சூரியன் மறைந்துவிட்டது. இருள் வேகமாக பரவி வருகிறது. தங்கள் தலைகளில் விறகுக் கட்டைகள், பாத்திரங்கள், கற்கள், அரிசி ஆகியவற்றையும், மசாலா பொருட்களையும் கையிலும் எடுத்துக்கொண்டு ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள் - 50 ஆயிரம் பேர் என ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகிறார்கள் - வடகிழக்கு மும்பையில் முளுந்த் பகுதியில் பழைய சுங்கச்சாவடியை நோக்கி நடந்தார்கள். தற்போது செயல்பாடுகளின்றி இருக்கும் இந்த இடம்தான் போராட்டக்காரர்களுக்கான பிரச்சாரத் திடலாக மாறியிருந்தது.
”நாங்கள் இங்கு தங்கிக்கொள்வோம். எங்களுக்குத் தேவையான பொருட்களையெல்லாம் நாங்கள் எடுத்து வந்துள்ளோம். அடுப்பெரிக்க தேவையான விறகுகள், சமைப்பதற்கு தேவையான அரிசி என எல்லாவற்றையும் வைத்துள்ளோம்,“ என தலையில் உள்ள சுமையை சரிசெய்துகொண்டே கூறுகிறார் மனுபாய் கவாரி. “எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாங்கள் இங்கிருந்து நகரமாட்டோம்.“ மனுபாய் (60), வர்லி சமூகத்தைச் சேர்ந்தவர், பிவந்தி தாலுகாவின் திகாஷி கிராமத்தில் வசிப்பவர். அவரது கிராமத்தில் இருந்து வந்துள்ள 70 முதல் 80 கிராமத்தினருடன் பேரணிக்கு வந்துள்ளார்.
அக்டோபர் 30ம் தேதி வியாழக்கிழமை, காலை 11 மணி நேரம் முதல் வர்லி, கட்கரி, மகாதேவ் கோலி, மா தாகூர் மற்றும் பல்வேறு ஆதிவாசி சமூகங்களைச் சேர்ந்த குழுவினர், நாசிக், பால்கர் ராய்காட், தானே மற்றும் மும்பை மாவட்டங்களில் இருந்து தானே நகரில் குவிந்துவிட்டனர். அவர்கள் குழுவாக வாடகை டெம்போக்கள், பேருந்துகள், ரயில்களில் வந்தனர். மதிய நேரத்தில் ஆண்களும், பெண்களும் அணிவகுத்து அலைஅலையாக தானே நகர மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி, இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலிருந்த சாகெட் நாக்காவிலிருந்து சென்றனர். அவர்களில் வேளாண் கூலித்தொழிலாளர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் கட்டிட தொழிலாளர்கள் என பல்வேறு முறைசாரா தொழிலாளர்கள் இருந்தனர்.








