கிரண் சமைத்து, சுத்தப்படுத்தி குடும்பத்தை பராமரிக்கிறார். விறகையும் நீரையும் சேகரித்து வீட்டுக்கு கொண்டு வருவார். கோடைக்காலங்களில் தூரம் அதிகரிக்கும்.
11 வயதே ஆன அவருக்கு வேறு வழி இல்லை. அவரின் பெற்றோர் வருடந்தோறும் புலம்பெயருகின்றனர். கிராமத்திலுள்ள (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) வீட்டில் வேறு எவரும் இருக்க மாட்டார். 18 வயது அண்ணனான விகாஸ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) இருந்தாலும் கடந்த காலத்தை போல் எப்போது வேண்டுமானாலும் அவர் புலம்பெயர்வார். 3 மற்றும் 13 வயதுகளில் இருக்கும் பிற உடன்பிறந்தாரும், குஜராத்தின் வதோதராவின் கட்டுமான தளங்களில் தொழிலாளர்களாக பணிபுரியும் பெற்றோருடன் இருக்கின்றனர். அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. ஆனால் கிரண் செல்கிறார்.
“காலையில் கொஞ்சம் உணவு சமைப்பேன்,” என்கிறார் கிரண் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), தன் அன்றாடப் பணியை விவரித்து. ஓரறை வீட்டின் பெரும்பகுதியை சமையலறை எடுத்துக் கொள்கிறது. சூரியன் மறைந்ததும், கூரையில் தொங்க விடப்பட்டிருக்கும் ஒற்றை விளக்கு வெளிச்சம் தருகிறது.
ஒரு மூலையில் மர அடுப்பு. கொஞ்சம் விறகுகளும் எரிபொருள் கேனும் அருகே இருக்கின்றன. காய்கறி, மசாலா மற்றும் பிற பொருட்கள் பிளாஸ்டிக் பைகளிலும் பாத்திரங்களிலும் நிரப்பப்பட்டு சிறு கை எட்டும் வகையில் சுவர்களில் மாட்டப்பட்டிருக்கின்றன. அடுக்கப்பட்டிருக்கின்றன. “பள்ளிக்கு பிறகு வந்து மாலையில் உணவு சமைப்பேன். பிறகு கோழிகளையும் சேவல்களையும் பார்த்துக் கொள்வேன். அதற்குப் பிறகு தூங்க செல்வோம்,” என்கிறார் கிரண்.
கூச்சத்துடன் அவர் சொன்ன விஷயங்களில், பக்கத்து பிஜிலியா அல்லது தாவ்டா கோரா மலையடிவாரக் காடுகளுக்கு நடையாக சென்று விறகு சேகரிப்பது போன்ற வீட்டு வேலைகள் இடம்பெறவில்லை. காட்டுக்கு செல்ல ஒரு மணி நேரமும், விறகு ஒடித்து சேகரிக்க ஒரு மணி நேரமும் வீடு திரும்ப இன்னொரு மணி நேரமும் கிரணுக்கு பிடிக்கிறது. வழக்கமான குழந்தைக்கு இருக்கும் எடையை விட கூடுதலாக இருக்கும் அவர் திரும்புவார்.
”நான் நீரும் பிடிப்பேன்,” என்கிறார் கிரண் முக்கியமான வீட்டுவேலையை நினைவுகூர்ந்து. எங்கிருந்து? “அடிகுழாயில்.” பக்கத்து வீட்டு அஸ்மிதா குடும்பத்துக்கு சொந்தமானது அந்த அடிகுழாய். “எங்களின் நிலத்தில் இரண்டு அடிகுழாய்கள் உள்ளன. பகுதியில் இருக்கும் எட்டு குடும்பங்களும் அதில்தான் நீர் பிடிக்கின்றன,” என்கிறார் 25 வயது அஸ்மிதா. “கோடைகாலம் வந்ததும் அடிகுழாயில் நீர் காய்ந்துவிடும். மக்கள் கதா வுக்கு (பிஜிலியா மலையடிவாரத்தில் இருக்கும் நீர்நிலைகள்) செல்வார்கள். இன்னும் சற்று தூரத்தில் இருக்கும் கதா வுக்கு செல்ல மலைகள் ஏற வேண்டும். கிரண் போன்ற இளையோருக்கு கடுமையான வேலை அது.
குளிருக்கு ஒரு சல்வார் குர்தாவும் ஊதா ஸ்வெட்டரும் அணிந்திருக்கும் அவர், அதிக வயதானது போல் தெரிகிறார். ஆனால் அவர் பேசுகையில், இளம் வயதை கண்டறிய முடிகிறது. “அன்றாடம் எங்களின் பெற்றோருடன் தொலைபேசியில் பேசுவோம்.”
பன்ஸ்வாரா இருக்கும் தெற்கு ராஜஸ்தானின் பெரும்பாலான குடும்பங்கள், புலம்பெயர் குடும்பங்கள்தாம். கிரணின் குடும்பத்தார் போன்ற பில் பழங்குடிகள், மாவட்டத்தில் 95 சதவிகிதம் இருக்கின்றனர். வீட்டையும் நிலத்தையும் பராமரிக்க பலரும் இளையோரை வீட்டில் விட்டு விட்டு புலம்பெயர்கின்றனர். ஆனாலும் வேலைச்சுமையும் இளம் வயதில் தனியாக வாழ்வதால் பிறர் மூலம் ஏற்படும் ஆபத்துகளும் அவர்களுக்கு இருக்கிறது.
ஜனவரி மாத தொடக்கம் அது. பல வயல்கள், புதர்களால் பழுப்பு நிறத்திலோ அறுவடை செய்ய காத்திருக்கும் பருத்தியாலோ நிரம்பியிருக்கிறது. குளிர்கால விடுமுறை இருப்பதால், பல குழந்தைகள் நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டும் விறகுகள் சேகரித்துக் கொண்டும் கால்நடைகள் மேய்த்துக் கொண்டும் இருக்கின்றனர்.
இம்முறை விகாஸ் வீட்டில்தான் இருக்கிறார். முந்தைய வருடம் அவர் பெற்றோருடன் சென்றிருந்தார். “மண் கலக்கும் இயந்திரங்களில் வேலை பார்த்தேன்,” என்கிறார் அவர் பருத்தி பறித்துக் கொண்டே. “ஒரு நாள் வேலைக்கு 500 ரூபாய் கொடுப்பார்கள். ஆனால் சாலையோரம்தான் நாங்கள் வசிக்க வேண்டும். எனக்கு அது பிடிக்கவில்லை.” எனவே அவர், கல்வியாண்டு மீண்டும் தொடங்கிய தீபாவளி (2023) காலத்தில் திரும்பினார்.
விரைவிலேயே இளங்கலை பட்டம் கிடைக்கும் என நம்புகிறார் விகாஸ். “முதலில் வேலையை முடித்து விட்டு, பிறகு படிப்போம்,” என்கிறார் அவர்.
உடனே கிரண், பள்ளிக்கு செல்வதில் தனக்கு பிடித்த விஷயத்தை சொல்கீறார். “இந்தி மற்றும் ஆங்கிலம் படிக்க எனக்கு பிடிக்கும். சமஸ்கிருதமும் கணக்கும் எனக்கு பிடிக்காது.”
பள்ளியின் மதிய உணவு திட்டத்தில் கிரண் மதிய உணவு எடுத்துக் கொள்கிறார். “சில நாட்கள் காய்கறிகள், சில நாட்கள் சோறு,” என்கிறார் அவர். மிச்ச உணவுக்கு நிலத்தில் அவரைச்செடி வளர்க்கின்றனர். கீரைகள் வாங்குகின்றனர். பிற பொருட்கள் அரசின் ரேஷனிலிருந்து கிடைக்கிறது.
“25 கிலோ கோதுமை கிடைக்கும்,” என்கிறார் விகாஸ். “எண்ணெய், மிளகாய், மஞ்சள் மற்றும் உப்பு போன்றவையும் கிடைக்கும். 500 கிராம் பச்சைப் பயிறும் கொண்டைக்கடலையும் கிடைக்கும். எங்கள் இரண்டு பேருக்கு ஒரு மாதம் வரை அவை தாங்கும்.” மொத்த குடும்பமும் திரும்பினால், இது போதாது.
நிலத்தில் கிடைக்கும் வருவாய், குடும்பச் செலவுக்கு போதுவதில்லை. கோழிகளால் பள்ளிக் கட்டணமும் அன்றாடச் செலவும் ஓரளவுக்கு தீருகிறது. ஆனாலும் அவர்களின் பெற்றோர் பணம் இருந்தால்தான் மொத்தமாக சமாளிக்க முடியும்.
ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதியங்கள் ஒன்றாக இருப்பதில்லை. ராஜஸ்தானில் கொடுக்கப்படும் ஊதியமான ரூ.266 என்பது, வதோதராவில் விகாஸின் பெற்றோருக்கு தனியார் ஒப்பந்ததாரர்கள் கொடுக்கும் ரூ.500-ல் பாதியளவு.
இத்தகைய ஊதிய வேறுபாடுகளால்தான், குஷால்கர் டவுனில் நிற்கும் பேருந்துகள் எப்போதும் நிரம்பி வழிகின்றன. அன்றாடம் 40 மாநில அரசு பேருந்துகள், தலா 50-100 பேரை சுமந்து கொண்டு செல்கின்றன. வாசிக்க: புலம்பெயர்பவர்களே… அந்த எண்ணை தவற விட்டு விடாதீர்கள்
குழந்தைகள் வளர்ந்ததும் தினக்கூலி வேலைக்கு பெற்றோருடன் செல்கிறார்கள். எனவே ராஜஸ்தானின் பள்ளி மாணவர் சேர்க்கை வயது வாரியாக சரிந்து வருவதில் ஆச்சரியம் இருக்க முடியாது. கல்விப்புல சமூக செயற்பாட்டாளரான அஸ்மிதா, “இங்குள்ள பலரும் பெரும்பாலும் 8 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கிறார்கள்,” என்கிறார். அவருமே கூட அகமதாபாத்துக்கும் ராஜ்கோட்டுக்கும் புலம்பெயர்ந்து கொண்டிருந்தவர்தான். ஆனால் தற்போது குடும்பத்துக்கு சொந்தமான பருத்தி நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டே பணியாளர் தேர்வுக்கு படித்தபடி பிறருக்கும் உதவுகிறார்.
இரண்டு நாட்கள் கழித்து, குஷால்கரின் தொண்டு நிறுவனமான ஆஜீவிகா அமைப்பு, அஸ்மிதா உள்ளிட்ட பெண் தன்னார்வலர்கள் கொண்டு நடத்திய கூட்டத்தில் கிரணை மீண்டும் சந்தித்தோம். பல வகையான கல்வி, தொழில் மற்றும் எதிர்காலங்கள் குறித்து இளம்பெண்கள் விழிப்புணர்வு பெற்றனர். “நீங்கள் என்னவாகவும் ஆகலாம்,” என தன்னார்வலர்கள் அவர்களிடம் கூறிக் கொண்டிருந்தனர்.
கூட்டம் முடிந்து, நீர் பிடிக்கவும் இரவுணவை தயாரிக்கவும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார் கிரண். ஆனால் பள்ளிக்கு மீண்டும் சென்று, நண்பர்களை சந்தித்து, விடுமுறை காலங்களில் செய்ய முடியாதவற்றை செய்ய அவர் விரும்புகிறார்.
தமிழில் : ராஜசங்கீதன்