்ந்து வாழ்வதென்பது கட்டாயமாகிவிட்டது.
”இடம்பெயர்ந்து போவது இந்த சமூகத்தில் வழக்கமான ஒன்று. கட்டெரால் சம்பாதிக்கும் பெண்கள் இருக்கும் குடும்பங்களில் மட்டும் இடப்பெயர்வு குறைவு” என்கிறார் 35 வயது தாய்க்குலம்.
சிட்டிலிங்கியில் இருக்கும் இரண்டு டண்டாக்களிலும், 70 வயதைத் தாண்டிய இரண்டு அல்லது மூன்று பெண்களைத் தவிர மற்றவர்கள் தங்களின் பாரம்பரிய உடைகளை அணிவதை நிறுத்திவிட்டனர். சடங்குகளுக்கும் சில விழாக்களுக்கும் மட்டுமே அதை அணிகிறார்கள். 30 முதல் 40 வருடங்களாக இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. “நாங்கள் மற்றவர்களின் கண்களுக்கு வித்தியாசமாகத் தெரிவதை விரும்பவில்லை. அதனால் அருகிலிருக்கும் கிராம மக்கள் அணிவதைப் போலவே உடையணியத் தொடங்கிவிட்டோம்” என்று விளக்குகிறார் தாய்க்குலம்.
இந்தச் சமூகத்துப் பெண்கள் பாரம்பரிய உடைகளை அணிவதை நிறுத்திவிட்டதால், இந்த எம்பிராய்டரிக்கான கலாச்சாரக் தேவை குறைந்திருக்கிறது. கம்மியின் மாணவியும், லம்பாடி தையற்கலைஞருமான ஏ. ரமணி, “என்னுடைய பாட்டி கொஞ்ச நாட்கள் கட்டெர் தைத்து வந்தார். என் அம்மா அவருடைய திருமணத்திற்காகக் கூட ஊசியையும் நூலையும் எடுக்கவில்லை” என்கிறார்.
லம்பாடி பெண்களின் பாரம்பரிய உடைகளில் அதிகமான எம்பிராய்டரி இருக்கும். பெட்டியா என்னும் ஒற்றை நிற பாவாடை, சோலி அல்லது மேல் சட்டை மற்றும் ஸ்கார்ஃப் அல்லது துப்பட்டா அடங்கிய உடை. பாவாடையின் இடுப்புப் பகுதியிலும், மேல் சட்டையிலும் அதிகமாக எம்பிராய்டரி இருக்கும். பல வண்ணத்தால் ஆன பருத்தி நூல்களைக் கொண்டு, பல வகையான முறையில் நுட்பமான தையல் போடப்பட்டிருக்கும். இந்தச் சமூகத்து ஆண்கள், எம்பிராய்டரி இல்லாத வேட்டி, கரடுமுரடான காட்டன் சட்டைகளை அணிவார்கள்.
ரமணியின் அம்மா தலைமுறையோடு இந்தத் தையற்கலை மறையத் தொடங்கியிருந்தாலும், திருமணங்கள் போன்ற சமூக சடங்குகளுக்கு இன்னும் பாரம்பரிய உடைகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உடைகள் காலப்போக்கில் கிழிந்தோ சிதைந்தோ போயிருக்கும். “அந்த பாரம்பரிய உடைகளை கொண்டு வரும் பெண்களிடமிருந்து அதை வாங்கி, கிழிந்திருக்கும் எம்பிராய்டரியை எடுத்து புதிய துணியை வைத்து தைத்துத் தருவோம்” என்கிறார் கம்மி. இப்போது மெலிதான நூல்களை வைத்து எம்பிராய்டரி செய்யத் தொடங்கியிருப்பதால் இந்தத் தொழில் மீளத் தொடங்கியுள்ளது.
சிட்டிலிங்கியில், 60 லம்பாடிப் பெண்கள் எம்பிராய்டரி செய்கிறார்கள். அவர்களால் நடத்தப்படும் போர்கை தையற்கலைஞர் சங்கத்தில் அனைவரும் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். “எங்கள் மொழியில், ‘போர்கை’ என்றால் பெருமை மற்றும் சுயமரியாதை. எங்களின் கலை மற்றும் கைத்தொழிலில் இருந்து கிடைக்கும் வருமானத்தின் மூலமாக கிடைக்கும் பெருமை” என்று விளக்குகிறார் தாய்க்குலம். தாய்க்குலம் இந்த சங்கத்தின் தலைவராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். “எங்களின் குரல் திரும்பக் கிடைத்த உணர்வு இருக்கிறது. எங்கள் ஒற்றுமைக்கும், திறமைக்கும் வழி கிடைத்திருக்கிறது” என்கிறார்.
போர்கையின் முதல் கூட்டு உழைப்பை துவக்கி வைத்திருக்கிறார் உள்ளூரைச் சேர்ந்த மருத்துவர் லலிதா ரெஜி. தனது கணவர், மருத்துவர் ரெஜியுடன் இணைந்து பழங்குடியின சுகாதார இயக்கத்தை (Tribal Health Initiative - THI) 30 வருடங்களுக்கு முன்பாகத் தொடங்கியிருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் லலிதா ரெஜி. லம்பாடி பெண்கள் பலருக்கு மருத்துவம் செய்யும் அவர் வித்தியாசமாகத் தோன்றும் இரண்டு விசயங்களை கவனித்திருக்கிறார்: மூத்த லம்பாடிப் பெண்கள் மட்டுமே பாரம்பரிய உடைகளை அணிகிறார்கள். தன்னிடம் மருத்துவத்துக்கு வரும் பெண்கள் கூடுதல் வருமானத்திற்காக குறிப்பிட்ட கால அளவு வேறு இடங்களுக்குச் கூலி வேலைக்குச் செல்வதும், அடைத்த நிலையில் இருக்கும் நிறுவனங்களில் வேலை செய்வதும், சரியான உணவு உண்ணாமலும் தொற்று நோய்களுடன் ஊர் திரும்புகிறார்கள் எனக் குறிப்பிடுகிறார். “சம்பாதிப்பதற்கான வழியாக எம்பிராய்டரியை தொடங்கி தொடர்ந்து இதைச் செய்து வந்தால், வெளியில் சென்று சம்பாதிப்பது குறைந்து விடும்” என்று விளக்கும் லலிதா, ஒரு மகப்பேறு நிபுணர்.
கம்மி மற்றும் நீலா ஆகிய இருவருக்கு மட்டுமே லம்பாடி சமூகத்தில் இந்த எம்பிராய்டரியை மிக நன்றாக அறிந்தவர்கள். கம்மி, “யார் இதை வாங்குவார்கள்?” என்று யோசிக்காமல் மிக இயல்பாகக் கேள்வி கேட்டிருக்கிறார். ”எங்கள் மக்களே இவற்றை அணிவதில்லை” என்கிறார். THI-இல் இருந்து லலிதா ஒரு லட்சம் ரூபாய் கடனாக பெற்று இந்த முயற்சிக்கு உதவியிருக்கிறார். (பின்பு THI போர்கைக்கு இதைத் நிதியாக வழங்கியிருக்கிறார்கள்.)
தகவல் பரவி 2006-இல் 10 இளம்பெண்கள் இதில் இணைந்திருக்கிறார்கள். லம்பாடி தையலின் சிறப்பான நேர் தையலையும், உறுதியான முடிச்சுத் தையல்களையும் தைப்பதற்கு கம்மியும், நீலாவும் இவர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறார்கள். ”அவர்களுடைய தினசரி வேலைகளில் நாங்கள் தலையிடமாட்டோம். அவர்கள் வேலைகளை முடித்து இருக்கும்பொழுது அவர்களுடன் அமர்ந்து கற்றுக்கொள்வோம். ஒழுங்காக தையல் செய்யக் கற்றுக்கொள்வதற்கு எனக்கு ஒரு மாதம் தேவைப்பட்டது” என்கிறார் ரமணி.
லம்பாடி எம்பிராய்டரிக்கு வெவ்வேறு வகையான தையல்கள் இருக்கின்றன: ஜாலி (மெஷ்), போடாஹ் பந்தன் வெலா (நடுவில் வெட்டிய கோடு) மற்றும் எக்சுய்காட் (ஒரு தையற்கோடு). மோட்டிஃபுகள், எல்லை முறைகள், எட்ஜிங்குகள், ஹெம்மிங் மற்றும் ஃபில்லர்கள் ஆகியவை உள்ளன. குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உருவான ஷிஷா எம்பிராய்டரியிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்பட்டுள்ளது.
ஆறு மாதங்களில், ரமணியும் மற்ற மாணவர்களும் போர்கை ஒப்பந்த வேலையில் பணிபுரியத் தயாராக இருக்கிறார்கள். 2009-க்கு முன்பு சந்தைப்படுத்துதலும், விற்பனையும் குறைவாக இருந்தன. அதற்குப் பிறகு தேங்கியிருந்த வருமானம் அந்த கலைஞர்களுக்கு சரியான நேரத்தில் கிடைக்கத் தொடங்கியிருந்தன.
”எட்டு வரிசைகளில் ஒவ்வொன்றிலும் தையல் செய்ததிலிருந்து எனக்கு முதல் சம்பளம் கிடைத்தது”, ரமணி நினைவுகூர்கிறார். அவரும் அவரது கணவரும் வைத்திருக்கும் ஒரு ஏக்கர் நிலத்தில், விற்பனைக்காக கரும்பையும் மஞ்சளையும் பயிரிட்டனர். தங்களது சொந்த பயன்பாட்டுக்காக சிறுதானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளை வளர்த்தார்கள். கட்டெரின் மூலமாக அவர்களது ட்ராக்டர் கடனான 2.5 லட்சத்தை, மாதம் 8000 ரூபாயாக அடைத்து வந்தனர். வருமானம் மோசமடைந்தாலும், கட்டெரால் கிடைக்கும் வருமானம் நிலையானதாக இருந்திருக்கிறது. “என் மகன் தனுஷ்கோடி இரண்டு மாதக் குழந்தையாக (இப்போது அவருக்கு 13 வயது) வருமானத்திற்காக நான் இந்த இடத்தை விட்டு வெளியில் சென்றதில்லை” என்கிறார் மகிழ்ச்சியுடன். “எல்லா நேரங்களிலும் என்னுடைய கட்டெரை எடுத்துச் செல்கிறேன். என் நிலத்தில் நீர் பாயும் நேரத்தில் தையலைத் தொடங்கிவிடுவேன்” என்கிறார்.
கடந்த நிதியாண்டில் (2017 - 2018) போர்கைக்கு 45 லட்சங்கள் லாபம் கிடைத்திருக்கிறது. அதில் பெரும் பகுதி கலைஞர்களுக்கு சம்பளமாக அளிக்கப்பட்டுவிட்டது. எவ்வளவு நேரம் எம்பிராய்டரி செய்ய முடியுமோ அதைச் சார்ந்து ஒவ்வொரு பெண்ணும், மாதத்திற்கு 3000 முதல் 7000 வரை சம்பாதிக்கிறார்கள். “ஒரு நாளைக்கு எட்டி மணி நேரம் வரை எம்பிராய்டரி செய்வேன்” என்கிறார் ரமணி. “பகலில் செய்ய முடியாவிட்டால் இரவில் செய்துவிடுவேன்” என்கிறார்.
போர்கையின் மீதமிருக்கும் லாபத்தொகை துணி, நூல் மற்றும் கண்ணாடிகளை வாங்குவதற்காக செலவிடப்படுகிறது. ஆறு வருடங்களுக்கு முன்பு ஏழு தையல் மிஷின்கள் கொண்ட தையல் பிரிவை இந்த சங்கம் தொடங்கியிருக்கிறது. அலுவலகக் கட்டிடத்திற்குள் இருக்கிறது இந்தப் பிரிவு. தலையணை உறைகள், பைகள் மற்றும் சிறு பைகள், புடவைகள், குர்தாக்கள், சட்டைகள் மற்றும் ஆபரணங்கள் போன்றவற்றை கண்காட்சிகளிலும், சில்லறைக் கடைகளிலும் வெவ்வேறு நகரங்களில் விற்பனை செய்வதால் தேவைக்காக இந்த தையல் பிரிவு தொடங்கப்பட்டிருக்கிறது.
போர்கை தொடங்கிய பிறகு, இதன் உறுப்பினர்கள் யாரும் இடம்பெயர்ந்து எங்கும் செல்லவில்லை என்கிறார் தாய்க்குலம். “எங்களுக்கு வேலை அதிகமாகக் கிடைத்தால், அதிகமான பெண்கள் இந்த வேலையில் இணைவார்கள். இடம்பெயர்ந்து போவதும் குறைந்துவிடும்” என்கிறார் அவர். “பெண்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்கு வேலைக்குச் சென்றால், குடும்பங்கள் பிரிந்து குழந்தைகளும் தனித்து விடப்படுகிறார்கள். எல்லாவிதமான நோய்களோடும் திரும்புகிறார்கள். அதிக நேரம் வேலை செய்வதாலும், வாழ்க்கைச் சூழல் மோசமடைவதாலும் அவர்கள் கஷ்டத்துக்குள்ளாகிறார்கள்” என்கிறார்.
பலவிதமான கைவினை விற்பனை நிலையங்களுக்கு தங்கள் பொருட்களோடு செல்வதன் மூலமாக, போர்கைக்கு ஆர்டர்கள் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன. அதன் உறுப்பினர்களும் 10-இல் இருந்து 60ஆக பெருகியிருக்கிறார்கள். பயிற்சி வகுப்புகளும், வருடாந்திர வடிவமைப்பும் போர்கை அலுவலகத்தில் நடக்கும். விருப்பமுள்ள லம்பாடிச் சமூகப் பெண்கள் யாரும் இதில் இணையலாம். பயிற்சியின்போது பத்து நாள் பயிற்சிக்கு நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் வீதம் ஒருவருக்கு அளிக்கப்படும். அனுபவம் வாய்ந்த ஆசிரியரும், முன்னோடியுமான கம்மி போன்றவர்களுக்கு கூடுதலாக 50 ரூபாய் அளிக்கப்படுகிறது.
லம்பாடி சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்குழந்தையான ரமணியின் மகள் கோபிகாவும் இந்தக் கைவினை திறனைக் கற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டார். பள்ளியில் கைவினை நேரத்தின்போது தான் செய்த பொருளை பெருமையோடு காட்டுகிறார்.
புத்தாக்கம் பெற்றிருக்கும் இந்தத் தொழிலைக் குறித்து கம்மி என்ன நினைக்கிறார் என்று கேட்டால், “இறந்துபோன ஒருவர் மீண்டு வந்தால் எப்படியிருக்கும்?” என்று கேட்கிறார். “நாங்கள்தான் இதற்கு உயிர் கொடுத்திருக்கிறோம்”.
கட்டுரையாசிரியர் மொழிபெயர்ப்பு உதவிக்காக, கே. காயத்ரி ப்ரியா, அனகா உன்னி மற்றும் அபய் ஆகியவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறார்.
தமிழில்: குணவதி