தேதி நினைவில்லை என்றாலும் அந்த குளிர்கால இரவின் நினைவை லக்ஷ்மிகா தெளிவாக நினைவுகூர்கிறார். அவரது கர்ப்பத்தின் நீர்க்குடம் உடைந்து வலி தொடங்குகையில் “கோதுமைப் பயிர் கணுக்காலுக்கு சற்று மேல் வரை இருந்தது.” அது டிசம்பராகவோ ஜனவரியாகவோ (2018/19) இருக்க வேண்டும்,” என்கிறார் அவர்.
பராகவோன் ஒன்றியத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார மையத்துக்கு செல்ல ஒரு டெம்போ வாகனத்தை அவரின் குடும்பம் வாடகைக்கு எடுத்தது. அவர்களின் கிராமமான அஷ்வாரியிலிருந்து மையம் ஆறு கிலோமீட்டர் தொலைவு. “மையத்தை அடைந்தபோது நான் பெரும் வலியில் இருந்தேன்,” என்கிறார் 30 வயது லக்ஷிமா. தற்போது 5-லிருந்து 11 வயது வரை இருக்கும் அவரின் மூன்று குழந்தைகளான ரேணு, ராஜு மற்றும் ரேஷம் அப்போது வீட்டில் இருந்தனர். “மையத்தின் அலுவலர் என்னை அனுமதிக்க மறுத்து விட்டார். நான் கர்ப்பமாக இல்லை என்றார். என்னுடைய வயிறு நோயால் பருத்திருப்பதாகச் சொன்னார்.”
லக்ஷிமாவின் மாமியாரான ஹிராமனி அலுவலரிடம் அவரை அனுமதிக்க மன்றாடியிருக்கிறார். ஆனால் அலுவலர் மறுத்திருக்கிறார். இறுதியில், லக்ஷிமா குழந்தை பெற அங்கேயே உதவப் போவதாக அவர்களிடம் ஹிராமனி கூறினார். “என்னுடைய கணவர் என்னை இடம் மாற்றுவதற்காக ஆட்டோவைப் பிடிக்கும் முயற்சியில் இருந்தார்,” என்கிறார் லக்ஷிமா. “ஆனால் நகர முடியாதளவுக்கு நான் பலவீனமாக இருந்தேன். மையத்துக்கு வெளியே ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தேன்.”
60களில் இருக்கும் ஹிராமனி லக்ஷிமாவுக்கு பக்கத்தில் அமர்ந்து அவர் கையைப் பிடித்துக் கொண்டு மூச்சை இழுத்து விடும்படி கூறிக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரம் கழித்து, கிட்டத்தட்ட நள்ளிரவு வேளையில், குழந்தை பிறந்தது. அடர்ந்த இருட்டும் உறைய வைக்கும் குளிரும் இருந்ததாக நினைவுகூர்கிறார் லக்ஷிமா








