1968 டிசம்பரின் கடைசி வாரத்தில், வெண்மணி கிராமத்தின் கீழ்வெண்மணி குக்கிராமத்தில் அடக்குமுறை செய்து வந்த நிலவுடமையாளர்களுக்கு எதிராக வெகுகாலமாக  கொதித்துக் கொண்டிருந்த,  தொழிலாளர்களின், போராட்டம் உச்சத்தை எட்டியது. கூலி உயர்வு, விவசாய நிலங்கள் மீதான அதிகாரம், நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளோடு தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், நிலமற்ற தலித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  நிலவுடமையாளர்களின் பதில் என்னவாக இருந்தது தெரியுமா? குக்கிராமத்தில் இருந்த 44 தலித் தொழிலாளர்களை உயிருடன் எரித்து கொன்றனர். தலித் மக்களிடம் கிளர்ந்தெழுந்த அரசியல் விழிப்புணர்வை தாங்கிக்கொள்ள முடியாத பணபலம் கொண்ட நிலவுடமையாளர்கள், அண்டை கிராமங்களிலிருந்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த முடிவு செய்தனர். அதோடு மட்டுமல்லாமல், பெருமளவில் தாக்குதல் தொடுக்கவும் திட்டமிட்டனர்.

டிசம்பர் 25 ஆம் தேதி இரவு, நிலவுடமையாளர்கள் குக்கிராமத்தை சுற்றி வளைத்தனர். தப்பிக்கும் அனைத்து வழிகளையும் துண்டித்து தொழிலாளர்களை தாக்கினர். 44 நபர்களை கொண்ட ஒரு குழு தப்பிக்க முயன்று குடிசை ஒன்றில் நுழைந்தது. அவர்கள் உள்ளே வைத்து பூட்டப்பட்டார்கள். தாக்கியவர்கள் அக்குடிசைக்கு தீ வைத்தனர். உள்ளே இருந்த அனைவரும் உயிருடன் எரிக்கப்பட்டனர். கொல்லபட்டவர்களில் பாதிபேர் 16 வயதுக்கு கீழிருந்த 11 ஆண் மற்றும் 11 பெண் குழந்தைகள். இருவருக்கு 70 வயதுக்கும் மேல். மொத்தத்தில் 29 பெண்கள், 15 ஆண்கள். அவர்கள் அனைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்த தலித் மக்கள்.

1975-ம் ஆண்டில், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 25 பேரையும் அன்றைய மெட்ராஸ்  உயர்நீதிமன்றம் விடுவித்தது. ஆனால் அந்த கொடுஞ்செயலை ஆவணப்படுத்திய மைதிலி சிவராமன், அவருடைய சக்திவாய்ந்த தொடர் எழுத்துகளாலும் விரிவான பகுப்பாய்வுகளாலும் படுகொலைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். மேலும் அங்கு இருந்த வர்க்கம் மற்றும் சாதி ஒடுக்குமுறையின் அடிப்படை சிக்கல்களையும் வெளிக்கொண்டு வந்தார். கோவிட் தொற்றால் 81 வயதில் மைதிலி சிவராமன் மறைந்த இந்த வாரத்தில், அந்த துக்க சம்பவத்தை வைத்து எழுதப்பட்ட இந்த கவிதையை நாங்கள் வெளியிடுகிறோம்.

சுதன்வா தேஷ்பாண்டே குரலில் கவிதையை கேட்கவும்

நாற்பத்து நான்கு கல்முஷ்டிகள்

கூரைகளற்ற குடிசைகள்
சுவர்களற்ற குடிசைகள்
தூசியாக சாம்பலாக
தரைமட்டமாக்கப்பட்ட குடிசைகள்

44 கல்முஷ்டிகள் வரிசையாக
இருக்கின்றன சேரியில்
ஒரு கோபத்தின் நினைவைப் போல்
ஒரு வரலாற்றின் போர்முழக்கத்தை போல்
உறைந்து எரியும் கண்ணீரைப் போல்
கிறிஸ்துமஸ் தினம் மகிழ்வளிக்காத
டிசம்பர் 25 1968 இரவின் கொடும்சாட்சியாக
கேளுங்கள் அந்த 44 பேரின் கதையை
அனைவரும் கேளுங்கள்

கூரைகளற்ற குடிசைகள்
சுவர்களற்ற குடிசைகள்
தூசியாக சாம்பலாக
தரைமட்டமாக்கப்பட்ட குடிசைகள்

4 படி நெற்பயிருக்கு மீண்டும் செல்வோம்.
நான்கு போதாது
போதவே போதாது என்றார்கள்
பசி கொண்ட நிலமற்றோர்
உட்கொள்ள அது போதாது
உணவுக்கான பசி, நிலத்துக்கான பசி
விதைகளுக்கான பசி, தம் வேர்களுக்கான பசி
உடைந்த முதுகெலும்பை அவர்களின் உழைப்பை
சிந்திய வியர்வையை உழைப்பின் கனியை
மீட்பதற்கான பசி.
அவர்களை சுற்றியிருந்த
மேல்சாதியினரும் நிலப்பிரபுக்களும் உண்மையை உணர வேண்டும்
என்கிற பசி.

கூரைகளற்ற குடிசைகள்
சுவர்களற்ற குடிசைகள்
தூசியாக சாம்பலாக
தரைமட்டமாக்கப்பட்ட குடிசைகள்

சிந்தனையில் கருத்துகளோடும்
அரிவாள் சுத்தியலோடும்
சிகப்பு உடைதரித்து
சிலர் இருந்தனர்.
ஏழைகளாக இருந்தனர்
கோபமாக இருந்தனர்
தலித் பெண்களாகவும் ஆண்களாகவும்
எதிர்ப்பு தெரிவிக்கும் உழைப்பின்
பிள்ளைகளாகவும் இருந்தனர்.
அனைவரும் திரள்வோம்
சங்கமாய் என்றனர்
முதலாளி நிலத்தை
அறுவடை செய்யோம் என்றனர்.
குமுறலை பாடுகையில்
அறியவில்லை அவர்கள்
யாருடைய அறுவடையை
யார் அறுத்தார்கள் என்று.

கூரைகளற்ற குடிசைகள்
சுவர்களற்ற குடிசைகள்
தூசியாக சாம்பலாக
தரைமட்டமாக்கப்பட்ட குடிசைகள்

என்றும் கணக்கோடும் இரக்கமற்றும்
கூர்மையோடும் இருந்தார்கள் முதலாளிகள்.
பக்கத்து கிராமங்களில் இருந்து
உழைப்பை வாங்கினார்கள்
"மன்னிப்புக்கு கெஞ்சுங்கள்"
என்றார்கள் அவர்கள்
"எதற்காக கேட்க வேண்டும்"
என்றார்கள் தொழிலாளர்கள்.
அவர்களை உள்ளே வைத்து
பூட்டினார்கள் நிலவுடமையாளர்கள்
அச்சம் கொண்ட ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும்
மொத்தமாக 44 பேர்களை
ஒன்றாய் ஒரு குடிசையில்
எரித்தார்கள், சுட்டார்கள்.
சிக்கி தவித்தவர்கள்
நடு இரவில்
நெருப்பாய் வெடித்தார்கள்.
22 குழந்தைகள் 18 பெண்கள் 4 ஆண்கள்
கீழ்வெண்மணி படுகொலையில்
கொல்லப்பட்டோர் எண்ணிக்கை.
பின் அவர்கள் வாழ்ந்தார்கள்
கத்திரித்த செய்தித்தாள்களிலும்
கதைகளிலும் ஆய்வுத்தாள்களிலும்.

கூரைகளற்ற குடிசைகள்
சுவர்களற்ற குடிசைகள்
தூசியாக சாம்பலாக
தரைமட்டமாக்கப்பட்ட குடிசைகள்

* செரி: பாரம்பரியமாக, தமிழ்நாட்டில் கிராமங்கள் இரண்டாக  பிரிக்கப்படுகின்றன, ஒன்று ஊர்கள், அங்கு ஆதிக்க சாதியினர் வாழ்கின்றனர். மற்றொன்று தலித்துகள் வசிக்கும் சேரிகள்

*கவிதையில் பயன்படுத்தப்படும் பல்லவி - கூரைகளற்ற குடிசைகள்/ சுவர்களற்ற குடிசைகள்/ தூசியாக சாம்பலாக/ தரைமட்டமாக்கப்பட்ட குடிசைகள் - மைதிலி சிவராமன் எழுதிய ‘ஜென்டில்மென் கில்லர்ஸ் ஆஃப் கீழவெண்மணி’ என்ற தலைப்பில் 1968ம் ஆண்டு படுகொலை பற்றிய கட்டுரையின் தொடக்க வரிகளிலிருந்து எடுக்கப்பட்டது. இது ‘எகானாமிக் மற்றும் பொலிடிகல்’ வார இதழில், மே 26, 1973, தொகுதி. 8, எண் 23, பிபி. 926-928ல் வெளியானது.

இந்த வரிகள் 2016ல், ‘லெஃப்ட் வர்ட்’ வெளியிட்ட மைதிலி சிவராமனின் “ஹாண்டெட் பை பையர்: சாதி, வர்கம், சுரண்டல் மற்றும் விடுதலை பற்றிய கட்டுரைகள்” புத்தகத்திலும் வருகிறது.

ஒலி: சுதன்வா தேஷ்பாண்டே ஜனா நாத்யா மஞ்ச் என்ற நாடக குழுவின் ஒரு நடிகரும் இயக்குநரும் ஆவார். இவர் ‘லெஃப்ட் வர்ட்’ ன்  ஆசிரியருமாவார் .

தமிழில் : கவிதா கஜேந்திரன்

Poem and Text : Sayani Rakshit

সায়নী রক্ষিত নিউ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে মাস কমিউনিকেশনে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করছেন ।

Other stories by Sayani Rakshit
Painting : Labani Jangi

২০২০ সালের পারি ফেলোশিপ প্রাপক স্ব-শিক্ষিত চিত্রশিল্পী লাবনী জঙ্গীর নিবাস পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়। তিনি বর্তমানে কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেসে বাঙালি শ্রমিকদের পরিযান বিষয়ে গবেষণা করছেন।

Other stories by Labani Jangi
Translator : Kavitha Gajendran

Kavitha Gajendran is Chennai based activist working with AIDWA.

Other stories by Kavitha Gajendran