கடிகாரத்தைப் போல, ஒரு கடுமையான அடிவயிற்று வலி காயத்ரி கச்சராபியை ஒவ்வொரு மாதமும் பீடித்துக் கொள்கிறது. மூன்று நாட்களில் ஏற்படும் வலி மட்டும்தான் அவரின் மாதவிடாய்க் காலத்தை ஞாபகப்படுத்தும் விஷயமாக இருக்கிறது. அவருக்கு மாதவிடாய் வருவது நின்று ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது.

”எனக்கான மாதவிடாயை இப்படிதான் தெரிந்து கொள்கிறேன். ரத்தப்போக்கு இருக்காது,” என்கிறார் காயத்ரி. “மூன்று குழந்தைகள் பெற்றதால் மாதவிடாய்க்கு வெளியேறும் ரத்தம் என்னுள் இல்லாமல் போய்விட்டதோ என்னவோ,” என்கிறார் 28 வயது நிறைந்த அவர். மாதவிடாய் இன்மை, மாதாந்திர வயிற்று வலியையும் முதுகு வலியையும் குறைக்கவில்லை. பிரசவத்தின்போது ஏற்படும் வலியின் அளவுக்கு அந்த வலிகள் இருக்கும் என காயத்ரி சொல்கிறார். “எழக் கூட முடியாது.”

காயத்ரி உயரமாகவும் ஒல்லியாகவும் இருக்கிறார். கூர்மையான பார்வை. விட்டுவிட்டு அழுத்தமாக பேசும் பேச்சு. கர்நாடகாவின் ரானிபென்னூர் தாலுகாவிலுள்ள அசுந்தி கிராமத்தின் எல்லையில் மடிகா என்ற தலித் சமூகத்தினர் வசிக்கும் மடிகரா கெரி பகுதியைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி அவர். கையால் மகரந்தம் சேர்க்கும் வேலையில் திறன் பெற்றவர்.

ஒரு வருடத்துக்கு முன் ஒருமுறை சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்பட்டிருக்கிறது. மருத்துவ ஆலோசனை பெற முடிவெடுத்திருக்கிறார். 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பியாத்கியில் இருக்கும் தனியார் மருத்துவ மையத்துக்கு சென்றார்.

Gayathri Kachcharabi and her children in their home in the Dalit colony in Asundi village
PHOTO • S. Senthalir

அசுந்தி கிராமத்தின் தலித் காலனி வீட்டில் காயத்ரி கச்சராபியும் அவரின் குழந்தைகளும்

“அரசு மருத்துவமனைகளில் சரியாகக் கவனிப்பதில்லை,” என்கிறார் அவர். “நான் அங்கு செல்வதில்லை. இலவச மருத்துவத்துக்கான அட்டை என்னிடம் இல்லை.” இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவ சிகிச்சைகளுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஐந்து லட்ச ரூபாய் காப்பீடு வழங்க வழிவகை செய்யும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட பிரதான் மந்த்ரி ஜன் ஆரோக்யா யோஜனா மருத்துவக் காப்பீட்டைதான் அவர் குறிப்பிடுகிறார்.

தனியார் மருத்துவ மைய மருத்துவர் அவரை ரத்தப் பரிசோதனையும் அடிவயிற்றுக்கான அல்ட்ராசவுண்ட் ஸ்கேனும் எடுக்கச் சொன்னார்.

ஒரு வருடம் ஆனது. காயத்ரி பரிசோதனைகள் செய்யவில்லை. குறைந்தபட்சம் 2,000 ரூபாய் ஆகும். அந்தச் செலவு பெரியதாக தெரிந்தது. “என்னால் அந்தச் செலவு செய்ய முடியவில்லை. பரிசோதனை அறிக்கைகள் இல்லாமல் மருத்துவரிடம் சென்றால், அவர்கள் என்னை திட்டுவார்கள். எனவே நான் திரும்பிச் செல்லவே இல்லை,” என்கிறார் அவர்.

பதிலாக அவர், மருந்தகத்துக்கு சென்று வலி நிவாரணி வாங்கிக் கொண்டார். துரிதமான நிவாரணம் அளிக்கக் கூடிய விலை மலிவான தீர்வு. “என்ன மாத்திரைகள் என எனக்குத் தெரியாது,” என்கிறார் அவர். “வயிறு வலிக்கிறது என சொன்னால் போதும். மருந்தகத்தில் இருப்பவர்கள் மாத்திரைகள் கொடுத்துவிடுவார்கள்.”

3,808 பேருக்கு அசுந்தியில் இருக்கும் அரசு சுகாதாரச் சேவைகள் போதவில்லை. கிராமத்தில் இருக்கும் மருத்துவப் பயிற்சியாளர்கள் எவரும் மருத்துவப் பட்டம் பெற்றிருக்கவில்லை. தனியார் மருத்துவ மையமும் இல்லை. நர்சிங் ஹோமும் இல்லை.

A view of the Madigara keri, colony of the Madiga community, in Asundi.
PHOTO • S. Senthalir
Most of the household chores, like washing clothes, are done in the narrow lanes of this colony because of a lack of space inside the homes here
PHOTO • S. Senthalir

இடது: அசுந்தியில் இருக்கும் மடிகா சமூகத்தினரின் காலனியான மடிகரா கெரி. வலது: துணி துவைப்பது உள்ளிட்ட பெரும்பாலான வீட்டு வேலைகள் காலனியின் குறுகிய சந்துகளில்தான் நடக்கிறது. வீடுகளுக்குள் போதுமான இடமில்லை

ரானிபென்னூரில் இருக்கும் தாய்சேய் நல மருத்துவமனை 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அங்கும் ஒரே ஒரு மகளிர் நோய் மருத்துவர்தான் இருக்கிறார். இரண்டு பேர் இருக்க வேண்டிய மருத்துவமனை அது. அருகாமையில் இருக்கும் அடுத்த அரசு மருத்துவமனை 30 கிலோமீட்டர் தொலைவில் ஹிரெகெரூரில்தான் இருக்கிறது. அங்கு ஒரு மகளிர்நோய் மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால் அப்பதவி நிரப்பப்படவில்லை. 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஹவேரி மாவட்ட மருத்துவமனையில்தான் ஆறு மகளிர்நோய் சிறப்பு மருத்துவர்கள் இருக்கின்றனர். பொது மருத்துவ அலுவலர்களுக்கான 20 இடங்களும் பராமரிப்பு கண்காணிப்பாளருக்கான ஆறு இடங்களும் அங்கு நிரப்பப்படாமல் இருக்கின்றன.

இப்போது வரை, மாதவிடாய் நின்று போனதற்கான காரணமோ திரும்பத் திரும்ப வரும் அடிவயிற்றுவலிக்கான காரணமோ காயத்ரிக்கு தெரியாது. “என் உடல் கனமாகி விட்டது,” என்கிறார் அவர். “சமீபத்தில் நாற்காலியிலிருந்து விழுந்ததால் அடிவயிற்றில் வலி ஏற்படுகிறதா எனத் தெரியவில்லை. அல்லது சிறுநீரகக் கற்களாலா, மாதவிடாய்ச் சிக்கல்களாலா என்றும் தெரியவில்லை.”

ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய சின்னமுலகுண்ட் கிராமத்தில்தான் காயத்ரி வளர்ந்தார். கையால் மகரந்தம் சேர்க்கும் திறனைக் கற்றுக் கொண்டார். ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் 15-லிருந்து 20 நாட்களுக்கு உறுதியான ஊதியத்தை அந்த வேலை பெற்றுத் தந்துவிடுகிறது. ”கையால் மகரந்தம் சேர்க்கும் வேலைக்கு 250 ரூபாய் கிடைக்கும்,” என்கிறார் அவர்.

16 வயதில் மணம் முடித்த அவரின் விவசாயத் தொழிலாளர் வேலை நிச்சயமற்ற வேலை. லிங்காயத்துகளை போன்ற நிலவுடமை சாதிகள் அருகாமை கிராமங்களில் சோளம், பூண்டு, பருத்தி போன்றவற்றை அறுவடை செய்ய தொழிலாளர் தேடும்போதுதான் அவருக்கு வேலை கிடைக்கும். “எங்களின் நாட்கூலி 200 ரூபாய்,” என்கிறார் அவர். மூன்று மாதங்களில் அவருக்கு 30லிருந்து 36 நாட்களுக்கு விவசாய வேலை கிடைக்கும். “நிலவுடமையாளர்கள் அழைத்தால் எங்களுக்கு வேலை உண்டு. இல்லையென்றால் இல்லை.”

Gayathri and a neighbour sitting in her house. The 7.5 x 10 feet windowless home has no space for a toilet. The absence of one has affected her health and brought on excruciating abdominal pain.
PHOTO • S. Senthalir
The passage in front is the only space where Gayathri can wash vessels
PHOTO • S. Senthalir

இடது: காயத்ரியும் பக்கத்து வீட்டுக்காரரும். ஜன்னலற்ற 7.5 x 10 அடி வீட்டில் கழிவறைக்கு இடமில்லை. கழிவறை இல்லாதது அவரது ஆரோக்கியத்தை பாதித்து அடிவயிற்றில் தீவிர வலியை உண்டாக்கியிருக்கிறது. வலது: முன்னால் இருக்கும் வழியில்தான் காயத்ரி பாத்திரங்கள் துலக்க முடியும்

விவசாயத் தொழிலாளராகவும் கையால் மகரந்தம் சேர்க்கும் தொழிலாளராகவும் மாதத்துக்கு அவர் 2,400லிருந்து 3,750 ரூபாய் வரை ஈட்டுகிறார். அவரின் மருத்துவச் செலவுகளுக்கு அந்தப் பணம் போதாது. வேலை குறையும் கோடை காலத்தில் பொருளாதார நெருக்கடி தீவிரமாக இருக்கும்.

அவரின் கணவரும் விவசாயத் தொழிலாளர்தான். மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர். குடும்ப வருமானத்துக்கு அதிகம் அவரால் கிடைப்பதில்லை. எப்போதும் அவரது ஆரோக்கியம் மோசமாகவே இருக்கும். கடந்த வருடத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் அவரால் பணிபுரிய முடியவில்லை. காரணம் டைஃபாய்டு மற்றும் அயர்ச்சி. 2022ம் ஆண்டின் கோடை காலத்தில் அவர் ஒரு விபத்துக்குள்ளாகி கையை முறித்துக் கொண்டார். அவரைப் பார்த்துக் கொள்ள மூன்று மாதங்கள் காயத்ரி வீட்டிலேயே இருந்தார். மருத்துவச் செலவு மட்டும் 20,000 ரூபாயை எட்டியது.

தனியாரில் காயத்ரி 10 சதவிகித வட்டிக்கு கடன் வாங்கினார். பிறகு வட்டி கட்ட கடன் வாங்கினார். மூன்று நுண்நிதி நிறுவனங்களில் வாங்கிய 1 லட்ச ரூபாய்க்கான மற்ற கடன்கள் நிலுவையில் இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் கடன்களுக்கு மட்டும் அவர் 10,000 ரூபாய் கட்டுகிறார்.

“தினக்கூலியில் எங்கள் வாழ்க்கைகளை நாங்கள் ஓட்ட முடியாது,” என அவர் உறுதியாகக் கூறுகிறார். “ஆரோக்கியம் குன்றினால் நாங்கள் கடன் வாங்க வேண்டும். கடன் தவணையை நாங்கள் தவற விட முடியாது. உணவு இல்லையென்றாலும் வாரச் சந்தைக்கு செல்லவில்லை என்றாலும் கட்டியாக வேண்டும். நிறுவனத்துக்கு நாங்கள் வாரந்தோறும் பணம் கட்டியாக வேண்டும். ஏதேனும் பணம் மிச்சமிருந்தால்தான் காய்கறி கூட நாங்கள் வாங்க முடியும்.”

Gayathri does not know exactly why her periods stopped or why she suffers from recurring abdominal pain.
PHOTO • S. Senthalir
Standing in her kitchen, where the meals she cooks are often short of pulses and vegetables. ‘Only if there is money left [after loan repayments] do we buy vegetables’
PHOTO • S. Senthalir

இடது: மாதவிடாய் ஏன் நின்றது என்பதும் அடிவயிற்றில் ஏன் வலி வருகிறது என்பதும் காயத்ரிக்கு சரியாக தெரியவில்லை. வலது: பருப்பும் காய்கறியும் குறைவாக இருக்கும் உணவுகளை அவர் சமைக்கும் சமையலறை. ‘மிச்சப் பணம் இருந்தால்தான் (கடனடைத்த பிறகு) காய்கறி கூட வாங்க முடியும்’

காயத்ரியின் உணவுகளில் பருப்புகளோ காய்கறிகளோ இருப்பதில்லை. பணம் இல்லாதபோது அவர் தக்காளிகளையும் மிளகாய்களையும் அண்டைவீட்டாரிடம் கடன் வாங்கி சமைப்பார்.

“பசிக்கான உணவு” அது என்கிறார் பெங்களூருவில் புனித ஜான் மருத்துவக் கல்லூரியில் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் உதவிப் பேராசிரியரான டாக்டர் ஷைப்யா சல்தான்கா. “வடக்கு கர்நாடகாவில் வசிக்கும் பெண் விவசாயத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் பசிக்கான உணவுமுறையில்தான் வாழ்கின்றனர். அவர்கள் அரிசியும் மிகச் சிறிய அளவுக்கு பருப்புகள் கொண்ட குழம்பும் சாப்பிடுவார்கள். குழம்பில் அதிகமாக நீரும் மிளகாய்த்தூளும் இருக்கும். தீவிரப் பட்டினி தீவிர சத்துக்குறைபாட்டை உருவாக்குகிறது. அதனால் அவர்கள் சோர்வடைகின்றனர்,” என்கிறார் அவர். பதின்வயதினர் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தை மேம்படுத்த இயங்கும் என்ஃபோல்ட் இந்தியா என்கிற அமைப்பின் துணை நிறுவனர் அவர். தேவையின்றி கருப்பை நீக்கப்படும் வழக்கத்தை பற்றி ஆராய 2015ம் ஆண்டில் கர்நாடக அரசின் பெண்கள் வாரியம் உருவாக்கிய குழுவில் உறுப்பினராக இருந்தவர்.

கிறுகிறுப்பு, கைகால்கள் மரத்துப் போதல், முதுகுவலி, சோர்வு முதலியவை ஏற்படுவதாகக் கூறுகிறார். இவையாவும் தீவிர சத்துக்குறைபாடு மற்றும் ரத்தசோகை ஆகியவற்றுக்கான அடையாளங்கள் என்கிறார் டாக்டர் சல்தான்கா.

2019-21ம் ஆண்டுக்கான தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின்படி ( NFHS-5 ) கடந்த நான்கு வருடங்களில் கர்நாடகாவில் 15-49 வயதில் இருக்கும் பெண்களில் ரத்தசோகை கொண்டோரின் சதவிகிதம் 2015-16-ன் 46.2 சதவிகிதத்திலிருந்து 50.3 சதவிகிதமாக 2019-20ல் உயர்ந்திருக்கிறது. ஹவேரி மாவட்டத்தில், இந்த வயதைச் சேர்ந்த பெண்களில் பாதிக்கு மேற்பட்டோருக்கு ரத்தசோகை கண்டறியப்பட்டிருக்கிறது.

காயத்ரியின் நலிவான ஆரோக்கியம் அவரின் வருமானத்தையும் பாதிக்கிறது. “நான் நன்றாக இல்லை. ஒருநாள் வேலைக்கு சென்றால், அடுத்த நாள் செல்ல முடியாது,” என்கிறார் பெருமூச்சு விட்டபடி.

PHOTO • S. Senthalir

மஞ்சுளா மகாதேவப்பா கச்சராபி கணவருடனும் 18 குடும்ப உறுப்பினர்களுடனும் சேர்ந்து இரண்டறை வீட்டில் அதே காலனியில் வசிக்கிறார். அவரும் கணவரும் இரவில் தூங்கும் அறைதான் காலையில் சமையலறை

25 வயது மஞ்சுளா மகாதேவப்பா கச்சராபியும் வலியில்தான் எல்லா நேரமும் இருக்கிறார். மாதவிடாய் நேரத்தில் கடுமையான வயிற்று வலியாலும் அடிவயிற்று வலியாலும் தவிக்கிறார். பிறகு பிறப்புறுப்பிலிருந்து ரத்தப்போக்கு வெளியேறும்.

”ரத்தப்போக்கு இருக்கும் ஐந்து நாட்களும் கடுமையான வலி இருக்கும்,” என்கிறார் மஞ்சுளா. 200 ரூபாய் நாட்கூலி ஈட்டும் விவசாயத் தொழிலாளராக இருக்கிறார் அவர். “முதல் இரண்டு, மூன்று நாட்களுக்கு என்னால் எழக் கூட  முடியாது. வயிற்று வலி வரும். நடக்க முடியாது. வேலைக்கு செல்ல முடியாது. சாப்பிட மாட்டேன். ஓய்வு மட்டும்தான் எடுப்பேன்.”

வலியையும் தாண்டி காயத்ரியும் மஞ்சுளாவும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை இருக்கிறது. பாதுகாப்பான சுகாதாரமான கழிவறை இல்லாத பிரச்சினை

12 வருடங்களுக்கு முன் திருமணம் முடிந்ததும, அசுந்தியின் தலித் காலனியில் இருந்த ஜன்னலற்ற  7.5 x 10 அடி வீட்டில் வாழ வந்தார் காயத்ரி. ஒரு டென்னிஸ் கோர்ட்டுக்கான இடத்தில் கால்வாசிக்கும் கொஞ்சம் அதிகம்தான் வீடு இருந்த இடம். அதை சமையலறையாகவும் வாழும் இடமாகவும் குளியலறையாகவும் இரு சுவர்கள் பிரிக்கின்றன. கழிவறைக்கு இடமில்லை.

மஞ்சுளா கணவருடனும் 18 குடும்ப உறுப்பினர்களுடனும் அதே காலனியிலிருக்கும் இரண்டறை வீடு ஒன்றில் வசிக்கிறார். மண் சுவர்களும் சேலையிலான திரைச்சீலைகளும் அறைகளை ஆறு பகுதிகளாக பிரிக்கின்றன. “எதற்கும் இடம் கிடையாது,” என்கிறார் அவர். “திருவிழாக்களுக்கு என எல்லா குடும்ப உறுப்பினர்களும் வந்துவிட்டால், உட்கார கூட இடமிருக்காது.” அந்த மாதிரியான நாட்களில் குடும்பத்து ஆண்கள் சமூகக் கூடத்துக்கு சென்று உறங்குவார்கள்.

Manjula standing at the entrance of the bathing area that the women of her house also use as a toilet sometimes. Severe stomach cramps during her periods and abdominal pain afterwards have robbed her limbs of strength. Right: Inside the house, Manjula (at the back) and her relatives cook together and watch over the children
PHOTO • S. Senthalir
Inside the house, Manjula (at the back) and her relatives cook together and watch over the children
PHOTO • S. Senthalir

வீட்டுப்பெண்கள் குளியலறையாகவும் சமயங்களில் கழிவறையாகவும் பயன்படுத்தும் பகுதியின் வாசலில் மஞ்சுளா நிற்கிறார். கடுமையான வயிற்று வலியும் அதற்குப் பிறகான அடிவயிற்று வலியும் மூட்டின் வலிமையை இல்லாமலாக்கி விட்டன. வலது: வீட்டுக்குள் மஞ்சுளாவும் (பின்னால்) உறவினர்களும் ஒன்றாக சமைத்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்கின்றனர்

சிறு குளியல் பகுதியின் வாசலில் ஒரு சேலை திரைச்சீலையாக தொங்குகிறது. மஞ்சுளாவின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் இப்பகுதியை சிறுநீர் கழிக்க பயன்படுத்துகின்றனர். நிறைய பேர் இருந்தால் அதையும் செய்ய மாட்டார்கள். சமீப காலமாக அங்கிருந்து துர்நாற்றம் வரத் துவங்கியிருக்கிறது. காலனியின் குறுக்குச் சந்துகளில் குழாய்கள் பதிக்க தோண்டியபோது நீர் இங்கு தேங்கி சுவர்களில் பூஞ்சை வளர்ந்துவிட்டது. இங்குதான் மாதவிடாய் காலத்தில் மஞ்சுளா மாதவிடாய் நாப்கின்கள் மாற்றுவார். “இரு முறைதான் நாப்கின்கள் மாற்ற முடியும். காலையில் வேலைக்கு போவதற்கு முன் ஒருமுறை. பிறகு மாலையில் வீட்டுக்கு வந்த பிறகு.” அவர் வேலைக்கு செல்லும் விவசாய நிலங்களில் அவர் பயன்படுத்தும் வகையிலான கழிவறைகள் கிடையாது.

எல்லா தலித் காலனிகளைப் போலவே அசுந்தியின் மடிகாரா கெரியும் கிராமத்தின் எல்லைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 600 பேர் இங்குள்ள 67 வீடுகளில் வசிக்கின்றனர். பாதி வீடுகளில் மூன்று குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றனர்.

அசுந்தியின் மடிகா சமூகத்துக்காக 60 வருடங்களுக்கு முன் ஒதுக்கப்பட்ட 1.5 ஏக்கருக்கு மேலான நிலத்தில் இருக்கும் காலனியின் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. வசிப்பிடத்துக்காக நடத்தப்பட்ட பல போராட்டங்கள் எந்த தீர்வையும் எட்டவில்லை. இளைய தலைமுறைகளையும் அவர்தம் குடும்பங்களையும் தங்க வைப்பதற்காக, இருக்கும் இடத்தையே மக்கள் சுவர்கள் கட்டியும் சேலை தொங்கவிட்டும் பிரித்து பயன்படுத்துகின்றனர்.

அப்படித்தான் 22.5 x 30 அடிக்கு இருந்த காயத்ரியின் வீட்டு அறை மூன்று சிறு வீடுகளாக மாற்றப்பட்டது. அவர், அவரது கணவர், இரு மகன்கள், கணவரின் பெற்றோர் ஆகியோர் ஓரறையில் வசிக்கிறார்கள். கணவரின் பிற சொந்தக்காரர்கள் மற்ற இரு அறைகளில் வசிக்கிறார்கள். வீட்டுக்கு முன் இருக்கும் ஒரு குறுகலான மங்கலான பகுதிதான் வீட்டுக்குள் செய்ய முடியாத வீட்டு வேலைகளை செய்வதற்கான பகுதி. துணி துவைத்தல், பாத்திரம் துலக்குதல், 7 மற்றும் 10 வயதினாலான இரு மகன்களை குளிக்க வைத்தல் முதலிய வேலைகள் அங்குதான் நடக்கும். வீடு சிறியதாக இருப்பதால், 6 வயது மகளை சின்னாமுலகண்ட் கிராமத்தில் வசிக்கும் தன் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விட்டார் காயத்ரி

Permavva Kachcharabi and her husband (left), Gayathri's mother- and father-in-law, at her house in Asundi's Madigara keri.
PHOTO • S. Senthalir
The colony is growing in population, but the space is not enough for the families living there
PHOTO • S. Senthalir

இடது: பெர்மாவ்வா கச்சராபி, அவரது கணவர் (இடது) காயத்ரியின் மாமியார் மற்றும் மாமனார் ஆகியோர் அசுந்தியின் மடிகாரா கெரியிலுள்ள அவரது வீட்டில். வலது: காலனியின் மக்கள்தொகை அதிகரிக்கிறது. ஆனால் அங்கிருக்கும் குடும்பங்களுக்கான இடம் போதவில்லை

2019-20ம் ஆண்டின் குடும்பச் சுகாதார கணக்கெடுப்பில் 74.6 சதவிகித கர்நாடகக் குடும்பங்கள் மேம்பட்ட கழிவறை வசதிகளை பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் , ஹவேரி மாவட்டத்தில் 68.9 சதவிகித வீடுகளில் ஒரு கழிவறைதான் இருக்கிறது. குடும்பச் சுகாதார கணக்கெடுப்பின்படி மேம்பட்ட சுகாதாரம் என்பது ”சாக்கடைக்கு (கழிவுக் கிடங்கு) இணைப்புக்குழாயும் காற்றோட்டம் நிறைந்த நீரூற்றும் அல்லது தானே நீரூற்றிக் கொள்ளும் குழி கழிவறை அல்லது உரமாகும் வசதி கொண்ட கழிவறைகள்”தான். அத்தகைய ஒரு ஏற்பாடும் அசுந்தியின் மடிகாரா கெரியில் கிடையாது. “வயல்களுக்கு சென்றுதான் எங்கள் கழிவறைத் தேவைகளை தணித்துக் கொள்கிறோம்,” என்கிறார் காயத்ரி. “நிலத்தின் உரிமையாளர்கள் வேலியடைத்துப் போட்டு எங்களை வசை பாடுவார்கள்,” என்கிறார் அவர். எனவே காலனி மக்கள் விடியலுக்கு முன்னமே சென்று வருவார்கள்.

இதற்கான தீர்வாக காயத்ரி குடிநீர் குடிப்பதை குறைத்திருக்கிறார். இப்போது நிலவுடமையாளர்கள் இருப்பதால் சிறுநீர் கழிக்காமல் அவர் வீடு திரும்ப நேர்ந்தால், கடுமையான வலி அடிவயிற்றில் ஏற்படுகிறது. “சற்று நேரம் கழித்து நான் திரும்பிச் சென்றால், சிறுநீர் கழிக்க எனக்கு அரை மணி நேரம் ஆகிறது. வலி மிகுந்த காரியமாக அது ஆகிவிடுகிறது.”

மறுபக்கத்தில் பிறப்புறுப்பு தொற்றினால் மஞ்சுளாவுக்கு அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அவரது மாதவிடாய் முடிகிறபோது பிறப்புறுப்பிலிருந்து திரவம் வெளியேறத் தொடங்குகிறது. “அடுத்த மாதவிடாய் வரை அது தொடர்கிறது. என்னுடைய வயிறும் முதுகும் மாதவிடாய் தொடங்கும் வரை கடும் வலி கொள்கிறது. கொடுமையாக வலிக்கும். என்னுடைய கைகளிலும் கால்களிலும் வலு இல்லை.”

4-5 தனியார் மருத்துவ மையங்களுக்கு அவர் சென்றுவிட்டார். அவருக்கான ஸ்கேன் அறிக்கைகளில் ஒன்றும் பிரச்சினை இல்லை. “கருத்தரிக்கும் வரை பரிசோதனைகளுக்கு செல்ல வேண்டாமென எனக்கு சொல்லி விட்டார்கள். அதனால்தான் அதற்குப் பிறகு எந்த மருத்துவமனைக்கும் நான் செல்லவில்லை. ரத்தப் பரிசோதனையும் செய்து கொள்ளவில்லை.”

மருத்துவர்களின் ஆலோசனையில் திருப்தியடையாத அவர் பாரம்பரிய மூலிகை மருத்துவத்தையும் உள்ளூர் கோவில் பூசாரிகளையும் நாடினார். ஆனால் வலியும் திரவ வெளியேற்றமும் நிற்கவில்லை.

With no space for a toilet in their homes, or a public toilet in their colony, the women go to the open fields around. Most of them work on farms as daily wage labourers and hand pollinators, but there too sanitation facilities aren't available to them
PHOTO • S. Senthalir
With no space for a toilet in their homes, or a public toilet in their colony, the women go to the open fields around. Most of them work on farms as daily wage labourers and hand pollinators, but there too sanitation facilities aren't available to them
PHOTO • S. Senthalir

வீடுகளிலும் சரி காலனியிலும் சரி கழிவறை இல்லாததால், பெண்கள் திறந்த வெளிகளுக்கு செல்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் நிலங்களில் தினக்கூலிகளாகவும் கையால் மகரந்தம் சேர்க்கும் தொழிலாளர்களாகவும் பணிபுரிகின்றனர். அங்கும் அவர்களுக்கு கழிவறை வசதி கிடையாது

சத்துக் குறைபாடு, சுண்ணாம்பு சத்து குறைபாடு, நீண்ட நேர உடலுழைப்பு ஆகியவையுடன் சுகாதாரமற்ற நீரும் திறந்தவெளி மலம் கழிப்பும் சேரும்போது பிறப்புறுப்பில் திரவ வெளியேற்றம், தீவிர முதுகுவலி, அடிவயிற்று வலி, எரிச்சல் ஆகியவை நேர்வதாக டாக்டர் சல்தான்கா தெரிவிக்கிறார்.

“ஹவேரி அல்லது சில பகுதிகளை சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல இது,” என்கிறார் வடக்கு கர்நாடகாவைச் சேர்ந்த செயற்பாட்டாளரான டீனா சேவியர். அப்பகுதியில் நடக்கும் பெண்களின் மரணங்களை குறித்து உயர்நீதிமன்றத்தில் 2019ம் ஆண்டு மனு தாக்கல் செய்த கர்நாடகா ஜனரோக்யா சலுவாலி அமைப்பைச் சேர்ந்தவர் அவர். “பாதிப்படையக் கூடிய பெண்கள் அனைவரும் தனியார் மருத்துவத்துக்கு இரையாகின்றனர்.”

கர்நாடகாவின் கிராமப்புற சுகாதார மையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவி மருத்துவ ஊழியர்கள் ஆகியோருக்கு நிலவும் பற்றாக்குறை, காயத்ரி மற்றும் மஞ்சுளா போன்ற பெண்களை தனியார் மருத்துவ மையங்களை நோக்கி செலுத்துகிறது. 2017ம் ஆண்டில் தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் கீழ், இனவிருத்தி மற்றும் குழந்தை ஆரோக்கியம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு , கர்நாடகாவின்  மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் எண்ணிக்கையில் பெரும் பற்றாக்குறை இருப்பதை சுட்டிக் காட்டியிருக்கிறது.

அமைப்புரீதியான இப்பிரச்சினைகள் தெரியாத காயத்ரி என்றேனும் ஒருநாள் தன் பிரச்சினை கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்படும் என நம்புகிறார். வலியில் இருக்கும் நாட்களின்போது கவலை கொள்வதாக சொல்லும் அவர், “எனக்கு என்ன ஆகும்? ரத்தப் பரிசோதனை நான் செய்து கொள்ளவில்லை. ஒருவேளை செய்திருந்தால் என்னப் பிரச்சினை என தெரிந்திருக்கும். எப்படியாவது கடனாவது வாங்கி கண்டுபிடிக்க வேண்டும். குறைந்தபட்சம் என் உடல்நிலையில் என்ன பிரச்சினை என்றாவது நான் தெரிந்து கொள்ள வேண்டும்,” என்கிறார்.

கிராமப்புற பதின்வயது பெண்கள் மற்றும் இளம்பெண்கள் பற்றிய PARI மற்றும் CounterMedia அறக்கட்டளையின்  தேசிய அளவில் செய்தியளிக்கும் திட்டம், விளிம்புநிலையில் வாழும் முக்கியமான குழுக்களின் வாழ்க்கைகளை அவர்களின் அனுபவங்கள் கொண்டே ஆராயும் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.

இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ய [email protected] மற்றும் [email protected] ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.

தமிழில் : ராஜசங்கீதன்

S. Senthalir

S. Senthalir is Assistant Editor at the People's Archive of Rural India. She reports on the intersection of gender, caste and labour. She was a PARI Fellow in 2020

Other stories by S. Senthalir
Illustration : Priyanka Borar

Priyanka Borar is a new media artist experimenting with technology to discover new forms of meaning and expression. She likes to design experiences for learning and play. As much as she enjoys juggling with interactive media she feels at home with the traditional pen and paper.

Other stories by Priyanka Borar
Editor : Kavitha Iyer

Kavitha Iyer has been a journalist for 20 years. She is the author of ‘Landscapes Of Loss: The Story Of An Indian Drought’ (HarperCollins, 2021).

Other stories by Kavitha Iyer
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan