வெயில் நிறைந்த மதிய வேளையில் அக்ரானி தாலுக்கா தாத்கான் பகுதியைச் சேர்ந்த ஷிவந்தா தாத்வி புடவையினால் தலைக்கு முக்காடு போட்டபடி, தனது சிறிய ஆட்டுக் கூட்டத்தை மேய்க்கிறார். ஆட்டுக்குட்டி ஒன்று மந்தையிலிருந்து பிரிந்து புதர்கள் அல்லது மற்றவர்களின் வயலுக்குள் செல்ல முயலும்போது, கையில் வைத்திருக்கும் தடியை தரையில் தட்டி அதை மீண்டும் கூட்டத்தில் சேர்க்கிறார். “அவற்றின் மீது எப்போதும் கண் வைத்திருக்க வேண்டும். குட்டிகள் மிகவும் துடுக்கானவை. எங்காவது ஓடிவிடும்,” என அவர் சிரிக்கிறார். “இப்போது அவை என் குழந்தைகளைப் போல ஆகிவிட்டன.”
நந்துர்பார் மாவட்டர் ஹரங்குரி கிராமத்தின் மகராஜபாதாவில் உள்ள தனது கூட்டிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டை நோக்கி அவர் நடக்கிறார். உரசும் மரங்கள், பறவைகளின் கீச்சுக்கு இடையே அவர் ஆடுகளுடன் இங்கு சுதந்திரமாக இருக்கிறார். 12ஆண்டு கால திருமண வாழ்வில் மலடி, பாவி, சூனியக்காரி போன்ற வசவுகளின்றி இருக்கிறார்.
“குழந்தைப் பேறு இல்லாத ஆண்களை இதுபோன்ற வசவுகள் தாக்குவதில்லையே ஏன்?” என கேட்கிறார் ஷிவந்தா.
14 வயதில் திருமணமான ஷிவந்தாவிற்கு இப்போது 25 வயது. அவரது கணவரான 32 வயதாகும் ரவி வேலை கிடைக்கும் போது நாள் ஒன்றுக்கு ரூ.150 வரை ஈட்டுகிறார். மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர். இருவரும் மகாராஷ்டிராவின் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டத்தைச் சேர்ந்த பில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நேற்றிரவு ரவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னை மீண்டும் அடித்தார், “எதுவும் புதிதல்ல,” என்கிறார் ஷிவந்தா. “என்னால் அவருக்கு குழந்தை கொடுக்க முடியவில்லை. என் கருப்பை பிரச்னையாகிவிட்டதால் என்னால் மீண்டும் கருத்தரிக்க முடியாது.”
2010ஆம் ஆண்டு ஷிவந்தாவிற்கு கருச்சிதைவு ஏற்பட்டபோது, தாத்கான் கிராம மருத்துவமனையில் அவரது கருப்பையில் கட்டிகள் (PCOS) இருப்பதும், அதனால் கருப்பை சேதமடைந்துள்ளதும் கண்டறியப்பட்டது. மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு அப்போது 15 வயது.
PCOS எனும் ஹார்மோன் குறைபாடு, குழந்தைப் பெறும் வயதில் உள்ள சில பெண்களிடம் காணப்படுகிறது. இதனால் முறையற்ற, நீண்ட கால, தொடர்ச்சியற்ற மாதவிடாய் சுழற்சியை விளைவிக்கிறது. அன்ட்ரோஜன் அளவுகள் அதிகரித்து, முட்டைகளைச் சுற்றி நுண்ணறைகளுடன் விரிவாக்கப்பட்ட கருப்பைகள் வளர்வதே PCOS என்பது. இந்த குறைபாட்டினால் குழந்தையின்மை, கருச்சிதைவு அல்லது குறை பிரசவம் ஏற்படுகிறது.
“PCOS தவிர இரத்த சோகை, சிக்கில் செல், தூய்மையின்மை, பாலியல் நோய்களாலும் பெண்களிடையே குழந்தையின்மைக்கு காரணமாகிவிடுகிறது,” என்கிறார் இந்தியாவின் மகப்பேறு சமூகங்களின் கூட்டமைப்பின் தலைவரான மும்பையைச் சேர்ந்த டாக்டர் கோமல் சவான்.
2010 மே மாதம் நிகழ்ந்த சம்பவத்தை ஷிவந்தா நினைவுகூர்கிறார் - அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதும் PCOS இருப்பது கண்டறியப்பட்டது. வெயில் சுட்டெரித்ததால் அவர் தலையை குனிந்து கொண்டார். “எனக்கு காலையிலிருந்தே அடிவயிற்றில் வலி இருந்தது,” என நினைவுகூர்கிறார். “மருத்துவரை பார்ப்பதற்கு என் கணவர் வரவில்லை, அதனால் வலியை பற்றி கவலைப்படாமல் வேலைக்கு சென்றுவிட்டேன்.” மதியம் வலி இன்னும் தீவிரமடைந்தது. “உதிரப்போக்கு ஏற்பட்டு, புடவை முழுவதும் இரத்தத்தால் நனைந்தது. என்ன நடக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை,” என்கிறார் அவர். மயக்கமடைந்த அவரை சக விவசாய தொழிலாளர்கள் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாத்கான் மருத்துவமனையில் சேர்த்தனர்.
PCOS இருப்பது கண்டறியப்பட்டதும், வாழ்க்கையே மாறிப் போனது.
ஷிவந்தாவிற்கு இருந்த உடல்ரீதியான சிக்கல்தான் குழந்தையின்மைக்கு காரணம் என்பதை ஏற்க அவரது கணவர் மறுத்துவிட்டார். “அவர் மருத்துவரைக் கூட பார்க்காமல், எப்படி என்னை மட்டும் குறைசொல்கிறார்?” என கேட்கிறார் ஷிவந்தா. இதற்கிடையில், ஷிவானியுடன் பாதுகாப்பற்ற உடலுறவிலும், பாலியல் வன்முறையிலும் அவரது கணவர் ஈடுபடுகிறார். “பலமுறை முயற்சித்தும் மாதவிடாய் வந்துவிட்டால் அவர் இன்னும் ஆக்ரோஷமாகி [பாலுறவின் போது] விடுகிறார்,“ என்கிறார் ஷிவந்தா. “எனக்கு அது [உடலுறவு] பிடிக்கவில்லை,” என வெளிப்படையாக சொல்கிறார். “அது என்னை மிகவும் துன்புறுத்துகிறது, சில சமயம் எரிச்சல், அரிப்பு ஏற்படுகிறது. 10 ஆண்டுகளாக இப்படித்தான் கழிகிறது. ஆரம்பத்தில் நான் அழுதுகொண்டிருப்பேன், இப்போது அழுவதை நிறுத்திக் கொண்டேன்.”
குழந்தையின்மையால் உண்டான சமூக அவமானம், பாதுகாப்பின்மை, தனிமைப்படுத்துதல் எல்லாம் தனது தலைவிதி என்று அவர் நம்புகிறார். “திருமணத்திற்கு முன் நான் அதிகம் பேசுவேன். நான் முதன்முதலில் இங்கு வந்தபோது அக்கம்பக்கத்து பெண்கள் என்னிடம் நட்புடன் பழகினர். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் கர்ப்பமடையாததால் என்னிடம் அவர்கள் பேசுவதை தவிர்க்கத் தொடங்கினர். அவர்களின் குழந்தைகளையும் என்னிடம் காட்டுவதில்லை. அவர்கள் என்னை பாவி என்கின்றனர்.”
கொஞ்சம் பாத்திரங்கள், செங்கல் அடுப்புடன் கொண்ட குடும்பத்தின் ஒற்றை அறை செங்கல் வீட்டில் , சோர்வுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஷிவந்தா, கணவர் வேறு திருமணம் செய்து கொள்வாரோ என்ற அச்சத்தில் உள்ளார். “நான் எங்கே போவது,” என்கிறார் ஷிவந்தா. “என் பெற்றோர் குடிசை வீட்டில் வசிக்கின்றனர். தினக்கூலியாக ரூ.100 பெற்று வயலில் வேலை செய்கின்றனர். எனது நான்கு சகோதரிகளும் வேலைசெய்து வாழ்ந்து வருகின்றனர். என் கணவர் வீட்டார் அவருக்கு வேறு பெண் பார்க்கின்றனர். அவர் என்னை கைவிட்டால் நான் எங்கே செல்வது?”
ஆண்டிற்கு 160 நாட்களுக்கு விவசாயப் பணிகளை செய்து தினக்கூலியாக ரூ. 100 வரை ஷிவந்தா பெறுகிறார். மாதத்திற்கு ரூ. 1000-1,500 வரை கிடைத்தால் அவருக்கு அதிர்ஷ்டம். சம்பாதிக்கும் சொற்ப தொகை மீதும் அவருக்கு முழு அதிகாரம் கிடையாது. “என்னிடம் குடும்ப அட்டை கிடையாது,“ என்கிறார் அவர். “மாதந்தோறும் அரிசி, சோளமாவு, எண்ணெய், மிளகாய்தூள் வாங்குவதற்கு ரூ.500 வரை செலவிடுகிறேன். மிச்ச பணத்தை என் கணவர் எடுத்துச் சென்றுவிடுவார்... வீட்டு செலவுகளுக்கு கூட அவர் பணம் தர மாட்டார். மருத்துவச் செலவிற்கும் பணம் தர மாட்டார். ஏதாவது கேட்டால் என்னை அடிப்பார். மது அருந்தியது போக, அவரது வருமானத்தை என்ன செய்வார் என்று தெரியவில்லை.”
அவரிடம் முன்பு 20 ஆடுகள் வரை இருந்தன. ஆனால் அவரது கணவர் ஒவ்வொன்றாக விற்று விட்டதால் இப்போது 12 மட்டுமே எஞ்சியுள்ளன.
பொருளாதார நெடிக்கடியிலும், தனது கிராமத்திலிருந்து 61 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஷஹாடி நகரில் உள்ள தனியார் மருத்துவரிடம் குழந்தை பேறு சிகிச்சை பெறுவதற்காக பணத்தை சேர்த்து வைத்திருக்கிறார் ஷிவந்தா. 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் கருமுட்டையை ஊக்கப்படுத்தும் சிகிச்சை பெறுவதற்கு ரூ.6000 செலுத்தியுள்ளார். “தாத்கான் மருத்துவமனையில் மருந்து கிடைக்காததால் ஷஹடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எனது அம்மாவுடன் சென்றேன்,” என்கிறார் அவர்.
2018ஆம் ஆண்டு தாத்கான் கிராம மருத்துவமனையில் இலவசமாக அதே சிகிச்சையை பெற்றும் பலனில்லை. “அதன் பிறகு நான் சிகிச்சையை நிறுத்திவிட்டேன்,” என்கிறார் சோர்வடைந்த ஷிவந்தா. “இப்போது ஆடுகள் தான் என் குழந்தைகள்.”
சிகிச்சை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும், என விளக்குகிறார் மகப்பேறு மருத்துவரும், 30 படுக்கைகள் கொண்ட தாத்கான் கிராம மருத்துவமனையின் கிராம சுகாதார அலுவலருமான டாக்டர் சந்தோஷ் பர்மார். அங்கு அன்றாடம் சுற்றுவட்டாரத்திலுள்ள 150 கிராமங்களில் இருந்து புறநோயாளிகள் பிரிவில் 400 நோயாளிகள் வரை பதிவு செய்கின்றனர். “க்ளோமிஃபின் சிட்ரேட், கோனமோடிராபின்ஸ், ப்ரோமோக்ரிப்டைன் போன்ற மருந்துகள் சிலருக்கு உதவுகின்றன. சிலருக்கு மேம்படுத்தப்பட்ட உதவி இனப்பெருக்க தொழில்நுட்பங்களான ஐவிஎஃப், ஐயுஐ போன்றவை தேவைப்படுகின்றன.”
விந்தணு ஆய்வு, விந்தணு எண்ணிக்கை, இரத்தம்,சிறுநீர் சோதனை, பிறப்புறுப்பு சோதனைகளும் தாத்கான் மருத்துமனைகளில் செய்து கொள்ள முடியும் என குறிப்பிடுகிறார் பர்மார். ஆனால் மேம்படுத்தப்பட்ட மகப்பேறு சிகிச்சைகள் இங்கும் நந்துர்பார் பொது மருத்துவமனையிலும் கிடையாது. “எனவே குழந்தையில்லாத தம்பதிகள் தனியார் மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிக்க வேண்டி உள்ளது,” என்கிறார் அவர். கருத்தடை சேவைகள், பிரசவ கால சிகிச்சைகள், சிசுக்களுக்கான ஆரோக்கியத்தை பாதுகாப்பது என அனைத்தையும் மகப்பேறு மருத்துவரான பர்மார் கையாளுகிறார்.
இந்தியாவில் குழந்தையின்மை அதிகமாகியுள்ளது என்பதற்கு 2009ஆம் ஆண்டு சுகாதார கொள்கை மற்றும் திட்டங்களுக்கான இதழில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரையே சான்று. தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு ( NFHS-4 ; 2015-16) பதிவின்படி 40-44 வயதிலான 3.6 சதவீதம் பெண்கள் குழந்தையற்றவர்கள் அல்லது குழந்தை பெறாதவர்களாக உள்ளனர். மக்கள்தொகை நிலைப்படுத்தல், குழந்தையின்மையை தடுத்தல் மற்றும் கவனம் செலுத்தல் போன்றவை தொடர்ந்து அலட்சியப்படுத்தப்படுகிறது. பொது சுகாதாரத்திற்கு மிகக் குறைவான முக்கியத்துவமே கொடுக்கப்படுகிறது.
இந்த அம்சத்தை குறிப்பிட்டு ஷிவந்தா கேட்கிறார், “குழந்தை பிறப்பை கட்டுப்படுத்த மாத்திரைகள், ஆணுறைகள் அனுப்பும் அரசு, இங்கு குழந்தைபேறுக்கு இலவச சிகிச்சையை ஏன் அளிக்க முடியாது?”
சமூக மருத்துவத்திற்கான இந்திய பத்திரிகையில் வெளியான 12 மாநிலங்களில் நடத்தப்பட்ட 2012-13 ஆய்வில் , பெரும்பாலான மாவட்ட மருத்துவமனைகளில் அடிப்படை உள்கட்டமைப்புகள், நோய்களை கண்டறியும் வசதிகள் நோய்களை தடுப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் உதவும் வகையில் உள்ளதாகவும், ஆனால் பெரும்பாலான சமூக சுகாதார மையங்கள் (CHCs), ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHCs) போன்றவற்றில் இந்த வசதிகள் இல்லை. 94 சதவீத ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 79 சதவீத சமூக சுகாதார மைங்களிலும் விந்தணுக்களை பரிசோதிக்கும் வசதிகள் இல்லை. மேம்படுத்தப்பட்ட ஆய்வுக்கூட சேவைகள் மாவட்ட மருத்துவமனைகளில் 25 சதவீதமும், சமூக சுகாதார மையங்களில் 8 சதவீதமும் கிடைக்கின்றன. டையக்னாஸ்டிக் லேப்ரோஸ்கோபி மாவட்ட மருத்துவமனைகளில் 25 சதவீதமும், அவற்றில் ஹைஸ்டரோஸ்கோபி 8 சதவீதமும் கிடைக்கின்றன. கருமுட்டைகளை கருத்தரிக்க வைக்கும் முறை 83 சதவீத மாவட்ட மருத்துவமனைகளில் உள்ளன. அவற்றில் 33 சதவீதம் கோனடோடிராபின்ஸ். கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட எந்த சுகாதார மையங்களிலும் பணியாளர்களுக்கு கருத்தரித்தல் மேலாண்மை குறித்த பயிற்சியும் அளிக்கப்படுவதில்லை.
“கிராமப்புற சுகாதார அமைப்புகளில் மகப்பேறு மருத்துவ வல்லுநர்கள் இல்லாததால் சிகிச்சை பெற முடிவதில்லை,” என குறிப்பிடுகிறார் இந்திய மருத்துவ கூட்டமைப்பின் நாஷிக் சேப்டரின் முன்னாள் தலைவரான டாக்டர் சந்திரகாந்த் சங்கிலேச்சா. “கருத்தரித்தல் சிகிச்சைக்கு பயிற்சி பெற்ற, தகுதி வாய்ந்த பணியாளர்கள், உயர் தொழில்நுட்பங்கள் அவசியம். பிரசவ நலம், சிசு பாதுகாப்பில் மட்டுமே அரசு கவனம் செலுத்தி வருவதால், ஆரம்ப சுகாதார மையங்கள் அல்லது பொது மருத்துவமனை அளவில் கருத்தரிப்பு சிகிச்சையை கிடைக்கச் செய்வது கடினம்.”
ஷிவந்தாவின் கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பர்சிபாடாவில் உள்ள கீதா வலவி தனது குடிசைக்கு வெளியே தட்டை பயறுகளை காய வைக்கிறார். 30 வயதாகும் கீதாவும் எப்போதாவது விவசாய வேலை பார்க்கும் 45 வயது சூரஜும் திருமணம் செய்து 17 வருடங்கள் ஆகின்றன. கணவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். பில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். உள்ளூர் ஆஷா பணியாளரின் தொடர் வலியுறுத்தலுக்கு பிறகு சூரஜிற்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பரிசோதனை செய்யப்பட்டு, அவருக்கு விந்தணு எண்ணிக்கை குறைவாக இருப்பதை 2010ஆம் ஆண்டு கண்டறிந்தனர். இச்சம்பவத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன், 2005ஆம் ஆண்டு இத்தம்பதி பெண் குழந்தையை தத்தெடுத்தனர். இருந்தும் சூரஜூம், அவரது தாயாரும் கீதாவை கருத்தரிக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர். “அவரிடம் தான் பிரச்னை உள்ளது, என்னிடமில்லை. ஆனால் அவர் என் மீது குற்றஞ்சாட்டுகிறார். நான் பெண் என்பதால் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது,” என்கிறார் கீதா.
2019ஆம் ஆண்டு கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது ஒரு ஏக்கர் நிலத்தில் 20 கிலோ தட்டை பயறு, ஒரு குவிண்டால் சோளம் அறுவடை செய்தார். “இவை வீட்டு பயன்பாட்டிற்கு. வயலில் என் கணவர் எந்த வேலையும் செய்வதில்லை. விவசாய கூலி வேலை செய்து தான் ஈட்டும் வருமானத்தை குடிப்பதற்கும், சூதாட்டத்திற்கு செலவு செய்துவிடுவார்,” என்று கோபத்தால் பற்களை கடித்தபடி சொல்கிறார் கீதா. “அவர் இலவசமாக சாப்பிடுகிறார்!”
“அவர் குடித்துவிட்டு வரும்போது என்னை உதைப்பார், கம்பினால் சிலசமயம் அடிப்பார். தெளிவாக இருக்கும்போது என்னிடம் எதுவும் பேச மாட்டார்,” என்கிறார் அவர். பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் குடும்ப வன்முறையால் அவருக்கு முதுகு வலி, தோள்பட்டையிலும், கழுத்திலும் வலி ஏற்பட்டுள்ளது.
“என் கணவரின் அண்ணன் மகளை நாங்கள் தத்தெடுத்தோம். ஆனால் என் கணவர் சொந்தமாக ஆண் குழந்தையை பெற்றெடுக்கவே விரும்புகிறார், ஆஷா பணியாளர்கள் அறிவுறுத்தியும் அவர் உடலுறவின்போது ஆணுறைகளை பயன்படுத்த மறுக்கிறார், மதுகுடிப்பதை நிறுத்துவதில்லை,” என்கிறார் கீதா. ஆஷா பணியாளர் வாரம் ஒருமுறை வந்து அவரது உடல்நிலை குறித்து கேட்டுச் செல்கிறார், உடலுறவின் போது வலி, காயங்கள், சிறுநீர் கழிப்பதில் வலி, அளவற்ற வெள்ளைப்படுதல், அடிவயிற்றில் வலி, என பால்வினை நோய்கள் அல்லது பிறப்புறுப்பு தொற்றுகளுக்கான அறிகுறி கீதாவிடம் உள்ளதால் ஆணுறை பயன்படுத்துமாறு கீதாவின் கணவரிடம் அறிவுறுத்தினார்.
அவர் சொல்லும் அறிகுறிகளுக்கு மருத்துவம் எடுத்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரப் பணியாளர்கள் அறிவுறுத்தியும் கீதா அக்கறை செலுத்துவதில்லை. "மருத்துவரைப் பார்த்து, இப்போது சிகிச்சை பெறுவதால் என்ன பயன்?" என கேட்கிறார் கீதா. "மருந்துகள் சாப்பிட்டால் வலி சரியாகும், ஆனால் என் கணவர் குடிப்பதை நிறுத்துவாரா? என்னை துன்புறுத்துவதை அவர் நிறுத்துவாரா?"
மாதத்தில் நான்கு அல்லது ஐந்து குழந்தையற்ற தம்பதிகளை பார்ப்பதாகவும், கணவன்களின் மதுபழக்கத்தால் விந்தணு எண்ணிக்கை குறைந்ததும் இதற்கு காரணமாகிறது என்கிறார் டாக்டர் பர்மார். "ஆண்களிடம் காணும் ஆண்மையின்மையை அலட்சியம் செய்வதால், பெண்களுக்கு கடுமையான சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது," எனும் அவர், "பெரும்பாலும் பெண்கள் தனியாக வருகின்றனர். ஆண்களும் பரிசோதனை செய்து கொள்வதன் அவசியத்தை உணர வேண்டும், முற்றிலும் பெண்கள் மீது பழி சொல்லக் கூடாது."
மக்கள்தொகை நிலைப்படுத்தலில் கவனம் செலுத்துவதால் குழந்தையின்மையை தடுப்பதிலும், பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுப்பதிலும் அலட்சியம் நிலவுகிறது.
கிழக்கு மகாராஷ்டிராவின் கச்சிரோலி பழங்குடியின பகுதியில் முப்பதாண்டுகளுக்கு மேலாக கருத்தரித்தல் தொடர்புடைய சுகாதார விவகாரங்களில் பணியாற்றி வரும் டாக்டர் ராணி பங்க், குழந்தையின்மைக்கு மருத்துவத்தை விட சமூகமே காரணம் என விளக்குகிறார். "ஆண்களின் ஆண்மையின்மை பெரிய பிரச்னையாக உள்ளது, ஆனால் குழந்தையின்மையை பெண்களின் பிரச்னையாகவே பார்க்கின்றனர். இந்த மனநிலை மாற வேண்டும்."
சுகாதார கொள்கை மற்றும் திட்டம் தொடர்பான கட்டுரையில் கட்டுரையாளர்கள் இப்படி கணிக்கிறார்கள்: “மக்கள்தொகையில் சிறிய அளவில்தான் குழந்தையின்மை பிரச்னை இருந்தாலும், அது முக்கியமான உடல்நலன் மற்றும் உரிமை சார்ந்த பிரச்னையாக இருக்கிறது.” ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் குழந்தையின்மையில் தொடர்புள்ளது, “குழந்தையின்மையால் அதிகம் அச்சப்படுவது பெண்கள் தான். குடும்பம், சமூகத்தில் அவர்களின் அடையாளம், அந்தஸ்து, அதிகாரம், பாதுகாப்பு பாதிக்கப்படுகிறது. ஒதுக்கப்படுதல், அவமதித்தல் போன்ற அவமானங்களையும் பெண்களே அனுபவிக்கின்றனர்.”
கீதா- 8ஆம் வகுப்பு வரை படித்தவர். 2003ஆம் ஆண்டில் 13 வயதில் அவருக்கு திருமணமானது – ஒரு காலத்தில் பட்டதாரியாக கனவு கண்டவர். இப்போது தனது 20 வயது மகள் லதாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கனவுகளை நனவாக்க விரும்புகிறார் - தாத்கான் இளையோர் கல்லூரியில் அவள் 12ஆம் வகுப்பு படித்து வருகிறாள். “என் வயிற்றில் அவள் பிறக்காவிட்டால் என்ன; என்னைப் போல அவளுடைய வாழ்க்கை சீரழிய நான் விரும்பவில்லை,” என்கிறார் கீதா.
ஒரு காலத்தில் ஆடை அலங்காரம் செய்து கொள்வதில் கீதாவிற்கு ஆர்வமிருந்தது. “என் கூந்தலுக்கு எண்ணெய் பூசி, சீயக்காய் தேய்த்து குளித்துவிட்டு கண்ணாடி பார்ப்பேன்.” அவர் முகத்தில் பவுடர் பூசுவதற்கும், கூந்தலை அலங்காரம் செய்வதற்கும், அழகாக சேலையை கட்டுவதற்கும் விசேஷ நாட்களை தேடியதில்லை. ஆனால் திருமணமான இரண்டு ஆண்டுகளில், கருத்தரித்தலுக்கான எந்த அடையாளமும் இல்லாதபோது, அவரது கணவரும், மாமியாரும் “வெட்கமற்றவள்” தன்னை அழகாக காட்டிக் கொள்கிறாள் எனக் கூறியதால் கீதா தன்னை அலங்கரித்துக் கொள்வதை நிறுத்திக் கொண்டார். “எனக்கு குழந்தை பிறக்கவில்லை என நான் வருத்தப்பட்டதில்லை; எனக்கு சொந்தமாக குழந்தையை கேட்டதில்லை. அழகாக தோன்ற வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு?” என கேட்கிறார் அவர்.
திருமணங்கள், பெயர் சூட்டும் விழா, குடும்ப நிகழ்வுகள் போன்றவற்றிற்கு அழைப்பதை உறவினர்கள் நிறுத்திக் கொண்டனர். சமூக ஒதுக்குதல் முழுமையடைந்தது. “மக்கள் என் கணவரையும், அவரது குடும்பத்தினரையும் மட்டுமே அழைக்கின்றனர். என் கணவருக்கு விந்தணு பலவீனமாக உள்ளது. நான் குழந்தை பாக்கியமற்றவள் கிடையாது. அவரைப் பற்றி தெரிந்தால், அவரையும் அழைப்பதை நிறுத்திக் கொள்வார்களா?” என கேட்கிறார் கீதா.
முகப்பு ஓவியம்: ப்ரியங்கா போரர் தொழில்நுட்பத்தில் பல விதமான முயற்சிகள் செய்வதன் மூலம் புதிய பொருட்களையும் வெளிப்பாடுகளையும் கண்டடையும் நவீன ஊடக கலைஞர். கற்றுக் கொள்ளும் நோக்கிலும் விளையாட்டாகவும் அவர் அனுபவங்களை வடிவங்களாக்குகிறார், அதே நேரம் பாரம்பரியமான பேப்பர் பேனாவிலும் அவரால் செயல்பட முடியும்.
எளிய மக்களின் குரல்கள், வாழ்க்கை அனுபவங்களின் மூலம் பருவநிலை மாற்றம் குறித்து தேசிய அளவில் செய்தி சேகரிக்கும் திட்டத்தை UNDP ஆதரவுடன் பாரி செய்து வருகிறது.
இக்கட்டுரையை மீண்டும் வெளியிட வேண்டுமா? [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் எழுதுங்கள். [email protected] என்ற முகவரிக்கும் அதன் நகலை அனுப்புங்கள்.
தமிழில்: சவிதா