“நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். நான் வணக்கம் சொன்னேன்“. குடியரசுத் தலைவர் எனக்கு வணக்கம் சொன்னார். ’ராஷ்டிரபதி பவனுக்கு உங்களை வரவேற்கிறேன்‘ என்றும் சொன்னார்“ என்கிறார் கமலா புஜாரி. பத்மஸ்ரீ விருது வாங்குவதற்காக இந்த ஆண்டு மார்ச் மாதம் புதுடெல்லிக்கு தான் பயணம் செய்ததை நினைவு கூர்ந்தார் கமலா.
‘விதைகளைப் பாதுகாக்கிற’ திருமிகு கமலாவின் பணியை அங்கீகரித்து, அவருக்கு இந்த விருது கொடுக்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக துவக்கப்பட்ட பயணம் இது. கமலாவுக்கு திருமணமான பின்னர், அவர் ஒடிசாவில் உள்ள கோராபுட் மாவட்டத்தின் பத்ராபூர் கிராமத்துக்கு சென்றார். அப்போது, அந்த கிராமத்தினர், 15 வகையான நெல் பயிர்கள் மற்றும் கருஞ்சீரகம், கோதியா, ஹலாடிசூடி, உமுரியாசூடி, மச்சகந்தா, பூடேயி, டோடிகாபுரி ஆகிய நெல் வகைகளை வளர்த்து, விவசாயம் செய்ததை கமலா நினைவுகூர்கிறார். மற்ற பயிர்களும் அதிகமான அளவில் இருந்தன.
”ஒவ்வொரு குடும்பமும் இரண்டு அல்லது மூன்று வகையான நெல் வகைகளைப் பயிரிட்டு வந்தனர். அவை ஒவ்வொன்றும் மற்றவற்றோடு வேறுபட்டவை“ என்கிறார் கமலா. “அறுவடை காலத்தின் முடிவில், மக்கள் விதைகளையும் தானியங்களையும் ஒருவருக்கு ஒருவர் பண்டமாற்று முறையில் மாற்றிக்கொண்டனர். அந்த வகையில் கிராமத்தில் நிறைய வகையான தானியங்கள் இருந்தன“, என்றும் அவர் சொன்னர்.
ஆனால், 25 ஆண்டுகளுக்கு முன்பு, நெல் வகைகள் குறையத் துவங்கின. “ உள்ளூர் வகைகளை பயிரிடுவது மிகவும் குறைந்ததை நான் கவனித்தேன். அவற்றை பாதுகாப்பது அவசியம் என்று நினைத்தேன்“ என்கிறார் கமலா. அவருக்கு 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் பூமியா ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர்.
கூட்டுக் குடும்பமாக இருந்தவர்கள், தனித் தனி குடும்பங்களாக பிரியத் துவங்கியதால், சிறு குடும்பங்கள் அதிக மகசூலைத் தரும் கலப்பின விதைகளைப் பயன்படுத்த ஆரம்பித்ததால், விதைகளின் வகைகள் குறையத் துவங்கின என்கிறார் திருமிகு. கமலா. அரசாங்கம் கொள்முதல் செய்து பாதுகாத்து வைக்கிற தானிய கிடங்குகளில் தானியங்களை கொள்முதல் செய்வதற்கு என்றே தர நிர்ணயங்களை வைத்திருக்கின்றனர். அதற்கு பொருந்தாத நெல்வகைகளை அவர்கள் கொள்முதல் செய்வதில்லை” என்கிறார் கமலாவின் மகன் தன்க்கதார் புஜாரி. “ சில நேரங்களில் மஞ்சகன்டா போன்ற மிகத் தரமான விதை வகைகளை தானியக் கிடங்கில் விற்பனைக்கு எடுத்துக்கொள்வார்கள். ஆனால், பெரும்பாலும், நாங்கள் மஞ்சகன்டாவையும் ஹல்திசுடியையும் வீட்டு உபயோகத்துக்குப் பயிரிடுவோம். ‘சர்காரிதான் 1010‘ விதையை (புதிய கலப்பின வகை) மண்டியில் விற்பனை செய்வதற்காகப் பயிரிடுவோம்.










