“தேர்தல் நாள் இப்பகுதியில் திருவிழா போல இருக்கும்,” என்கிறார் மர்ஜினா காதுன், நெய்யவிருக்கும் துணிகளை அடுக்கியபடி. “வேலைகளுக்காக பிற மாநிலங்களுக்கு சென்றவர்கள், வாக்களிக்க இங்கு வருவார்கள்.”

அவர் வசிக்கும் ருபாகாச்சி கிராமம், மே 7, 2024 அன்று தேர்தல் நடக்மும் துப்ரி மக்களவை தொகுதியில் வருகிறது.

ஆனால் 48 வயது மர்ஜினா வாக்களிக்கவில்லை. “அந்த நாளை நான் புறக்கணிப்பேன். மக்களை தவிர்க்க வீட்டுக்குள் ஒளிந்து கொள்ளவும் செய்வேன்.”

வாக்காளர் பட்டியலில் மர்ஜினா, சந்தேகத்துக்குரிய வாக்காளர் (D Voter) என குறிக்கப்பட்டிருக்கிறார். இந்தியக் குடியுரிமைய நிரூபிக்க முடியாத 99,942 வாக்காளர்களில் அவரும் ஒருவர். பெரும்பாலானோர் அஸ்ஸாமை சேர்ந்த வங்க மொழி பேசும் இந்துக்களும் இஸ்லாமியரும்தான்.

சந்தேகத்துக்குரிய வாக்காளர் என்கிற வகைமையை வைத்திருக்கும் ஒரே மாநிலம், அஸ்ஸாம். வங்க தேசத்திலிருந்து சட்டவிரோத புலப்பெயர்வு நடப்பதாக எழுந்த குற்றச்சாட்டே காரணம். D-Voter வகையை, தேர்தல் ஆணையம் கொண்டு வந்த 1997ம் ஆண்டில்தான் வாக்காளர் பட்டியலில் தன் பெயர் சேர்க்கும் விண்ணப்பத்தையும் கொடுத்தார் மர்ஜினா. “அப்போதெல்லாம் பட்டியலில் பெயர் சேர்க்க பள்ளி ஆசிரியர்கள் வீடுதோறும் செல்வார்கள். நானும் என் பெயர் கொடுத்தேன்,” என்கிறார் மர்ஜினா. “ஆனால் அடுத்த தேர்தலில் வாக்களிக்க சென்றபோது அவர்கள் என்னை வாக்களிக்க விடவில்லை. என்னை சந்தேகத்துக்குரிய வாக்காளர் என்றனர்.”

PHOTO • Mahibul Hoque

மர்ஜினா காதுன் (இடது), அஸ்ஸாமின் ருபாகாச்சி கிராமத்திலுள்ள நெசவுக் குழுவை சேர்ந்தவர். கெட்டா என அழைக்கப்படும் பாரம்பரியமான படுக்கை உறையை நெய்பவர். அதே வகையான தையல் கொண்டு வடிவமைக்கப்பட்ட தலையணையோடு அவர்

2018-19-ல் வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தால் சட்டவிரோத குடியேறிகள் என சொல்லப்பட்டு அஸ்ஸாமின் பல சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் கைது செய்யப்பட்டனர் என்கிறார் மர்ஜினா, அவர் வீட்டுக்கு நாம் செல்லும் வழியில்.

ஏன் தன்னை சந்தேகத்துக்குரிய வாக்காளர் என வரையறுத்தார்கள் என்பதை மர்ஜினா கண்டுபிடிக்க முயன்ற காலக்கட்டம் அது. “கோவிட் ஊரடங்குக்கு முன்பாக மூன்று வழக்கறிஞர்களுக்கு நான் 10,000 ரூபாய் வரை செலவு செய்தேன். வட்டார அலுவலகத்திலும் (மாண்டியா) தீர்ப்பாயத்திலும் (பார்பெட்டா) எல்லா ஆவணங்களையும் அவர் பரிசோதித்தார்கள். என் பெயருக்கு எதிராக எதுவும் இல்லை,” என்கிறார் அவர், மண் வீட்டின் முற்றத்தில் அமர்ந்து ஆவணங்களை தேடியபடி.

மர்ஜினா ஒரு குத்தகை விவசாயி ஆவார். அவரும் கணவர் ஹஷேம் அலியும் இரண்டு பிகா (0.66 ஏக்கர்) பாசனமற்ற நிலங்களை தலா 8,000 ரூபாய்க்கு குத்தகை எடுத்து நெல், கத்தரிக்காய், மிளகாய், வெள்ளரிக்காய் போன்றவற்றை சுய பயன்பாட்டுக்காக விளைவிக்கின்றனர்.

PAN மற்றும் ஆதார் அட்டைகளை எடுத்துவிட்டு, “வாக்குரிமை மறுக்கப்பட்டு நான் துயருரவில்லையா?” எனக் கேட்கிறார். அவரது பிறந்த வீட்டில் அனைவருக்கும் வாக்காளர் அட்டைகள் இருக்கின்றன. 1965ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் பார்பேட்டா மாவட்ட மரிச்சா கிராமத்தை சேர்ந்தவராக மர்ஜினாவின் தந்தை நச்சிம் உத்தீனின் பெயர் இருக்கிறது. “என் பெற்றோர் இருவருக்கும் வங்க தேச தொடர்புகள் இல்லை,” என்கிறார் மர்ஜினா.

ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியவில்லை என்பது மட்டுமே அவரது கவலை இல்லை.

“முகாமில் என்னை போட்டு விடுவார்களோ என பயமாக இருக்கிறது,” என்கிறார் சன்னமான குரலில் மர்ஜினா. “இளையவர்களாக அச்சமயத்தில் இருந்த குழந்தைகளின்றி எப்படி இருப்பது என யோசித்தேன். சாவதை பற்றி கூட யோசித்தேன்.”

PHOTO • Mahibul Hoque
PHOTO • Kazi Sharowar Hussain

இடது: மர்ஜினாவும் கணவர் ஹஷேம் அலியும் குத்தகை விவசாயிகள். மர்ஜினாவின் குடும்பத்தினர் அனைவருக்கும் வாக்காளர் அட்டைகள் இருந்தபோதும் அவரை சந்தேகத்துக்குரிய வாக்காளர் பட்டியலில் வைத்திருக்கின்றனர். சொந்தமாக வாக்காளர் அட்டை இல்லாத அவர், குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறார். வலது: சவுல்கோவா ஆற்றங்கரையிலுள்ள இனுவாரா காதுனின் (வலதிலிருந்து முதலாமவர்) வீட்டில் கூடும் நெசவுக் குழுவில் ஆறுதல் அடைகிறார்

நெசவுக்குழுவில் இருப்பதும் பிற பெண்களின் துணையும் மர்ஜினாவுக்கு உதவியது. கோவிட் ஊரடங்கின்போதுதான் அக்குழுவை பற்றி தெரிந்து கொண்டார். ஊருக்கு நிவாரணம் வழங்க வந்த, பார்பேட்டா தொண்டு நிறுவனம், அமரா பாரிதான் அக்குழுவை உருவாக்கியது. “பைதூ, (மேடம்) சில பெண்களை கெட்டாக்கள் (மெத்தை படுக்கைகள்) நெய்யச் சொன்னார்.” வீட்டுக்கு வெளியே செல்லாமல் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்பு அது என்பதை பெண்கள் புரிந்து கொண்டனர். “படுக்கை மெத்தை எப்படி நெய்வதென எனக்கு ஏற்கனவே தெரியும். எனவே என்னால் சுலபமாக கலந்து கொள்ள முடிந்தது,” என்கிறார் அவர்.

ஒரு படுக்கை நெய்ய அவருக்கு மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் ஆகிறது. ஒவ்வொன்றையும் விற்பதிலிருந்து 400-500 ரூபாய் அவருக்குக் கிடைக்கிறது.

மர்ஜினாவையும் இனுவாரா காதுனின் வீட்டில், கெட்டாக்கள் என அழைக்கப்படும், பாரம்பரிய படுக்கைகளை நெய்யக் கூடியிருந்த பத்து பெண்களையும் பாரி சந்தித்தது.

குழுவின் பெண்களுடனும் அங்கு வந்த மனித உரிமை செயற்பாட்டாளர்களுடனும் உரையாடியதில் கொஞ்சம் நம்பிக்கையை மர்ஜினா பெற முடிந்தது. “வயல்களில் வேலை பார்க்கிறேன். கெட்டாக்கள் நெய்கிறேன் அல்லது பூத்தையல் போடுகிறேன். பகலில் எல்லாவற்றையும் மறந்து விடுவேன். இரவானதும் மன அழுத்தம் வந்து விடும்.”

குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் அவர் கவலைப்படுகிறார். மர்ஜினா மற்றும் ஹஷேம் அலி இருவருக்கும் மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். மூத்த மகள்கள் இருவரும் மணம் முடித்து விட்டார்கள். மிச்ச இருவரும் இன்னும் பள்ளியில் இருக்கிறார்கள். வேலைகள் கிடைக்காதது குறித்து அவர்கள் ஏற்கனவே கவலைப்படத் தொடங்கி விட்டார்கள். “கல்வி கிடைத்தாலும் என்னிடம் குடியுரிமை ஆவணங்கள் இல்லாததால் (அரசு) வேலை கிடைக்காது என சில நேரம் என் குழந்தைகள் சொல்வார்கள்,” என்கிறார் மர்ஜினா.

வாழ்க்கையில் ஒருமுறையாவது வாக்களித்துவிட வேண்டுமென மர்ஜினா விரும்புகிறார். “என் குடியுரிமையை அது உறுதிப்படுத்தும். என் குழந்தைகளுக்கும், அவர்கள் விரும்பும் வேலை கிடைக்கும்,” என்கிறார் அவர்.

தமிழில் : ராஜசங்கீதன்

Mahibul Hoque

মাহিবুল হক একজন আসাম-নিবাসী মাল্টিমিডিয়া সাংবাদিক তথা গবেষক। তিনি ২০২৩ সালের পারি-এমএমএফ ফেলো।

Other stories by Mahibul Hoque
Editor : Sarbajaya Bhattacharya

সর্বজয়া ভট্টাচার্য বরিষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ায় কর্মরত আছেন। দীর্ঘদিন যাবত বাংলা অনুবাদক হিসেবে কাজের অভিজ্ঞতাও আছে তাঁর। কলকাতা নিবাসী সর্ববজয়া শহরের ইতিহাস এবং ভ্রমণ সাহিত্যে সবিশেষ আগ্রহী।

Other stories by Sarbajaya Bhattacharya
Translator : Rajasangeethan

রাজাসংগীতন চেন্নাইবাসী লেখক। এক প্রখ্যাত তামিল খবরের চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করেন।

Other stories by Rajasangeethan