“இந்த குர்தாவில் உள்ள அட்டையைப் பாருங்கள். நாடு முழுதும் எல்லாருக்கும் தெரிந்த நிறுவனம் இந்த குர்தாவை சந்தையில் வெளியிட்டிருக்கிறது. அதில் உள்ள அலங்கார வடிவத்தை ‘தோடா எம்ப்ராய்டரி’ என்று விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், இது எம்ப்ராய்டரியே அல்ல. துணியில் அச்சடித்திருக்கிறார்கள். எம்ப்ராய்டரியின் பெயரையும் அவர்கள் தப்பாக எழுதியிருக்கிறார்கள். ‘புக்கூர்’ என்று இதில் எழுதியிருக்கிறது. அதற்குப் பக்கத்தில் இருக்கிற சில எழுத்துகள் எங்களது மொழியைச் சேர்ந்தவையே அல்ல” என்கிறார் வாசமல்லி.
தோடர் மொழியில் அவர்களது எம்ப்ராய்டரியை ‘பொகர்’ என்று அழைக்கிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குண்டா தாலுகாவின் கரிகாத்முண்ட் எனும் குக்கிராமத்தில் வாசமல்லி வசிக்கிறார். அவருக்கு 60 வயதுக்கு மேலிருக்கும். தோடர் மக்களில் கைவேலை அலங்கரிப்புகள் செய்பவர்களில் அவர் மூத்தவர். . 16 கிலோ மீட்டருக்கு அப்பால் ஊட்டி நகரம் இருக்கிறது. அங்கே ஷீலா பவுல் ஒரு தோடர் எம்ப்ராய்டரி கொண்ட பொருள்களை விற்பனை செய்கிறார். ஒரு புகழ்பெற்ற சில்லறைக் கடையில் தோடர் எம்ப்ராய்டரி சேலை ஆன்லைனில் வெறும் 2500 ரூபாய்க்கு விற்பனைக்கு இருப்பதைப் பார்த்தார். அவர் உடனே அதனை ஆன்லைனில் வாங்கினார். “அந்த சேலையை தமிழ்நாட்டின் தோடர் பெண் தனது கையால் செய்திருப்பதாக விளம்பரத்தில் இருந்தது. எப்படி இவ்வளவு குறைந்த விலைக்கு அவர்கள் விற்கிறார்கள். அது எங்கே தயாரானது? என்றும் நான் தெரிந்து கொள்ள விரும்பினேன்” என்றார் அவர்.
சில தினங்களில் அந்தச் சேலை வந்து சேர்ந்தது. “அது கைவேலை அல்ல. மிஷின் எம்ப்ராய்டரி அது. துணியின் பின்பக்கத்தில் அது கையால் பின்னப்பட்டது அல்ல என்பதை மறைப்பதற்காக ஒரு துணி கொண்டு மூடியிருந்தனர். கருப்பு சிவப்பில் அது இருந்தது என்பதுதான் ஒரே ஒற்றுமை” என்கிறார் அவர்.
பாரம்பரியமான தோடர் எம்ப்ராய்டரியில் சிவப்பும் கருப்பும் இருக்கும். எப்போதாவது நீல வண்ணமும் இருக்கும். வெளுப்பாக்கப்படாத பருத்தித் துணியில் பருத்தி நூலைக் கொண்டு பின்னியிருக்கும் அது. தோடர் மக்களின் பாரம்பரியமான உடையின் பெயர் ’புடுகுலி’. அது ஒரு தனிச் சிறப்பான சால்வை. அந்த உடைக்கு நல்ல மரியாதை உண்டு. முக்கியமான நாட்களில்தான் அதை அணிந்துகொள்வார்கள். கோயில்களுக்குப் போகும்போதும் திருவிழாக்கள் காலகட்டத்தின்போதும், ஒரு மனிதர் மரணமடையும்போது அவரை அதில் போர்த்தி புதைக்கும்போதும் அந்த உடை பயன்படும். 1940களில் தோடர் பெண்கள் இங்கிலாந்து நாட்டின் வியாபாரிகள் கேட்டுக்கொள்வதற்கு ஏற்ற எண்ணிக்கையில் இதை பின்னிக் கொடுக்க ஆரம்பித்தார்கள். அவர்களின் கைவேலை அலங்கரிப்புகள் கொண்ட மேஜை விரிப்புகள், பைகள் உள்ளிட்டவை தயாராகின. அடுத்த பல பத்தாண்டுகளுக்கு குறிப்பிட்ட பொருள்களுக்கு மட்டுமே அவர்களின் கைவேலை அலங்கரிப்புகள் கிடைத்தன. அளவான விற்பனைதான் நடைபெற்றது. கடந்த காலத்தில் பருத்தி நூல் மட்டுமே பயன்படுத்தினார்கள். ஆனால் தற்போது பெரும்பாலான பெண்கள் கம்பளி நூலைப் பயன்படுத்துகிறார்கள். அது மலிவாக இருக்கிறது. அதில் வேகமாக பின்ன முடிகிறது என்கிறார்கள் அவர்கள்.










