ஷாந்தி தேவி கோவிட் தொற்றால் இறந்தார் என்பதை உறுதிப்படுத்தும் இறப்புச் சான்றிதழோ வேறு எதுவுமோ இல்லை. ஆனால் அவரது மரணம் நேர்ந்த சூழல் வேறெந்த முடிவுக்கும் இட்டுச் செல்லவும் இல்லை.
40 வயதுகளின் மத்தியில் இருந்த ஷாந்தி தேவி ஏப்ரல் 2021-ல் கோவிட் தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுக்க அதிகரித்துக் கொண்டிருந்த சமயத்தில் நோய்வாய்ப்பட்டார். நோய்க்கான அறிகுறிகள் வரிசையாக தென்பட்டன. முதலில் இருமல், பிறகு சளி, அடுத்த நாள் காய்ச்சல். “கிராமத்தில் இருந்த அனைவருமே அச்சமயத்தில் நோய்வாய்ப்பட்டிருந்தனர்,” என்கிறார் அவரின் 65 வயது மாமியாரான கலாவதி தேவி. “அவரை முதலில் நாங்கள் உள்ளூர் பயிற்சி மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம்.”
உள்ளூர் பயிற்சி மருத்துவர்கள் உத்தரப்பிரதேசத்தின் எல்லா கிராமங்களிலும் காணக் கிடைப்பார்கள். சுகாதார சேவைகள் அளிப்பவர்கள். பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு மோசமாக இருப்பதாலும் எளிதாக அணுக முடிவதாலும் தொற்றுக் காலத்தில் கிராமப்பகுதிகளில் இருந்த பெரும்பாலானோர் இவர்களின் உதவிகளைத்தான் நாடினர். “அனைவருக்கும் பயம் இருந்ததால், யாருமே மருத்துவமனைக்குச் செல்லவில்லை,” என்கிறார் தல்லிப்பூர் கிராமத்தில் வசிக்கும் கலாவதி. “நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம் என அஞ்சினோம். அரசு மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. படுக்கைக் கிடைக்கவில்லை. எனவே உள்ளூர் பயற்சி மருத்துவரிடம்தான் நாங்கள் செல்ல முடிந்தது.”
ஆனால் இந்த மருத்துவர்கள் பயிற்சியோ தகுதியோ பெறாதவர்கள். தீவிர நோய் கொண்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாதவர்கள்.
பயிற்சி மருத்துவரிடம் சென்று வந்த மூன்று நாட்களில் ஷாந்திக்கு மூச்சுத் திணறல் தொடங்கியது. இச்சமயத்தில்தான் கலாவதி, ஷாந்தியின் கணவர் முனிர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் பீதிக்குள்ளாகினர். கிராமத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுச் சென்றனர். “மருத்துவமனை ஊழியர்கள் அவரின் நிலையைப் பார்த்து கைவிரித்து விட்டனர். நாங்கள் வீட்டுக்கு வந்து பேயோட்டும் சடங்குகளைச் செய்யத் தொடங்கினோம்,” என்கிறார் கலாவதி.
சடங்கு வேலை செய்யவில்லை. அன்றிரவே ஷாந்தி இறந்தார்.








