"பட்டா வைத்துள்ள நிலவுடைமையாளர்களுக்கு அளித்ததுபோல் அல்லாமல் எங்களுக்கு ஏன் வேறுவகையான இழப்பீடு வழங்கப்பட்டது?" என 55 வயதான துரக்க பாபுராவ் கேட்டுள்ளார். இவர் குண்டூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 4800 பேர் வசிக்கக்கூடிய ராயப்புடி கிராமத்தில் வசிக்கும் ஒரு ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள தலித் விவசாயி ஆவார். அமராவதி நகரில் புதிய உலகத்தரம் வாய்ந்த நகரம் அமைப்பதற்கு ஆந்திரபிரதேச மாநில அரசுக்கு நிலம் அளித்த விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இழப்பீடு குறித்து அவர் இவ்வாறு பேசி இருந்தார். மேற்கொண்டு கூறுகையில்,”உண்மையில், பட்டா நிலங்களை விட எங்கள் நிலங்கள் அதிக வளமுடையது. ஏனென்றால்,அவை கிருஷ்ணா ஆற்றுக்கு வெகு அருகில் இருந்தன” என்றார்.
ராயப்புடி பகுதியின் விவசாயியான பாபுராவ்வுடன், பெரும்பாலும் பட்டியலின,இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த 800 விவசாயிகளும், நில விவசாயிகள் நலச் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலஅரசு, நிலச்சீர்திருத்தச் சட்டம் [வேளாண் நிலங்கள் கையகப்படுத்துதல்] , 1973ன் கீழ் ராயப்புடி பகுதியில் கிருஷ்ணா ஆற்றின் கரை மற்றும் அதையொட்டிய தீவுப்பகுதிகளில் ஏறத்தாழ 2,000 ஏக்கர் நிலத்தை [விவசாயிகளின் கணிப்பின் படி] ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தப் பகுதியில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட குடும்பத்தினர்கள் பெரும்பாலும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களே.
“மூன்று தலைமுறைகளாக இந்த நிலத்தில் நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம், இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே இந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். இந்திரா காந்தி காலத்தில் இந்த நிலத்திற்கான பட்டா எங்களுக்கு அளிக்கப்பட்டது” என்கிறார் பாபுராவ். இந்த நிலங்களை பொறுத்த வரை ஆந்திரா பிரதேச மாநில ஒதுக்கீடு செய்யப்பட்ட [இடமாற்றங்கள் தடை]நிலங்கள் சட்டம், 1977 ன் படி தனிநபர்களுக்கு விற்கவோ அல்லது வாங்கவோ முடியாது. ஆனால், ஒரு குடும்ப உறுப்பினரிடம் இருந்து அடுத்தவருக்கு அளிக்க இயலும்.
பசுமைத் தலைநகர் அமைப்பதற்காக கட்டிடங்கள் கட்ட முதற்கட்டமாக 33,000 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது. இவற்றில் சுமார் 10,000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்கள் ஆகும். மீதமுள்ள நிலங்கள் ஆதிக்கச் சாதியினரான கம்மா, கபு மற்றும் ரெட்டி விவசாயிகளால் பயிரிடப்பட்ட பட்டா நிலங்கள் ஆகும் என்று இப்பகுதி செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.









