“என் படிப்பு முடிந்தபிறகு நான் ஊர்க்காவல் படை அதிகாரியாவேன்,” என்கிறாள் 14 வயதாகும் சந்தியா சிங். அவளது சகோதரனான 16 வயதாகும் ஷிவம் ராணுவத்தில் சேர்வதற்காக இரண்டு வருடங்களாக ‘பயிற்சி’ எடுத்து வருகிறான். “அதிகாலை 4 மணிக்கு எழுந்து தினமும் உடற்பயிற்சி செய்கிறேன்“ என்கிறான். “ராணுவத்திற்கான பயிற்சிகளை யூ டியூப் மூலம் கற்கிறேன் - பார்களில் தொங்கும் பயிற்சி, பஸ்கி எடுத்தல் போன்ற பல பயிற்சிகளை நான் செய்கிறேன்.“
உத்தரப் பிரதேசத்தின் ஜலான் மாவட்டம் பினாரா கிராமத்தில் உள்ள தங்கள் வீட்டு மாடியிலிருந்து தொலைப்பேசி மூலம் என்னிடம் அவர்கள் பேசினர். பெற்றோர் வேலை செய்துவந்த ஆந்திரப் பிரதேசத்தின் கலிகிரி கிராமத்திலிருந்து மே 21ஆம் தேதி இவர்கள் வீடு திரும்பினர். “நாங்கள் வீட்டிற்கு வந்தபோது, இங்கு ஒன்றுமே இல்லை, எங்கள் கையிலும் எதையும் கொண்டு வரவில்லை,“ என்கிறார் 32 வயதாகும் அவரது தாய் ராம்தேகாளி. “அன்றிரவு நாங்கள் வெறும் வயிற்றுடன் தூங்கினோம்…“
10ஆம் வகுப்புத் தேர்வில் ஷிவம் 71 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றுவிட்டதாக ஜூலை 8ஆம் தேதி ராம்தேகாளி என்னிடம் தொலைப்பேசி மூலம் தெரிவித்தார். 11ஆம் வகுப்பில் சேர்ப்பது குறித்து கேட்டபோது, அவரது குரல் கம்மியது. “இணையவழிப் பள்ளியில் சேர்வது குறித்து எங்கள் பிள்ளைகள் கவலையில் இருக்கின்றனர். நாங்கள் மீண்டும் அங்கு சென்றுவிட்டால் [ஆந்திராவிற்கு], தொலைப்பேசியையும் எடுத்துச் சென்றுவிடுவோம். பிறகு எப்படி ஷிவம் இணைய வழி வகுப்பில் பங்கேற்பது? நாங்கள் இங்கு தங்கிவிட்டால் அவனது கல்விக்கு எப்படி பணம் கட்டுவது?“ என்று கேட்கிறார் அவர். தனியார் பள்ளியில் படிக்கும் இந்த இரண்டு பிள்ளைகளுக்கும் ஆண்டுக் கட்டணம் தலா ரூ. 15,000.
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கலிகிரி கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு தான் ராம்தேகாளியும், அவரது கணவரான 37 வயதாகும் பிரேந்திரா சிங்கும் மூன்று பானிப்பூரி கடைகளை நடத்தி வந்தனர். அவர்களுடன் சந்தியாவும், ஜலான் மாவட்டத்தின் பர்தார் கிராமத்தில் உள்ள தாத்தா பாட்டி வீட்டில் ஷிவமும் வசித்து வந்தனர். பால் சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் நாடோடி பழங்குடியினரின் பட்டியலில் உள்ளனர்.
ஷிவமிடம் ஒரு கைப்பேசி உள்ளது என்றாலும் (பெற்றோரைவிட்டு பிரிந்திருந்தபோது பயன்படுத்தியது) இரண்டு கைப்பேசிகளுக்கு அந்தக் குடும்பத்தால் ரீசார்ஜ் செய்ய முடியாது. “இப்போது ஒரு கைப்பேசிக்கு ரீசார்ஜ் செய்வதே சிரமமாகிவிட்டது,“ என்கிறார் ராம்தேகாளி.
“ஆந்திராவில் விளக்காவது [மின்சாரம்] இருந்தது,“ என்கிறார் வீரேந்திர சிங். “இங்கு எப்போது அது வரும் என்றே தெரியாது. சில நாட்களில் கைப்பேசிக்கு ஊட்டம் போடும் வரை மின்சாரம் இருக்கும். சில நாட்களில் அதுவும் இருக்காது.“
கோவிட்- 19 பரவலை தடுக்க மத்திய அரசு மார்ச் 24ஆம் தேதி அறிவித்த ஊரடங்கிற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே வீரேந்திராவிற்கு வருவாய் இழப்பு தொடங்கிவிட்டது. தாயின் இறுதிச் சடங்கிற்காக பினாரா வந்த அவர் நோய்வாய்பட்டுள்ள தந்தையையும் பராமரித்து வந்தார்.
மார்ச் 20ஆம் தேதியே ஆந்திராவின் கலிகிரி கிராமத்தைவிட்டு ஷிவமுடன் அவர் சென்றுவிட்டார். ராம்தேகாளியும், சந்தியாவும் ஏற்கனவே அங்கு இருந்தனர். ஊரடங்கும் தொடங்கிவிட்டது.
ஆந்திராவில் பல்வேறு குடிமக்கள் குழுக்கள் நடத்தும் கோவிட்-19 உதவி எண்ணுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி வீரேந்திரா அழைத்தார். பிறகு அங்கிருந்து ராம்தேகாளியின் சகோதரர் உபேந்திரா சிங் வசிக்கும் அனந்தபூர் மாவட்டம் கோக்கந்தி கிராமத்திற்கு அவர் குடும்பத்துடன் சென்றார். உபேந்திராவும் அங்கு பானிப்பூரி கடை தான் வைத்துள்ளார். உதவி எண்ணை தொடர்பு கொண்டதால் 8 பேர் கொண்ட குடும்பத்திற்கு கோதுமை மாவு, எண்ணெய், மளிகைப் பொருட்கள் ஆகியவை ஏப்ரல் மாதத்தில் இரண்டு முறை கிடைத்தன.
‘நாங்கள் அங்கு சென்றுவிட்டால் கைப்பேசி எங்களிடம் இருக்கும்? ஷிவம் எப்படி இணைய வழி வகுப்பில் பங்கேற்பது?
“சில அரசு அதிகாரிகள் எங்களிடம் வந்து 1-2 நாட்களில் எரிவாயு சிலிண்டர் வந்துவிடும். அதுவரை விறகை வைத்து சமாளித்துக் கொள்ளுங்கள் என்றனர். நாங்களும் சமாளித்து வருகிறோம்,“ என்று வீரேந்திரா என்னிடம் ஏப்ரல் 13ஆம் தேதி தொலைப்பேசியில் தெரிவித்தார். “எப்படி வீடு திரும்புவது என்ற தகவல் எதுவும் இதுவரை ஆந்திர அரசிடமோ, உத்தரபிரதேச அரசிடமோ, மோடி அரசிடமோ வரவில்லை.“
அரசின் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் இருக்கை கோரும் படிவத்தை மே2 ஆம் தேதி அக்குடும்பம் நிரப்பியது. பயணத்திற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனையை மே6 ஆம் தேதி அவர்கள் செய்தனர். “மருத்துவ அறிக்கை பற்றி ஒரு வாரம் கழித்து அதிகாரிகளிடம் கேட்டேன், இன்னும் வரவில்லை என்றார்கள்”என்கிறார் சிங். சில காலம் கழித்து மீண்டும் அவர் கேட்டுள்ளார். அதற்குள் ஒரு மாதம் ஓடிவிட்டது. இதற்கிடையில், அவர்களின் குடும்பத்திற்கு ரேஷன் பொருட்களை அளித்து வந்த உதவி எண் மே 10ஆம் தேதியுடன் மூடப்பட்டுவிட்டது.
[ஊரடங்கு] தொடக்கத்தில், எங்களிடம் உணவு இருந்தது, ரேஷன் பொருட்கள் வேண்டுமா என பல எண்களில் [என்ஜிஓக்கள், குடிமக்கள் குழுக்கள் மற்றும் பலர்] இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நாங்கள் நலமாக இருப்பதாக அப்போது உண்மையைச் சொன்னேன். இப்போது யாரும் அழைக்கவில்லை,” என்று என்னிடம் மே 11ஆம் தேதி வீரேந்திரா தெரிவித்தார்.
ஐந்து நாட்கள் கழித்து ஒன்பது பேர் கொண்ட அக்குடும்பம் உ.பி நோக்கி நடக்க தொடங்கியது. அவர்களில் உபேந்திராவும், அவரது மனைவி ரேகா தேவியும், அவர்களின் மூன்று வயது மகன் கார்த்திக்கும் இருந்தனர்.
மூன்று நாட்களில் அவர்கள் 36 மணி நேரம் நடந்தனர். ”மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் எங்களுக்கு உணவளித்தனர்,” என நினைவு கூர்கிறார் வீரேந்திரா. குழந்தைகள் கொண்ட இக்குழுவினர் கடை வாசல்களிலும், சாலையோரங்களிலும் பல முறை நின்று ஓய்வெடுத்துச் சென்றனர். துணிகள் உள்ளிட்ட சுமைகளை சுமப்பதற்கு மட்டும் கொக்கண்டி கிராமத்தில் மிதிவண்டியை வாடகைக்கு எடுத்தனர். இருந்தும் பெரும்பாலான பொருட்கள் கலிகிரியில் உள்ள அறையில் தான் இப்போதும் உள்ளது என்கிறார் வீரேந்திரா. மார்ச் மாதம் முதல் வாடகை செலுத்தாத காரணத்தால் வீட்டு உரிமையாளர் அவற்றை என்ன செய்வார் எனத் தெரியவில்லை என்கிறார்.
150 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்ற இக்குடும்பத்திற்கு உ.பி செல்லும் லாரி ஒன்று கிடைத்தது. லாரியில் 41 பெரியவர்கள் குழந்தைகளுடன் சென்றனர். ஒரு நபருக்கு ரூ.2500 வரை அவர்கள் செலுத்தினர். வீரேந்திராவிடம் ரூ.7000 மட்டுமே பணம் இருந்ததால், எஞ்சிய நான்கு பேருக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி செலுத்தியுள்ளார். எட்டு நாள் பயணத்தில் லாரி ஓட்டுநர் வண்டியை நிறுத்த ஒப்புக்கொள்ளும் போதெல்லாம், வீரேந்திரா குடும்பத்திற்கு ஒரு நாளுக்கு ரூ.400-500 வரை உணவு மற்றும் குடிநீருக்கு செலவாகியுள்ளது.
ஊரடங்கிற்கு முன் வீரேந்திராவும், ராம்தேகாளியும் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை வருவாய் ஈட்டினர். மூன்று பானிப்பூரி வண்டிகளை அவர்கள் நடத்தி வந்தனர். 2019ஆம் ஆண்டு இறுதி வரை அவர்களுடன் உறவினர்கள் இரண்டு பேர் (இருவர் பெயருமே ராகுல் பால்) வண்டிகளை தள்ளி வேலை செய்து வந்தனர். (தீபாவளி சமயத்தில் ஒரு ராகுலும், டிசம்பர் மாதத்தில் இன்னொரு ராகுலும் உ.பி திரும்பிவிட்டனர்).
தினமும் அதிகாலை 4 மணிக்கு ராம்தேகாளியும், வீரேந்திராவும் வேலையை தொடங்குவார்கள். நள்ளிரவில் தான் உறங்குவார்கள். வீட்டு வாடகை, தொழில் செலவுகள், பள்ளிக் கட்டணம் எல்லாம் போக மிஞ்சும் சொற்ப தொகையை அவர்கள் சேமித்தனர். ”எங்களிடம் அவ்வளவு பணமில்லை. வீட்டுக்கு வரவே ரூ.10,000க்கு மேல் செலவானதால் என் சேமிப்பு மொத்தமாக காலியாகிவிட்டது,” என்று ஜூன் 26ஆம் தேதி சிங் என்னிடம் சொன்னார்.
பயணம் தொடங்கிய இரண்டாவது அல்லது மூன்றாவது நாளன்று பலத்த மழை பெய்த காரணத்தால் லாரி நிறுத்தப்பட்டது. நாங்கள் அப்படியே நனைந்துவிட்டோம். லாரியை சுத்தம் செய்துவிட்டு பயணத்தை தொடங்கினோம்,” என்கிறாள் சந்தியா. பயணத்தின்போது பலரும் பல மணி நேரத்திற்கு நின்றுகொண்டே வந்துள்ளனர். சந்தியாவிற்கு அமர இடம் கிடைத்தது.
பினாரா கிராமத்திற்கு வந்த ஒரு வாரத்தில் சந்தியாவிற்கு காய்ச்சல் வந்துவிட்டது. “நாங்கள் இங்கு வந்துவிட்டதால் ஆந்திராவில் எப்படி படிப்பை தொடர்வது என அவள் கவலையில் இருக்கிறாள். என் மகள் நன்றாக படிப்பாள், அவளுக்கு பாதி கர்நாடகா, பாதி ஆந்திரா தெரியும்,“ என்று தனது மகளுக்கு கன்னடம், தெலுங்கு மொழி தெரியும் என்பதை ராம்தேகாளி சொல்கிறார்.
2018ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் கலிகி கிராமத்திற்கு வருவதற்கு முன் கர்நாடகாவின் கடக் நகரில் அக்குடும்பம் 10 ஆண்டுகள் வசித்து வந்தனர். “மாலையில் தெரு தெருவாகச் சென்று கோபி மஞ்சூரியன் [காளிஃபிளவர் வறுவல்] விற்று வந்தேன்,“ என்கிறார் வீரேந்திரா. பகலில் ராம்தேகாளி அவற்றை தயாரிப்பார். “பல சமயம் சாப்பிட்டுவிட்டு மக்கள் பணம் தராமல் எங்களை திட்டுவார்கள்,“ எனும் வீரேந்திரா. “வேற்றூரில் இருப்பதால், நான் அவர்களிடம் சண்டையிட மாட்டேன், சமாளித்துக்கொள்வேன்.“
அக்குடும்பம் வீடு திரும்பி ஒரு மாதத்திற்கு மேல் இருக்கும், ஜூலை 8ஆம் தேதி சிங்கிடம் நான் பேசினேன். “நாங்கள் மீண்டும் [ஆந்திரப் பிரதேசத்திற்கு], திரும்ப தயாராக உள்ளோம்,“ என்று என்னிடம் அவர் சொன்னார். ”[கோவிட்-19] நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை பார்த்தால், வாடிக்கையாளர்கள் [பானிப்பூரி சாப்பிட] வருவார்களா என்று தெரியவில்லை.”
வீரேந்திராவைப் போன்று 99 சதவீத சுயதொழில் செய்வோர் (தெருவோரம் கடை வைத்திருப்போர் உட்பட) ஊரடங்கு காலத்தில் வருவாயின்றி இருந்ததாக சிக்கித்தவிக்கும் தொழிலாளர்களுக்கான செயற் குழுமம் குறிப்பிடுகிறது. (புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னைகளை அறிவதற்காக மார்ச் 27ஆம் தேதி இக்குழுமம் அமைக்கப்பட்டு தோராயமாக 1750 அழைப்புகளை ஆவணப்படுத்தி மூன்று அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.)
பினாராவை சுற்றியுள்ள பகுதிகளின் குடிசை வீடுகளை சரிசெய்து கொடுக்கும் வேலைகளை வீரேந்திரா செய்து வருகிறார். இதிலிருந்து தினமும் ரூ.200 வரை கிடைக்கும். சில வாரங்களில் 2-3 நாட்கள் வேலை இருக்கும். சில சமயம் அதுவும் இருக்காது. சமையல், துணி துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற வீட்டுவேலைகளை ராம்தேகாளி செய்து வருகிறார். “பர்தா அணிய வேண்டி உள்ளதால் வீட்டிற்கு வெளியில் சென்று வேலை செய்வது மிகவும் கஷ்டம். வயல்களில் வேலை செய்வதும் கஷ்டம். ஆனால் கிடைக்கும் இடத்திற்கு சென்று வேலை செய்து வருகிறேன்,“ என்று ஜூலை 30ஆம் தேதி அவர் என்னிடம் தெரிவித்தார்.
“இங்கு இருந்து கொண்டு எதுவும் செய்யாமல் வீணாகிறோம். கடன்கள் அதிகரித்து வருகின்றன…“ என்கிறார் அவர். கைப்பேசி ரீசார்ஜ் செய்வதற்கு கூட கடன் வாங்க வேண்டி உள்ளது. தனது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு என ஊரடங்கு காலத்தில் ஏற்படும் செலவு ரூ. 30,000க்கு மேல் இருக்கும் என்கிறார் வீரேந்திரா. ஜூலை 30ஆம் தேதி எரிவாயு சிலிண்டர் தீர்ந்துவிட்டது என்று சொல்லும் ராம்தேகாளி, “யார் வீட்டிற்காவது சென்று உணவு சமைக்க வேண்டும். இப்போது வயிற்றுக்கு மட்டும் தான் ஈட்டுகிறோம், இப்படி ஒரு நிலை இதற்கு முன் இருந்தது கிடையாது.“
பினாரா கிராமத்தில் இக்குடும்பத்திற்கு சொந்தமாக சுமார் 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. மழைக்காக இரண்டு மாதங்களுக்கு மேலாக காத்திருந்த நிலையில் ஜூலை 29ஆம் தேதி நல்ல மழை பெய்ததால் அவர்கள் எள்ளு விதைத்தனர். வெண்டை, உளுந்து பயிர்களையும் வீரேந்திரா பயிரிட்டுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் இருந்தபோது நிலத்தை அவரது மாமா பார்த்துக் கொண்டார். கடந்தாண்டு அவர்கள் கோதுமை, கடுகு, பட்டாணி சாகுபடி செய்தனர். உற்பத்தியில் சிலவற்றை விற்றது போக மிச்சத்தை குடும்பத்திற்காக வைத்துள்ளனர்.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பதிவு செய்திட பினாராவிற்கு வந்த ஒரு வாரத்தில் வீரேந்திரா முயன்றார். தகுதியுள்ள சிறு மற்றும் ஏழை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.6000 வழங்குகிறது. ஆனால் அவர் விண்ணப்பிக்கும் கடைசி தேதியை தவறவிட்டுவிட்டார். எனினும் அவர் குடும்ப அட்டைக்கு பதிவு செய்துவிட்டார்.
கடைசியாக வீரேந்திராவிடம் ஜூலை 30ஆம் தேதி பேசியபோது, இந்தாண்டு விளைச்சல் எப்படி இருக்கும் என தெரியவில்லை என்றார்: “மழை பெய்தால், பயிர்கள் வளரும். எப்போது மழை பெய்யும், எப்போது அவை வளரும் என்று எனக்கு தெரியாது.“
அவர் பானிப்பூரி தொழிலை மீண்டும் தொடங்க காத்திருக்கிறார், “தண்ணீர் வேண்டுமென்றால் நாம் தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும், தண்ணீர் நம்மை தேடி வராது“ என்றார்.
இச்செய்தியாளர், இக்கட்டுரையில் வரும் உதவி எண்ணை நடத்திய ஆந்திர பிரதேசத்தின் கோவிட் ஊரடங்கு நிவாரணம் மற்றும் கூட்டுச்செயலுக்கான தன்னார்வலராக இருந்தார்.
முகப்பு படம்: உபேந்திரா சிங்