இடமலக்குடியைச் சேர்ந்த 60 பெண்கள், 18 கிமீ மலைப்பாதையையும் காடுகளையும் யானை உலாவும் பிரதேசங்களையும் கடந்து, நூற்றுக்கும் மேற்பட்ட சூரிய மின் தகடுகளை தங்கள் தலையில் சுமந்து வந்து வரலாறு படைத்துள்ளனர். கேரளாவில் இருக்கும் இந்த தொலைதூர பஞ்சாயத்தில் இதுவரை மின்சாரமே கிடையாது. 240 குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் சூரிய மின் தகடும் பேட்டரிகளும் மட்டுமே மின்சாரத்திற்கான ஒரே ஆதாரமாக உள்ளது. இதில் கிடைக்கும் மின்சாரத்தின் மூலம் தொலைக்காட்சியும் பார்க்கலாம்.
ஒருவழியாக அனைவருக்கும் சூரிய ஒளி மின்சாரம் கிடைக்க கிராம பஞ்சாயத்து நடவடிக்கை எடுக்க தொடங்கியதும் – அதுவும் இவர்களின் நிர்பந்தத்தால் – அந்த பொறுப்பை இந்த பெண்களே ஏற்றுக் கொண்டனர். 9 கிலோ எடையுள்ள ஒவ்வொரு சூரிய மின் தகடையும், பெட்டிமுடி முதல் இங்கு வரையிலான மேடும் பள்ளமும் நிறைந்த மலைப்பாங்கான பாதை வழியாக நடந்தே கொண்டு வந்தனர். இடுக்கி மாவட்டத்தில் உள்ள கேரளாவின் முதல் பழங்குடி பஞ்சாயத்தான இடமலக்குடியை அடைய வேறு வழியே இல்லை. இதற்காக இவர்கள் “சுமத்து கூட்டம்” (தலைச்சுமை பணியாளர் குழு) என்ற குழுவை உருவாக்கியுள்ளனர். இதன் காரணமாக இதுபோன்ற பணிகளில் ஏகபோகத்தை அணுபவித்து வந்த உள்ளூர் ஆண் சுமைதூக்கிகள் கொதிப்படைந்துள்ளனர்.
இந்த பெண்கள் அனைவருமே ஆதிவாசிகள் ( நூறு பழங்குடியினரை உள்ளடக்கிய இந்தியாவின் ‘முதல் வாசிகள்’). அனைவரும் முதுவன் பழங்குடி இனத்தின் உறுப்பினர்கள். பெரும்பாலும் இவர்கள் அனைவரும் கேரளாவின் வறுமை ஒழிப்பு மற்றும் பாலின நீதி இயக்கமான குடும்பஸ்ரீ-யின் உறுப்பினர்கள். இந்த அமைப்பில் நான்கு மில்லியன் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
“சுமந்து கொண்டு வர ஒன்பது மணி நேரம் ஆனது” என சிரிக்கிறார் இந்த பஞ்சாயத்துக்குரிய குடும்பஸ்ரீ பிரிவின் தலைவர் ரமனி அர்ஜூனன். ( தங்கள் இயக்கத்தை இவர் சமூக வளர்ச்சி சங்கம் – சிடிஎஸ் என்றே அழைக்கிறார் ). “கொஞ்சம் உடல் பலமிக்கவர்கள் இரண்டு தகடுகளை தங்கள் தலையில் சுமந்து வந்தனர். மற்றவர்கள் ஒன்றை மட்டும் தூக்கினர். நீங்கள் தான் பாதையை பார்த்து வர வேண்டும். இது எளிதான காரியம் இல்லை. ஆனால் நாங்கள் வெற்றிகரமாக செய்து முடித்தோம்”.
ரமனி கூறுகையில், “ஒரு தகடுக்கு 85 ரூபாய் எங்களுக்கு கிடைக்கும். மேலும் இது பஞ்சாயத்து வேலை என்பதால், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் எங்களுக்கு கூடுதலாக 180 ரூபாய் கிடைக்கும். ஆக, இரண்டு தகடுகள் சுமந்து வந்தவர்களுக்கு 350 ரூபாய் கிடைக்கும். இத்தகைய கொடூரமான வேலைக்கு இது சிறிய தொகையே. ஆனாலும், வருடத்தின் பெரும்பாலான நாட்களில் கிடைப்பதை விட இது பெரிய தொகை. இதுபோன்ற பணிகளை செய்ய அவர்கள் தயாராக இருப்பதாக கூறுகிறார் ரமனி. இவர் கனிவாக, மெதுவாக பேசினாலும் உறுதியான தலைவர் என்பது தெளிவாக தெரிகிறது.
ஆனால். குடும்பஸ்ரீ அல்லது ‘சிடிஎஸ்’ குழு இடமலக்குடியில் இன்னும் பல சவாலான காரியங்களை செய்து வருகிறது. குறிப்பாக, சிறிய இடத்தில் ‘குழு விவசாயம்’ செய்து வருகிறார்கள். இயற்கை விவசாயம் மூலம் உணவுப் பயிர்களை விளைவிப்பதிலும் கவனம் செலுத்துகிறார்கள். மேலும் மாற்று சாகுபடி முறையை கடைபிடிக்கிறார்கள். “நாங்கள் ரசாயன உரங்களை பயனபடுத்துவதில்லை. அதுமட்டுமல்லாமல் மரங்களையும் வெட்டுவதில்லை”.
இது மிகவும் கடுமையான வேலை. ஆனாலும் அவர்கள் வெற்றிகரமான விவசாயிகள். யானைகளும், காட்டு எருதுகளும், மற்ற விலங்குகளும் அடிக்கடி இவர்களது பயிர்களை நாசமாக்குகின்றன. ஏற்கனவே ஆபத்தான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள், விவசாயம் செய்வதால் கூடுதலாக உடல்ரீதியான ஆபத்தையும் சந்திக்கிறார்கள். இது காட்டிலுள்ள நிலம் என்பதால் அவர்களிடம் பட்டாவும் இருக்காது. அது இவர்களுக்கு கிடைக்கவும் செய்யாது. எல்லை வகுத்து இடங்களை பிரித்திருப்பது யாருடைய கண்களுக்கும் தெரியவில்லை என்றாலும், அவர்களுக்கே ஆதிவாசிகள் வேலை செய்கிறார்கள். இவர்களுக்குள் எந்த மோதலும் இல்லை.
“இடமலக்குடியில் 40 சிடிஎஸ் குழுக்கள் உள்ளன. அதில் 34 குழுக்கள் விவசாயத்தில் ஈடுபடுகின்றன. ஒவ்வொரு குழுவிலும் ஐந்து நபர்கள் அல்லது ஒரு குடும்பமாக ஈடுபடுவார்கள்” என்கிறார் ரமனி. அவருக்கு அருகில் அமர்ந்திருக்கும் 30 குடும்பஸ்ரீ உறுப்பினர்கள் தங்களுக்குள்ளேயே பேசிக் கொள்கிறார்கள். சாந்தி சிவம், காமாட்சி தேவந்திரன், கௌசல்யா லோகனன், மல்லிகா முத்துப்பாண்டி மற்றும் பலர் அங்கு உள்ளனர். பல குரல்கள் பேசுவதை நம்மால் கேட்க முடிகிறது.
“எங்கள் விவசாய குழு ( க்ருஷி சங்கம்) ராகி, நெல் மற்றும் இதர உணவுப் பயிர்களை விளைவிக்கிறது. மரவள்ளிக்கிழங்கு மற்றும் வாழையும் பயிரிட்டுள்ளோம்”. சிலர் ஏலக்காயை இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்துள்ளார்கள். “ஆனால் அதிகபட்சமாக உணவுப் பயிர்களையே நாங்கள் விளைவிக்கிறோம்”.
“பயிர்கள் நன்றாக வளர்கின்றன. எல்லா விஷயங்களும் நன்றாக உள்ளது. ஆனால் இங்கு இரண்டு பிரச்சனைகள் உள்ளது. ஒன்று: காட்டு விலங்குகள் எங்கள் முதல் பயிரை 50 சதவிகிதம் சீரழித்துவிட்டது. இரண்டாவது: உபரியை எங்கே விற்பது? சந்தை எங்கே? அப்படியே சந்தைக்கு செல்ல வேண்டுமானால், காட்டு யானை உலாவக்கூடிய பிரதேசத்தில் 18கிமீ நடந்து செல்ல வேண்டும்”.
சந்தை எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது? “குடும்பத்திற்கு உணவளிப்பது தான் எங்கள் முதல் நோக்கம் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். அதுபோக மீதமிருப்பதை தான் சந்தைக்கு எடுத்துச் செல்கிறோம். எனினும், அவையும் எங்களுக்கு உதவுகின்றன. எங்களுக்கு தேவையான மற்ற பொருட்களை வாங்க இதன் மூலமே பணம் கிடைக்கிறது. ஆனால் சந்தைக்கு செல்வதற்கு சாலை வசதி இல்லை. போக்குவரத்து வசதியும் கிடையாது”.
“எங்களுக்கு இங்கு ஒரு வங்கி கிளை வேண்டும். ஒரு சிலரிடம் மட்டுமே வங்கி கணக்கு உள்ளது”. இந்த அரிதான கிராம பஞ்சாயத்தின் தலைவர் சமீபத்தில் தான் தனது பெயரில் கையெழுத்து போட கற்றுக்கொண்டார் என்ற செய்தி கேரளாவிற்கு கொஞ்சம் அதிசயமான விஷயமே. தங்களால் வங்கி கணக்கை இயக்க முடியும் என்ற நம்பிக்கை அந்த பெண்களிடம் இருக்கிறது. தங்களது நடவடிக்கைகள் மற்றும் சேமிப்பு மூலம் ஐந்து லட்ச ரூபாய் வரை இங்குள்ள சிடிஎஸ் குழுக்கள் திரட்டியுள்ளது. இந்த பணம் அனைத்தும் பொதுத்துறை வங்கியின் வைப்பு நிதியில் போடப்பட்டுள்ளது. இவை எதுவும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படாது.
அவர்களுக்கு எது மிகவும் முக்கியம்: குழு விவசாயமா? அல்லது தனிநபர் விவசாயமா? இரண்டிற்கும் பங்குள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.
“குழு விவசாயமே நல்லது” என்கிறார் ரமனி. சுற்றியுள்ளவர்களும் அதை ஆமோதிக்கிறார்கள். ஒன்றாக பணியாற்றுவதால், ஒரு நபர் தடுமாறினாலும் அவருக்கு உதவி செய்ய மற்றவர்கள் வருவார்கள். “தனிநபர் விவசாயம் செய்யவும் நான் விரும்புகிறேன்” என்கிறார் மற்றொரு பெண். இதிலும் வெகுமதி உள்ளது. ஆனால் எங்கள் குடும்பத்திற்கு உணவளிக்க இந்த முறை சிறந்ததாக உள்ளது. குழுவாக இருப்பதால், விவசாயத்தை மீறி மற்ற சில விளைவுகளும் உள்ளது. உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் ஒத்துழைப்பாகவும் இருக்கிறார்கள். இது குடும்ப வாழ்க்கையிலும் பரவியுள்ளது. இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஆகையால் நாங்கள் ஏன் இரண்டையும் சேர்த்து செய்யக்கூடாது?”
உணவு பாதுகாப்பிற்காக இந்த குழுக்கள் கையாளும் புதுமையான அணுகுமுறை குறித்து டுரோண்டோவில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அனன்யா முகர்ஜி விரிவாக எழுதியுள்ளார். “கேரளாவிலுள்ள 2,50,000 குடும்பஸ்ரீ பெண்கள் ஒன்றாக சேர்ந்து விவசாய கூட்டுறவை அமைத்துள்ளனர். இதன்மூலம் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, பயிர் செய்து, விளைவித்த பொருட்களை தங்கள் தேவைக்கு பயன்படுத்தியது போக மீதமுள்ளதை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்கிறார்கள். இது விவசாயத்தில் பெண்களின் பங்கேற்பை அதிகப்படுத்துகிறது. அதோடு பெண்களை உற்பத்தியாளர்களாக உறுதிசெய்வதோடு, உற்பத்தி, விநியோகம் மற்றும் உணவு நுகர்தல் மீது அவர்களுக்கு கட்டுப்பாடு வந்துள்ளது.
இத்தனை சிரமமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் இவை அனைத்தையும் செய்து முடித்துள்ளனர் இடமலக்குடி பெண்கள்.
“உங்களை நீங்கள் எப்படி பார்ப்பீர்கள்? உற்பத்தியாளராகவா அல்லது தொழிலாளியாகவா அல்லது பணியாளராகவா?” என அவர்களிடம் கேட்டோம். அங்கிருந்த ஒவ்வொருவரும் தங்களை உற்பத்தியாளராக பார்க்கவே விரும்புகிறார்கள்.
இன்னொரு விஷயத்தையும் ரமனியிடம் கேட்டோம். “இந்த நிலத்தின் பழங்குடி மக்களான எங்களிடம் தான் காடுகளின் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என நீங்கள் கூறுகிறீர்கள். புதிதாக போடப்படவுள்ள சாலையால் காடும் முதுவன் பழங்குடியினரும் அழிந்து விடுவார்கள் என்றும் கூறுகிறீர்கள். அதேநேரத்தில், சந்தைக்கு செல்வதற்காக 18கிமீ தூரம் சிரமப்பட்டு நடக்க வேண்டியிருக்கிறது என்றும் புகார் கூறுகிறீர்கள். இந்த ஒரு காரணத்திற்காக சாலை வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். இது முரண்பாடாக தோன்றவில்லையா?”
“இல்லவே இல்லை. நாங்கள் திறந்தவெளி நெடுஞ்சாலை கேட்கவில்லை. முழுதும் கட்டுப்படுத்தப்பட்ட ஜீப் சாலையே நாங்கள் கேட்கிறோம். சுரங்க தொழிலாளர்கள், மரம் வெட்டுபவர்கள் மற்றும் வெளியாட்கள் இதை பயன்படுத்த முடியாத படி வனச்சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தலாம். நாங்களும் இதை தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப் போகிறோம். சந்தைக்கு செல்வதற்கே இது பெரிதும் தேவைப்படுகிறது” என கூறுகிறார் ரமனி.
தொலைதூர கிராமங்களிலிருந்து ‘சமூககுடிக்கு’ வந்த பல பெண்கள் இருட்ட தொடங்கியதும் கிளம்ப தயாராகின்றனர். குறைவான வெளிச்சத்தில் மலைப்பாங்கான பாதையில் காட்டிற்குள் அவர்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டும்.
சிரமப்பட்டு 18 கிமீ நடந்து இங்கு வந்தடைந்ததும் எங்கள் குழுவிலுள்ள எட்டு பேரும் களைப்படைந்தனர். அதுவும் நாங்கள் எந்த சூரிய மின் தகடையும் தலையில் சுமக்கவில்லை. இந்த அசாதாரணமான சிடிஎஸ் குழுக்களை சந்தித்து பேசவே இவ்வுளவு தூரம் நாங்கள் வந்தோம். குடும்பஸ்ரீ தரத்தை வைத்து பார்க்கும் போது, இடமலக்குடி குழுக்கள் அதைவிட சிறப்பானது என கேரளாவின் உள்ளாட்சி துறை அமைச்சர் எம்.கே.முனீர் எங்களிடம் திருவணந்தபுரத்தில் வைத்து கூறியிருந்தார். அப்போது எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது. தனது சொந்த அமைச்சரவைக்கு கீழுள்ள முயற்சிகளை அமைச்சரே பாராட்டும் போது நமக்கு சந்தேகம் வருவது நியாயமே. அதன்பிறகு இடமலக்குடியில் பெண்களை சந்தித்த பிறகு, இவர்களின் சாதனைகளை அமைச்சர் நன்றாக புரிந்து வைத்துள்ளார் என தோன்றுகிறது.
இந்த கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் பிபிசி செய்தியில் (இணையம்) ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளியானது. முதலில் இந்த கட்டுரை மலையாள மொழியில் மாத்ருபூமி இதழில் வெளியானது.
தமிழில்:
வி. கோபி மாவடிராஜா