ஒரு மதியவேளையில் அஷோக் டாங்டே செல்பேசியை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு வாட்சப் தகவல் தோன்றியது. மணம் முடித்துக் கொள்ளவிருக்கும் இளம் மணமக்கள் இருவரின் முகங்களை கொண்ட டிஜிட்டல் அழைப்பிதழ் அது. திருமணம் நடக்கவிருக்கும் நேரம், இடம், நாளும் அதில் இருந்தது.
ஆனால் டாங்டேவுக்கான அழைப்பிதழ் அல்ல அது.
மேற்கு இந்தியாவின் மாவட்டத்தில் இருக்கும் அவரது ஆள் அந்த அழைப்பிதழை அனுப்பியிருக்கிறார். அழைப்பிதழோடு சேர்த்து மணப்பெண்ணின் பிறப்பு சான்றிதழையும் அவர் அனுப்பியிருக்கிறார். பெண்ணுக்கு 17 வயதுதான். சட்டத்தின் பார்வையில் அவர் மைனர்.
அழைப்பிதழை பார்க்கும் 58 வயது நிறைந்த அவர், ஒரு மணி நேரத்தில் திருமணம் நடக்கவிருப்பதை கண்டறிகிறார். உடன்பணிபுரிபவரும் நண்பருமான தட்வஷீல் காம்ப்ளேவை வேகமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு விட்டு வேகமாக காரில் ஏறுகிறார்.
“பீட் நகரத்தில் நாங்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து அரை மணி நேர தூரத்தில் இடம் இருந்தது,” என ஜூன் 2023-ல் நடந்த சம்பவத்தை நினைவுகூருகிறார் டாங்க்டே. “நேரம் குறைவாக இருந்ததால், நாங்கள் செல்லும் வழியில், புகைப்படங்களை நாங்கள் உள்ளூர் காவல்நிலையத்துக்கும் கிராம நிர்வாக அலுவலருக்கும் வாட்சப்பில் அனுப்பி வைத்தோம்.”
டாங்க்டேவும் காம்ப்ளேவும் குழந்தை உரிமை செயற்பாட்டாளர்கள். மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
அவர்களுக்கு உதவவென பல வகைகளில் தகவல் சொல்பவர்கள் இருக்கின்றனர். மணப்பெண்ணின் மீது ஒருதலைக் காதல் கொண்ட உள்ளூர் இளைஞன் தொடங்கி, பள்ளி ஆசிரியர், சமூக செயற்பாட்டாளர் என குழந்தை திருமணம் ஒரு குற்றம் என்பதை புரிந்த எவரும் தகவல் சொல்பவராக இருக்கலாம். இத்தனை வருடங்களில், இரண்டு செயற்பாட்டாளர்களும் கிட்டத்தட்ட 2000 பேரை தகவல் கொடுப்பவர்களாக மாவட்டம் முழுக்க உருவாக்கியிருக்கின்றனர்.












