“இது நரகம்
இது ஒரு சுழல்
இது ஒரு அறுவறுப்பான துன்பம்
நடன மங்கையின் சதங்கை தரும் வலியிது...”

'காமத்திபுரா' குறித்த நாம்தியோ தாசலின் கவிதையிலிருந்து

எப்போதும் கூட்டம் அலைமோதும் சாலை பல ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக வெறிச்சோடிக் கிடக்கிறது. ஆனால், இங்கு பணிபுரியும் பெண்களால் நீண்ட காலத்திற்கு வேலையின்றி இருக்க முடியாது. வாடகை பாக்கி இருக்கிறது, ஊரடங்கினால் விடுதிகள் மூடப்பட்டு பிள்ளைகள் வீடு திரும்பிவிட்டனர், செலவும் அதிகரித்துவிட்டது.

நான்கு மாத இடைவேளைக்கு பிறகு, மத்திய மும்பையின் காமத்திபுரா பகுதியில் உள்ள ஃபாக்லேண்ட் சாலையின் நடைமேடையில் நிற்கிறார் 21 வயதாகும் சோனி. தனது ஐந்து வயது மகள் ஈஷாவை வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டு அருகில் உள்ள சிறிய ஓட்டல்கள் அல்லது தோழிகளின் அறையில் அவர் வாடிக்கையாளரைச் சந்திக்கிறார். தனது அறையில் ஈஷா உள்ளதால் அவர்களை அங்கு சந்திக்க முடியாது. (இக்கட்டுரையில் வரும் அனைவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.)

ஆகஸ்ட் 4ஆம் தேதி இரவு 11 மணிக்கு பணியிலிருந்து சிறிது இடைவேளை எடுத்துக் கொண்டு தனது அறைக்கு சோனி திரும்பிபோது, ஈஷா அழுவதைக் கண்டாள். “நான் வரும்போது அவள் உறங்கியிருக்க வேண்டும்,” என்கிறார் சோனி. “ஆனால் [அந்த இரவு] அவள் தனது உடலை காட்டி வலிக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். அனைத்தையும் புரிந்துகொள்ள எனக்கு கொஞ்சம் நேரமானது...”

அந்த மாலையில் சோனி வேலையிலிருந்தபோது ஈஷா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். சில அறைகள் தள்ளி வசிக்கும் மற்றொரு பாலியல் தொழிலாளி அச்சிறுமிக்கு தின்பண்டம் தருவதாகக் கூறி, தனது அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறாள். அவளது வாடிக்கையாளரும் அங்கிருந்திருக்கிறார். “அவன் போதையில் இருந்திருக்கிறான். யாரிடமும் சொல்லிவிடக் கூடாது என என் மகளை மிரட்டி இருக்கிறான்,” என்கிறார் சோனி. “வலிப்பதை அவள் அத்தைப் போல கருதும் வீட்டு உரிமையாளரிடம் கூறியிருக்கிறாள். யாரையும் நம்புவது முட்டாள்தனம், என்னைப் போன்றோர் யாரையும் நம்பக் கூடாது. என் மகள் சொல்லாவிட்டால் எனக்கு தெரியாமலே போயிருக்கும்? ஈஷாவிற்கு அவர்களைத் தெரியும், அவர்களை நம்பி அறைக்குச் சென்றிருக்கிறாள், இப்பகுதியில் தெரியாதவர்களிடம் நான் இல்லாதபோது அவள் பேசுவதில்லை.”

'I am a fool to believe that people like us can have someone to trust' says Soni, who filed a complaint at Nagpada police station after her daughter was raped
PHOTO • Aakanksha
'I am a fool to believe that people like us can have someone to trust' says Soni, who filed a complaint at Nagpada police station after her daughter was raped. Clothes hanging outside Kavita’s (Soni) room
PHOTO • Aakanksha

'யாரையும் நம்புவது முட்டாள்தனம், எங்களைப் போன்றோர் யாரையும் நம்பக் கூடாது' என்கிறார் சோனி. மகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது பற்றி நாக்பாடா காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார். வலது: அவளது அறைக்கு வெளியே தொங்கும் துணிகள்

இப்பகுதியின் முன்னாள் பாலியல் தொழிலாளியான டாலிக்கு இத்திட்டம் ஏற்கனவே தெரிந்துள்ளது. இப்பிரச்னையை முடித்துக் கொள்ளுமாறு என்னிடம் சமரசம் செய்ய முயன்றதாகச் சொல்கிறார் சோனி. “இங்குள்ள பெண்களுக்கு என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். எல்லோரும் குருடாகி வாயையும் மூடிக் கொள்கின்றனர். நான் அப்படி இருக்கப் போவதில்லை,” என்கிறார் அவர்.

ஆகஸ்ட் 4ஆம் தேதி, சம்பவம் நடந்த அதேநாளில் அருகில் உள்ள நாக்படா காவல்நிலையத்தில் சோனி புகார் அளித்துள்ளார். அடுத்த நாளில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) 2012ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இச்சட்டத்தின்படி, அளிக்க வேண்டிய சட்ட உதவி, ஆலோசனை, பாதுகாப்பான சூழலில் மறுவாழ்வு போன்றவற்றிற்காக மாநில குழந்தைகள் நல ஆணையத்தை காவல்துறையினர் அணுகினர். அரசின் ஜெ.ஜெ. மருத்துவமனையில் ஈஷாவிற்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. ஆகஸ்ட் 18ஆம் தேதி மத்திய மும்பையில் உள்ள மாநில அரசின் உதவிபெறும் குழந்தைகள் நல நிறுவனத்திற்கு அவள் அனுப்பி வைக்கப்பட்டாள்.

******

இதுபோன்ற சம்பவங்கள் இங்கு பொதுவானவை. 2010ஆம் ஆண்டு கொல்கத்தாவின் சிவப்பு விளக்கு பகுதிகளில் 101 குடும்பங்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 69 சதவீதம் பேர் அங்குள்ள சூழல் தங்கள் குழந்தைகளுக்கு, முக்கியமாக, பெண் குழந்தைகளுக்கு ஏற்றதாக இல்லை என்கின்றனர். “...தாய்மார்களிடம் பேசியதில், வாடிக்கையாளர் தங்களது மகள்களை தொடுதல், சீண்டுதல் அல்லது வார்த்தைகளால் வம்பிழுக்கும்போது கையறு நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்,” என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்களது தோழிகள், உடன்பிறந்தவர்கள், அக்கம்பக்கத்தில் உள்ள பிற குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றது பற்றி கேள்விப்பட்டுள்ளதாக 100 சதவீத குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.

“இதுபோன்ற சம்பவங்களை கேள்விப்படுவது எங்களுக்கு புதிதல்ல. அவன் இப்படிச் செய்துவிட்டான் அல்லது எங்கள் மகள்களில் ஒருத்திக்கு இப்படி நடந்துவிட்டது அல்லது தவறாக நடக்க முயன்றனர் அல்லது ஆபாச படம் பார்க்க கட்டாயப்படுத்தப்பட்டனர் என்று கேள்விப்படுவதெல்லாம் எங்களுக்குப் புதிதல்ல. இதெல்லாம் பெண் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, இங்குள்ள ஆண் பிள்ளைகளுக்கும் நடக்கிறது. ஆனால் யாரும் வாய் திறப்பதில்லை,” என்கிறார் காமத்திப்புராவில் நம்மிடையே அமர்ந்து உரையாடிய பாலியல் தொழிலாளி ஒருவர்.

2018ஆம் ஆண்டு வெளியான மற்றொரு ஆய்வுக் கட்டுரை யில், “பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள், பள்ளிகளை பாதியில் நிறுத்திய பதின்பருவ சிறுவர், சிறுமியர், கூலி வேலைக்குச் செல்வோர் ஆகிய பிரிவினருக்கு பாலியல் துன்புறுத்தல் அபாயகரமாக அதிகரித்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Charu too has to leave three-year-old Sheela in the gharwali’s house when she goes for work, which she resumed in August. 'Do I have a choice?' she asks
PHOTO • Aakanksha
Charu too has to leave three-year-old Sheela in the gharwali’s house when she goes for work, which she resumed in August. 'Do I have a choice?' she asks
PHOTO • Aakanksha

சாருவும் தனது மூன்று வயது மகள் ஷீலாவை வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டு ஆகஸ்ட் மாதம் வேலைக்கு திரும்பினார். 'எனக்கு வேறு வாய்ப்புள்ளதா?' என அவர் கேட்கிறார்

பொதுமுடக்கம் இவர்களின் நெருக்கடியை மேலும் அதிகரித்துவிட்டது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் குழந்தைகள் அவசர உதவி எண்ணுக்கு ஏப்ரல் மாத ஊரடங்கின் போது இரண்டு வாரங்களில் பல்வேறு வகையான இன்னல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அழைப்பு 50 சதவீதம் அதிகரித்ததாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தீர்க்கும் வழிகள் என்ற தலைப்பிலான யுனிசெஃப்பின் 2020 ஜூன் அறிக்கை சொல்கிறது. “94.6 சதவீத குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றம் இழைத்தவர்கள் குழந்தைகளுக்கு தெரிந்தவர்களாகவே இருக்கின்றனர்; 53.7 சதவீதம் வழக்குகளில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் / நண்பர்களாக உள்ளனர்.”

காமத்திபுராவில் பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக இரவு அல்லது பகல் நேர தங்குமிடங்களை சில என்ஜிஓக்கள் நடத்துகின்றன. தாய்மார்கள் வேலையில் இருக்கும்போதும், ஊரடங்கு நேரத்தின் போதும் அவர்களின் குழந்தைகளுக்கு இவை ஊரடங்கின்போது முழு நேர அடைக்கலமும் அளித்துள்ளன. நகரத்தில் ஊரடங்கு காரணமாக விடுதிகள் மூடப்பட்டு அவர்களின் பிள்ளைகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் இந்த தங்குமிடங்கள் செயல்பட்டன. ஈஷாவும் இதுபோன்ற உறைவிடத்தில் தான் இருந்து வந்தாள். சோனி வேலைக்குச் செல்லாததால் ஜூன் மாதமே ஈஷாவை தனது அறைக்கு அழைத்து வந்துவிட்டார். ஜூலை மாதம் சோனி மீண்டும் வேலைக்கு திரும்பியபோது ஈஷாவை அந்த மையத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார். “ஆனால் கரோனா அச்சம் காரணமாக அவர்கள் மீண்டும் அனுமதிக்கவில்லை,” என்கிறார் அவர்.

பொதுமுடக்கத்தின் தொடக்க காலத்தில் உள்ளூர் என்ஜிஓக்கள் ரேஷன் பொருட்களை கொடுத்து உதவியுள்ளன. ஆனால் சமையலுக்கு மண்ணெண்ணெய் மட்டும் கிடைக்கவில்லை. சோனி வேலைக்கு திரும்ப நினைத்தபோது அவரது இரண்டு மாத வாடகை ரூ.7000 பாக்கி இருந்தது. (மகளின் பாலியல் வன்புணர்விற்கு பிறகு, ஆகஸ்ட் 10ஆம் தேதி சோனி அருகில் உள்ள சந்து பக்கம் அறையை மாற்றி கொண்டார். புதிய வீட்டுக்காரர் ஒரு நாளுக்கு ரூ.250 வாடகை கேட்கிறார், ஆனால் இப்போதைக்கு அவர் நெருக்கடி கொடுக்கவில்லை.)

வீட்டு உரிமையாளர்கள், மற்றவர்களிடம் என ரூ.50,000 வரை சோனி கடன் வாங்கியுள்ளார். அவற்றை சிறிது சிறிதாக திருப்பி செலுத்தி வருகிறார். அவற்றில் தந்தையின் மருத்துவ செலவுகளும் அடங்கும்; ரிக்ஷா இழுத்து வந்த அவரின் தந்தை, மூச்சு பிரச்சனையால் பழ விற்பனையில் ஈடுபட்டு வந்தார். கடந்த பிப்ரவரி 2020 அவர் மரணமடைந்தார். “நான் வேலைக்கு திரும்பாவிட்டால் கடனை யார் அடைப்பது?” என கேட்கிறார் சோனி. மேற்குவங்கத்தின் ஹவுரா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் வசிக்கும் இல்லத்தரசி தாய், மூன்று சகோதரிகளுக்கு (அவர்களில் இருவர் படிக்கின்றனர், ஒருவருக்கு திருமணமாகிவிட்டது) சோனி பணம் அனுப்பி வந்தார். பொதுமுடக்க சமயத்தில் அதுவும் நின்றுபோனது.

******

காமத்திபுராவின் பிற பாலியல் தொழிலாளர்களுக்கும் இதே போராட்டங்கள் தான். சோனி வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயது நிரம்பிய பிரியா, விரைவில் விடுதிகள் திறக்கப்பட்டு, தனது பிள்ளைகளை அழைத்துக் கொள்வார்கள் என நம்புகிறார். அருகில் உள்ள மதன்புராவில் உறைவிட பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்த ஒன்பது வயது ரித்தி ஊரடங்கின்போது வீடு திரும்பிவிட்டாள்.

Priya too is hoping residential schools and hostels will soon take back their kids (who are back home due to the lockdown). 'They should come and see our rooms for duri duri banake rakhne ka [social distancing]', she says, referring to the 10x10 feet room divided into three rectangular boxes of 4x6
PHOTO • Aakanksha
Priya too is hoping residential schools and hostels will soon take back their kids (who are back home due to the lockdown). 'They should come and see our rooms for duri duri banake rakhne ka [social distancing]', she says, referring to the 10x10 feet room divided into three rectangular boxes of 4x6
PHOTO • Aakanksha

உறைவிட பள்ளிகள், விடுதிகள் மீண்டும் திறக்கப்பட்டு (ஊரடங்கினால் வீடு திரும்பிய) பிள்ளைகளை அழைத்துக் கொள்வார்கள் என பிரியாவும் நம்பிக்கை கொண்டு இருக்கிறார். 10x10 அடி கொண்ட அறையில் 4x6 என பிரிக்கப்பட்டுள்ள மூன்று செவ்வக பெட்டிகளை குறிப்பிட்டு, ‘சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பதை அவர்கள் வந்து கண்டிப்பாக பார்க்க வேண்டும்’, என்கிறார்

“அறையிலிருந்து வெளியே செல்லாதே, எதுவாக இருந்தாலும் அறைக்குள் தான் இருக்க வேண்டும்,” என தனது மகளிடம் கண்டிப்பாக சொல்கிறார் பிரியா. ரித்திக்கு விதிக்கப்படும் இத்தகைய கண்டிப்புகள் ஊரடங்கு அச்சத்தினால் அல்ல. “எங்கள் மகள்களை விழுங்கிவிடும் ஆண்கள் இருக்கும் இடத்தில் நாங்கள் வசிக்கிறோம், யாரும் வந்து கேட்ககூட மாட்டார்கள்,” என்று சொல்லும் பிரியா தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து சிறிதளவு கடனும் பெற்றுள்ளார்.

பொதுமுடக்கமும் அதற்கு பிந்தைய விளைவுகளும் இக்குடும்பத்தை மோசமாக பாதித்துவிட்டன. “என் நிலைமை மோசமாகிவிட்டது, என்னால் வாடகை கூட செலுத்த முடியவில்லை. வேலை செய்யும் போது ரித்தியை உடன் வைத்திருக்க முடியாது, அவள் விடுதியில்தான் பாதுகாப்பாக இருப்பாள்,” என்று சொல்லும் பிரியா, மகாராஷ்டிராவின் அம்ராவதி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பத்தாண்டுகளுக்கும் மேலாக காமத்திபுராவில் வசிக்கிறார்.

பிரியாவின் 15 வயது மகனும் அவருடன்தான் வசிக்கிறான். ஊரடங்கிற்கு முன் அவன் பைகுல்லாவில் உள்ள நகராட்சிப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தான். தனது தாய் வாடிக்கையாளர்களை சந்திக்கும்போது, அவன் அருகில் உள்ள அறையில் தங்குவான், சுற்றித் திரிவான் அல்லது என்ஜிஓ நடத்தும் உள்ளூர் மையத்தில் நேரத்தை செலவிடுவான்.

தங்கள் மகனுக்கும் இதுபோன்ற தொந்தரவு ஏற்படலாம் அல்லது போதைபொருட்களுக்கு அடிமையாகலாம், வேறு ஏதேனும் தீய வழிகளில் செல்லக்கூடும் என இங்குள்ள பெண்களுக்கு தெரிந்துள்ளது. எனவே அவர்கள் தங்கள் மகன்களையும் விடுதிகளில் சேர்த்துவிடுகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விக்ரமை விடுதிக்கு அனுப்ப பிரியா முயன்றார். ஆனால் அவன் அங்கிருந்து ஓடி வந்துவிட்டான். இந்தாண்டு ஏப்ரலில் இருந்து அவ்வப்போது வேலைகள் செய்து குடும்பத்திற்கு உதவி வருகிறான் - முகக்கவசங்கள், தேநீர் விற்பது, வீட்டு உரிமையாளர்களின் வீட்டை சுத்தம் செய்வது என கிடைக்கும் வேலைகளை அவன் செய்கிறான். (பார்க்க: மீண்டும் மீண்டும் ஒரு பெரும் பயணம் ).

10x10 அடி கொண்ட அறையில் 4x6 என பிரிக்கப்பட்டுள்ள மூன்று செவ்வக பெட்டிகளை குறிப்பிட்டு, ‘சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பதை அவர்கள் வந்து கண்டிப்பாக பார்க்க வேண்டும்’, என்கிறார். ஒவ்வொரு பிரிவிலும் படுக்கையே மொத்த இடத்தையும் அடைத்துக் கொள்ளும். இரண்டு அலமாரிகள் இருக்கும். அறையின் ஒரு பிரிவில் பிரியா வசிக்கிறார். மற்றொரு பிரிவில் வேறு குடும்பம் வசிக்கிறது. நடுவில் உள்ள பிரிவு (பிற குடும்பங்கள் இல்லாதபோது) வேலைக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். அல்லது தங்கள் பிரிவிலேயே வாடிக்கையாளர்களை சந்தித்து கொள்கின்றனர். சமையலறை, கழிவறைக்கு என ஓரமாக பொது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வீடும், பணியிடமும் பலருக்கு ஒரே இடம் தான்- சிலரது இடம் இதைவிட சிறிதாகவும் இருக்கும்.

Even before the lockdown, Soni, Priya, Charu and other women here depended heavily on private moneylenders and loans from gharwalis; their debts have only grown during these last few months, and work, even with their kids back from schools and hostels in their tiny rooms, is an imperative
PHOTO • Aakanksha
Even before the lockdown, Soni, Priya, Charu and other women here depended heavily on private moneylenders and loans from gharwalis; their debts have only grown during these last few months, and work, even with their kids back from schools and hostels in their tiny rooms, is an imperative
PHOTO • Aakanksha

பொதுமுடக்கத்திற்கு முன்பு வரை சோனி, பிரியா, சாரு போன்ற பெண்கள் வட்டிக்கடைகாரர்கள், அருகில் வசிப்பவர்களிடம் தான் அதிகளவில் கடன் வாங்கினர்; கடந்த சில மாதங்களில் அவர்களின் கடனும் அதிகரித்துவிட்டது. குழந்தைகள் பள்ளியிலிருந்து, விடுதிகளில் இருந்து திரும்பி அவர்களின் சிறிய அறைக்கு வந்துவிட்டனர்

ஆறு மாதமாக பிரியா இந்த சிறிய இடத்திற்கு மாத வாடகை ரூ.6000ஐ கொடுக்கவில்லை. அண்மையில் கடனில் சிறிய பகுதியை அடைத்துள்ளார். “மாதந்தோறும் 500, 1000 ரூபாய் என கிடைத்து வந்தது. விக்ரமின் வருமானமும் உதவியது,” என்கிறார் அவர். “அவ்வப்போது ரேஷன் பொருட்களை [என்ஜிஓ போன்றோரிடம் பெற்றது] உள்ளூர் கடைகளில் விற்று மண்ணெண்ணெய் வாங்குவோம்.”

2018ஆம் ஆண்டு பிரியா வட்டிக்கு வாங்கிய ரூ.40,000 இப்போது பெருகி ரூ.62,000ஆக உள்ளது. இதுவரை அவர் ரூ.6000 வரை மட்டுமே திரும்பி செலுத்தியுள்ளார். இப்பகுதியில் வசிக்கும் பிரியா போன்ற பலரும் தனியார் வட்டிக்கடைகாரர்களைத் தான் அதிகம் நம்பியுள்ளனர்.

பிரியாவினால் அதிகம் உழைக்க முடியாது, அவருக்கு வலிநிறைந்த வயிறு தொற்று உள்ளது. “நான் செய்த பல கருக்கலைப்புகள் இப்போது பாதிக்கிறது,” என்கிறார் அவர். “நான் மருத்துவமனைக்குச் சென்றபோது அவர்கள் கரோனா பரபரப்பில் இருந்தனர். கருப்பை நீக்க அறுவை சிகிச்சைக்கு ரூ. 20,000 கேட்டனர். என்னால் செலுத்த முடியவில்லை.” அவரது சிறுசேமிப்பையும் பொதுமுடக்கம் விழுங்கிவிட்டது. ஆகஸ்ட் மாதம் அப்பகுதியில் வீட்டு வேலைக்குச் சேர்ந்து ஒரு நாளுக்கு ரூ.50 ஈட்டி வந்தார். அதுவும் ஒரு மாதம் தான் நீடித்தது.

விடுதிகள் மீண்டும் திறக்கும் என்ற நம்பிக்கை பிரியாவிடம் உள்ளது. “ரித்தியின் தலைவிதி சீரழிய விட மாட்டேன்,” என்கிறார் அவர்.

சோனியின் மகளைப் போன்று பலரது பிள்ளைகளும் பொதுமுடக்கத்தின் போது தாயிடம் திரும்பியுள்ளனர் என்கிறது பிரேரனா எனும் அப்பகுதியில் உள்ள என்ஜிஓ நடத்திய விரைவு ஆய்வு . இதில் பாலியல் தொழிலாளர்களின் 74 பிள்ளைகளில் (30 குடும்பங்களிடம் நேர்காணல் செய்யப்பட்டது) 57 பேர் ஊரடங்கின் போது குடும்பத்துடன் தங்கியுள்ளனர். 18 குடும்பங்களில் 14 குடும்பங்கள் வாடகை அறைகளில் தங்கியுள்ளனர். அவர்களால் அப்போது வாடகையும் செலுத்த முடியவில்லை. அவர்களில் 11 குடும்பங்கள் பெருந்தொற்று காலத்தில் மேலும் கடன் வாங்கியுள்ளன.
PHOTO • Aakanksha

'அவர்கள் மீது இழைக்கப்படும் தவறான செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி எது சரி என்று சிந்திக்கவிடாமல் செய்கிறது. பாலியல் தொழிலாளர்கள் அல்லது அவர்களின் குழந்தைகளுக்கு ஏதேனும் நடந்தால்கூட பொதுப் பார்வை என்பது: இதில் என்ன இருக்கிறது? குழந்தைகளின் உரிமைகள் மீறப்பட்டால், தாய் மீது தான் பழி போடுவார்கள்'

காமத்திபுராவில் என்ஜிஓ நடத்தும் உறைவிடத்தில் தங்கியிருந்த சாருவின் மூன்று வயது மகள் ஷீலா உடல் நலம் குன்றியதால் வீடு திரும்பினாள். “அவளுக்கு ஒவ்வாமையும், தடிப்புகளும் ஏற்பட்டது. நான் அவளுக்கு மொட்டை அடித்துவிட்டேன்,” எனும் 31 வயது சாருவிற்கு நான்கு பிள்ளைகள்; அவர்களில் ஒரு மகள் தத்தெடுக்கப்பட்டவள். பீகாரின் பத்லாபூர் தினக்கூலி செய்யும் தொழிலாளிகளான உறவினர்களிடம் மூன்று மகன்கள் உள்ளனர். அவர்களுக்காக மாதம் ரூ.3000 முதல் ரூ.5000 வரை அவர் அனுப்பி வந்தார். ஊரடங்கிற்கு பிறகு நிறைய கடன் வாங்கியுள்ளார். “இப்போது என்னால் மேலும் கடன் பெற முடியாது, வாங்கியதை எப்படி திரும்ப செலுத்துவது எனத் தெரியவில்லை,” என்கிறார் அவர்.

எனவே சாருவும் அருகில் வசிப்பவர்களிடத்தில் ஷீலாவை விட்டுவிட்டு ஆகஸ்ட் மாதம் முதல் வேலைக்குச் செல்கிறார். “எனக்கு வேறு வாய்ப்புள்ளதா?“ என கேட்கிறார்

இந்த வேலையில் போதிய வருமானமும் இப்பெண்களுக்கு கிடைப்பதில்லை. “வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வாடிக்கையாளர்கள்தான் கிடைக்கின்றனர்,” என்கிறார் சோனி. சில சமயம் நான்கு அல்லது ஐந்து பேர் அதுவும் அரிதுதான். முன்பெல்லாம் அவர்கள் தினமும் ரூ.400 முதல் ரூ.1000 வரை வருவாய் ஈட்டினர். மாதவிடாய் காலம், உடல்நலமின்மை அல்லது பிள்ளைகள் வீடு திரும்பும்போது மட்டுமே அவர்களுக்கு விடுமுறை கிடைக்கும். “இப்போது ஒரு நாளுக்கு 200-500 கிடைப்பதே எங்களுக்கு பெரிய விஷயமாக உள்ளது,” என்கிறார் சோனி.

*****

“விளிம்புநிலை குடும்பத்தினர் தங்களின் பிரச்னைகளை எழுப்பினால், யாரும் கருத்தில் கொள்வதில்லை,” என்கிறார் மஜ்லிஸ் சட்ட மையத்தின் வழக்கறிஞர் ஜெசிந்தா சால்தன்ஹா. இவர் மத்திய அரசின் ராஹத் திட்டத்தில் திட்ட மேலாளராகவும் உள்ளார். இத்திட்டத்தின் கீழ் மும்பையில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூக-சட்ட பாதுகாப்பு அளித்து வருகிறது. அவரது குழுவினர் தற்போது ஈஷாவின் வழக்கையும் கையாண்டு வருகின்றனர். “பொதுவெளிக்கு துணிவுடன் சோனி வந்துள்ளார். பலரும் வெளியே சொல்வதில்லை. உணவு பிரச்னை முதன்மையானது. இதுபோன்ற பெரிய பிரச்னைகளுக்கு பின்னால் பல வகை காரணிகள் உள்ளன.”

PHOTO • Aakanksha

மேல் இடது: பிரியாவின் அறை; அவர்களின் உடைமைகளை வைத்துக் கொள்வதற்கு படுக்கைக்கு மேலுள்ள இரு அலமாரிகள். மேல் வலது: ஒவ்வொரு அறையிலும் உள்ள மூன்று பிரிவுகளுக்கும் சமையல் பாத்திரங்கள், குடிநீர் கலன்கள் வைப்பதற்கும் பொதுவான இடம் உள்ளது. பின்னால் உள்ள சிறிய இடம் குளிப்பதற்கானது. புடவை அல்லது துப்பட்டாவை மறைப்பிற்கு பயன்படுத்துகின்றனர். கீழ் வரிசை: மத்திய மும்பையின் காமத்திபுரா பகுதி

என்ஜிஓக்கள், வழக்கறிஞர்கள், ஆலோசகர்கள் என பலரும் அடங்கிய – பெரிய வலைப்பின்னல் மூலமாக பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளைப் பேச முன்வர வேண்டும் என்கிறார் அவர். “அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். எது சரி என்றுகூட அவர்களுக்குத் தெரிவதில்லை,” என்கிறார் சால்தன்ஹா. “பாலியல் தொழிலாளர்கள் அல்லது அவர்களின் குழந்தைகளுக்கு ஏதேனும் நடந்தால்கூட பொதுப் பார்வை என்பது: இதில் என்ன இருக்கிறது? குழந்தைகளின் உரிமைகள் மீறப்பட்டால், தாய் மீது தான் பழி போடுவார்கள்.”

ஈஷாவின் வழக்கு போக்சோவின் கீழ் பதிவு செய்யப்பட்டு துன்புறுத்தியவரை ஜூலை 5ஆம் தேதி முதல் காவலில் வைத்துள்ளனர். அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் (ஏமாற்றிய குற்றத்திற்காக குற்றம்சாட்டப்பட்டவரின் இணை, வீட்டு உரிமையாளர், முன்னாள் பாலியல் தொழிலாளி) மீது இனிமேல்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இனிமேல்தான் அவர்களை காவலில் எடுக்க வேண்டும். 'முக்கிய குற்றவாளிக்கு பத்தாண்டிற்கும் குறையாமல் சிறை தண்டனை, ஆயுள் தண்டனை, மரண தண்டனை கூட அளிக்க போக்சோ சட்டம் சொல்கிறது. 'பாதிக்கப்பட்டவரின் மருத்துவச் செலவு, மறுவாழ்விற்கான போதிய தொகையை அபராதமாக விதிக்கவும் வழி உள்ளது'. மாநில அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கும் அவளது குடும்பத்திற்கும் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினரின் முதன்மை சவால் “தற்போதுள்ள சட்ட அமைப்பு உள்ளிட்டவற்றின் மீது நம்பிக்கை குறைவு”  என்கிறது பெங்களூரைச் சேர்ந்த இந்தியப் பல்கலைக்கழக - தேசிய சட்ட பள்ளியின் குழந்தைகளுக்கான மையத்தின் பிப்ரவரி 2018ஆம் ஆண்டின் அறிக்கை. அந்த அறிக்கையானது, அமைப்புகள் பாதிக்கப்பட்ட குழந்தையை மீண்டும் பாதிப்படைய வைக்கின்றன என்கிறது, “தாமதங்கள், ஒத்திவைப்புகள் மற்றும் நீதிமன்றத்திற்கு அலைவது.”

சல்தன்ஹா ஒப்புக் கொள்கிறார். “குழந்தையின் வாக்குமூலம் நான்குமுறை பதிவு செய்யப்படுகிறது, முதலில் காவல்நிலையத்தில், மருத்துவ பரிசோதனை நிலையத்தில், நீதிமன்றத்தில் இருமுறை [குற்றவியல் நடுவர், நீதிபதிக்கு முன்]. குழந்தைகள் அச்சமடைவதால் குற்றவாளிகள் அனைவரின் பெயர்களையும் சொல்வதில்லை, ஈஷாவின் வழக்கைப் போல. அவள் இப்போதுதான் வீட்டு உரிமையாளர் பற்றி வாய் திறந்தார் [குற்றத்தை தடுக்க அல்லது புகார் செய்யத் தவறியவர்].”

வழக்குப் பதிவு செய்வது முதல் இறுதித் தீர்ப்பு வரை என சட்ட வழியில் சென்றால் வழக்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும் என்கிறார் அவர். 2019ஆம் ஆண்டு ஜூன் இறுதி வரை, போக்சோ சட்டத்தின் கீழ் 1,60,989 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சட்டம் மற்றும் நீதிக்கான அமைச்சகம் சொல்கிறது. அதிலும் இரண்டாவது அதிக எண்ணிக்கையாக (உத்தரபிரதேசத்திற்கு அடுத்து) மகாராஷ்டிராவில் 19,968 வழக்குகள் உள்ளன.

PHOTO • Aakanksha

இந்த வேலையில் பெண்களுக்கு போதிய வருமானம் இப்போது கிடைப்பதில்லை

“தினமும் பல்வேறு வழக்குகளால் சுமை கூடுகிறது,” என்கிறார் சல்தன்ஹா. “நடைமுறைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றால் அதற்கு அதிக நீதிபதிகள் அல்லது அதிக பணி நேரங்கள் தேவைப்படுகின்றன”, மார்ச் 2020 முதல் பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்ட கடந்த ஆறு மாத கால வழக்குகளை நீதிமன்றம் எப்படி கையாளப் போகிறது என வியக்கிறார் அவர்.

*******

சோனிக்கு 16 வயது இருந்தபோது அவளது தோழியால் கொல்கத்தாவில் இத்தொழிலில் தள்ளப்பட்டாள். 13 வயதில் அவளுக்கு திருணமாகி இருந்தது. “என் கணவருடன் [துணி உற்பத்தி தொழிற்சாலையில் உதவியாளராக அவ்வப்போது வேலை செய்தார்] எப்போதும் சண்டை வரும். என் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிடுவேன். ஒரு முறை அப்படி செல்ல நின்றுகொண்டிருந்தபோது தோழி ஒருத்தி என்னை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறினாள்.” நகரின் சிவப்பு விளக்கு பகுதியில் வேறு ஒரு பெண்ணிடம் ஒப்பந்தம் பேசிவிட்டு சோனியை விட்டுச் சென்றிருக்கிறாள். அப்போது அவருடன் ஒரு வயது மகள் ஈஷாவும் உடனிருந்தாள்.

சோனி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மும்பையின் காமத்திபுராவிற்கு வந்தார். “வீட்டிற்கு செல்ல நினைப்பேன்,” என்கிறார் அவர். “எனக்கு அதுவும் நிரந்தரமில்லை, இதுவும் நிரந்தரமில்லை. இங்கு [காமத்திப்புராவில்] வாங்கிய கடனை அடைக்க வேண்டும், எனது ஊர்க்காரர்களுக்கு எனது வேலையைப் பற்றி தெரிந்துவிட்டதால் அங்கிருந்து வந்துவிட்டேன்.”

குழந்தைகள் பராமரிப்பு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது முதல் ஈஷாவை (கோவிட் தொடர்பான கட்டுப்பாடுகளால்) அவரால் பார்க்க முடியவில்லை. காணொலி அழைப்பின் மூலம் அவளிடம் பேசுகிறார். “எனக்கு நடந்ததை நான் பொறுத்துக் கொண்டு இருக்கிறேன். நான் ஏற்கனவே சீரழிந்தவள், எனது மகளின் வாழ்க்கையை சீரழியாமல் காக்க வேண்டும்,” என்கிறார் அவர். “நான் வாழும் வாழ்க்கையை அவள் வாழக்கூடாது. எனக்கு யாரும் துணை நிற்காதது போல எதிர்காலத்தில் அவளுக்கு ஒரு நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்றுதான் நான் போராடுகிறேன்.”

குற்றவாளியை கைது செய்த பிறகு அவனது கூட்டாளி (குழந்தையை பாலியல் வன்புணர்வுக்கு தள்ளியவர்) சோனியிடம் தொடர்ந்து வம்புகள் செய்து வருகிறார். “என் அறைக்கு வந்து அவளது ஆளை சிறைக்கு அனுப்பியதற்காக சண்டையிடுகிறாள். அவளை நான் பழிவாங்குவதாகச் சொல்கின்றனர், சிலர் குடித்துவிட்டு அக்கறையின்றி இருந்த தாய் என்கின்றனர். அதிர்ஷ்டவசமாக, என்னை குழந்தையின் தாய் என்று அவர்கள் சொல்கின்றனர்.”

முகப்பு படம்: சாருவும் அவரது மகள் ஷீலாவும் (புகைப்படம்: ஆகாங்க்ஷா)

தமிழில்: சவிதா

Aakanksha

ଆକାଂକ୍ଷା (କେବଳ ନିଜର ପ୍ରଥମ ନାମ ବ୍ୟବହାର କରିବାକୁ ସେ ପସନ୍ଦ କରନ୍ତି) PARIର ଜଣେ ସମ୍ବାଦଦାତା ଏବଂ ବିଷୟବସ୍ତୁ ସଂପାଦକ।

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Aakanksha
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Savitha