பறை இசைத்து பேரணி தொடங்கப்பட்டது.
சுமார் 60 பேர் கொண்ட கூட்டம் “ஜெய் ஜெய் ஜெய் ஜெய் பீம், ஜெய் அம்பேத்கர், ஜெய் பீம்,” என்று முழக்கமிட்டது. மும்பை தாராவியில் ஒவ்வொரு வருடமும் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6 அன்று நடத்தப்படும் மகாபரிநிர்வாண நிகழ்வு இது.
தாராவியின் பெரியார் சௌக்கில் கூடியிருந்த அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றினர். ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் இந்தக் குறிப்பிட்ட இடம் திடீரென கொண்டாட்டமும், உயிர்த்துடிப்பும் மிக்கதாக மாறியது. ‘மகாபரிநிர்வாண திவஸ்’ என்று அழைக்கப்படும் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வினை ஜெய்பீம் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு ஏற்பாடு செய்தது. பெரியார் ஈ.வெ.ராமசாமி சௌக்கில் இருந்து புறப்பட்டு, 1.5 கிலோமீட்டர் தூரம் பயணித்து கணேசன் கோவிலில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு சென்று சேரும் வகையில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேரணி இரண்டு மணி நேரம் வரை நடக்கும்.
“இந்த நாள் எங்களுக்கு திருவிழா மாதிரி. அந்த மாபெரும் தலைவரையும், சாதிப் பாகுபாட்டுக்கு உள்ளான மக்களுக்காக அவர் ஆற்றியப் பணிகளையும் நினைவுகூரும் வகையில் அவரது பிறந்த நாளான ஏப்ரல் 14 மற்றும் அவரது நினைவு நாளான டிசம்பர் 6 ஆகிய இரண்டு நாட்களையும் மொத்த மும்பை நகரமும் கொண்டாடும்,” என்கிறார் வெண்ணிலா சுரேஷ் குமார். கணவர் சுரேஷ் குமார் ராஜுவுடன் இணைந்து செயல்படும் அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினர் அவர். “இந்தப் பேரணிப் பாதையை நீலக் கொடிகளால் அலங்கரித்ததோடு, வீடு வீடாகச் சென்று மக்களை நிகழ்வில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தோம்.”
தாராவியில் உள்ள ஒரே ஒரு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார் வெண்ணிலா. தங்கள் தலைவரின் பணிகளைப் புகழ்ந்து தமிழில் பாடல் இசைத்துக்கொண்டிருந்த ஒரு குழுவோடு பின்னர் அவர் சேர்ந்துகொள்கிறார்.
வடக்கு மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்யும் சுரேஷுக்கு வயது 45. அவர் 14 மணி நேர ஷிப்ட்டில் வேலை செய்து மாதம் சுமார் ரூ.25,000 சம்பளம் வாங்குகிறார். 41 வயதாகும் வெண்ணிலா வீட்டுப் பணியாளராக வேலை செய்கிறார். தாராவி அருகே உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது ஆகிய வேலைகளை செய்யும் இவர் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் உழைத்து மாதம் ரூ.15 ஆயிரம் சம்பாதிக்கிறார்.
இந்த தம்பதிக்கு கார்த்திக் (17 வயது), அறன் (12 வயது) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் மும்பையில் உள்ள தனியார் கல்விக் கூடங்களில் படிக்கிறார்கள். “தாதரில் உள்ள சைதன்யபூமி போன்ற பிற இடங்களில் நடக்கும் நிகழ்வுகளிலும் நாங்கள் பங்கேற்கிறோம். தாராவியில் பெரும்பாலும் பறையர் சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் அம்பேத்கரைப் பின்பற்றுகிறார்கள். இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்கள்,” என்கிறார் வெண்ணிலா.
தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்களான வெண்ணிலாவும் சுரேஷும் சொந்த மாநிலத்தில் பட்டியல் சாதியாக வகைப்படுத்தப்பட்ட பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். “1965ல் வேலை தேடி திருநெல்வேலியில் இருந்து தாராவி வந்தவர் என் தந்தை,” என்கிறார் வெண்ணிலா. நீர்ப்பாசனப் பற்றாக்குறை உள்ளிட்ட சிக்கல்கள் காரணமாக விவசாயத்தில் இருந்து போதிய வருமானம் இல்லாத காரணத்தால் அவர்களது குடும்பம் புலம்பெயர்ந்தது.
தாராவியில் தாங்கள் வசிக்கும் பகுதியிலும் அதைச் சுற்றியும் உள்ள அம்பேத்கரியவாதிகளை ஒருங்கிணைப்பதில் இந்த இணையர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். “அம்பேத்கரைப் பற்றியும் அவரது பங்களிப்புகளைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏப்ரல் 14 மற்றும் டிசம்பர் 6 ஆகிய தேதிகளில் தாராவியில் மக்கள் திரள் நிகழ்வுகளை” 2012ம் ஆண்டு முதல் ராஜா குட்டி ராஜு, நித்யானந்த் பழனி, அனில் சந்தினி மற்றும் பிறருடன் சேர்ந்து நடத்தத் தொடங்கியதாக கூறுகிறார் சுரேஷ்.
ஓட்டுநர் வேலைக்கு செல்லாத நேரங்களில் ஜெய்பீம் ஃபவுண்டேஷன் வேலைகளை தன்னார்வத்தோடு செய்கிறார் சுரேஷ். தங்கள் அமைப்பில் 2012-ல் 20 உறுப்பினர்கள் இருந்தார்கள் என்றும், இந்த எண்ணிக்கை தற்போது 150 ஆக உயர்ந்திருப்பதாகவும் கூறுகிறார் அவர். “பெரும்பாலான உறுப்பினர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளிகள். ஓட்டுநர்களாகவும், ரயில்வேயிலும் வேலை செய்யும் அவர்கள், ஃபவுண்டேஷன் நிகழ்வுகளில் பங்கேற்கிறார்கள்,” என்கிறார் அவர்.
9-ம் வகுப்போடு பள்ளி செல்வதை நிறுத்திவிட்டு சம்பாதிக்கத் தொடங்கியவர் வெண்ணிலா. சமையலர் வேலை பார்த்தபோதும், ஒரு அலுவலகத்தில் வேலை செய்தபோதும் தாம் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டதாக கூறுகிறார் வெண்ணிலா. 2016-ம் ஆண்டு வெண்ணிலாவும் அப்பகுதியை சேர்ந்த இன்னும் சில பெண்களும் சேர்ந்து‘மகிழ்ச்சி மகளிர் பேரவை’ என்ற சுய உதவிக் குழுவைத் தொடங்கினர். “பெண்களுக்கு இங்கே மனமகிழ் செயல்பாடுகள் பெரிதாக இல்லை. எனவே பெண்களுக்கான இந்த அமைப்பின் மூலம் சேர்ந்து நிகழ்ச்சிகளை நடத்துவது, சேர்ந்து சினிமாவுக்குப் போவது என்று செயல்படுகிறோம்,” என்கிறார் அவர். பொதுமுடக்க காலத்தில் வெண்ணிலாவுக்கு உள்ள தொடர்புகளின் உதவியோடு தாராவி மக்களுக்கு உணவு, மளிகைப் பொருட்கள், சிறிய அளவிலான நிதியுதவி ஆகியவற்றை வழங்கியது இந்த சுய உதவிக் குழு.
“பெண்கள் எப்போதும் ஒடுக்கப்பட்டவர்கள், வீட்டுக்குள்ளேயே அடைக்கப்பட்டவர்கள். எனவே இந்த தளத்தில் ஒருவரோடு ஒருவர் கலந்து பேசிக்கொள்வது எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்கிறார் வெண்ணிலா.
தமிழில்: அ.தா.பாலசுப்ரமணியன்