மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் மாதத்தின் நடுவில் மீண்டும் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படவே, கோபால் குப்தா இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக மும்பையை விட்டு வெளியேற முடிவு செய்திருந்தார்.
ஆனால், இதற்கு மாறாக, மார்ச் மாதத்தின் இறுதியிலேயே, ஒரு சிறிய மண்பானையில் அவரது எரியூட்டப்பட்ட சாம்பலை எடுத்துக் கொண்டு அவரது குடும்பம் அவர்களது சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலம் குசௌரா தாலுக்காவில் உள்ள சஹாட்வேர் கிராமத்திற்கு ரயில் பயணம் மேற்கொண்டிருந்திருக்கின்றனர்.
கோபாலின் 21 வயது மகள் ஜோதி கூறுகையில் "எனக்கு தெரியவில்லை என் தந்தையின் மரணத்திற்கு கொரோனா மீது மட்டுமே குற்றம்சுமத்த முடியுமா என்று. ஒருவேளை அவர் உயிர் பிழைத்திருந்தால் கூட ஒரு காலை இழந்து தான் வாழ்ந்திருப்பார்" என்கிறார்.
கல்யாண் பகுதியில் காய்கறி விற்று வரும் 56 வயதான கோபாலுக்கு, மார்ச் முதல் வாரத்தில் லேசான இருமலும் - சளியும் ஏற்பட்ட நிலையில் பலவாணி பகுதியில் உள்ள பஸ்டி மருத்துவமனைக்கு சென்று சில மருந்துகளை எடுத்துக்கொண்ட நிலையில் நலமாக உணர்ந்துள்ளார். அதே பலவாணி பகுதியில் தான் அவரது குடும்பம் இரண்டு அறை கொண்ட வாடகை வீட்டில் வசித்து வந்திருக்கிறார்கள்.
கடந்த ஜனவரி மாதம் உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தின் பென்ஸ்திஹ் தாலுகாவிலுள்ள அவரது கிராமத்தில் அவர் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் , ஜனவரி மாதத்திலிருந்து இரண்டு மாதங்களே கடந்த நிலையில் அவர் வேலை நன்றாக சென்றுகொண்டிருந்த போதுதான் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் அவரது குடும்பம் மீண்டும் சொந்த கிராமத்திற்கு செல்லுவதற்கு தயாராகி உள்ளனர். ஜோதி கூறுகையில்,"எனது தந்தை கடந்த ஆண்டை போல இங்கு தங்கியிருந்து அபாயத்தில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை" என்றார்.
ஆனால், கடந்த மார்ச் 10 அன்று அதிகாலை 5 மணியளவில், கோபால் மூச்சுவிடுவதில் சிரமத்தை உணர்ந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, அவரை அருகில் உள்ள சிகிச்சை மையத்திற்கு அழைத்து சென்று ,பரிசோதித்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உடனடியாக அவரது குடும்பம் கே.டி.எம்.சி (கல்யாண் டோம்பிவலி மாநகராட்சி நிர்வாகத்தின்) மைதானத்தில் கொரோனாவுக்காக அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்த 'கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில்' அனுமதித்துள்ளனர். ஆனால், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் அவரை சிறப்பு சிகிச்சை வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு மாற்றுமாறு அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அன்று மதியமே, கோபாலை கல்யாண் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
"எங்களுக்கு என் தந்தையை எங்குக் கொண்டுசெல்வதென்றே தெரியவில்லை. மிகக்குறைந்த நேரமே இருந்தது, என் தந்தை மற்றும் எனது சகோதரனின் உடல்நிலை குறித்து நாங்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தோம்" என்று ஜோதி கூறினார். ஜோதியின் சகோதரன் 26 வயதான விவேக்கும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி பிவாண்டி பகுதியில் உள்ள கொரோனா மையத்தில் 12 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.
அவர்கள் தனியார் மருத்துவமனையை அடைந்ததும் அங்கு அவரது குடும்பத்தினரிடம் 50,000 ரூபாய் முன்பணம் செலுத்த சொல்லியுள்ளனர். கோபால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் மருத்துவர்கள் பரிந்துரைத்த அதிக விலை கொண்ட மருந்துகளை வாங்க அந்த மருத்துவமனையிலிருந்த மருந்தகத்திற்கு ஓடியுள்ளனர். இதுகுறித்து கோபாலின் மனைவி சஷிகலா கூறுகையில்," நாங்கள் எங்களது சேமிப்பிலிருந்த சிறிய தொகையை பயன்படுத்தத் தொடங்கினோம், ஆனால், நாளுக்கு நாள் புதிய மருத்துவக் கட்டண பில்கள் வர வர எங்கள் நிலைமை மோசமடைந்து கொண்டே வந்தது" என்று கூறினார். சஷிகலா வீட்டுவேலைகளை கவனித்துக் கொண்டே அவர்களது குடும்ப தொழிலான மண்டிகளுக்கு காய்கறி அளிப்பதில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கோபாலும்,அவரது மகன் விவேக்கும் காய்கறி விற்று வருகின்றனர். கடந்த ஆண்டு ஊரடங்குக்கு முன்புவரை இருவரும் மொத்தமாக நாளொன்றுக்கு 300 லிருந்து 700 ரூபாய் வரை வருமானம் ஈட்டிவருகின்றனர். இந்த வருமானத்தில் குடும்பஉறுப்பினர்கள் 6 பேர் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் டெலி(மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) சமூகத்தை சார்ந்தவர்கள் ஆவர். கடந்த 2013-14 ஆண்டு பட்டப்படிப்பை முடிந்ததற்கு பின்னர், நவி மும்பை பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் மாதம் 12,000 ரூபாய் ஊதியத்தில் விவேக் பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால், எப்போது அந்த வணிகவளாகம் மூடப்பட்டதோ, அப்போதிருந்து அவரும்,அவரது தந்தையோடு காய்கறி விற்க சென்றுள்ளார்.
கோபால் மற்றும் சஷிகலாவின் இளைய மகன்,19 வயதுடைய தீபக் 12 வகுப்பு படித்து வந்த நிலையில் , கடந்த 2020 ஊரடங்கின் போது தனது படிப்பிலிருந்து நின்றுள்ளார். ஜோதி அவரது பி. காம் மூன்றாம் ஆண்டு கல்வி கட்டணத்தை அவரது நண்பர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவங்களின் உதவியோடு கட்டி சமாளித்துள்ளார்.
ஜோதியின் சகோதரி 22 வயதுடைய குஷ்பூ, முன்னர் அவரது குடும்பத்தில் நிலவிய பொருளாதார சிக்கல்களின் காரணமாக, 9 வகுப்பு முடித்த நிலையில் அதோடு பள்ளி படிப்பை நிறுத்தியுள்ளார். ஜோதி கூறுகையில் ,"எங்களை படிப்பை விட்டு நிறுத்துவதை, என் தந்தை எப்போதும் விரும்பவே இல்லை. ஆனாலும் எங்களுக்கு வேறு வழியில்லை" என்று தெரிவித்தார். மேலும் ,ஜோதியின் மற்ற இரண்டு சகோதரிகள் திருமணமாகி உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், அவர்கள் அங்கிருந்து கிளம்பி அவர்கள் கிராமத்தில் உள்ள தாத்தாவின் சிறிய வீட்டிற்கு சென்றிருந்திருக்கின்றனர். இந்நிலையில், நவம்பர் மாதம், ஜோதி ஐந்து பருவத்தேர்வு எழுதுவதற்காக விவேக்குடன் மும்பை திருப்பியிருக்கின்றனர். விவேக்கும் காய்கறி விற்று நாளொன்றுக்கு 200 -300 ரூபாய் வருமானம் ஈட்டி சமாளித்து வந்துள்ளனர். ஜோதியும் கல்யாண் பகுதியில் உள்ள பொது மருத்துவமனையில் பகுதி நேர வேலையிலும் சேர்ந்துள்ளார். வீட்டுக்கு வீடு சென்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்துவது, உடல் வெப்பநிலை பரிசோதிப்பது மற்றும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் ஆக்சிஜன் அளவு பரிசோதிப்பது ஆகிய வேளைகளில் ஈடுபட்டுள்ளார். இந்த வேலையில் மூன்று மாதங்களுக்கு ஈடுபட்ட அவர், மொத்தமாக 2,500 ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 2021 ல் , கோபாலும் இதர குடும்பத்தினரும் அவர்களது கிராமத்தில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததாலும், சேமிப்பெல்லாம் செலவாகிய நிலையில் மீண்டும் மும்பைக்கு திரும்பியுள்ளனர். சென்ற ஆண்டு, அவர்களது குடும்பத்திற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உணவுப் பொருட்கள் வழங்கியுள்ளது. ஆனாலும், வீட்டு வாடகை 3000 ரூபாய், மின்சாரக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களுக்காக மிச்சம் இருந்த சேமிப்பையும் அவர்கள் செலவிட்டுள்ளார்.
இந்நிலையில் மார்ச் மாதம், கொரோனா சிகிச்சைக்காக 10 நாட்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோபாலின் சிகிச்சைக் கட்டணங்கள் திகைப்பூட்டும் வகையில் உச்சத்தைத் தொட்டுள்ளது. அவரது சிகிச்சைக்காக 221,850 ரூபாய் மருத்துவக்கட்டணமும் அதனோடு ஏறத்தாழ 158,000 மருந்துகளுக்காகவும் கட்டணமாக விதிக்கப்பட்டிருக்கிறது. (எல்லா மருத்துவ கட்டண பில்களையும் பத்திரிக்கையாளர் ஆராய்ந்தார்) . இதேபோன்று, சி.டி-ஸ்கேன், பிளாஸ்மா உட்செலுத்துதல், ஆய்வக சோதனைகள், ஆம்புலன்ஸ் செலவுகள் என மொத்தமாக கிட்டத்தட்ட 90,000 ரூபாயும் கட்டணமாக விதிக்கப்பட்டிருக்கிறது.
காய்கறி விற்கக்கூடிய அந்த குடும்பம் ஏற்கனவே கடந்த ஆண்டு ஊரடங்கு பிறகு கடுமையாக போராடி வந்த நிலையிலும், ஏறத்தாழ 5 லட்ச ரூபாயை கோபாலின் சிகிச்சைக்காக செலவு செய்துள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம்,மகாத்மா ஜோதிராவ் பூலே ஜன் ஆரோக்கிய யோஜனா (MJP- JAY) திட்டத்தின் கீழ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மாநில அரசே இலவச சிகிச்சையளிக்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் அறிவித்திருந்தது குறித்து அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. மேலும், கல்யாண் பகுதியில் நான்கு தனியார் மருத்துவமனைகள் (மற்றும் ஒரு அரசு மருத்துவமனை) இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜோதி கூறுகையில்,"அது குறித்து எங்களுக்கு தெரிந்திருந்தால் ஏன் நாங்கள் வேறொரு மருத்துவமனைக்கு செல்லப்போகிறோம்? எங்கள் யாருக்கும் இதுகுறித்து தெரியாது" என்று குறிப்பிட்டார்.
கடந்த மே 2020 ஆண்டு, மஹாராஷ்டிர மாநில அரசு, அம்மாநில தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக் கட்டணமாக, அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ஒருநாளைக்கு 7500 ரூபாயும், வெண்டிலேட்டர் உள்ள படுக்கைகளுக்கு 9000 ரூபாயும் கட்டணமாக நிர்ணையித்து உத்தரவிட்டிருந்தது.
மாநில அரசு அறிவித்த திட்டம் MJP- JAY திட்டம் குறித்தும்,நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் குறித்தும், கல்யாண்-டோம்பிவலி மாநகராட்சி ஆணையர், விஜய் சூர்யாவான்ஷியிடம் கேட்ட போது: "இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்ய சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கடந்த ஆண்டு, எல்லா தனியார் மருத்துவமனைகளையும்(கல்யாண்-டோம்பிவலி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட) இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்ய நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம். ஆனால், சில மருத்துவமனை நிர்வாகங்கள் இந்த திட்டத்தின் விதிமுறைகளுக்கு பொருந்தவில்லை. அதுமட்டுமல்லாமல், நிர்ணயிக்கப்பட்ட மானிய கட்டணங்களானது (தனியார் மருத்துவமனைகளுக்கு) இதுவரை குறைந்த ஊதியம் பெறக்கூடிய மக்களுக்கு அந்தளவுக்கு உதவவில்லை" என்று தெரிவித்தார்.
இதுபோன்ற திட்டங்கள் குறித்து, இந்திய எக்ஸ்க்குலுசன் அறிக்கை 2019-2020 ல்: "ஏழை மக்களின் மருத்துவ உதவிகளுக்கான செலவை குறைப்பதற்கு பி.எம் - ஜே.ஏ.ஒய்[பிரதான் மந்திரி ஜான் ஆரோக்ய யோஜனா] போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், அது வெளிப்படையாக எவ்வித பயனையும் அளிக்கவில்லை" என்று சுட்டிக்காட்டியுள்ளது. இதேபோன்று, புதுடெல்லியில் உள்ள பங்கு ஆய்வுகளுக்கான மையத்தின் அறிக்கையிலும்,"பொதுமக்களுக்கு மருத்துவம் வழங்கக்கூடிய பரந்துபட்ட இணைவு அமைப்புகள் இல்லாததாலும், அதிக கட்டணம் வசூலிக்கக்கூடிய தனியார் மருத்துவமனைகளின் இருப்பாலும், ஏழைகள் வேறு வழியில்லாமல் இருப்பதை களைய உறுதி செய்யுங்கள்" என்று அறிவுறுத்தியுள்ளது.
மேற்கொண்டு சூர்யவன்ஷி கூறுகையில், கல்யாண்-டோம்பிவலி மாநகராட்சி பகுதியில் பொது சுகாதார வசதிகளை மேம்படுத்தியுள்ளதாகவும், சென்ற ஆண்டு 2 பொது மருத்துவமனைகளே இருந்த நிலையில், தற்போது ஆறு சிகிச்சை மையங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், "தற்போது எங்களிடம் அதிகளவிலான அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் உள்ளது" என்றும் கூறினார்.
மேலும், கே.டி.எம்.சி பகுதியுள்ள தனியார் மருத்துவமனைகள் அதிகக்கட்டணம் வசூலிக்கிறதா தணிக்கையாளர் குழு என்று தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டுள்ளதாகவும் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார். மேற்கொண்டு கூறுகையில்,"தற்போது வரை சில தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து பொய்களைக் கூறி தப்பித்து வருகிறது. அரசு நிர்ணயித்த கட்டணங்களை தனியார் மருத்துவமனைகள் அனைத்து பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தவில்லை.(அல்லது சி.டி ஸ்கேன் போன்ற ஆய்வுகள்) மற்றும் சில மருத்துவமனைகள் மருத்துவக்கட்டணங்கள் அதிகமாகவும் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, எந்த தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணங்கள் விதிக்கிறது மற்றும் பரிந்துரைக்கும் மருந்துகள் அத்தியாவசியமானவையா இல்லையா என்பதைக் குறித்து நடவடிக்கைக் குழுவையும் நியமித்துளோம். அதன் மறைமுக பக்கங்களைக் கண்டறிவது மிகவும் சிக்கலானது, ஆனாலும்,குறைந்தபட்சம் எங்களால் ஆய்வு செய்ய முடியும்" , இதுபோன்ற சம்பவங்களில் குடும்பங்களுக்கு பணம் திரும்பியளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் , கோபாலின் மருத்துவக் கட்டணங்களை செலுத்த முடியாமல் போராடிய போது, அவரது மனைவி சஷிகலா, அவரது இரண்டு ஜோடி தங்க காதணிகளை கல்யாண் பகுதியில் உள்ள கடையில் 9000 ரூபாய்க்கு விற்றுள்ளார். மேலும், எந்த வகையிலெல்லாம் கடன் வாங்க முடியுமோ, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என கடன் பெற்றுள்ளனர். "ஒவ்வொரு நாளும் அன்றைய பில் அல்லது நேற்றைய பில்லைக் கட்டிக்கொண்டிருந்தோம். எங்களுக்கு தெரிந்த ஒவ்வொரு தனிமனிதரிடமும் 100 -200 ரூபாய் பெறுவதற்குக்கூட நாங்கள் உதவி கேட்டோம்." என்று தொலைபேசியில் அழுதபடி சொல்கிறார் அவர். “இவையெல்லாம் அவர் (கோபால்) விரைவில் குணமடைந்து வரவேண்டுமென்று என்பதற்காகவே தான் செய்தோம். நான் எப்போதும் பயந்துக்கொண்டே இருந்தேன். விவேக் அப்போது மருத்துவமனையிலேயே (தனிமைப்படுத்துதல்) இருந்தான். அவனும் என் கணவன் நிலைக்கு வரமாட்டான் என்று நம்பினேன். எந்த மருத்துவக்கட்டணங்களைக் குறித்தும் நான் கவலைக் கொள்ளவில்லை. ஒவ்வொருவரும் குணமடைந்ததும், ஒவ்வொருவரும் கடினமாக உழைத்து எல்லாவற்றையும் ஈடுகட்டிவிட முடியும் என்று நினைத்தேன். ஆனால், கொஞ்ச கொஞ்சமாக எல்லாம் கையைவிட்டு போனது." என்று கூறினார்.
கடந்த மார்ச் 18 ஆம் ஆண்டு, கல்யாண் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோபால் அனுமதிக்கப்பட்டு எட்டு நாட்களுக்குப் பிறகு , அவருக்கு கடுமையாக வலி ஏற்பட்டதாக அவரது குடும்பத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அவருக்கு ஆய்வில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. ஜோதி கூறுகையில்,"என்ன பிரச்சனையால் பாதிக்கப்பட்டார் என்று எங்களுக்கு புரியவில்லை. அதற்கு உடனடியாக சிகிச்சையளிக்க வேண்டுமென்றும் ,அதற்கு 2 லட்ச ரூபாய் செலவாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்" என்று கூறினார். "அப்போது நாங்கள் எங்களால், அவ்வளவு தொகை கட்ட இயலாது என்று கூறினோமோ, அப்போது பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு தெரிவித்தனர். ஆனால், அதற்கு முன்னர் அனைத்து கட்டணங்களையும் செலுத்திவிட்டு செல்லுமாறு கூறினார்" என்று தெரிவித்தார்.
(நாங்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் இதுகுறித்து அணுகிய போது, தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட குடும்பத்தின் உறுப்பினர்கள் முன்னிலையில் மட்டுமே இதுகுறித்து பேசுவதாக தெரிவித்தனர் ஆனால் குப்தாவின் குடும்பம் தற்போது வரை உத்தரபிரதேசத்தில் உள்ளது.)
எனினும், மருத்துவமனை நிர்வாகம் இறுதி மருத்துவக்கட்டணத்தில் மிக குறைவான சலுகை வழங்கியிருக்கிறது. இந்நிலையில், கடந்த மே 19 அன்று குடும்பத்திலுள்ள அனைவரும் பணம் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தாங்கள் அறியாத நபரிடம் கூட பணம் கடனாக பெற முயன்றுள்ளனர். ஜோதியும் அவரது தாயும் கல்யாண் நகர நிர்வாகத்திடமும் உதவி கேட்டிருக்கின்றனர், ஆனால், அவர்களுக்கு எந்த உதவியும் கிட்டவில்லை. ஒருவழியாக அவர்களது குடும்பம் ஒருவழியாக மருத்துவக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளது. இதுகுறித்து "நாங்கள் எங்கு சென்றோம் என்பது குறித்து மட்டுமே எங்களுக்கு ஞாபகத்தில் உள்ளது. எனது தந்தையின் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென , அந்த நாட்களில் நாங்கள் உணவுக்கூட உண்ணாமல் பயணித்தோம்" என்று ஜோதி கூறினார்.
கடந்த மார்ச் 20, அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனைத்து கட்டணங்களையும் செலுத்திய பிறகு, ஆக்சிஜன் வசதி கொண்ட தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அந்த மருத்துவமனையிலிருந்து மத்திய மும்பையிலுள்ள அரசு கே.இ.எம் மருத்துவமனையில் கோபாலை அனுமதித்துள்ளனர். இதற்கான அம்புலன்ஸ் கட்டணமாக 9000 ரூபாயை செலுத்தியுள்ளனர். அங்கு நடந்த ஆய்வில் அவருக்கு அப்போதும் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். உடனே அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து கே.இ.எம் மருத்துவமனையின் மருத்துவர்(பெயர் குறிப்பிட விரும்பவில்லை):"அவர்களது தந்தையை இங்கு கொண்டு வந்த போது,அவர் திராம்போசிஸ் (ரத்த நாளங்களில் நான்கு இடங்களில் அடைப்பு இருந்தது) பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக கங்கிறேனே என்கிற பிரச்சனைக்கு ஆளாகியிருந்தார் (பெருமளவிலான உடல் திசு இறத்தல்). அந்த தொற்று பரவத் தொடங்கி இருந்தது. எனவே, அவரது இடது கால் அகற்றப்பட்டது." என்று கூறினார்.
ஜோதி கூறுகையில்,"இதுதான் முதல்முறையாக எனது தந்தைக்கு கங்கிறேனே போன்ற பிரச்சனை இருப்பதைக் குறித்து நான் கேட்கிறேன். அவருக்கு எனது பெரிய உடல் உபாதைகளுமில்லை. கடந்த மார்ச் 10 அருகில் உள்ள சிகிச்சை மையத்திற்கு என் தந்தை நடந்தே சென்றார். ஆனால்,அடுத்த சில தினங்களிலேயே அவரது காலை எடுக்கப்போகிறார்கள் என்ற செய்தியே எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது" என்று குறிப்பிட்டார்.
இந்த சமயத்தில்,சஷிகலா அடிக்கடி மயக்கம் மற்றும் பீதியால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். கே.இ.எம் மருத்துவமனை ஒருவரை மட்டுமே அங்கு தங்க அனுமதித்துள்ளது. விவேக்கும் தனிமைப்படுத்துதல் மையத்திலிருந்து திரும்பவில்லை. எனவே, அடுத்த வாரம், ஜோதி மருத்துவமனையிலேயே தங்கியுள்ளார், அவரது இரண்டு உடன்பிறப்புகளும் தங்கள் தாயைக் கவனித்துக் கொண்டிருந்திருக்கின்றனர்.
ஜோதி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் அருகிலேயே தனது நேரத்தை செலவிட்டுள்ளார். பகல் நேரங்களில் இணைய வகுப்பில் பங்கேற்று, தனது இறுதித் தேர்வுக்கு தயாராகியுள்ளார். மருத்துவர்கள் மருந்து வாங்கி வர சொன்ன போது, அவர் ஓடி சென்று வாங்கி வந்துள்ளார். ஜோதி கூறுகையில்,"அங்கு அவர்கள் எந்த கட்டணமும் விதிக்கப்படவில்லை. சிலசமயம் மட்டுமே நான் மருந்துகளை வாங்கினேன்" என்று கூறினார். ஒரு சில நாட்கள் 800 -1000 ரூபாய் செலவாகியுள்ளது. இரவு நேரங்களில் மருத்துவமனையின் வெளிப்புறம் உள்ள நடைபாதையில் தூங்கியுள்ளார். அவர் கே.இ.எம் மருத்துவமனையின் மலிவு விலை உணவகத்தில் உணவருத்தியுள்ளார். மருத்துவமனை கழிவறையே பயன்படுத்தியுள்ளார்.
" அவருக்கு எதாவது தேவைப்பட்டால், நான் அங்கு இல்லை என்றால் என்ன செய்வது? என்ற பயத்தின் காரணமாக வீட்டிற்கே செல்லவில்லை. கே.இ.எம் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்ல ஒன்றரை மணிநேரம் ஆகும். ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க நான் தயாராக இல்லை" என்றும் ஜோதி தெரிவித்தார்
"நான் என் தந்தையை பார்க்கவோ, பேசவோ இல்லை. தொலைபேசி மூலமாக அவர் என்னோடும் என் குடும்பத்தோடும் பேசினார். நாங்கள் இறுதியாக பேசிய தொலைபேசி உரையாடலையெல்லாம் சேமித்து வைத்துள்ளேன். ஒரு காலைப்பொழுதில் தனக்கு தாகம் எடுப்பதாக அவர் என்னை தொலைபேசியில் அழைத்தார். நான் உடனடியாக ஓடிப்போய் கடையில் ஒரு தண்ணீர் புட்டியை வாங்கி வந்தேன். ஆனால், அங்கிருந்த ஊழியர் அவருக்கு உள்ளேயே( வார்டு) தண்ணீர் அளிப்பதாக கூறினார்" என ஜோதி குறிப்பிட்டார்.
கடந்த மார்ச் 28 அன்று 7 மணியளவில் கோபாலும் அவரது மகள் ஜோதியும் கடைசியாக பேசியிருந்திருக்கிறார்கள். இந்நிலையில், அன்று மதியம்வாக்கில், கோபால் உயிர்பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு, அவரை வென்டிலேட்டரில் வைத்துள்ளோம் என்று மருத்துவர்கள் ஜோதியிடம் தெரிவித்துள்ளனர். "அடுத்த இரண்டு மணிநேரம் கழித்து அதுகுறித்து(கோபாலின் மரணம்) மருத்துவர்கள் என்னிடம் தெரிவித்தனர். அதை நான் கேட்கவே விரும்பவில்லை,காதுகளை பொத்திக்கொண்டிருக்கவே அல்லது அங்கிருந்து ஓடவே விரும்பினேன். என் குடும்பத்தினரை அழைத்து தெரிவித்தேன்" என்று ஜோதி கூறினார்.
கோபாலை தாதர் பகுதியில் உள்ள மயானத்தில் தகனம் செய்திருக்கிறார்கள். கோபாலுக்கு இறுதி சடங்கு செய்ய உத்தரபிரதேசத்திற்கு செல்ல ஜோதி குடும்பத்திற்கு, அவரது உறவினர்கள் ரயில் டிக்கெட் கட்டணம் செலுத்தியிருக்கிறார்கள். கடந்த மார்ச் 30 அன்று, மும்பையிலிருந்து அவரது சாம்பலோடு கிளம்பி, ஏப்ரல் 1 அன்று அவர்களது கிராமத்தை அடைந்துள்ளனர். அவர்கள் தற்போது வரை மும்பைக்கு திரும்பவில்லை.
ஜோதி தற்போது வரை அவரது தேர்வுக்காக தயாராகி வருகிறார். இதுகுறித்து கூறுகையில்,"நான் எனது படிப்பில், என்னை பிசியாக வைத்துள்ளேன்" என்று கூறினார். மேலும் கூறுகையில், "எனது தந்தை அவரது தந்தையின் மரணத்திற்கு பிறகு படிக்கவில்லை. 9 அல்லது 10 வயது உள்ளபோது அவர் வேலைக்கு போக தொடங்கியுள்ளார். அதனால், நாங்கள் படிக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். எங்கள் அனைவருக்கும் பாடம் சொல்லித்தர இயவில்லையே என்று வருத்தமும் அடைந்திருக்கிறார். எனது சின்ன சின்ன சாதனைகளைக்கூட எண்ணி பெருமைப்படுவார். நான் விளையாட்டில் பதக்கம் பெற்றால் அல்லது பன்னிரெண்டாம் வகுப்பில் 85% மதிப்பெண் பெற்றால், எனது பதக்கங்களையும், மதிப்பெண் பட்டியலையும் எங்கள் கிராமத்தில் உள்ள எல்லோருக்கும் காட்டுவார். யாரின் முன்னும் தலை வணங்காதளவிற்கு நான் படிக்க வேண்டுமென்றும் என் தந்தை கூறுவார்" என்கிறார் ஜோதி.
ஜோதி பிற்காலத்தில் ஒரு பட்டயக்கணக்காளர் ஆக வேண்டுமென்று விரும்புகிறார். ஆனால், அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கான கட்டணம் குறித்து தெரிந்ததால் அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் உள்ளார். "நான் எதாவது வேலையைக் கண்டறிந்து உடனடியாக சம்பாதிக்க வேண்டும். எல்லா கடனையும் திரும்ப செலுத்தியாக வேண்டும். இங்கே(கிராமத்தில்) வேலை தேடுவது சிரமமாக உள்ளதால், எனது சகோதரன் விவேக்கும் திரும்ப மும்பைக்கு செல்ல விரும்புகிறார். நாங்கள் இன்னும் உட்கார்ந்து பணத்தை திருப்பித் தர வேண்டிய ஒவ்வொரு நபரையும் பட்டியலிடவில்லை. அந்த பட்டியல் நீளமாக இருக்கும்" என்று கூறினார்.
தற்போது, ஜோதியின் குடும்பத்திற்கு அவரது மூத்த சகோதரிகளின் கணவர்கள் தான் உதவி வருகின்றனர். அவர்களது மும்பை வீட்டிற்கான வாடகை பலமாதமாக செலுத்தப்படாமலே உள்ளது.
ஜோதியின் தாய் சஷிகலா தற்போதும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. ஜோதி கூறும் போது,"நாங்கள் சிறுக சிறுக கட்டிய எல்லாமும் எங்களை விட்டு சென்று விட்டது. "இன்று என் தந்தை எங்களுடன் உயிருடன் இருந்திருப்பதற்காக, நான் என்ன செய்திருக்க வேண்டும் என்றே நான் நினைத்துக்கொண்டே இருக்கிறேன். நாங்கள் ஒரு எளிய வாழ்க்கையை வாழ்கிறோம், சிறிய கனவுகளைக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாங்கள் அதற்கு கூட தகுதியானவர்களா?"
செய்தியாளர் குறிப்பு: கடந்த 2020 ஆண்டின் முற்பகுதியில் ஜோதி குப்தாவும் நானும் பங்கேற்ற பயிற்சி பட்டறையிலேர்ந்தே அவரை எனக்குத் தெரியும். இந்த கட்டுரைக்காக அவரது தாய் மற்றும் அவரை தொலைபேசி வாயிலாகவே நேர்காணல் செய்தேன். கே.இ.எம் மருத்துவமனை மருத்துவர் உடனான உரையாடல் அந்த மருத்துவமனையிலேயே நடைபெற்றது.
தமிழில்: பிரதீப் இளங்கோவன்