“மேற்கு வங்கத்தின் பல விவசாயிகளுக்கு இந்த சட்டங்களை பற்றிய விழிப்புணர்வு இல்லை. ஆகவே தலைவர்களின் பேச்சை கேட்பதற்காக என் கிராமத்திலிருந்து சிலரை அழைத்து வந்திருக்கிறேன். ஊருக்கு திரும்பியதும் அண்டை வீட்டுக்காரர்களிடமும் நண்பர்களிடமும் அவர்கள் கேட்டதை சொல்வார்கள்,” என்கிறார் சுப்ரதா அதாக்.
10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பரா கமலாப்பூரிலிருந்து மார்ச் 14ம் தேதி 31 வயது விவசாயி சிங்கூர் கூட்டத்துக்கு வந்திருந்தார். வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயக் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தலைவர்கள் மார்ச் மாத மத்தியில் சட்டங்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மேற்கு வங்கத்துக்கு வருகை தந்தனர். சிங்கூர் மட்டுமென இன்றி, அசன்சோல், கொல்கொத்தா மற்றும் நந்திகிராம் ஆகிய பகுதிகளிலும் அவர்கள் கூட்டங்கள் நடத்தினர்.
சிங்கூரின் நபபல்லி பகுதியில் காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 1 மணி வரை நடந்த சிறிய கூட்டத்தில் 500லிருந்து 2000 வரையிலான எண்ணிக்கையில் விவசாயிகளும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். கொல்கத்தாவிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் டவுன் 2006-07-ல், டாடா மோட்டாரின் நானோ கார் தொழிற்சாலைக்கு 997 ஏக்கர் விவசாய நிலம் ஒதுக்கப்படுவதை எதிர்த்து பெரும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. 2016ம் ஆண்டில் உச்சநீதிமன்றம், விவசாயிகளுக்கு நிலத்தை திருப்பிக் கொடுக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டது. அந்த நிலங்களில் பெரும்பாலும் பொட்டலாக கிடக்கிறது.
“ஒரு விவசாயியாக இருக்கும் எனக்கு இந்தியாவில் விவசாயம் இருக்கும் நிலை தெரியும்,” என்கிறார் சுப்ரதா. எட்டு பிகா (ஒரு பிகா என்பது 0.33 ஏக்கர்) நிலத்தில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் விளைவிக்கிறார். “விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் கூட பிரிட்டிஷார் விவசாயிகளை சுரண்டினர். தற்போதைய அரசு அதே சூழலை மீண்டும் கொண்டு வருகிறது. உருளைக்கிழங்கு விவசாயத்தின் செலவுகள் அதிகரித்துவிட்டன. விதையின் விலை கூடிவிட்டது. இந்த கஷ்டமான வேலைகளுக்கான பணம் எங்களுக்கு கிடைக்காமல் கார்ப்பரேட்டுகளுக்கு கிடைத்தால் நாங்கள் எப்படி உயிர் வாழ்வது?
“போராடுவதை நாங்கள் நிறுத்த மாட்டோம். மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்பட விரும்புகிறோம்,” என்கிறார் 65 வயது அமர்ஜீத் கவுர். 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் டன்லப் பகுதியிலிருந்து சிங்கூருக்கு வந்திருக்கிறார். “அரசு எங்களுக்கு நிறைய நஷ்டங்களை கொடுத்துவிட்டது,” என்கிறார் கவுர். அவரின் பூர்வீக வீடு லூதியானாவில் இருக்கிறது. அங்கு அவரின் குடும்பம் நெல் மற்றும் கோதுமை பயிர்களை விளைவிக்கிறது. “பணமதிப்புநீக்கம் கொண்டு வந்தார்கள். யாருக்கும் வேலை இல்லை. எங்களால் தில்லிக்கு (விவசாயிகளின் போராட்டங்களில் பங்கெடுக்க) செல்ல முடியாததால் இங்கு வந்திருக்கிறோம். கறுப்புச் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டத்தை நாங்கள் ஆதரிப்போம்.”
விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 , விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே மூன்று வேளாண் சட்டங்கள் ஆகும். 2020 ஜூன் 5 அன்று அவை அவசர சட்டங்களாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு எதிர்ப்பையும் மீறி வேகவேகமாக அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டன.
மூன்று சட்டங்களும் தங்களின் வாழ்வாதாரங்களை அழிக்கவும் பெருவணிக நிறுவனங்கள் விவசாயம் மற்றும் விவசாயிகள் மீது பெரும் அதிகாரம் கொள்ளவும் வாய்ப்பு வழங்குவதாக விவசாயிகள் நினைக்கின்றனர். அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.
பால்லியின் 55 வயது ஜிதேந்திர சிங்கும் கூட்டத்தில் இருந்தார். சிங்கூரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலிருந்து வந்திருக்கிறார். போக்குவரத்து வணிகத்தில் இருக்கும் அவர், “நம் நாட்டின் பிரதான செல்வம் விவசாயம்தான். இந்த வேளாண் சட்டங்கள் அத்துறையை மிக மோசமாக தாக்கியிருக்கிறது. 2006ம் ஆண்டில் மண்டி முறையை நிறுத்திய பிகாரை பாருங்கள். பிகாரின் விவசாயிகள் நிலமிருந்தபோதும் பிழைப்புக்காக பஞ்சாபுக்கும் ஹரியானாவுக்கு செல்ல வேண்டியிருக்கிறது.”
”ஏன் அவர்கள் (அரசு) குறைந்தபட்ச ஆதார விலையை பற்றி பேசுவதில்லை?” எனக் கேட்கிறார் 30 வயது நவ்ஜோத் சிங். உணவகம் நடத்திக் கொண்டிருக்கும் பால்லியில் இருந்து சிங்கூருக்கு வந்திருக்கிறார். அவருடைய குடும்பம், பஞ்சாபின் பர்னாலா மாவட்டத்திலுள்ள ஷேக்கா கிராமத்தில் சொந்தமாக வைத்திருக்கும் 10 ஏக்கர் நிலத்தில் நெல்லும் கோதுமையும் விளைவிக்கிறார்கள். “மேற்கு வங்க விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலையை பற்றி அதிக விழிப்புணர்வு பெற இக்கூட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுகிறது.”
ஹூக்ளி மாவட்டத்தின் செரம்பூர் டவுனிலிருந்து இங்கு வந்திருக்கும் 50 வயது பர்மிந்தர் கவுர் சொல்கையில், “விவசாயச் சடங்கள் அமல்படுத்தப்பட்டால், எங்களின் பயிர்களை விற்பதற்கான நிலையான விலை எதுவும் இருக்காது,” என்கிறார். பஞ்சாபின் லூதியானாவை சேர்ந்த அவரின் குடும்பத்தினர், தங்களுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் நெல்லையும் கோதுமையையும் விளைவிக்கிறார்கள். அவரின் குடும்பம் மேற்கு வங்கத்தில் போக்குவரத்து தொழிலில் இருக்கிறது. “எந்த கட்சியையும் ஆதரிக்க நாங்கள் சிங்கூருக்கு வரவில்லை,” என்கிறார் அவர். “நம் விவசாயிகளுக்காக நாங்கள் வந்திருக்கிறோம்.”
42 வயது கல்யாணி தாஸ் பத்து கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் பரா கமலாப்பூரிலிருந்து சிங்கூருக்கு நடந்தே வந்திருக்கிறார். உருளைக்கிழங்கு, நெல், சணல் போன்றவற்றை இரண்டு பிகா நிலத்தில் அவர் விளைவிக்கிறார். “விலைகள் எல்லாம் அதிகரித்துவிட்டது,” என்கிறார் அவர். ”எண்ணெய், எரிவாயு மற்றும் அன்றாட பொருட்கள் எல்லாவற்றின் விலையும் உயர்ந்துவிட்டது. ஓய்வின்றி எங்கள் நிலத்தில் நாங்கள் வேலை பார்த்து உள்ளூர் சந்தையில் பயிரை விற்கிறோம். போதுமான விலை எங்கள் பயிருக்கு கிடைக்கவில்லை எனில், பட்டினியால் இறந்துவிடுவோமோ என்கிற பயம் இருக்கிறது.”
கல்யாணியின் அண்டை வீட்டில் வசிக்கும் 43 வயது ஸ்வாதி அதாக் சொல்கையில், “மூன்று பிகா நிலம் எங்களுக்கு இருக்கிறது. உருளைக்கிழங்கு விவசாயம் அதிகச் செலவு என்பதால் உருளைக்கிழங்கு அதிகம் விளைவிப்பதில்லை. நிறைய கஷ்டப்பட்ட பிறகும் போதுமான பணம் கிடைக்காததால் பல உருளைக்கிழங்கு விவசாயிகள் தற்கொலை செய்திருக்கின்றனர்,” என்கிறார்.
51 வயது லிச்சு மகாதோவும் கூட்டத்துக்கு வந்திருந்தார். சிங்கூரில் விவசாயக் கூலியாக பணிபுரிகிறார். ஹூக்ளி மாவட்டத்தில் மகாதோபரா கிராமத்தில் வசிக்கிறார். அவருக்கிருக்கும் சிறு நிலத்தில் நெல் விளைவிக்கிறார். “வெறும் 200 ரூபாய்தான் ஒரு நாளுக்கு கூலியாக கிடைக்கிறது,” என்கிறார் அவர். “குடும்பத்தில் மதிய உணவுக்கு மீன் வாங்கி வரச் சொன்னால், இந்த தொகையை வைத்துக் கொண்டு எப்படி வாங்குவது? என் மகன் ரயில்களில் குடிநீர் விற்கிறார். விவசாயச் சட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இங்கு வந்திருக்கிறேன். என்னுடைய வாழ்க்கை ஏற்கனவே மோசமாக இருக்கிறது. இதற்கு மேலும் அது மோசமடைய நான் விரும்பவில்லை.”
தமிழில் : ராஜசங்கீதன்