சுமார் 40 ஒட்டகங்கள் இப்போதுதான் அப்தசா தாலுகாவில் இருக்கும் மொகாடி கிராமத்திலுள்ள கடல் தீவில் இருந்து நீந்தி திரும்பி வந்திருக்கிறது. இவை ஃபக்கீரானி ஜாட் சமூகத்தைச் சேர்ந்த ஆயரான இஸ்மாயில் ஜாட்டிற்கு சொந்தமானவை.
நான் பார்த்ததை என்னால் நம்பவே முடியவில்லை - ஒட்டகங்கள் நீந்துகின்றனவா? ஆனால் இவை அற்புதமான காராய் ஒட்டகங்கள் - மார்ச் - ஏப்ரல் முதல் ஜூலை நடுப்பகுதிவரை கோடை காலத்தின் உச்ச மாதங்களில் இவை ஒரே நேரத்தில் 3 - 4 நாட்களுக்கு கட்சின் கடற்கரையிலுள்ள தீவுகளில் இருக்கும் சதுப்பு நிலக்காட்டில் மேய்ச்சலுக்கு செல்கின்றன. பின்னர் அவ்விலங்குகள் - குடிநீருக்காக கடலோர கிராமங்களுக்கு - மூன்று கிலோமீட்டர் வரை நீந்தி வருகின்றன. மேலும் அவை மீண்டும் தீவுகளுக்கு திரும்பிவிடுகின்றன.
ஒட்டகங்களுடன் குஜராத்தின் உண்ட் மல்தாரி அல்லது ஒட்டக மேய்ச்சல் சமூகத்தைச் சேர்ந்த ஆயர்கள் வருகின்றனர். இரண்டு ஆண் மல்தாரிகள் வழக்கமாக ஒரு குழுவை உருவாக்குகின்றனர் - இருவரும் நீந்தி செல்வார்கள் அல்லது ஒருவர் சிறிய படகில் ரொட்டி மற்றும் குடிநீரை ஏற்றிக்கொண்டு செல்வார், பின்னர் கிராமத்திற்கு திரும்பிவிடுவார். மற்றொரு மேய்ப்பவர் ஒட்டகங்களுடன் தீவில் தங்குகிறார், அங்கு அவர்கள் சமூகத்தின் முக்கிய உணவான ஒட்டகப்பாலை தனது மற்ற உணவுடன் சாப்பிடுகிறார்.
மழைக்காலம் தொடங்கியவுடன் மால்தாரிகள் ஒட்டகங்களை தீவுகளில் விட்டுச் செல்கின்றனர் செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் அவர்கள் ஒட்டகங்களை மீண்டும் கொண்டு வந்து புல்வெளி மற்றும் கரையோர சதுப்பு நிலக்காட்டில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கின்றனர் (மேலும் காண்க மேய்ச்சல் நிலங்களுக்கான முடிவில்லா தேடல் )
நான் 2015ஆம் ஆண்டு முதன்முதலில் நீச்சலடிக்கும் ஒட்டகங்களை பார்த்தேன்; ஒட்டகங்களை அழைத்துச் செல்லும் மால்தாரிகளுடன் படகில் சென்றேன், ஆனால் எல்லை பாதுகாப்பு படையின் அனுமதி மறுக்கப்பட்டதால் தீவு வரை செல்ல முடியவில்லை. இப்பகுதி பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ளது மேலும் கடலுக்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெறும் போக்குவரத்தை எல்லை பாதுகாப்பு படை சோதனைச் சாவடி வைத்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இதற்கிடையில் ஒட்டகங்கள் தண்ணீரில் மறைந்து போகத் தொடங்கின.
பின்னர் இஸ்மாயில் என்னிடம் காராய் என்றால் குஜராத்தியில் 'உப்பு' என்று அர்த்தம் என்றார். இந்த ஒட்டகங்கள் ஒரு சிறப்பினம் ஆகும் அவை சுற்றுச்சூழல் மண்டலங்கள் அல்லது தாவரங்களின் இடைநிலை பகுதிகளில் வாழ்வதற்கு தங்களை தகவமைத்துக் கொண்டன - இங்கே கடலோர சதுப்புநிலக்காடுகள் மற்றும் புல்வெளிகளுக்கு மத்தியில் உள்ள பகுதி. அவற்றின் உணவு பல்வேறு தாவரங்கள், புதர்கள் மற்றும் சதுப்புநிலக் காட்டில் உள்ள தாவரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆனால் இவை நீண்ட காலத்திற்கு சதுப்புநிலக் காட்டில் உணவினை உண்ணாமல் இருந்தால், இந்த உறுதியான விலங்குகள் நோய்வாய்பட்டு, இறுதியில் வீணாய் போய்விடும்.
கட்சில் இரண்டு மேய்ச்சல் சமூகங்கள் காராய் ஒட்டகங்களை வைத்திருக்கின்றன - ரபாரிக்கள் மற்றும் ஃபக்கீரானி ஜாட்டுகள், அதேசமயம் சாமா சமூகத்தினரும் ஒட்டகங்களை வளர்க்கின்றனர், ஆனால் காராய் இனத்தை அல்ல. குஜராத்தில் சுமார் 5,000 காராய் ஒட்டகங்கள் உள்ளன என்று கட்சிலுள்ள ஒட்டக வளர்ப்போர் சங்கம் குறிப்பிடுகிறது.
இவற்றில் சுமார் 2,000 காராய் ஒட்டகங்கள், தீவு மற்றும் சதுப்பு நிலக் காடுகளில் மிகப்பெரிய வலையமைப்பான கட்ச் மாவட்டத்தில் வாழ்கின்றன. ஆனால் ஒரு காலத்தில் செழித்து வளர்ந்த இக்காடுகள் வேகமாக மறைந்து வருகின்றது, பெரிய உற்பத்தியாளர்கள் அல்லது தொழிற்சாலைகள் உப்பளங்களை துவங்குவதற்கு வழிவகுக்கின்றது. பெரிய மேய்ச்சல் நிலங்களும் அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக சுற்றிவளைக்கப்பட்டுவிட்டது அல்லது சீமை கருவேல மரத்தால் (ப்ரோசோஃபிஸ் ஜூலிஃபோரா) ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.
2018 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், மாவட்ட தலைநகரான பூஜில் இருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பச்சவ் தாலுகாவுக்கு சென்றபோது நெடுஞ்சாலையில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்திற்கு முடிவில்லாத உப்பளங்களைக் கண்டேன், இது எனது முந்திய வருகையின் போது இருந்ததை விட அதிகம். பின்னர் அத்தாலுகாவின் அமலியரா பகுதியில் முபாரக் ஜாட் மற்றும் அவரது குடும்பத்தினரை சேற்றால் சூழப்பட்ட ஒரு சிறிய தீவில் சந்தித்தேன். அவர்களுடைய மதிப்புமிக்க 30 காராய் ஒட்டத்தின் உணவிற்காக அங்கிருந்த சதுப்புநிலக்காடுகளை மேய்ந்துவிட்டது. "இனி நாங்கள் அடுத்து எங்கே செல்வது என்று எங்களுக்கு தெரியவில்லை", என்று அவர் கூறினார். "இங்கு பசுமையே இல்லை. வாழ்வதற்காக நாங்கள் அடிக்கடி இருப்பிடங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறோம், ஆனால் எத்தனை நாளைக்கு? எல்லா இடத்திலும் உப்பளங்கள் தான் இருக்கிறது", என்று கூறினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தீனதயாள் துறைமுக அறக்கட்டளை வழங்கிய பரவலான உப்பள குத்தகைக்கு எதிராக கட்ச் ஒட்டக வளர்ப்போர் சங்கம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. மார்ச் 2018 ஆம் ஆண்டில் கண்டலா மற்றும் சூரஜ்பாரிக்கு இடையே உள்ள குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தில் உப்பளங்களின் செயல்பாட்டை நிறுத்துவதற்கான இடைக்கால உத்தரவை தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கியது. மேலும் குஜராத் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், குஜராத் கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் மற்றும் பிற நிர்வாகிகளின் ஆய்வினையும் அது கட்டாயப்படுத்தியது. ஆய்வு அறிக்கை ஏப்ரல் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது. வழக்கு இன்னமும் விசாரணையில் இருக்கிறது.
பின்னர் ஜூலை மாதம், நான் அங்கு சென்றபோது, பல ஃபக்கீரானி ஜாட் குடும்பங்கள் வசிக்கும், பச்சவிலிருந்து 210 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லாக்பத் தாலுகாவில் சில நாட்களைக் கழித்தேன். ஆனால் இந்த சமூகத்தினர் பலர் இப்போது நாடோடிகளாக இல்லை. தங்களது காராய் ஒட்டகங்களுக்கு மேய்ச்சல் நிலம் இல்லாமல் போனதே இதற்கு காரணம் என்கின்றனர். மோரி கிராமத்தைச் சேர்ந்த கரீம் ஜாட், "எங்கள் பாரம்பரிய வாழ்க்கைமுறையை நான் கைவிட விரும்பவில்லை. ஆனால் நான் கைவிட வேண்டி இருந்தது. இங்கு மழை பொழிவு குறைவு. சதுப்பு நிலக் காடுகளும் குறைந்து வருகின்றன அல்லது அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுவிட்டது. அதனால் எங்களது விலங்குகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்லை. நாங்கள் என்ன செய்வது? இந்த ஒட்டகங்கள் எங்களது குடும்ப உறுப்பினர்களை போன்றது. அவை படும் துன்பத்தைப் பார்த்து என் நெஞ்சு வலிக்கிறது", என்றார்.
ரமேஷ் பாட்டி தில்லியில் உள்ள ஆயர்களுக்கான மையத்தில், பூஜை தளமாகக் கொண்ட திட்ட இயக்குநராகவும், குழு தலைவராகவும் உள்ளார். அவர் இயற்கை வள மேலாண்மை, ஆயர் மேம்பாடு, வாழ்வாதாரம் மற்றும் பாலினப் பிரச்சனைகள் குறித்து பணியாற்றிவருகிறார்.
தமிழில்: சோனியா போஸ்