புதிய நாடாளுமன்றத்தில் அரசியல் சாசன உருவாக்கம் சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது, இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவற்றை லேசான அவநம்பிக்கையோடே அவதானித்தார். "அரசியலமைப்பு தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டால், அதை எரிக்கும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன்," என்றும் கூறினார்.
குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகளை அச்சுறுத்தும்வகையிலான 2023-ம் ஆண்டின் முக்கியமான மசோதாக்களை பாரி நூலகம் அலசி ஆராய்கிறது.
வன (பாதுகாப்பு) திருத்தச் சட்டம், 2023-ஐ எடுத்துக் கொள்ளுங்கள். இந்தியாவின் காடுகள், எல்லைகளுக்கு அருகில் இருந்தால் அவை இனி காப்பாற்றப்படும் என சொல்ல முடியாது. பல நாடுகளுடன் சர்வதேச எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியாவின் வடகிழக்கை இதற்கு உதாரணமாக கவனியுங்கள். வடகிழக்கின் 'வகைப்படுத்தப்படாத காடுகள்' பதிவு செய்யப்பட்ட வனப்பகுதிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளன. அவை இப்போது திருத்தத்திற்குப் பிறகு, இராணுவம் மற்றும் பிற பயன்பாடுகளுக்கு எடுத்துக் கொள்ளப்படலாம்.
டிஜிட்டல் தனியுரிமை தளத்தில், ஒரு புதிய சட்டம் - பாரதிய நாகரிக் சுரக்ஷா (இரண்டாவது) சன்ஹிதா சட்டம் - விசாரணையின் போது தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற டிஜிட்டல் சாதனங்களை பறிமுதல் செய்வதை விசாரணை நிறுவனங்களுக்கு எளிதாக்குகிறது. இது குடிமக்களின் தனிநபர் உரிமை என்னும் மிக அடிப்படை உரிமையை அச்சுறுத்துகிறது. இதேபோல், புதிய தொலைத்தொடர்பு சட்டம், தொலைத்தொடர்பு சேவைகளின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் சரிபார்க்கக்கூடிய பயோமெட்ரிக் அடிப்படையிலான அடையாளத்தைப் பயன்படுத்தவும் பரிந்துரைக்கிறது. பயோமெட்ரிக் பதிவுகளை கையகப்படுத்துதல் மற்றும் சேமிப்பது தனிநபர் உரிமை மற்றும் இணைய பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்புகிறது.







