"எங்களது குழந்தைகள் (வனத்துறையினரின்) இந்த தேக்கு தோட்டங்களை மட்டுமே பார்த்து வளர்வார்கள் என்று நான் அஞ்சுகிறேன். காடுகள் மற்றும் மரங்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் பற்றிய அனைத்து அறிவையும் இதனால் அவர்கள் இழக்க நேரிடும்," என்கிறார் மத்தியப் பிரதேசத்தின் உமர்வாடா கிராமத்தைச் சேர்ந்த லாய்சிபாய் உய்கி அவர்கள்.
இந்தியாவின் வனத்துறை, 1864 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் காலனிய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது, நாட்டின் மிகப்பெரிய ஒற்றை நில உரிமையாளராக இன்றும் அது இருந்து வருகிறது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, இச்சட்டம் வன மற்றும் நிலங்களை பாதுகாப்பது மற்றும் வணிக நோக்கங்கள் (மர விற்பனை போன்றவை) ஆகியவற்றை கையாண்டு வருகிறது, இச்சட்டம் ஆதிவாசிகள் மற்றும் வனவாசிகளை குற்றவாளிகளாகக் கருதி மேலும் அவர்களின் சொந்த நிலங்களில் இருந்தே அவர்களை வெளியேற்றப் பயன்படுத்தப்படுகிறது.
சீர்திருத்தச் சட்டத்தைப் போல 2006 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வன உரிமைகள் சட்டம் , இந்த "வரலாற்று அநீதியை" நிவர்த்தி செய்வதற்காக காடுகளில் வசிக்கும் சமூகங்களுக்கு ( 150 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களுக்கு ) நிலவுடமை உரிமைகளையும், அவர்களின் காடுகளை நிர்வகிக்கும் மற்றும் பாதுகாக்கும் அதிகாரங்களையும் அவர்களுக்கு வழங்கியது. ஆனால் இது போன்ற விதிகள் நடைமுறைப் படுத்தப்படாமல் இருக்கின்றன.
இந்த விதிகள் இந்திய வனச்சட்டம் (1927) மற்றும் வன பாதுகாப்பு சட்டம் (1980) போன்ற முந்தைய சட்டங்களுடன் முரண்படுகிறது, அச்சட்டங்கள் தொடர்ந்து வனத்துறையினருக்கு முடிவுகளை எடுப்பதற்கும், வனப்பகுதிகளை கட்டுப்படுத்துவதற்கும் அதிகாரம் அளித்து வருகிறது. சமீபத்தில் கொண்டு வரப்பட்ட இழப்பீட்டு காடு வளர்ப்புச் சட்டம் (2016) தோட்டங்களை உருவாக்குவதற்கு வனத்துறையினர் மரபுவழி நிலங்களை கையகப்படுத்த அனுமதிக்கிறது.
ஓய்வு பெற்ற வன அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு குழுக்கள் வன உரிமைகள் சட்டத்தின் செல்லுபடியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நடத்தி வருகின்றனர், இது வனத்திலிருந்து கிராமவாசிகளை வெளியேற்றும் அச்சுறுத்தலை மேலும் அதிகரிக்கிறது, குறிப்பாக மத்திய அரசின் வழக்கறிஞர்கள் சமீபத்திய விசாரணைகளின் போது வன உரிமைகள் சட்டத்திற்கு ஆதரவாக வாதிடவில்லை.
வனவாசிகள், அவர்களின் சமூக குழுக்கள், வனத் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆகியவை வன வெளியேற்றத்தின் ஆபத்து மற்றும் வன உரிமைச் சட்டத்தை மோசமாக செயல்படுத்துவதையும் எதிர்த்து நீண்ட காலமாகப் போராடி வருகின்றன. நவம்பர் 20 மற்றும் 21 ஆம் தேதி அன்று 10க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தலைநகரில் நடைபெற்ற சந்திப்புகள் மற்றும் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்திற்காகவும் கூடியிருந்தனர்.
அவர்களுள் சில லட்சக்கணக்கான ஆதிவாசி மக்கள் மற்றும் தலித் பெண்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் சமூகத்திற்குச் சொந்தமான காடுகளையும் நிலங்களையும் பாதுகாக்கப் போராடி வருகின்றனர். பெரும்பாலும் அவர்கள் உயிர் வாழ்வதற்கான ஒரே ஆதாரமாக அந்நிலம் தான் இருக்கிறது. பாரி அவர்களில் ஒரு சிலரிடம் வன்முறை மற்றும் பாகுபாடு பற்றிய அவர்களின் அனுபவங்களைப் பற்றிப் பேசித் தெரிந்து கொண்டது.
தேவந்திபாய் சோன்வாணி, தேளி சமூகம் (மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகம்); பீஜாப்பூர் கிராமம், கோர்சி வட்டம், காட்சிரோலி மாவட்டம், மஹாராஷ்டிரா
2002 ஆம் ஆண்டு முதல் எங்கள் நிலத்திற்கான பட்டாவைப் பெற நாங்கள் போராடி வருகிறோம், ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஒரு முறை நில அளவையாளர் ஒருவர் கணக்கெடுப்பு எடுக்க வந்தார், ஆனால் அவர் குடிபோதையில் இருந்ததால் எங்களது நிலங்களை அவர் கவனிக்கவில்லை. அரசாங்கம் ஏன் இதைச் செய்கிறது என்பது என்னை போன்ற மக்களுக்கு ஒரு புரியாத புதிராக இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பு வனச்சரகர் ஒருவர் எனது நிலத்திற்கு வந்து வனத்துறையினர் என்னுடைய நிலத்தில் ஒரு பண்ணையை கட்டப் போவதாக என்னிடம் கூறினார். நான் அவரிடம், "பாருங்கள் அண்ணா, உங்கள் குடும்பத்திற்கு உணவளிக்க நீங்கள் இந்த வேலையை செய்வதைப் போலத் தான், என்னுடைய குடும்பத்திற்கு உணவளிக்க நான் இந்த நிலத்தில் பயிரிட்டு வருகிறேன், என்று கூறினேன். உங்களுடைய (ஒரு வேலை இருப்பதால்) கடமையைச் செய்கிறீர்கள் என்பதால் உங்களுக்குப் பெருமையாக இருக்கிறது, ஆனால் என் உழைப்புக்கு மதிப்பு இல்லையா? நீங்கள் உங்களது வேலையை செய்கிறீர்கள், என்னையும் என்னுடைய வேலையைச் செய்ய விடுங்கள். அவரும் ஒப்புக்கொண்டு, சரி சகோதரி, நான் உங்கள் நிலத்தில் பண்ணையை உருவாக்க மாட்டேன்", என்று கூறினார். மற்றொரு முறை நானும் எனது தோழியும் காட்டிலிருந்து மூங்கில் வெட்டி வர சென்றோம் அப்போது வனக்காவலர் ஒருவர் எங்களை தடுத்து நிறுத்தி எங்களது கோடாரியை பறிமுதல் செய்வேன் என்று கூறினார். 'அப்போ மூங்கிலை எப்படி வெட்டுவோம்? வெறும் கைகளாலா?' என்று அவரிடம் நாங்கள் கேட்டோம். நாங்கள் அவரை ஒரு மரத்தில் கட்டி வைத்து விடுவோம் என்று மிரட்டினோம், அவருடன் சண்டையிட்டோம் அதனால் அவர் வேறு வழியின்றி எங்களை விட்டு விட்டார். நாங்கள் எங்களது பட்டாவிற்காகப் போராடுவது இன்னும் தொடரத்தான் செய்கிறது, என்று கூறினார்.
தேஜா உய்கி, கோண்டு ஆதிவாசி, ஔரை (ஒரை) கிராமம், பிச்சியா வட்டம், மாண்டலா மாவட்டம், மத்தியப் பிரதேசம்
"இந்த சட்டங்கள் என்ன, இந்த திட்டங்கள் என்ன என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் அவை காடுகள் மீது நாங்கள் கொண்டிருந்த அனுமதியைப் பறித்தன. தேக்கு மரங்களை வளர்ப்பதற்காக எங்கள் பகுதியில் இருந்த நூற்றாண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. எங்களது கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கிராம வனக் குழுவில் செயலாளராக நியமிக்கப்படுகிறார் மேலும் வனத்துறையின் வனச்சரக அலுவலகத்தில் அதிகாரிகள் தயாரிக்கும் அனைத்து திட்டங்களுக்கும் அவரது கையொப்பம் பெறப்படுகிறது. ஆனால் யாரும் பெண்களாகிய எங்களிடம் எதையும் கேட்கவில்லை, மேலும் நாங்கள் நடவு செய்த மரங்களும் நாங்கள் வளர்த்த காடுகளும் தான் அழிக்கப்படுகின்றன. அவர்கள் தேக்கு மரங்களை வெட்டி, சரக்கு லாரிகளில் அம்மரக் கட்டைகளை ஏற்றி மேலும் அதை வைத்து வணிகம் செய்து வருகின்றனர். இருப்பினும் அவர்கள் ஆதிவாசிகள் தான் காடுகளை அழிக்கின்றனர் என்று கூறுகின்றனர். நாங்கள் நகரத்தில் இருப்பவர்களைப் போல சம்பள வேலை கொண்டவர்கள் அல்ல. இந்த காடு தான் எங்களது வருமானம் மற்றும் உணவிற்கான ஒரே ஆதாரம். இங்கு தான் எங்களது கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்லும். நாங்கள் ஏன் காடுகளை அழிக்கப் போகிறோம்?", என்று கேட்கிறார்.
கமலா தேவி, சானியா பஸ்தி (பில்ஹேரி பஞ்சாயத்து), காட்டிமா வட்டம், உத்தம் சிங் நகர் மாவட்டம், உத்தரகாண்ட்
எங்களது கிராமத்தில் உள்ள 101 வீடுகளில் இருந்து தனிப்பட்ட வன உரிமை கோரி தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கைகளை அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை, இதை நாங்கள் 2016 ஆம் ஆண்டு தாக்கல் செய்தோம். ஆனால், வனத்துறையினர் அது அவர்களுடைய நிலம் என்று கூறுகின்றது. கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று எங்களது கிராமத்திற்கு வந்த வன அதிகாரிகள், ஜேசிபிக்களைக் கொண்டு எங்களது விளைந்த கோதுமைப் பயிர்களை அழித்தனர். நாங்கள் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறையினரிடம் விரைந்து சென்று முறையிட்டோம், ஆனால் அவர்கள் அவ்வழக்கை பதிவு செய்ய மறுத்து மேலும் எங்களிடம் நீங்கள் ஏன் காட்டில் வசிக்கிறீர்கள்? என்று கேட்டனர். இதற்கு பதிலாக, வனத்துறையினர் எங்களில் 15 பெண்களின் மீது வழக்குகளை பதிவு செய்தனர், அவ்வழக்கு அரசாங்க அதிகாரிகளுக்கு இடையூறு விளைவிப்பது தொடர்பானது என்று நான் கருதுகிறேன். அப்போது குழந்தை பெற்று ஒரு மாதமே ஆன எனது மருமகளின் பெயரும் அவ்வழக்கில் சேர்க்கப்பட்டது. எங்களுக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றத்தில் இருந்து தடை வாங்குவதற்கு ஒரு வழக்கறிஞரை பணியமர்த்த நாங்கள் ஒவ்வொருவரும் 2,000 ரூபாய் பங்களிக்க வேண்டியிருந்தது. இரண்டு பருவத்தின் பயிர்கள் இப்படி அழிக்கப்பட்டுவிட்டன. நாங்கள் மிகவும் பாதுகாப்பற்று இருப்பதாக உணர்கிறோம். வனத்துறையினர் எங்களது பகுதியில் உள்ள பொதுவான நிலங்களில் வேலி அமைத்து, தோட்டங்களாக மாற்றியுள்ளனர். கடந்த வருடம், ஒரு மாடு அத்தோட்டத்திற்குள் நுழைந்தது அதனால் அதன் உரிமையாளர் மீது அவர்கள் வழக்குத் தொடுத்தனர். எங்களை துன்புறுத்துவதற்கு அவர்கள் சட்டத்தை இப்படித்தான் பயன்படுத்துகின்றனர்.
ராஜிம் தண்டி, பித்தோரா நகர், பிதௌரா வட்டம், மகாசாமுண்ட் மாவட்டம், சத்தீஸ்கர்
நான் ஒரு தலித் என்பதால் சட்டபூர்வமாக சொந்தமான நிலம் இல்லாத பெண்கள் என்பதால் நாங்கள் பல வன்முறைகளை சந்திக்க வேண்டிய காலகட்டத்தில் நான் வாழ்ந்து வருகிறேன். சொத்துக்கள் எங்களது பெயரில் எழுதப்படும் வரை, நாங்கள் மனிதர்களாகக் கூட கருதப்பட மாட்டோம். இதனால் தான் நாங்கள் எங்கள் பகுதியில் தலித் ஆதிவாசி சங்கத்தை அமைத்துள்ளோம். 80 கிராமங்களில் வசிக்கும் 11,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களால் ஆண்டுதோறும் 100 ரூபாய் மற்றும் ஒரு கிலோ அரிசி பங்களிக்கப்படும் ஒரு மக்கள் கூட்டமைப்பு இது. கிராமவாசிகளின் நிலம் மற்றும் வன உரிமைகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், அதிகாரிகள் அவர்களை மிரட்டும் போது என்ன சொல்ல வேண்டும் என்பதையும், வனங்கள் சர்க்காருக்கு சொந்தமானது என்றும் அவர்களிடம் சொல்வதற்கும் நாங்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகிறோம். எங்களது அடிமட்ட படை வலிமையின் அடிப்படையில் தான் பாஃமாரா (இங்கு அருகாமையில் உள்ள பலோதா பஜார் மாவட்டத்தின் சோனாகான் கிராமத்தில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட தங்கச்சுரங்கம்; ஆனால் அதன் குத்தகை 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது) தங்க சுரங்கத்திற்கான வேதாந்தாவின் (பன்னாட்டு சுரங்க நிறுவனம்) முன்மொழிவை எதிர்க்க முடிகிறது.
பைதிபாய், கராசியா ஆதிவாசி, நிச்சலாகர் கிராமம், அபு சாலை வட்டம், சிரோகி மாவட்டம், ராஜஸ்தான்
நாங்கள் காட்டை கவனித்து அதைப் பாதுகாத்த போது, எந்த சட்டமுமோ அதிகாரியோ வந்து எங்களுடன் நிற்கவில்லை. இப்போது எங்களை வெளியேற்றுவதற்கு மட்டும் ஏன் அவர்கள் வருகிறார்கள்? வனத்துறையினர் பண்ணைகளையும் தோட்டங்களையும் உருவாக்கி அதைச் சுற்றி 6 அடி உயர சுவர்களை எழுப்பி உள்ளனர் - அதைத்தாண்டி ஒருவரும் செல்ல முடியாது. தோட்டங்கள் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழி என்பது அனைவருக்குமே தெரியும். ஆறு ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் வன உரிமை சட்டத்தின் கீழ் எங்களது நிலத்திற்கு உரிமை கோரி மனு தாக்கல் செய்து இருந்தாலும் எங்களது பெயர் எங்களது நிலத்திற்கான பட்டாவில் இல்லை. நிலம் இப்போது எனது மூத்த மைத்துனரின் பெயரில் இருக்கிறது. திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன பிறகும் எனது கணவருக்கும் எனக்கும் ஒரு குழந்தையும் இல்லை. என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டு அல்லது மீண்டும் ஒரு திருமணம் செய்து கொள்வாரோ என்று எண்ணி எனது இதயம் பயத்தில் துடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை நிலம் எனது பெயரில் இருந்தால் நான் கொஞ்சம் பாதுகாப்பாக இருப்பேன். நாங்கள் தான் நிலத்தில் உழைக்கிறோம் அதில் இருந்து பயிர்களை விளைவிக்கிறோம். ஆனால் நிலம் மட்டும் ஏன் ஆண்களின் பெயரிலேயே உள்ளது? என்று கேட்கிறார்.
காளத்திபாய், பரேலா ஆதிவாசி, சிவாலி கிராமம், காங்கர் வட்டம், புர்ஹான்பூர் மாவட்டம், மத்தியப் பிரதேசம்
ஜூலை 9 ஆம் தேதி அன்று எங்கள் வயல்களில் ஜேசிபிக்கள் மற்றும் டிராக்டர்களை பார்த்ததாகக் கூறி குழந்தைகள் ஓடி வந்தபோது நான் எனது வீட்டில் இருந்தேன். கிராமத்தினர் அனைவரும் அங்கு விரைந்து சென்றோம் அப்போது வனத்துறை அதிகாரிகள் 11 ஜேசிபிக்கள் மற்றும் டிராக்டர்களுடன் வந்திருப்பதை கண்டோம், அவர்கள் எங்கள் பயிர்களை நசுக்கிவிட்டு குழிகளை தோண்டி கொண்டிருந்தனர். ஒரு வாக்குவாதம் வெடித்தது, அவர்கள் பெல்லட் துப்பாக்கிகளைக் கொண்டு எங்களது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் அதில் ஒரு சிலருக்கு நெஞ்சிலும், ஒரு சிலருக்கு வயிற்றிலும், ஒரு சிலருக்கு தொண்டையிலும் காயம் ஏற்பட்டது. 2003 ஆம் ஆண்டிலும், எங்களது வீடுகள் எரிக்கப்பட்டன, எங்களது ஆண் மக்கள் காவலில் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் எங்கள் விலங்குகளை கைப்பற்றி, எங்களிடம் திருப்பித் தர மறுத்து, அவற்றை ஏலம் விட்டனர். நாங்கள் பல மாதங்கள் மரத்து அடியில் வாழ வேண்டியிருந்தது. நாங்கள் பல தலைமுறைகளாக இந்த நிலத்தை உழுது வருகின்றோம். ஆனால் வனத் துறை அதிகாரிகள் வன உரிமைச் சட்டம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல என்றும், அவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் மேலும் இந்த நிலம் அவர்களுடையது என்றும் வெளிப்படையாகக் கூறுகின்றனர்.
லாய்சிபாய் உய்கி, கோண்டு ஆதிவாசி; உமர்வாடா கிராமம், பிச்சியா வட்டம், மாண்டலா மாவட்டம், மத்தியப் பிரதேசம்
நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கும் காடுகளில் நீங்கள் காணும் பன்முகத்தன்மையை, அரசாங்கம் மரங்கள் நட்டு வளர்த்து வரும் இடங்களில் நீங்கள் பார்க்க முடியாது. அங்கு நீங்கள் தேக்கு மரங்களை மட்டுமே காண முடியும். இந்த வருடம் தான், அவர்கள் எங்களது கிராமத்திற்கு அருகே உள்ள பகுதியை கைப்பற்றி தேக்கு மரங்களை நட்டு அதைச்சுற்றி கம்பி வேலிகள் அமைத்து இருக்கின்றனர். இந்த தேக்கு மரங்களால் என்ன பயன்? எங்களது கால்நடைகள் மேய்ச்சலுக்கு எங்கு செல்லும்? நாங்கள் எங்களது கால்நடைகளுக்கு ஒரு தொழுவமும், எங்களது கிராமத்தில் உள்ள குளத்தை ஆழப்படுத்தி நீரேற்றம் செய்யவும் விரும்பினோம். ஆனால் வனத்துறையினர் அதற்கும் எங்களை அனுமதிக்கவில்லை. இந்த தேக்கு தோட்டங்கள் இருப்பதால், எங்களது குழந்தைகள் அதை மட்டுமே பார்த்து வளர்வார்கள் என்று நான் அஞ்சுகிறேன். காடுகள் மற்றும் மரங்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் பற்றிய அனைத்து அறிவையும் இதனால் அவர்கள் இழக்க நேரிடும், என்று அவர் தெரிவித்தார்.
தமிழில்: சோனியா போஸ்