மேடைக்கு முன் திரண்டிருந்த பெருந்திரள் அமைதியாக இருந்தது. நூறு கிலோமீட்டர் தொலைவிலிருந்து பல மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கானோரின் ஒன்றுபட்ட இதயத்துடிப்புச் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. தலைவர்கள் மரியாதையுடன் தலைவணங்கியபோது அவர்களிடம் உணர்வெழுச்சி மேலோங்கியது. காற்றில் எங்கும் உணர்ச்சி பரவியது. சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் எட்டு இளைஞர்கள் தங்களின் தலைகளில் சிங்குவிற்கு சுமந்து வந்த மண் பானை மீதே அனைவரின் கவனமும் குவிந்தன.
தியாகிகள் பகத் சிங், ராஜகுரு, சுகதேவின் 90ஆவது ஆண்டு தியாக நாளையொட்டி மார்ச் 23, 2021 அன்று டெல்லியின் எல்லையில் போராடி வரும் விவசாயிகளிடம் பல மைல் தூரம் நினைவுகளுடன் புனித மண் கொண்ட பானை பயணப்பட்டு வந்தது.
“பஞ்சாபின் இந்த இளைஞர்கள் வரலாற்றின் எட்டு முக்கிய இடங்களில் இருந்து மண் கொண்டு வந்துள்ளனர். அந்த இடங்கள் எங்களின் மனதிற்கு நெருக்கமானவை. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. நாங்கள் அவற்றை வரவேற்கிறோம்,” என மேடையில் அறிவிக்கிறார் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜதிந்தர் சிங் சினா.
மண் என்பது விவசாயிகளின் வாழ்வில் பண்பாட்டு ரீதியாகவும், அடையாளப் பொருளாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போது அதற்கு புதிய அரசியல், வரலாற்று, உருவகப் பொருள் கிடைத்துள்ளது. பல்வேறு தியாகிகளின் கிராமத்து புனித மண்ணைக் கொண்டு வருவது, போராடும் விவசாயிகளுக்கு புத்துயிர் அளித்து ஊக்கமளிக்கும். விவசாய சங்கங்கள், செயற்பாட்டாளர்களுக்கான மாவட்ட அளவிலான கூட்டத்தில் எளிய மக்களிடமிருந்து இந்த சிந்தனை தோன்றியது.
“இப்போது நான் உணர்ச்சிவயப்பட்டுள்ளேன். நாங்கள் எல்லோருமேதான். இத்தியாகிகளின் இரத்தமும், எலும்புகளும் எப்படி செய்யப்பட்டு இருக்கும் என்பது எனக்குத் தெரியாது,” என்கிறார் பஞ்சாப் சங்குருரிலிருந்து மண் சுமந்து வந்த விவசாயிகளில் ஒருவரான 35 வயது புபேந்தர் சிங் லாங்கோவால். “ஒடுக்குபவர்களுக்கு எதிராக போராட துணிவும், தீர்க்கமும் அளிக்கும் என்பதால் நாங்கள் மண்ணை சேகரித்து வந்தோம்.”
தியாகிகள் நாளான மார்ச் 23 அன்று டெல்லி நுழைவாயிலில் 117ஆவது நாளாக நீளும் வரலாற்று சிறப்புமிக்க விவசாயிகளின் அகிம்சை போராட்டத்தையும் குறித்தது.
சீர்திருத்தம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டங்களை விவசாயிகள் எதிர்க்கின்றனர். விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020; விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020.
இச்சட்டங்கள் குறைந்த ஆதரவு விலை (எம்எஸ்பி), வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுக்கள் (ஏபிஎம்சி), மாநில கொள்முதல் போன்றவற்றில் விளைவிப்பவருக்கான முக்கிய ஆதரவுகளை பலவீனப்படுத்துவதாக விவசாயிகள் சொல்கின்றனர்.
விவசாயிகளின் தேவைகள், உரிமைகளை மதிக்கத் தவறும் கார்ப்ரேட்டுகளின் முழு கட்டுப்பாட்டில் விவசாயம் செல்வதற்கு எதிராக தங்களது போராட்டத்தை அவர்கள் பார்க்கின்றனர். அவர்கள் தங்களின் நிலம் மற்றும் உரிமைகளுடன் ஜனநாயகம், நீதிக்காகவும் இப்போராட்டத்தை செய்கின்றனர். அவர்களுடையது சுதந்திரத்திற்கான போராட்டம். ஆனால் இம்முறை எதிரில் இருப்பவர் வெளிநபர் அல்ல.
“ஆங்கிலேயர்களுக்கு எதிராக புராட்சியாளர்கள் போராடினார்கள்,” என்கிறார் பஞ்சாபின் ஃபரித்கோட் மாவட்டம் கோட் காப்புரா பகுதியில் உள்ள அவுலக் கிராமத்தைச் சேர்ந்த 23 வயது மோகன் சிங் அவுலக். “அது ஒரு அடக்குமுறையான, கொடுங்கோல் ஆட்சி. இவை ஆங்கிலேயர்கள் சென்றவுடன் முடிந்துவிடவில்லை. அராஜக ஆட்சி இன்றும் நிலைப்பதுதான் பிரச்னை.” அன்றைய தினம் அவருக்கும், மற்றவர்களுக்கும், சுதந்திரப் போராளிகளின் தியாகங்களால் வளப்படுத்தப்பட்ட மண்ணை மீட்டெடுப்பது என்பது அரசியலமைப்பு உரிமைகளை உறுதிப்படுத்தும் ஒரு அடையாள அரசியல் செயலாக மாறியது.
நாடெங்கிலும் இருந்து 2,000க்கும் அதிகமான விவசாயிகள் மார்ச் 23ஆம் தேதி காலை சிங்குவிற்கு வந்தனர். பகத் சிங், சுகதேவ் தாப்பர், ஷிவராம் ஹரி ராஜகுருவின் புகைப்படங்கள் மேடையில் பிரதான இடத்தைப் பெற்றிருந்தன. அங்கு மண் நிரம்பிய பானைகள் வைக்கப்பட்டன.
முன்னோடி சுதந்திர போராளிகள் ஒவ்வொருவரும் தங்களது 20களில் இருந்துள்ளனர். லாகூர் மத்திய சிறையில் 1931ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தூக்கிலிடப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்கள் இரகசியமாக ஹூசைனிவாலா கிராமத்திற்கு நள்ளிரவில் கொண்டுவரப்பட்டு எரியூட்டப்பட்டது. பஞ்சாபின் ஃபிரோஸ்புர் மாவட்டத்தில் சட்லஜ் ஆற்றங்கரையில் இக்கிராமத்தில் ஹூசைனிவாலா தேசிய தியாகிகள் நினைவிடம் 1968ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதே இடத்தில் மற்றொரு புரட்சியாளர் கூட்டாளியான பதுகேஷ்வர் தத், பகத் சிங்கின் தாய் வித்யாவதி ஆகியோரும் தகனம் செய்யப்பட்டனர். இங்கிருந்துதான் சிங்குவிற்கு முதல் பானை மண் கொண்டுவரப்பட்டுள்ளது.
பகத் சிங் தூக்கிலிடப்பட்டபோது அவருடைய பாக்கெட்டில் 1915ஆம் ஆண்டு 19 வயதில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட மற்றொரு சுதந்திர போராட்ட நாயகர் கர்தார் சிங் சாராபாவின் புகைப்படம் இருந்தது. இரண்டாவது பானை மண் பஞ்சாபின் லூதியானா மாவட்டம் சாராபாவில் அவரது கிராமத்திலிருந்து கொண்டுவரப்பட்டது. அந்த இளம் இந்திய புரட்சியாளர் ஒரு பத்திரிகையாளர், கதார் கட்சியின் முதன்மை உறுப்பினர், அவரே தனது மகனின் “நாயகன், நண்பன், பாதுகாவலன்” என்று பகத் சிங்கின் தாயார் வித்யாவதி கூறியுள்ளார்.
பஞ்சாபின் அமிர்தசரசில் உள்ள ஜாலியன்வாலா பாகிற்கு 12 வயதில் சென்றபோது பகத் சிங்கின் கதை தொடங்குகிறது. 1919, ஏப்ரல் 13ஆம் தேதி 1000க்கும் மேற்பட்ட நிராயுதபாணியான மக்கள் ஆங்கிலேய ராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டையரின் உத்தரவின்பேரில் படுகொலை செய்யப்பட்டனர். ஜாலியன்வாலாவில் இரத்தம் தோய்ந்த மண்ணை பகத் சிங் சேகரித்து தனது கிராமத்திற்கு கொண்டு சென்றார். தனது தாத்தாவின் தோட்டத்தில் அம்மண்ணை தூவி அதில் பூக்கள் வளர்வதையும் கண்டார். இந்த பாகிலிருந்து மூன்றாவது பானை மண் சிங்குவிற்கு வந்துள்ளது.
பஞ்சாபின் சங்ருர் மாவட்டம் சுனமிலிருந்து மூன்று பானை மண் வந்துள்ளது. 1940ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி லண்டனில் மைக்கல் ஃபிரான்சிஸ் ஓ’ டையரை சுட்டுக் கொன்றதற்காக ஆங்கிலேயே நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு உதம் சிங் எனும் தனது பெயரை முகமது சிங் ஆசாத் என பெயர் மாற்றிக் கொண்டவரின் கிராமத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. பஞ்சாப் துணைநிலை ஆளுநரான ஓ’ டையர், ஜாலியன்வாலாவில் டையரின் செயலை ஆதரித்தவர். 1940ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி லண்டனில் உள்ள பென்டான்வில்லி சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார். 1974ஆம் ஆண்டு அவரது உடலின் எஞ்சிய பகுதிகள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு சுனமில் தகனம் செய்யப்பபட்டது.
“பகத் சிங், கர்தார் சிங், சாச்சா அஜித் சிங், உதம் சிங் போராடியதைப் போன்று நம் குருக்களும் அடக்குமுறையாளர்களுக்கு எதிராக போராடினர். நம் தலைவர்களின் பாதையைப் பின்பற்ற நாங்கள் தீர்மானித்துள்ளோம்,” என்கிறார் புபேந்தர் லாங்கோவால். அவரது உணர்வுகளையே சிங்குவில் உள்ள பிற விவசாயிகளும் பிரதிபலித்தனர்.
“அதிகாரமற்றவர்கள் மீது அதிகாரத்தை செலுத்துவதை நாங்கள் எப்போதும் எதிர்க்கிறோம்,” என்கிறார் பகத் சிங்கின் உறவினரான 64 வயது அபய் சிங். வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை உயிரிழந்த சுமார் 300 விவசாயிகளையும் அவர் நினைவுகூர்ந்தார்.
ஐந்தாவது பானை மண் பஞ்சாப் மாவட்டத்தின் ஃபதேகர் சாஹிப் நகரிலிருந்து வந்தது. அங்கு 1704ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி சிர்ஹின்டின் முகலாய ஆளுநர் வாசிர் கானின் உத்தரவின்பேரில் குரு கோவிந்த் சிங்கின் இளைய மகன்கள் ஐந்து வயது பாபா ஃபதே சிங்கந்த், ஏழு வயது பாபா சோராவர் சிங் செங்கற்களால் உயிருடன் சமாதி கட்டப்பட்டனர்.
பஞ்சாபின் ரூப்நகர் மாவட்டம் சம்கார் நகரத்தை குறிக்கும் வகையில் குருத்வாரா கதல்கர் சாஹிபிலிருந்து ஆறாவது பானை மண் கொண்டுவரப்பட்டது. அங்கு தான் குரு கோவிந்தின் இரண்டு மூத்த மகன்களான 17 வயது அஜித் சிங், 14 வயது ஜூஜார் சிங்கும் முகலாயர்களிடம் போர்க்களத்தில் தோற்றனர். ரூப்நகர் மாவட்டம் நுர்புர் பேடி பகுதியிலிருந்து ரன்பிர் சிங் இங்கு பானையை சுமந்து வந்தார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருபவர்களின் மனதில் நான்கு சகோதரர்களின் துணிவு, தியாகம் நிறைந்த கதைகள் ஆழமாக பொறிக்கப்பட்டுள்ளன.
பஞ்சாபின் ரூப்நகர் மாவட்டத்தில் கல்சாவின் பிறப்பிடமான அனந்த்புர் சாஹிபிடமிருந்து ஏழாவது பானை மண் வந்தது. கல்சா என்றால் தூய்மை என்று பொருள். 1699ஆம் ஆண்டு குரு கோவிந்த் சிங்கினால் உருவாக்கப்பட்ட சீக்கிய சிறப்பு சமூகத்தை குறிக்கிறது. துன்புறுத்தல் மற்றும் அடக்குமுறையிலிருந்து அப்பாவி மக்களை காக்கும் கடமையை வீரர்கள் கொண்டுள்ளனர். “கல்சாவின் உருவாக்கம் அளிக்கும் உத்வேகத்தில் நாங்கள் போராடும் சக்தியை பெற்றோம். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டமும் பஞ்சாபில்தான் தொடங்கியது. நம் நாடு என்பது தியாகிகளை மதிப்பது. இறந்துபோன அன்பானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வழக்கத்தை இந்தியர்கள் கொண்டுள்ளனர்,” என்கிறார் ரன்பிர் சிங்.
பல்வேறு இடங்களில் இருந்து மண் எடுத்து வந்த இளைஞர்கள் புபேந்தர், மோகன், ரன்பிர் பேசுகையில், எல்லைகளில் போராடும் விவசாயிகளில் இந்த இடங்களுக்கு செல்ல முடியாது. ஆனால் அங்கிருந்து மண் எடுத்து வர முடியும் “போராடும் உறுதியை புதுப்பிக்கும், அவர்களின் ஆன்மா, மன உறுதியை அதிகரிக்கும்.”
வரிசையில் எட்டாவதாக வந்த இறுதி பானை பஞ்சாபின் ஷாஹித் பகத் சிங் நகர் மாவட்டம், பங்கா நகருக்கு வெளியே உள்ள பகத் சிங்கின் முன்னோர்கள் கிராமமான கத்கார் கலனிலிருந்து சிங்குவிற்கு கொண்டு வரப்பட்டது. “பகத் சிங் சிந்தனையின் முக்கியம் அம்சம்” என்று பேசிய அவரது உறவினர் அபய் சிங், “மனிதர்களால் மனிதர்களும், தேசங்களால் தேசங்களும் சுரண்டப்படுவது முடிவுக்கு வர வேண்டும். டெல்லி எல்லைகளில் நடக்கும் போராட்டம் அவரது சிந்தனைகளை நோக்கி நகர்கிறது.”
“பகத் சிங் தனது சிந்தனையால் ஷாஹீத்-இ-அசம் என்று அழைக்கப்படுகிறார். நீ உனது சொந்த வரலாற்றை எழுத வேண்டும் என்பதே சிந்தனை. நாம், பெண்கள், விவசாயிகள், ஒடுக்கப்பட்டவர்களாக நம் வரலாற்றை எழுதுகிறோம்,” என்கிறார் ஹரியானாவின் ஹிசார் மாவட்டம் ஹன்சி-தாலுக்காவில் உள்ள சொர்கி கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை சொந்தமாக கொண்டுள்ள விவசாயியும், செயற்பாட்டாளருமான சவிதா.
“எங்கள் நிலத்தை பெருநிறுவனங்கள் எளிதில் அடைவதற்கே இந்த அரசு இச்சட்டங்களை கொண்டுவந்துள்ளது. மத்திய அரசின் ஆணையை மீறுபவர்கள் செயல்படுபவர்கள் சிறைக்கு அனுப்பப்படுகின்றனர். நாங்கள் மூன்று வேளாண் சட்டங்களை மட்டும் எதிர்க்கவில்லை, பெருநிறுவனங்களையும் தான் எதிர்க்கிறோம். கடந்த காலங்களில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினோம். இப்போது அவர்களின் கூட்டாளிகளுடன் அதை செய்கிறோம்.”
தமிழில்: சவிதா