”கடந்த வருடத்தில் 5 நிகழ்ச்சிகளைத்தான் செய்திருக்கிறேன்” என்கிறார், ’ஸ்ரீ ப்ரசன்னாஞ்சனேய ப்ருந்தம்’ பொம்மலாட்டக் குழுவின் நிறுவனரும், முதன்மை பொம்மலாட்டக் கலைஞருமான ரேகனரா கோட்டிலிங்கம்.
25000 பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நடத்திய 48 வயது கோட்டிலிங்கம், இத்தொழிலைத் தொடங்கியபோது அவருக்கு 12 வயது. 25 வருடங்களுக்கு முன்பாக தனிக்குழுவைத் தொடங்குவதற்கு முன்பு அவரது அப்பா நடத்தி வந்த பொம்மலாட்டக் குழுவில் மிருதங்கம் வாசிப்பதும், பாடல்கள் பாடுவதும்தான் அவரது வேலை.
”என் தாத்தாவிடம் என் அப்பா கற்றுக்கொண்ட கலையை அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்” என்கிறார் கோட்டிலிங்கத்தின் மூத்த சகோதரரும், பொம்மலாட்டக் குழு உறுப்பினருமான 60 வயது ரேகனரா ஹனுமந்தராவ். "பொம்மலாட்டம் நடத்துவதற்காக ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்கு, தினசரி தேவைகளான துணிகளையும், பாத்திரங்களையும், பொம்மலாட்டத்திற்கு தேவையான ஹார்மோனியம், மேளங்கள் மற்றும் மேடைக்குத் தேவையானவற்றையும் மாட்டு வண்டியில் எடுத்துச் செல்வோம்" என்கிறார்.
ஆனால் இப்போதெல்லாம் ஹைதராபாத்தில் ரவீந்திர பாரதி, சென்னை மெட்ராஸ் பல்கலைக்கழகம் மற்றும் திருப்பதி ப்ரமோத்ஸவத் திருவிழா போன்ற சில இடங்களில் மட்டும்தான் மிக அரிதாக இவர்கள் நிகழ்ச்சி செய்ய அழைக்கப்படுகிறார்கள்.
மார்ச் 10, 2018ல் அட்டங்கி நகரில், "ராம ராவண யுத்தத்தை" நிகழ்த்தினார்கள். அட்டங்கி கலா பீடத்தின் 20வது ஆண்டு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அட்டங்கி கலா பீடம் ப்ரகாசம் நகரில் நாட்டுப்புறக் கலைகளை ஊக்கப்படுத்தும் ஒரு நிறுவனமாகும். ராமனுக்கும் ராவணனுக்கு நடுவில் நடக்கும் போரை விவரிக்கும் நாடகம், தீமைக்கும் நன்மைக்கும் நடுவில் நடப்பனவற்றைக் குறிப்பதாகும். இரவு பதினொரு மணி அளவிலும் ஆண்களும் பெண்களும் இருந்து நாடகத்தைப் பார்த்தார்கள். பீடி புகைத்துக்கொண்டிருந்த 74 வயது மணிக்யாலா ராவ் கொட்டாவி விட்டபடியே சொன்னார் "பொம்மலாட்டத்தைப் பார்த்து பல நாட்களாகிவிட்டது. இரவு தாமதமானாலும் நான் இருப்பதற்குக் காரணம் இதுதான்"
ஆந்திராவைப் பொறுத்தவரை, எப்படியோ தொழிலை நடத்திவரும் பொம்மலாட்டக் குழுக்களில் கோட்டிலிங்கத்தின் 10 பேர் கொண்ட குழுவும் ஒன்று. மஹாராஷ்ட்ராவைப் பூர்விகமாகக் கொண்ட ஆர்யஷத்திரிய சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்தான் கோட்டிலிங்கத்தின் உறவினர்கள். ஆந்திராவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளான குண்டூர் மற்றும் ப்ரகாசம் மாவட்டங்களில் வாழும் அவர்கள் அட்டங்கி, தர்சி மற்றும் ஓங்கோல் சிறு நகரங்களில் கூலியாட்களாக பணிபுரிகிறார்கள். மூன்று மாதங்கள் அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை நிகழ்ச்சி நடத்துவதற்காக அணுகப்படும்பொழுதுதான் அவர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள்.
அவர்களது பழம்பெரும் கலைக்கும், சத்ரபதி சிவாஜியில் மராட்டிய ராஜ்ஜியத்திற்குமான இணைப்பைக் குறித்து கூறுகிறார் 45 வயது வனபார்த்தி ராமானுஜெயம்மா. செர்ஃபோஜி, வெங்கோஜி ஆகிய சிவாஜியின் சகோதரர்கள், மதுரை - தஞ்சாவூர் மண்டலத்தில் 17வது நூற்றாண்டில் வளர்த்த கலை வடிவங்களில், ஆர்யஷத்திரிய சமூகம் வளர்த்த பொம்மலாட்டமும் ஒன்று என்கிறார் அவர்.
கோட்டிலிங்கும், ராமானுஜெயாம்மாவும் இக்கதையை விவரிக்கிறார்கள். "முன்னொரு காலத்தில், சோழ அரசனின் அரசவையில் இருந்த பிராமணர் ஒருவர், கம்சலுகளை (தற்போது ஆந்திராவின் கம்சலி சாதி) எதிர்த்து திட்டம் தீட்டி, அவர் ராஜ்ஜியத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்வதாக புனைவை உருவாக்கினார். கம்சலுக்களின் தலையை சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டார் அரசர். கம்சலுக்களில் சிலர் உயிர்பிழைத்து காடுகளுக்குள் தப்பினர். இறந்த விலங்குகளின் தோலில் பொம்மைகள் செய்து, வாழ்வாதாரத்திற்காகவும் மக்களை மகிழ்விக்கவும் இந்தக் கலைகளை உருவாக்கினார்கள் அம்மக்கள். இடையில், மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இக்கலையைக் கற்றுக்கொண்டார்கள். ஆறு மாதங்கள் ராமாயண நிகழ்ச்சிகள் நடத்திவிட்டு, அந்த பிராமணனையும், அரசரையும் கொல்லும் பொருட்டு, பொம்மலாட்டம் நடக்கும் மேடையிலிருந்து அரண்மனைக்கு வழிவகுத்தனர். ராவணனை ராமன் கொல்லும் இறுதி நிகழ்வன்று, அரசரையும் பிராமணனையும் கொன்றுவிட்டு, விருப்பத்தின் பெயரில் அக்கலையைப் பயின்றவர்களிடம் அந்தக் கலையை விட்டுவிட்டுச் சென்றனர் கம்சலுக்கள். நாட்கள் செல்லச்செல்ல, விருப்பத்தின் பெயரில் இதைக் கற்றுக்கொண்டவர்கள்தான் ஆரியஷத்தியர்கள் ஆனார்கள்.
''நாட்கணக்கில், மாதக்கணக்கில் கூட பொம்மலாட்ட நிகழ்வுகள் நடக்கும். ஆனால் இப்போதெல்லாம் மாலை நேரத்தோடு முடித்துக்கொள்கிறோம்” என்கிறார் ராமானுஜெயம்மா
இந்த சமூகம் "குற்றப் பழங்குடிகள் சட்டம் 1871"இல் எப்படி இடம்பிடித்தது என்பதை விவரிக்கிறது இக்கதை. காலணிய அதிகாரத்திற்கு அடியில், சில பழங்குடிகளை "குற்றவாளிகள்" என அடையாளப்படுத்திய சட்டம், அவர்களது பொது நிகழ்ச்சிகளையும் குற்றங்களை மறைக்கச் செய்யப்படும் விஷயங்களாகவே பார்த்தன. 1952ல் இந்திய அரசு இச்சட்டத்தை அகற்றி, அவர்களது பொது நிகழ்ச்சிகளையும் குற்றமற்றதாக அறிவித்தது. இப்போது ஆர்ய ஷத்திரியர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களாவர்.
இந்த கலைக்கு சாதி ரீதியான பூர்விகத் தகவல்கள் வழங்கப்பட்டாலும், பாரம்பரியமாகவும் குறிப்பிட்ட நாடகங்கள், ராமாயணத்திலிருந்தும், மகாபாரதத்திலிருந்தும் பிராமணீயத்திற்கு எதிராக சில கதைகளையும் நாடகமாக வடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாடகத்திலும் 7 முதல் 10 ஆட்டுத்தோலால் ஆன பொம்மைகள் பயன்படுத்தப்படுகின்றன. "சுந்தரகாண்டம், மஹி ராவண சரித்திரா, லஷ்மண மூர்ச்சா, இந்திரஜிதுனி வதா, கும்பகர்ணுடி வதா, பத்மவ்யூஹம், விரதபர்வம், கீச்சக வதா மற்றும் பலவற்றை நிகழ்த்துகிறோம்" என்கிறார் கோட்டிலிங்கம்.
அதிக முறை நடத்தப்பட்டு, தனக்கு அதிகமான பாராட்டுக்களைக் குவித்தது சுந்தரகாண்டம் என்கிறார் கோட்டிலிங்கம். சுந்தரகாண்டம் ராமாயணத்திலிருந்து வந்தாலும், ராவணனை நாயக கதாபாத்திரமாக வைத்துத்தான் நிகழ்த்தப்படுகிறது என்கிறார் கோட்டிலிங்கம். ராவணனின் பார்வையிலிருந்துச் சொல்லப்படுவதால் அவனே கதாநாயகன்.
"பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நாட்கணக்காகவும், மாதக் கணக்காகவும் நடக்கும். முதலிலிருந்து இறுதி வரை நடத்துவதற்கு 6 மாதங்களாகும். ஆனால், அத்தகைய பெரிய நாடகங்களை இப்போது நடத்துவதில்லை. இடம் தொடர்பான சிக்கல்கள் காரணமாக மாலை நேர காட்சிகளாக அதை மாற்றிவிட்டோம். பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்தப்படும் இடத்தைப் பொறுத்து, 2 முதல் 4 மணி நேர நிகழ்ச்சிகளுக்கு 10000 முதல் 30000 வரையிலான தொகை தரப்படுகிறது" என்கிறார் ராமானுஜெயம்மா.
பிரகாசம் மற்றும் குண்டூர் மாவட்டங்களில் உள்ள 1000 கிராமங்களில் ஹனுமந்தராவ் மற்றும் கோட்டிலிங்கம் ஆகியோர் இருக்கும் பாலாஜி குழு பொம்மலாட்ட நிகழ்வுகளை நடத்துகிறது. இந்தக் குழு ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் வரை அங்கு தங்கியிருந்து, ப்ராமண அக்ரஹாரங்களை ஒத்த மிராசி அமைப்புக்குக் கீழ் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். இத்தனை கிராமங்களுக்கும் தனித்துவமான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஒவ்வொரு குழுவுக்கும் ப்ரத்யேகமான உரிமை வழங்கப்பட்டிருக்கும்.
"எங்களுக்கு இருக்கும் ஒரே சொத்து இதுதான். மிராசி கிராமங்களை அவர்களுக்குள் பிரித்துக்கொண்டு, அவரவர்களுக்கான பொம்மலாட்டக் குழுவை உருவாக்கிக்கொண்டார்கள். எங்களுடைய எல்லா தேவைகளையும் (உணவு, உடை, இருப்பிடம்) கிராமத்தினர் பார்த்துக்கொள்வார்கள். அது போக நிகழ்ச்சிக்கான பணமும், நெல்லும் கிடைக்கும்" என்கிறார் கோட்டிலிங்கம். தனது சொந்த ஊரான அட்டங்கியில் தற்போது குடை விற்றுக்கொண்டிருக்கிறார் கோட்டிலிங்கம். ஹனுமந்தராவ் பொம்மலாட்டத்திற்கு மட்டும் பணிபுரிய, ராமானுஜெயம்மா, பிரகாசம் மாவட்டமான தர்சியில் வீட்டுவேலைக்கு செல்கிறார்.
"பொம்மலாட்டம் பார்க்க வருபவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். இப்போதெல்லாம் அவர்கள் தொலைக்காட்சி சீரியல்கள் பார்க்கச் சென்றுவிடுகிறார்கள். இன்று தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லையே" என்கிறார், ஒய்வுபெற்ற தெலுங்கு ஆசிரியையும், பண்பாட்டு செயற்பாட்டாளருமான ஜோதி சந்திரமெளலி. 35 வருடங்களாக நாட்டுப்புறக் கலைஞர்களோடு செயல்பட்டு வருகிறார் அட்டங்கியைச் சேர்ந்த ஜோதி சந்திரமெளலி.
கலைஞர்கள் வேறு சில வேலைகளுக்குச் செல்வதற்கு இத்தகைய நவீன பொழுதுபோக்குகளும் ஒரு காரணமாக இருக்கிறது கோட்டிலிங்கத்தின் நான்கு மகன்களும் பொம்மலாட்டக் கலையைக் கற்கவில்லை. அட்டங்கியைச் சுற்றியுள்ள இடங்களில் கட்டட வேலைகளுக்கும், கூலி வேலைக்கும் செல்கிறார்கள். ஹனுமந்தராவ் மற்றும் ராமானுஜெயம்மாவின் பிள்ளைகளும் பொம்மலாட்டத்தைக் கற்றுக்கொள்ளவில்லை.
"ஆறு பொம்மலாட்ட குழுக்களும், 10 தெருக்கூத்துக் குழுக்களும் பத்து வருடங்களுக்கு முன்பு வரை நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டிருந்தார்கள். இப்போது அப்படி ஒன்றைக் காண்பதும் கடினமானது. நேமலி ஆட்ட (மயிலாட்டம்) புட்டபொம்மலு (கூடைக்குள் பொம்மைகள்) போன்ற கலைகள் அழிந்துவிட்டன" என்கிறார் சந்திரமெளலி. அவரை ஆமோதிக்கும் வகையில், "இதுதான் பொம்மலாட்டக் கலைஞர்களின் கடைசிக் காலம். பத்து வருடங்களுக்குப் பிறகு புத்தகங்களில் மட்டும்தான் இதைப்பற்றிப் படிக்க முடியும். யாரும் இதை நேரடியாக பார்க்கமுடியாது" என்கிறார் கோட்டிலிங்கம்.
"முன்பெல்லாம் கிராமங்களில் நாட்டுப்புறக் கலைகள் வாழ்ந்தன" என்னும் ஹனுமந்தராவ், "இப்போது அரசு எங்களைப் பற்றி யோசிப்பதில்லை. வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு அருகில் நிகழ்ச்சி நடத்த எங்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொண்டும் பலனில்லை" என்கிறார். இந்த கலைஞர்களுக்கு மாநில அரசின் உதவியோ, ஓய்வூதியமோ, அடையாள அட்டையோ எதுவும் இல்லை. "ஐந்து முதல் ஆறு பொம்மலாட்ட காட்சிகள் எங்கள் வயிற்றையும் நிரப்பி, கலையையும் காப்பாற்றி வருகிறது" என்கிறார் ஹனுமந்தராவ். அவருடைய கலை அவரோடு முடிவுக்கு வந்துவிடாது என்ற நம்பிக்கையுடன்.