சித்ரகுப்தா சில வாரங்களுக்கு முன்னர் வாக்குகளைச் சேகரித்ததை போல, பல்வேறு தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் இறந்த ஆசிரியர்கள் மற்றும் துணை ஊழியர்கள் ஆகியோரின் பெயர்களை மாவட்டம் வாரியாக சென்று 50வது முறையாக கணக்கிட்டு வந்தார். இந்த வேலையை திறன்பட செய்ய அவர் இயந்திரத்தை நம்பவில்லை. தலைமைச் செயலாளர் அலுவலகத்திற்கும் அவருக்கும் மேலுள்ளவர்களுக்கும் ஆவணங்களை அனுப்புவதற்கு முன்னர் அவற்றின் உண்மை தன்மையை அவர் உறுதிப்படுத்த வேண்டியிருந்தது.
இறந்தவர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய விருதுகளுக்காக காத்திருந்தனர். சிறு தவறை கூட அவர் அனுமதிக்க முடியாது. இறந்தவர்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்குவதற்கு முன்பு, பூமியில் அவர்கள் செய்திருந்த முன் வினைகள் அனைத்தையும் சரிபார்க்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு தவறின் செலவும் மிக அதிகமாக இருக்கும் என்பதால் அவர் எண்ணிக்கொண்டே இருந்தார். மீண்டும் மீண்டும் எண்ணினார். ஒவ்வொரு முறையும் அவர் சில வினாடிகள் எண்ணும்போது, முடிவில்லாத அந்த இறந்த ஆத்மாக்களின் பட்டியலில் இன்னும் சில பெயர்கள் சேர்க்கப்பட்டது. இறந்தவர்களை பாதாளலோகத்தில் தனது அலுவலகத்தின் வெளியில் வரிசையில் நிறுத்தினால், அந்த வரிசை பிரயாகராஜுக்கு நீளும் என அவர் கற்பனை செய்தார்.
இரண்டும் இரண்டும் நான்கு, ஆயிரத்து அறுநூறும் அதற்கு மேலும்..
இரண்டும் இரண்டும் நான்கு
நாலிரண்டு எட்டு
ஈரெட்டு பதினாறு
இன்னுமொரு பத்து..
ஆயிரத்தி அறுநூறும் அதற்கு மேலும்.
உங்கள் கோபங்களை கூட்டவும்
அச்சங்களை கழிக்கவும் கற்றுக்கொண்டால்,
பெரும் எண்களை கையாள
கணக்கு போட கற்றுக் கொண்டால்,
ஓட்டுப்பெட்டிகளில் அடைத்திருக்கும்
பிணங்களை நீங்கள் எண்ணிவிடலாம்.
நீங்கள் எண்களுக்கு அச்சம் கொள்ளாதவரென
கூறுங்கள் என்னிடம்.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே
நினைவில்கொள்ளுங்கள் இந்த மாதங்களை
முழு நிராகரிப்பின் நாட்களை கொண்ட வாரங்களை
இறப்பு, கண்ணீர், துக்கத்தின் பெயர்கள் கொண்ட காலங்களை
ஒவ்வொரு வோட்டு சாவடியையும் ஒவ்வொரு மாவட்டத்தையும்
ஒவ்வொரு கிராமத்தின் தொகுதியையும்நினைவுகொள்ளுங்கள்.
வகுப்பறை சுவர்களின் நிறங்களை நினைவுகொள்ளுங்கள்
அச்சுவரின் செங்கல்கள் வீழும் சத்தத்தை நினைவுகொள்ளுங்கள்
பள்ளிகள் இடிபாடுகளாக மாறிய காட்சியை நினைவுகொள்ளுங்கள்.
குமாஸ்தாவின் பணியாட்களின்
உங்கள் ஆசிரியர்களின் பெயர்களை
கண்கள் எரிந்தாலும் நினைவுகொள்ளுங்கள்
கிரிஷ் சார், ராம் அண்ணன்,
செல்வி சுனிதா ராணி
செல்வி ஜவந்த்ரி தேவி
அப்துல் சார் மற்றும் ஃபரிதா மிஸ்
அவர்கள் மூச்சுத் திணறி மாண்டாலும்
உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள
நினைவுகொள்ளுங்கள் அவர்களை.
சுவாசிப்பது துன்புற
மரணிப்பது சேவை
ஆட்சிபுரிவது தண்டிக்க
வெற்றியடைவது கொன்று குவிக்க
கொல்வது அமைதிபடுத்த
எழுதுவது பறக்க
பேசுவது வாழ
வாழ்தல் என்பது
கிரிஷ் சார், ராம் அண்ணன்,
செல்வி சுனிதா ராணி
செல்வி ஜவந்த்ரி தேவி
அப்துல் சார் மற்றும் ஃபரிதா மிஸ்
ஆகியோரை நினைவுகொள்ள.
நினைவில் வைத்தல் என்பது கற்க.
படியுங்கள் அதிகாரத்தின் மொழியையும்
அரசியலின் நகர்வுகளையும்.
தெரிந்துகொள்ளுங்கள் அமைதியின்
கோபத்தின் எழுத்துக்களை.
புரிந்துகொள்ளுங்கள் பேசப்படாமலேயே
உடைந்து போன கனவுகளை.
ஒருநாள்
பொய்களிலிருந்து உண்மையை
நீங்கள் அறிவீர்கள்.
ஒருநாள் நீங்கள் அனைவரும்
ஏன் ஆசிரியர்கள் எல்லாம் இறந்தார்கள்
என்று அறிவீர்கள்
ஏன் வகுப்பறைகள் வெறிச்சோடியது,
ஏன் விளையாட்டு மைதானங்கள் எரிந்தது
என்று அறிவீர்கள்
ஏன் பள்ளிகள் மயானங்களானது
யார் சடலங்களை எரித்தது
என்று அறிவீர்கள்
ஆனால் நீங்கள்
கிரிஷ் சார் ராம் அண்ணன்,
செல்வி சுனிதா ராணி
செல்வி ஜவந்த்ரி தேவி
அப்துல் சார் மற்றும் ஃபரிதா மிஸ் ஆகியோரை
என்றுமே நினைவில் கொள்ள வேண்டும்.
ஒலி: சுதன்வா தேஷ்பாண்டே ஜனா நாத்யா மஞ்ச் என்ற நாடகக் குழுவின் ஒரு நடிகரும் இயக்குநரும் ஆவார். இவர் LeftWord பதிப்பகத்தின் ஆசிரியருமாவார்.
தமிழில் : கவிதா கஜேந்திரன்