மர்ஹாய் மாதா கோவில் நுழைவாயிலில் இருக்கும் நான்கு அடி உயர கதவு, பெரும்பாலான பக்தர்களை தலை குனிந்து நுழைய வைக்கிறது. ஆனால் இந்த தெய்வத்தின் குணப்படுத்தும் சக்தியின் மகிமை கண்டு, மர்ஹா கிராமம், மற்றும் அதைச் சுற்றிலும் இருந்து வரும் ஏராளமான மக்களும், தானாகவே தலை பணிந்து வணங்குகிறார்கள்.
"உங்கள் குடும்பத்தில் யாரும் நோய்வாய்ப்பட்டிருந்தால், நீங்கள் பகவதியிடம் வந்து அவர்கள் குணமாக வேண்டலாம்," என்று பாபு சிங் கூறுகிறார். பரந்து விரிந்து கிடக்கும் ஆலமரத்தடியில், காத்திருக்கும் மற்றவர்கள் போல, பூஜை தொடங்க காத்துக்கொண்டிருக்கிறார். இக்கோயிலின் தெய்வம், பகவதி அம்மன். "அவள் பிரச்சனையை தீர்த்து வைப்பாள் - அது நோயாக இருந்தாலும் சரி, அல்லது பூத் [பேய்] அல்லது தயன் [சூனியக்காரி] வேலையாக இருந்தலும் சரி," என்று அவர் நம்பிக்கையுடன் கூறுகிறார்.
இன்று புதன்கிழமை என்பதால், கூடுதல் சிறப்பு - இன்று கோவில்-பூசாரி (உள்ளூரில் பாண்டா என்று அழைக்கப்படுகிறார்) தெய்வத்தால் ஆட்கொள்ளப்படுவார். அவர் மூலம், பக்தர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதோடு, உடல்நலம் தொடர்பான அவர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்குவார்.
பக்தர்கள் பெரும்பாலும் கஹ்தரா, கோனி, குடான், கம்ரி, மஜ்ஹோலி, மர்ஹா, ரக்சேஹா மற்றும் கத்தாரி பில்ஹதா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள். ஒரு சில பெண்களும் உள்ளனர். ஆனால் அவர்கள் தலைக்கு மேல் முக்காடு போட்டுள்ளனர்.
"ஆத் காவ்ன் கே லோக் ஆதே ஹை , [எட்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வருகிறார்கள்]," என்று உள்ளூர் பூசாரியும், நோய்களுக்கு தீர்வு வழங்குபவருமான பய்யா லால் ஆதிவாசி, பிற்பகலுக்காக தயாராகும் போது கூறுகிறார். ஒரு கோந்த் ஆதிவாசியான அவரது குடும்பம், பல தலைமுறைகளாக அம்மனுக்கு சேவை செய்து வருகிறது.
கோயிலின் உள்ளே, ஆண்கள் குழு ஒன்று தோலக் மற்றும் ஹார்மோனியம் உட்பட பல்வேறு இசைக்கருவிகளை வாசித்து, ராமர் மற்றும் சீதையின் நாமத்தை பாடிக்கொண்டிருக்கின்றனர்.
ஒரு மூலையில் கண்ணுக்குத் தெரியாத ஒரு பானையும் அதன் மேல் ஒரு தட்டும் உள்ளது. " தாலி பஜேகி ஆஜ் [அவர்கள் இன்று தாலி வாசிப்பார்கள்]," என்று பன்னா வாசியான நீலேஷ் திவாரி, அந்த தட்டைச் சுட்டிக்காட்டுகிறார்.
பய்யா லால் உள்ளே நுழைந்து, அம்மனின் முன் தனது இடத்தில் அமர்ந்து கொண்டு, முன்னும் பின்னுமாக ஆடுகிறார். அவருடன் சுமார் 20 பேர் இணைகின்றனர். அறை, தாலியின் உரத்த ஆரவாரத்தில் நிறைகிறது. ஊதுபத்தி புகை, சன்னதியின் முன் ஒரு சிறிய நெருப்பின் பிரகாசமான ஒளி, அனைத்தும் சேர்ந்து பூசாரியின் வடிவில் தெய்வம் தோன்றும் நேரத்திற்கு வழிவகுக்கும்.
இசை உச்சக்கட்டத்திற்கு உயரும் போது, பாண்டா ஆடுவதை நிறுத்தி, காலை பலமாக ஊன்றி நிற்கிறார். யாரும் அறிவிக்காமல், தெய்வம் அவரைப் ஆட்கொண்டது அனைவருக்கும் புரிகிறது. பக்தர்கள் தங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்க பரபரப்பாகிறார்கள். கேள்விகள் பையா லாலின் காதுகளில் கிசுகிசுக்கப்படுகின்றன. அதன் பின்னர் அவர் ஒரு கைப்பிடி நெல்லை எடுத்து அவருக்கு முன்னால் தரையில் வீசுகிறார். விழும் வடிவின் எண்கள், மகிழ்ச்சியான அல்லது கடினமான பதிலைக் கூறுகின்றன.
பக்தர்கள் தாங்கள் புனிதமாகக் கருதும் ஊதுபத்தி சாம்பலைச் எடுத்து விழுங்குகிறார்கள் - அது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்க்கான மருந்தாகிறது. மதாய் மாதாவின் இந்த பிரசாதத்தின் குணப்படுத்தும் சக்தி வலுவாக உள்ளது. "எனக்குத் தெரிந்தவரை, அது ஒருபோதும் தோல்வியடையவில்லை," என்று பாண்டா புன்னகையுடன் கூறுகிறார்.
இங்குள்ள மக்கள், குணமாகும் காலம் எட்டு நாட்கள் என்கிறார்கள். "தேங்காய் அல்லது அத்வை [சிறிய கோதுமை பூரி], கன்யா போஜன் அல்லது பகவத் என, தெய்வத்திற்கு, நீங்கள் விரும்பியவற்றை படைக்கலாம். அது பக்தர்களின் விருப்பம்," என்கிறார் பையா லால்.
'நிலத்தை இழப்பதை நினைத்து அனைவரும் வருந்துகிறார்கள். ஆனால் இந்த புனித இடத்தை இழக்க நேரிடும் என்பது தான் என் மிகப்பெரிய வருத்தம். கிராம மக்கள் வேலையைத் தேடி வெளியேறிவிட்டால், எங்கள் மக்களுக்கு என்ன நடக்கும் என்றே தெரியாது’
டைபாய்டு (உள்ளூரில் பாபாஜு கி பிமாரி என்று அழைக்கப்படுகிறது, பாபாஜுயை ஒரு தெய்வீக ஆன்மாவாக கருதுகின்றனர்) கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக கிராமவாசிகள் கூறுகிறார்கள். மாநிலம் முழுவதும் பெண்களின் உடல்நலமும், பேறுகால கவனிப்பும் புறக்கணிக்கப்படுகிறது. தேசிய குடும்ப நல ஆய்வு 5 , 2019-21-ன் படி, 1,000 பிறப்புகளுக்கு 41 இறப்புகள் என, மத்தியப் பிரதேசம், நாட்டிலேயே அதிக குழந்தை இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது.
பன்னா புலிகள் காப்பகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள், சுகாதார வசதிகளுக்காக காத்திருக்கின்றன. அவர்களுக்கான, அரசு மருத்துவமனை பன்னா நகரில் 54 கிமீ தொலைவிலும், ஆரம்ப சுகாதார நிலையம் (PHC) அமங்கஞ்சில் 22 கிமீ தொலைவிலும் உள்ளது.
"மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கும், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை உட்கொள்வதற்கும், இங்குள்ள மக்கள் தயங்குகிறார்கள்," என்று பன்னாவில் சுமார் ஏழு ஆண்டுகளாக சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் அரசு சாரா நிறுவனமான கோஷிகாவின் தேவஸ்ரீ சோமானி கூறுகிறார். "இன-மருத்துவ நடைமுறைகளின் மீதான அவர்களின் நம்பிக்கையை மதிக்கும், அதே நேரத்தில், அவர்களை மருத்துவர்களிடம் அழைத்துச் செல்வது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது," என்று அவர் மேலும் கூறுகிறார். "இங்குள்ள கிராமவாசிகள், நோய்களை, தெய்வக்குற்றமாகவும், இறந்த மூதாதையரின் கோபத்தின் அறிகுறியாகவே நம்புகிறார்கள்."
அலோபதி மருத்துவத்தின் கட்டமைப்பிற்குள்ளும், அவர்கள் பெறும் 'சிகிச்சை', பெரும்பாலும் அவர்களின் சாதி அடையாளத்தை பொறுத்தே அமைகிறது. எனவே இது போன்ற தீர்வுகளைத் ஏற்பது இன்னும் சிக்கல் ஆகிறது என்று தேவஸ்ரீ விளக்குகிறார்.
*****
இப்பகுதியில் முன்மொழியப்பட்ட கென்-பெட்வா நதிகளை இணைக்கும் திட்டம் (KBRLP), பன்னா மற்றும் சத்தர்பூரில் உள்ள பல கிராமங்களை மூழ்கடித்துவிடும். பல தசாப்தங்களாக இந்த குழாய்த்திட்டம் முன் மொழியப்பட்டாலும், குடியிருப்பாளர்களுக்கு அவர்கள் எங்கு செல்வது, எப்போது செல்வது என்பது உறுதியாக தெரியாது. "கேத்தி பந்த் ஹை அப்" [விவசாயம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது]," என்று ஆண்கள் கூறுகிறார்கள். மாற்றம் விரைவில் வரும் என்று விளக்குகிறார்கள். (படிக்க: பன்னா புலி பூங்கா ஆதிவாசிகள்: அணை போடப்பட்ட எதிர்காலம் ).
"நாங்கள் எங்களுடைய பகவதியை எங்களுடன் எடுத்துச் செல்வோம்," என்பதில் உறுதியாக இருப்பதாக, பய்யா லால் கூறுகிறார். “நிலத்தை இழப்பதற்கு அனைவரும் வருந்துகிறார்கள். ஆனால் இந்த புனித இடத்தை இழக்க நேரிடும் என்பது என் மிகப்பெரிய வருத்தம். கிராம மக்கள் வேலையைத் தேடி வெளியேறிவிட்டால், எங்கள் மக்களுக்கு என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. கிராமம் சிதறடிக்கப்படும். பகவதியை நிலையமர்த்த எங்களுக்கு ஏதாவது இடம் கொடுத்தால், எங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்,” என்று அவர் கூறுகிறார்.
சந்தோஷ்குமார், 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மஜ்கவானில் இருந்து வருகிறார். சுமார் 40 வருடங்களாக இந்த கோவிலுக்கு தவறாமல் வருகிறார். " தசல்லி மில்தி ஹை [எனக்கு அமைதி கிடைக்கிறது]," என்று 58 வயதான அவர் கூறுகிறார்.
"இப்போது இடம்பெயர வேண்டுமென்பதாலும், அடுத்த இரண்டு வருடங்களுக்கு என்னால் அம்மனை தரிசிக்க முடியாது என்பதாலும், பார்த்துவிட்டுப் போக வந்தேன்," என்று தனது ஐந்து-ஆறு ஏக்கர் விவசாய நிலத்தில் மசூர் [பருப்பு], சன்னா [கடலை] மற்றும் கெஹுன் [கோதுமை] பயிரிடும் இந்த விவசாயி கூறுகிறார்.
" வோ தோ உன்கே உபர் ஹை " எனும் பையா லால், தனது 20 வயது மகன், அம்மனுக்கு சேவை செய்யும் பாரம்பரியத்தைத் தொடர்வானா என்று தெரியவில்லை என்கிறார். அவரது மகன் அவர்களது ஐந்து ஏக்கர் விவசாய நிலத்தில் கெஹுன் [கோதுமை] மற்றும் சர்ஸன் [கடுகு] பயிரிடுகிறார். சில பயிரை விற்றுவிட்டு, மீதியை சொந்த உபயோகத்துக்கு வைத்துக் கொள்கிறார்கள்.
அமங்கஞ்சிலிருந்து இங்கு வந்திருக்கும் விவசாயி மது பாய், “ ஆராம் மில்தி ஹை ” என்கிறார். " தர்ஷன் கே லியே ஆயே ஹை ," என்று 40 வயதான அவர் கூறுகிறார். மற்ற பெண்களுடன் தரையில் அமர்ந்து கூறுகிறார். அதன் பின்னணியில், பாடல்கள் மற்றும் மேளங்களின் நிலையான தாள ஒலி இசைக்கிறது.
அவர் பேசிக்கொண்டிருக்கும் போது, தோல் மற்றும் ஹார்மோனியத்தின் மெல்லிய சத்தம், உச்சக்கட்டத்தை அடைகிறது. அருகிலிருப்பவர் பேசுவதைக்கூட அப்போது கேட்க முடியாது. “ தர்ஷன் கர்கே ஆதே ஹை , [தரிசனம் செய்துவிட்டு வருகிறேன்]” என்று அவர் எழுந்து நின்று, ஆடையை சரிசெய்து கொண்டு செல்கிறார்.
தமிழில் : அஹமத் ஷ்யாம்