தேகு தருவா, 61 மற்றும் ஊர்வசி தருவா, 58, இருவரையும் செங்கல் சூளையில் பார்த்தபோது நாங்கள் ஆச்சர்யமடைந்தோம். இந்த தம்பதிகள் மேற்கு ஒடிஸாவின் போலாங்கிர் மாவட்டத்திலுள்ள பரிஜோர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இது இந்தியாவின் மிகவும் ஏழ்மையான பகுதிகளில் ஒன்றாகும்.
மேற்கு ஒடிஸாவில் – இங்குதான் இருபது வருடங்களுக்கும் மேலாக நான் செய்தி சேகரித்து வருகிறேன் - உள்ள மக்கள் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக புலம்பெயர்ந்து வருகின்றனர். பட்டினிச் சாவு மற்றும் வறுமையாலும் கடன் தொல்லையாலும் குழந்தையை விற்பதற்கும் இப்பகுதி பிரச்சித்தமானது என மோசமான பெயரைப் பெற்றுள்ளது.
1966-67 களில் ஏற்பட்ட பஞ்சம் புலம்பெயர்விற்கு வித்திட்டது. 90-களில் களஹந்தி, நுபடா, போலாங்கிர் மற்றும் வேறு சில மாவட்டங்களில் ஏற்பட்ட பஞ்சம் மீண்டும் புலம்பெயர்விற்கு காரணமாக அமைந்தது. அந்த சமயத்தில், உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் வேலை தேடி வேறு மாநிலத்திற்கு சென்றார்கள் என்பதையும் வயதானவர்கள் கிராமத்திலேயே இருந்து விட்டார்கள் என்பதையும் நாங்கள் கவனித்தோம்.





