“பாலியல் தொழில் செய்வதால் எங்களின் உடல்களை அவர்கள் எல்லாவற்றுக்கும் கட்டணமாக நினைத்துக் கொள்கின்றனர்,” என்கிறார் 30 வயது மிரா. 2012ம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தின் ஃபருக்காபாதிலிருந்து தில்லிக்கு வந்தவருக்கு மூன்று குழந்தைகள். திடீர் மாரடைப்பால் கணவர் உயிரிழந்துவிட்டார். கோபமும் சோர்வும் சம அளவில் அவரிடம் இப்போது இருக்கிறது.
“எனக்கு அவர்கள் மருந்து தரும்போது இப்படித்தான் செய்கிறார்கள்.” மருத்துவமனைப் பணியாளர்கள் தங்களின் கை கொண்டு உடலை தடவும் செய்கையை செய்து காட்டும் 39 வயது அமிதாவின் முகம் அருவருப்பில் சுருங்குகிறது. அவமானத்துக்கு அவர் அஞ்சுகிறார். ஆனாலும் பரிசோதனைக்கும் மருந்துகளுக்கும் மருத்துவமனைக்குத் திரும்பச் செல்கிறார்.
“ஹெச்ஐவி பரிசோதனைகளுக்காக நாங்கள் செல்கையில், நாங்கள் பாலியல் தொழிலாளர்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டால், உதவ முன் வருவார்கள். ‘பின்வாசலுக்கு வா. நான் உனக்கு மருந்து தருகிறேன்,’ என்பார்கள். அந்த சமயத்தை அவர்கள் எங்களை தவறாகத் தொட பயன்படுத்திக் கொள்வார்கள். 16 மாநிலங்களின் 4.5 லட்ச பாலியல் தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பான அகில இந்தியப் பாலியல் தொழிலாளர்களின் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் சொல்வதை ஆமோதிப்பதுபோல் தலையசைக்கிறார் 54 வயது குசும்.
வடமேற்கு தில்லியின் ரோகிணி பகுதியில் ஒரு சமூக தங்குமிடத்தில், தொற்றினால் வேலையின்றி இருக்கும் பாலியல் தொழிலாளர் குழு ஒன்றை PARI சந்தித்தது. குளிர்கால மதியவேளையில் கதகதப்பு தரும் வகையில் அருகருகே அமர்ந்திருக்கும் அவர்கள், டிபன் பாக்ஸ்களில் எடுத்து வந்திருக்கும் சிறிதளவு பருப்பு மற்றும் ரொட்டி உணவை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றனர்.













