ஓரிரவில் மட்டும் ஒரு லட்ச ரூபாய் வரை வருமானத்தை இழந்ததாக கணக்கிடுகிறார் தாய்பாய் குலே.
கடும் மழை தொடங்கியபோது தன் கிராமத்திலிருந்து
ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் பலவானியில் இருந்தார் அந்த 42 வயதுக்காரர். “மாலை ஐந்து
மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. நள்ளிரவுக்கு மேல் அதிகமானது,” என்கிறார் அந்த மேய்ப்பர்.
புதிதாக உழப்பட்டிருந்த நிலம் விரைவில் சகதியானது. 200 விலங்குகள் கொண்ட அவரின் மந்தை,
சகதியில் நகர முடியாமல் திணறியது.
“சகதியில் (முழு இரவும்) அமர்ந்திருந்தோம். பெருமழையில் விலங்குகளுடன் நாங்களும் முழுமையாக நனைந்திருந்தோம்,” என்கிறார் அவர் மகாராஷ்டிராவின் அகமது நகரில் டிசம்பர் 2021-ல் பெய்த கன மழையை நினைவுகூர்ந்து.
“கன மழைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் பெரும் நஷ்டங்கள் ஏற்பட்டதில்லை. இதுதான் முதல் தடவை,’ என்கிறார் தவல்புரி கிராமத்தை சேர்ந்த தாய்பாய். எட்டு செம்மறிகளையும் ஒரு பெண் ஆட்டையும் அவர் இழந்தார். “அவற்றை காப்பாற்ற நாங்கள் விரும்பினோம்.”
சதாராவில் கடுமையாக மழைப்பொழிவு இருந்தது. அந்த மாவட்டத்தில் பெரும்பாலான தாலுகாக்களில் 100 மிமீ மழை டிசம்பர் 2, 2021-ல் பதிவானது.
”நாங்கள் வேறு எதைப் பற்றியும் யோசிக்க முடியாதளவுக்கு அதிகமாக மழை இருக்கிறது. சில செம்மறிகள் குளிர் காரணமாக இறந்து போயின,” என்கிறார் தாவல்புரியை சேர்ந்த 40 வயது கங்காராம் தெபே. “எல்லா வலிமையையும் அவை இழந்துவிட்டன.”
மழை தொடங்கியபோது அவர் பந்த்காவோனிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருந்தார். 200 விலங்குகளில் கங்காராம் 13-ஐ அந்த இரவில் பறிகொடுத்தார். ஏழு முழு செம்மறிகள், ஐந்து குட்டிகள் மற்றும் ஒரு பெண் ஆடு. நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்காக உள்ளூர் மருந்தகர்களிடமிருந்து மருந்துகளையும் ஊசிகளையும் 5,000 ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்து பார்த்தார். பயனில்லை.
தாய்பாயும் கங்காராம் தேபேயும் மகாராஷ்டிராவின் மேய்ச்சல் பழங்குடியாக பட்டியலிடப்பட்டிருக்கும் தங்கர் சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் அகமதுநகர் மாவட்டத்திலும் அதைச் சுற்றியும் அதிகம் வாழ்கின்றனர். அவர்களிடம் பெருமளவில் செம்மறிகள் இருக்கின்றன.
கோடைகாலத்தில் நீரும் தீவனமும் கிடைக்காதபோது தாய்பாய் போன்ற மேய்ப்பர்கள் வடக்கு கொங்கன் பகுதியிலுள்ள பல்கர் மற்றும் தானே மாவட்ட தகானு மற்றும் பிவாந்தி பகுதிகளுக்கு இடம்பெயருகிறார்கள். ஆறு மாதங்கள் பயணத்தில் இருக்கின்றனர். மழைக்காலம் தொடங்கியதும் திரும்புகின்றனர். கொங்கன் பகுதியின் கன மழைகளை சிறு விலங்குகள் தாங்க முடியாது.
“எப்படி இப்படி மழை பெய்ததென எங்களுக்கு உண்மையாக தெரியவில்லை,” என்கிறார் அவர். “அவர் (மழை) மேகராஜா(மேகங்களின் அரசன்).”
நிகழ்வை நினைவுகூரும்போது அவரின் கண்கள் மேலே செல்கின்றன: “பெரும் நஷ்டம் ஏற்பட்டது. பெரும் நஷ்டம். வேறு தொழில் கிடைத்தால், இந்தத் தொழிலை விட்டு சென்று விடுவோம்.”
துக்காராம் கோகரே, 90 விலங்குகள் கொண்ட மந்தையில் ஒன்பது செம்மறிகளையும் நான்கு குட்டிகளையும் பறிகொடுத்தார். அவர் சொல்கையில், “பெரும் நஷ்டம் அது,” என்கிறார். ஒரு செம்மறியின் விலை 12,000லிருந்து 13,000 ரூபாய் வரை என்கிறார் அவர். “ஒன்பது செம்மறிகளை இழந்தோம். எவ்வளவு நஷ்டம் என நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்,” என்கிறார் 40 வயது தங்கர்.
அவர்கள் வழக்கு பதிவு செய்தார்களா? “எப்படி நாங்கள் பதிவு செய்ய முடியும்?” எனக் கேட்கிறார் துக்காராம். “எங்களையோ விவசாயிகளையோ காக்கும் எதுவும் எங்களிடம் இருக்கவில்லை. செம்மறிகள் ஓடத் தொடங்கின. அவற்றை நாங்கள் விட்டுச் செல்ல முடியவில்லை. என்ன நடந்ததென பதிவு செய்யவும் நேரமிருக்கவில்லை.”
பல்வானியில் மட்டும் 300 செம்மறிகள் இறந்ததாக அவர் அனுமானிக்கிறார். செம்மறி எண்ணிக்கையில் மகராஷ்டிரா ஏழாம் இடத்தில் இருக்கிறது. 27 லட்சம் செம்மறிகள் இருக்கின்றன.
சதாராவின் மான், கதவ் மற்றும் தகிவாடி பகுதிகளில் நேர்ந்த கால்நடை இழப்பு குறித்தும் அரசின் செயல்பாடு குறித்தும் ஃபல்தானை சேர்ந்த மேய்ப்பரும் மல்யுத்த வீரருமான ஷம்புராஜே ஷெண்ட்கே பாடில் பேசுகையில், “நன்றாக உடை அணிந்த ஒருவர் அரசு அலுவலகத்துக்கு சென்றால், அலுவலர் ஒரு மணி நேரத்தில் அவருடைய வேலையை செய்து கொடுக்க உத்தரவாதம் அளிக்கிறார். ஆனால் அதே அலுவலர் என் நண்பர் தங்கரின் மேய்ப்பர் உடைகளை பார்க்கிறார். பிறகு இரண்டு நாட்கள் கழித்து வரும்படி சொல்கிறார்.”
“இறந்துபோன செம்மறிகளை புகைப்படம் கூட எங்களால் எடுக்க முடியவில்லை. செல்பேசிகள் இருந்தன. ஆனால் அவற்றில் சார்ஜ் இல்லை. வசிப்பிடத்திலோ கிராமத்திலோ இருந்தால் மட்டும்தான் எங்களால் அவற்றை சார்ஜ் செய்ய முடியும்,” என்கிறார் தாய்பாய்.
சுற்றி கயிறுகள் கட்டப்பட்டிருந்த ஒரு நிலத்தில் தற்காலிகமாக விலங்குகளை வைத்திருந்தார் தாய்பாய். ஆடுகளும் செம்மறிகளும் ஓய்வெடுத்தும் மேய்ந்தும் கொண்டிருந்தன. “கால்நடைகளுக்கு உணவளிக்க நீண்ட தூரத்துக்கு நாங்கள் நடக்க வேண்டும்,” என்கிறார் அவர் பின்னால் மந்தையை காண்பித்து.
புனேவின் தவல்புரியிலிருந்து தெகு வரை செம்மறிகளுக்கு தீவனம் தேடி நடக்கிறார் கங்காராம். தெகு சமவெளியை அடைய அவருக்கு 15 நாட்கள் பிடிக்கிறது. “அனுமதியின்றி நிலத்துக்குள் (தீவனத்துக்காக) இறங்கிவிட்டால், எங்களை பிடித்து அடிப்பார்கள். அடி வாங்குவதை விடுத்து எங்களுக்கு வேறு வழியில்லை,” என்கிறார் அவர். உள்ளூர் ரவுடிகள் அவர்களை அச்சுறுத்துகையில், “விவசாயிகள் மட்டும்தான் எங்களுக்கான ஆதரவு,” என்கிறார் அவர்.
“பொதுவாக எந்தத் துயரத்தையும் கடக்கக் கூடிய திறன் பெற்றவர்கள் மேய்ப்பர்கள். அதிர்ச்சிகளை தாங்கிக் கொள்ளக் கூடியவர்கள். ஆனால் டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் பெய்த மழைகள் பல செம்மறிகளை பலி கொண்டதில் அவர்கள் உடைந்து போய்விட்டனர்,” என்கிறார் கால்நடை மருத்துவரான டாக்டர் நித்யா கோட்கே
தங்களையும் தங்களின் குடும்பங்களையும் காக்க வேண்டிய பன்மடங்கு அழுத்தங்களை மேய்ப்பர்கள் எதிர்கொள்வதாக அவர் சொல்கிறார். “சிறு குழந்தைகள், அவர்களின் உணவு, விறகு, செல்பேசிகள் போன்ற உடைமைகள் மற்றும் விலங்குகள், குறிப்பாக குட்டிகள் மற்றும் பலவீனமான விலங்குகள் போன்றவை,” ஆபத்தை எதிர்கொள்கின்றன என்கிறார் மேய்ச்சல் மற்றும் விவசாய சமூகங்களிடையே பணிபுரியும் அந்த்ரா என்கிற தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் கோட்கே.
கள நிலவரத்தை பதிவு செய்யவும் காலநிலை அதிர்ச்சிகள் பற்றிய தரவுகள் பெறவும் தடுப்பூசிகள் பற்றியும் கால்நடை மருத்துவ சேவை குறித்தும் மேய்ப்பர்களுக்கு போதுமான தகவல்கள் அளிக்கப்பட வேண்டும். “காலநிலை மாற்றம் மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்த கொள்கைகளை வகுக்கும்போது அரசாங்கம் இவற்றை கவனத்தில் கொள்ளும் என நம்பப்படுகிறது,” என்கிறார் கோட்கே.
தவல்புரியில் ஒரு பொது கூடம் கட்டப்பட்டால் தன்னை போன்ற மேய்ப்பர்கள் கால்நடைகளை காக்க உதவியாக இருக்கும் எனக் கூறுகிறார் துக்காராம். “செம்மறிகள் நனையாமல் பாதுகாப்பாக இருக்கும்படி அது கட்டப்பட வேண்டும். உள்ளே அவை குளிராக உணரக் கூடாது,” என்கிறார் அனுபவம் வாய்ந்த மேய்ப்பர்.
அதுவரை தாய்பாய், கங்காராம் மற்றும் துக்காராம் ஆகியோர் தீவனமும் நீரும் வசிப்பிடமும் தேடி தொடர்ந்து நடக்க வேண்டும். மாநிலத்திடமிருந்தும் மழையிடமிருந்தும் நிவாரணம் எதிர்பார்த்து காத்திராமல் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருப்பது புத்திசாலித்தனமான விஷயம் என்கிறார்கள் அவர்கள்.
தமிழில் : ராஜசங்கீதன்