2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி மஸ்வாத்தை மையமாகக் கொண்ட மாண்தேஷி அறக்கட்டளையால் இந்தத் தீவன முகாம் தொடங்கப்பட்டது. (மாண் தேஷி மகிலா சகாகரி வங்கிக்கு ஆதரவு தருவதுடன், நிதிநல்கைக்கு அப்பாலும் இந்த அமைப்பு செயல்படுகிறது.) தற்போதைய நிலவரத்தில் மட்டுமல்ல, அதிகரித்துவரும் வறட்சியையும் எதிர்கொள்ளும் கிராமங்களுக்கு, இந்த மட்டிலான முதல் தீவன முகாம் இது. முகாமில், தீவனமும் தண்ணீரும் தருகிறார்கள். ஒரு நாளைக்கு பெரிய மாடுகளுக்கு 15 கிலோ பசுந்தீவனம், ஒரு கிலோ மாட்டுத்தீவனமும் 50 லிட்டர் தண்ணீரும் கிடைக்கும். மாண்டேஷ் அறக்கட்டளை தந்த மரக்கொம்புகளையும் பச்சைப்பாயையும் கொண்டு மாட்டுக்காரர்கள் மாட்டுக் கொட்டில்களை அமைக்கின்றனர். " நோய்வாய்ப்பட்ட மாடுகளை மட்டும், அவற்றால் நோய்த்தொற்று ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்காக முகாமுக்கு வெளியே இடம்மாற்றிவிடுகிறோம். முகாமில், இரண்டு கால்நடை மருத்துவர்களும் பணியாற்றுகிறார்கள்." என்கிறார் முகாமின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான இரவீந்திர விர்கர். முகாமில் மக்களுக்கான அடிப்படை வசதிகளும் வழங்கப்படுகின்றன. காட்டாக, ஒவ்வொரு ‘வார்டுக்கும்’ தண்ணீர் பீப்பாய்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இரண்டாவது / மூன்றாவது நாளன்றும் ஒரு தொட்டிவண்டி மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. இத்துடன், குடிநீருக்காக தனியாகவும் ஒரு தொட்டி உள்ளது.
இலட்சுமியின் குடில், அவர் தூங்குவதற்கு போதுமானதாக இருக்கிறது. கிடைமட்டமான கம்பத்தில் கட்டப்பட்ட ஒரு சரத்தில், அவருடைய இரண்டு சேலைகளும் இருக்கின்றன. அதிலேயே, தேயிலை, சர்க்கரை, தீப்பெட்டி மற்றும் பயறுகள் உள்பட்ட சில மளிகைப்பொருள்களைக் கொண்ட ஒரு பிளாஸ்டிக் பையும் தொங்கவிடப்பட்டுள்ளது. மூன்று கற்களைக் குவித்து அடுப்பாக்கியிருக்கிறார், இந்த அடுப்புக்கு அடுத்டு சிறிது விறகையும் தீவனங்களையும் சேர்த்துவைத்திருக்கிறார். தேநீர் தயாரிக்கவோ உணவைச் சூடாக்கவோ இது போதும். “ எனக்கு வீட்டிலிருந்து உணவு வந்துவிடுகிறது..” என்கிறார் இலட்சுமி. ஆனால், நாங்கள் அவரைச் சந்தித்தபோது, வீட்டு உணவுக்காக இரண்டு நாள்கள் காத்துக்கொண்டு இருந்தார். அவரின் மருமகனுடைய சாப்பாட்டைப் பகிர்ந்துகொண்டு சமாளித்தார். “அவர்கள் இன்று சாப்பாடு அனுப்பவில்லை என்றால், நான் வீட்டுக்கு ஒரு நடை போய்விட்டு வரவேண்டும். சில நாள்களுக்கு முன்னர், என் மருமகள் கொஞ்சம் சோளரொட்டிகளைத் தந்துவிட்டாள்.. காய்கறி, பருப்பு இல்லாமல். என் மாடுகளைப் போலவே, நானும் தீவனத்தைத்தான் சாப்பிடவேண்டும்போலத் தெரிகிறது. என் பெயர் இலட்சுமி (செல்வ தெய்வம்).. ஆனால் என் தலைவிதியைப் பாருங்கள்… ” என சலித்துக்கொள்கிறார், இலட்சுமி.
சதாரா மாவட்டத்தின் மாண் வட்டத்தில் உள்ள இலட்சுமியின் ஊரான வலாய், (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011-ன்படி) 382 வீடுகளையும் 1,700 மக்களையும் கொண்டது. கோலாப்பூர் மற்றும் சாங்லி மாவட்டங்களில் உள்ள சர்க்கரை ஆலைகளில் கரும்பு வெட்டுவதற்காக இந்த ஊர்க்காரர்களில் பாதிப் பேர் அங்கு போய்விடுவார்கள். தீபாவளிக்குப் பிறகு (அக்டோபர் / நவம்பர்) கிளம்புபவர்கள், சந்திர நாள்காட்டியின் முதல் நாளான பத்வாவையொட்டி (மார்ச் / ஏப்ரல்) ஊருக்குத் திரும்புவார்கள். ஆனால் இந்த ஆண்டு நான்காவது மாதம் ஆகியும் (மே / ஜூன்) யாரும் திரும்பிவரவில்லை.” என்று கூறுகிறார், 70 வயதான யஷ்வந்த் தோண்டிபா சிண்டே. மாண் வட்டத்தின் பனவன் கிராமத்தைச் சேர்ந்த, பல விவசாயிகள் போராட்டத்தின் முன்னணி களவீரரான இவர், தன் நான்கு மாடுகளையும் முகாமுக்கு கொண்டுவந்திருக்கிறார்.