“பூக்கள் காய்ந்து கொண்டிருக்கின்றன.”
மார்ச் 2023-ன் ஒரு காலையில் மருடுபுடி நாகராஜு, பொமுலா பீமாவரம் கிராமத்தில் தன் மூன்று ஏக்கர் மாந்தோப்பை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்.
பெரியளவு பங்கனப்பள்ளி, சாறு நிறைந்த செருக்கு ரசாலு, அதிகம் சாப்பிடப்படும் தோட்டாபுரி, புகழ் பெற்ற பண்டுரி மாமிடி போன்ற உள்ளூர் மாம்பழ வகைகளின் 150 மரங்கள் ஆந்திரப்பிரதேசத்தின் அனகப்பள்ளி மாவட்டத்தில் அவருக்கு முன் நிற்கின்றன.
தோப்பிலுள்ள மரங்கள் யாவும் பழுப்பு மஞ்சள் மாங்காய் பூக்களால் நிறைந்திருக்கின்றன. ஆனால் 62 வயது விவசாயியான அவருக்கு அது நல்ல காட்சியாக இருக்கவில்லை. பூக்கள் தாமதமாக பூத்திருப்பதாக சொல்கிறார் அவர். “சங்கராந்தி (ஜனவரி நடுவே) சமயத்திலேயே பூத்திருக்க வேண்டும். ஆனால் பூக்கவில்லை. பிப்ரவரியில்தான் பூக்கத் தொடங்கின,” என்கிறார் நாகராஜு.
மார்ச் மாதத்திலெல்லாம் எலுமிச்சை அளவுக்கு பழங்கள் வளர்ந்திருக்க வேண்டும். “பூக்கள் இல்லையென்றால், மாம்பழங்கள் கிடைக்காது. இந்த வருடமும் நான் வருமானம் ஈட்ட முடியாது.”
நாகராஜுவின் கவலை புரிந்து கொள்ளக் கூடியது. தினக்கூலியான அவருக்கு, தோப்பு என்பது கடும் முயற்சியில் விளைந்த விஷயம். மடிகா சமூகத்தை (ஆந்திராவில் பட்டியல் சாதி) சேர்ந்த அவருக்கு, மாநில அரசால் இந்த நிலம் 25 ஆண்டுகளுக்கு முன் கொடுக்கப்பட்டது. ஆந்திரப்பிரதேச நில உச்சவரம்பு சீர்திருத்த சட்டம், 1973-ன் விளைவால் நிலமற்ற வர்க்கங்களுக்கு அரசால் நிலம் விநியோகிக்கப்பட்டபோது அவருக்குக் கிடைத்த நிலம் அது.
ஜூன் மாதத்தில் மாம்பழ காலம் முடிந்ததும் அவர், அருகாமை கிராமங்களின் கரும்பு வயல்களில் தினக்கூலி வேலைக்கு திரும்பச் சென்றுவிடுவார். வேலை கிடைத்தால் நாளொன்றுக்கு 350 ரூபாய் வருமானம் ஈட்டுவார். மேலும் அவர், ஏரிகளை ஆழப்படுத்துதல், தூர் வாருதல் போன்ற ஊரக வேலைத்திட்ட பணிகளை வருடத்தின் 70 - 75 நாட்களுக்கு செய்வார். ஒருநாள் வேலைக்கு 230 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரை கிடைக்கும்.
நிலம் கிடைத்ததும் முதன்முதலாக நாகராஜு மஞ்சள் வளர்த்தார். ஐந்து வருடங்களில் அவர், நல்ல லாபம் கிடைக்குமென்ற நம்பிக்கையில் மாம்பழ விவசாயத்துக்கு மாறினார். “தொடங்கியபோது (20 வருடங்களுக்கு முன்), 50-75 கிலோ மாம்பழங்கள் ஒவ்வொரு மரத்திலிருந்தும் கிடைக்கும்,” என்கிறார் அவர், நல்ல விளைச்சல் கிடைத்த சந்தோஷமான காலத்தை நினைவுகூர்ந்து. “மாம்பழங்கள் எனக்கு பிடிக்கும், குறிப்பாக தோட்டாபுரி,” என்கிறார் அவர்.
மாம்பழம் விளைவிக்கும் மாநிலங்களில் நாட்டிலேயே இரண்டாம் இடத்தில் ஆந்திரப்பிரதேசம் இருக்கிறது. கிட்டத்தட்ட 3.78 லட்சம் ஹெக்டேர்களில் அப்பழம் விளைவிக்கப்படுகிறது. 2020-21ம் ஆண்டின் வருடாந்திர உற்பத்தி 49.26 லட்சம் மெட்ரிக் டன் என மாநிலத்தின் தோட்டக்கலைத் துறை குறிப்பிடுகிறது.
பொமுலா பீமாவரம் கிராமம், கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆறுகளுக்கு இடையே உள்ள விவசாயப் பகுதியில் அமைந்திருக்கிறது. இரு ஆறுகளும் வங்காள விரிகுடாவில் கலக்குமிடத்துக்கும் அருகில் அந்த ஊர் இடம்பெற்றிருக்கிறது. மாம்பழப் பூக்களுக்கு குளிரும் ஈரப்பதமும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தேவை. அப்போதுதான் டிசம்பர் - ஜனவரி மாதங்களில் பழங்கள் வரத் தொடங்கும்.
ஆனால், “அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்யும் பருவம் தப்பிய மழைகள் கடந்த ஐந்து வருடங்களில் அதிகரித்து விட்டன,” என சுட்டிக் காட்டுகிறார் பெங்களூருவின் தோட்டக்கலை ஆய்வுக்கான இந்திய நிறுவனத்தை (IIHR) சேர்ந்த முதன்மை அறிவியலாளரான எம்.சங்கரன்.
பருவம் தப்பிய வெயிலால் பூக்கள் சுருங்குவதை கவனித்ததாக கூறுகிறார் அந்த மாம்பழ விவசாயி. விளைவாக அறுவடை சரிவை சந்தித்தது. “சில நேரங்களில் ஒரு பெட்டி மாம்பழங்களை (120-150 மாம்பழங்கள்) கூட ஒரு மரம் தராமல் போகும்,” என்கிறார் அவர். “கோடைகாலத்தில் கொடுமையான புயல்களும் (கிட்டத்தட்ட தயாராக இருக்கும்) பழங்களை பாதித்துவிடும்.”
உரம், பூச்சிக்கொல்லி மருந்து, உழைப்பு ஆகியவற்றுக்கான இடுபொருள் செலவுகளுக்காக, நாகராஜு கடந்த இரு வருடங்களாக தொடர்ந்து ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்குகிறார். 32 சதவிகித வட்டிக்கு இக்கடனை அவர் வாங்குகிறார். அவரின் வருடாந்திர வருமானம் 70,000 ரூபாயிலிருந்து 80,000 ரூபாய் வரை இருக்கும். இதில் கொஞ்சத்தை ஜூன் மாதத்தில் கடனுக்குக் கட்டுவார். விளைச்சல் சரிவினால், கட்ட முடியுமா என கவலைப்படுகிறார். எனினும் அவசரமாக மாம்பழங்கள் விளைவிப்பதை நிறுத்தவும் அவர் விரும்பவில்லை.
*****
அவரின் பக்கத்துவீட்டுக்காரரான கண்டமாரெட்டி ஸ்ரீராமமூர்த்தி, கையில் வைத்திருக்கும் ஒரு சிறு மஞ்சள் பூவை ஆட்டுகிறார். காய்ந்துபோனதால், அது உதிர்ந்து விட்டது.
அதே ஊரிலிருக்கும் அவரின் 1.5 ஏக்கர் மாந்தோப்பில், பங்கனப்பள்ளி, செருக்கு ரசாலு மற்றும் சுவர்ணரேகா மாம்பழ வகைகளின் 75 மரங்கள் இருக்கின்றன. மாம்பூக்கள் குறைவதாக சொன்ன நாகராஜுவுடன் அவரும் உடன்படுகிறார். “அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தொடரும் பருவம் தப்பிய மழைதான் இதற்கு பிரதான காரணம். கடந்த ஐந்து வருடங்களில் அத்தகைய மழைப்பொழிவு அதிகரித்திருக்கிறது,” என்கிறார் துருப்பு காப்பு சமூகத்தை (ஆந்திராவில் பிற்படுத்தப்பட்ட சாதி) சேர்ந்த அந்த விவசாயி. ஜுலை முதல் செப்டம்பர் வரை ஒவ்வொரு வருடமும் உறவினரின் கரும்புத் தோட்டத்தில் அவர் வேலை பார்க்கிறார். அங்கு மாதத்துக்கு 10,000 ரூபாய் வரை அவர் வருமானம் ஈட்டுகிறார்.
இந்த வருட (2023) மார்ச் மாதத்தில், ஸ்ரீராமமூர்த்தியின் மாம்பூக்களும் மாம்பழங்களும் புயல்களால் பெரும் பாதிப்பை கண்டன. “கோடை மழைகள் மாமரங்களுக்கு நல்விளைவு கொடுப்பவை. ஆனால் இந்த வருடம் மிக அதிகமாகிவிட்டது,” என்கிறார் அவர்.
மாம்பூக்கள் பூக்க சரியான தட்பவெப்பம் 25-30 டிகிரி செல்சியஸ் என்கிறார் தோட்டக்கலை அறிவியலாளரான சங்கரன். “பிப்ரவரி 2023-ல், இரவு பகல் வெப்பநிலையில் குறிப்பிடத்தகுந்த வேறுபாடு இருந்தது. மரங்களால் இதை கையாள முடியவில்லை,” என்கிறார் அவர்.
கடந்த சில வருடங்களாக மாம்பழ விவசாயம் உவப்பற்ற விஷயமாக மாறிக் கொண்டிருக்கையில், 2014ம் ஆண்டில் எடுத்த முடிவுக்காக வருத்தப்படுகிறார் ஸ்ரீராமமூர்த்தி. அனகப்பள்ளி டவுனுக்கு அருகே இருந்த 0.9 ஏக்கர் நிலத்தை அந்த வருடம் விற்று, ஆறு லட்ச ரூபாயை முதலீடாக போட்டு பொமுலா பீமாவரத்தில் மாந்தோப்பை வாங்கினார் அவர்.
அம்முடிவை விளக்கும்போது, “எல்லாருக்கும் மாம்பழங்கள் பிடிக்கும். எனவே அவற்றின் தேவை எப்போதும் இருக்கும். மாம்பழ விவசாயம் எனக்கு போதுமான அளவுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுக்குமென நம்பினேன்,” என்கிறார் அவர்.
அப்போதிலிருந்து லாபமீட்ட முடியவில்லை என்கிறார் அவர். “2014-க்கும் 2022-க்கும் இடையே மாம்பழ விவசாயத்திலிருந்து (எட்டு வருடங்களில்) என் மொத்த வருமானம் ஆறு லட்ச ரூபாயைத் தாண்டவில்லை,” என்கிறார் ஸ்ரீராமமூர்த்தி. நிலத்தை விற்க முடிவெடுத்ததற்கு வருத்தப்பட்டு சொல்கையில், “நான் விற்ற நிலத்துக்கு இன்று பெருமதிப்பு. மாம்பழ விவசாயம் நான் தொடங்கியிருக்கக் கூடாது,” என்கிறார் அவர்.
வானிலை மட்டும் காரணமல்ல. மாமரங்கள் நீர்ப்பாசனத்தை சார்ந்தவை. நாகராஜுவிடமும் ஸ்ரீராமமூர்த்தியிடமும் ஆழ்துளைக் கிணறுகள் இல்லை. 2018ம் ஆண்டில் 2.5 லட்ச ரூபாய் செலவழித்து ஸ்ரீராமமூர்த்தி ஆழ்துளைக் கிணறு தோண்ட முயன்றார். ஆனால் பலனளிக்கவில்லை. ஒரு சொட்டு நீர் கூட அதில் கிடைக்கவில்லை. நாகராஜு மற்றும் ஸ்ரீராமமூர்த்தி ஆகியோரின் தோப்புகள் இருக்கும் புட்சியாபேட்டா மண்டலத்தில் அதிகாரப்பூர்வமாக 35 ஆழ்துளைக் கிணறுகளும் 30 கிணறுகளும் இருக்கின்றன.
பூக்கள் காயும் பிரச்சினையை, தொடர்ந்து மரங்களுக்கு நீர் பாய்ச்சுவது மூலம் தீர்த்துவிட முடியும் என்கிறார் ஸ்ரீராமமூர்த்தி. வாரத்துக்கு இரண்டு நீர் டாங்குகளையும் அவர் வாங்குகிறார். மாதத்துக்கு 10,000 ரூபாய் செலவாகிறது. “ஒவ்வொரு மரத்துக்கும் குறைந்தபட்சம் ஒரு லிட்டர் நீராவது தினமும் தேவை. ஆனால் நான் வாரத்துக்கு இருமுறைதான் நீர் பாய்ச்சுகிறேன். என்னால் முடிந்தது அவ்வளவுதான்,” என்கிறார் ஸ்ரீராமமூர்த்தி.
மாமரங்களுக்கு நீர் பாய்ச்ச, நாகராஜு இரண்டு நீர் டாங்கிகளை ஒவ்வொரு வாரமும் வாங்குகிறார். ஒரு நீர் டாங்கிக்கு 8,000 ரூபாய் செலவு செய்கிறார்.
வல்லிவிரெட்டி ராஜு தன் மரங்களுக்கு நவம்பர் மாதத்தில் வாரமொரு முறை நீர் விடத் தொடங்கி, பிப்ரவரியில் வாரமிருமுறையாக அதிகரித்தார். ஒப்பீட்டளவில் கிராமத்தின் புது மாம்பழ விவசாயியும் 45 வயது நிறைந்தவருமான அவர், 2021ம் ஆண்டு தன் 0.7 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யத் தொடங்கினார். இரண்டு வருடங்கள் கழித்து அம்மரங்கள் ராஜுவை விட சற்று உயரத்தை எட்டியிருந்தன. “இள மரங்களுக்கு அதிக பராமரிப்பு தேவை. தினமும் இரண்டு லிட்டர் அவற்றுக்கு தேவை, குறிப்பாக கோடை காலத்தில்,” என்கிறார் அவர்.
அவரின் நிலத்தில் ஆழ்துளைக் கிணறு இல்லை. எனவே வெவ்வேறு நீர்ப்பாசன வேலைகளுக்கென அவர் 20,000 ரூபாய் செலவழிக்கிறார். அதில் பாதியளவு நீர் டாங்கிகளை நிலத்துக்கு வரவழைக்க செலவாகிறது. தினமும் நீர்ப்பாய்ச்ச முடியவில்லை என்கிறார் அவர். “மொத்த 40 மாமரங்களுக்கும் நாள்தோறும் நீர் பாய்ச்சினால், எனக்கு சொந்தமான எல்லாவற்றையும் விற்கும் நிலை வந்துவிடும்.”
மூன்று வருட முதலீடு பலனளிக்கும் என அவர் நம்புகிறார். “லாபங்கள் இருக்காதென தெரியும். நஷ்டங்களும் ஏற்படாது என நம்புகிறேன்,” என்கிறார் அவர்.
*****
கடந்த மாதம், (ஏப்ரல் 2023) கிட்டத்தட்ட 3,500 கிலோ வரை நாகராஜுவால் அறுவடை செய்ய முடிந்தது. கிட்டத்தட்ட 130 - 140 பெட்டி மாம்பழங்கள். விசாகப்பட்டினத்தை சேர்ந்த வணிகர்கள் ஒரு கிலோவுக்கு 15 ரூபாய் கொடுத்தனர். முதல் அறுவடையில் அவர் 52,500 ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடிந்தது.
“விற்பனை விலை ஒரு கிலோவுக்கு 15 ரூபாயாக இருபது வருடங்களுக்கு முன் நான் விவசாயம் தொடங்கியதிலிருந்து இருக்கிறது,” என்கிறார் அவர். “பங்கனப்பள்ளி மாம்பழங்கள் ஒரு கிலோ தற்போது 60 ரூபாய்க்கு விசாகப்பட்டினத்தின் மதுர்வடா ரைது பஜாரில் விற்கிறது. 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை விலை கோடை காலம் முழுக்க மாறும்,” என்கிறார் சந்தையின் எஸ்டேட் அதிகாரியான பி.ஜகதேஷ்வர ராவ்.
இவ்வருடத்துக்கான முதல் விளைச்சலில் ஸ்ரீராமமூர்த்திக்கு 1,400 கிலோ மாம்பழங்கள் கிடைத்தது. இரண்டு - மூன்று கிலோக்களை மகள்களுக்கென தனியாக எடுத்து வைத்துவிட்டார். மிச்சத்தை அவர் விசாகப்பட்டின வணிகர்களுக்கு கிலோ 11 ரூபாய் என்கிற விலையில் விற்கிறார். “பக்கத்திலுள்ள சந்தை 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது,” என்கிறார் அவர், சில்லறை வியாபாரம் ஏன் அவரே செய்ய முடியவில்லை என்பதற்கான காரணத்தை விளக்கி.
பொமுலா பீமாவரமின் மாம்பழ விவசாயிகள் இரண்டாம் விளைச்சல் கிடைக்கும் ஜூன் மாதத்துக்காக காத்திருக்கின்றனர். வருடாந்திர வருமானத்தை அப்போதுதான் கணக்கிட முடியும். ஆனால் நாகராஜுவுக்கு பெரிய நம்பிக்கையில்லை. “லாபங்கள் ஏதுமில்லை, நஷ்டங்கள்தான் இருக்கின்றன,” என்கிறார் அவர்.
பூக்கள் நிறைந்த மரத்தின் பக்கம் திரும்பி, “இச்சமயத்திலெல்லாம் இம்மரத்தில் இந்த அளவுக்கு (உள்ளங்கை அளவு) பழங்கள் கிடைத்திருக்க வேண்டும்,” என்கிறார். இது அவருக்கு பிடித்த மாம்பழமான, பண்டுரி மாமிடி வகை.
He plucks one of the few fruits on the tree and says, “No
other mango is as sweet as this one. It is sweet even when it is green; that is
its specialty.”
ஒரு பழத்தை மரத்திலிருந்து பறித்துவிட்டு சொல்கிறார், “வேறெந்த மாம்பழமும் இந்தளவுக்கு
இனிப்பாக இருக்காது. பச்சையாக இருக்கும்போதே இது இனிப்பாக இருக்கும். அதுதான் இதன்
சிறப்பு,” என்கிறார்.
இக்கட்டுரை Rang De மானிய ஆதரவில் எழுதப்பட்டது
தமிழில் : ராஜசங்கீதன்