ஒடிசா கவர்னரும், அவரின் மனைவியும் குடியரசு தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவும், அதற்குப் பின்னர்த் தேநீருக்கு ராஜ் பவன் வர வேண்டும் எனவும் லட்சுமி ‘இந்திரா’ பண்டாவுக்கு அழைப்பு அனுப்பியிருந்தார்கள். அவரின் மகிழுந்தை நிறுத்த கவர்ச்சிகரமான ‘வாகன நிறுத்த சீட்டு’-ம் (Parking Pass) அனுப்பப்பட்டு இருந்தது. அந்த அழைப்புக்கு லட்சுமி பதில் அனுப்பவில்லை. அவர் விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவும் இல்லை.
லட்சுமி பண்டாவுக்கு என்று தனியாக மகிழுந்து இல்லை. அவர் கோராபுட் மாவட்டத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் சாவல் எனப்படும் வசிப்பிடத்தில் உள்ள சிறிய அறை ஒன்றில் வசிக்கிறார். ஒரு மோசமான குடிசைப்பகுதியை விடச் சற்றே மேம்பட்ட இந்த இடத்திலேயே இருபது வருடங்களாக வாழ்கிறார். கடந்த ஆண்டு விடுதலை தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். அப்போது உள்ளூரில் இருந்த நலம் விரும்பிகள் அவருக்குப் பயணசீட்டு வாங்கித் தந்தார்கள். இந்த வருடம் வாங்கித்தர யாருமில்லை. அவருக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ், வாகன நிறுத்த சீட்டை காட்டி வெறுமையாகச் சிரிக்கிறார். “எனக்கும் மகிழுந்துக்கும் இருக்கிற ஒரே தொடர்பு என் கணவர் நாற்பது வருடங்களுக்கு முன்னால் வாகன ஓட்டுனராக இருந்தார் என்பது மட்டும் தான்.” என்கிறார். கையில் துப்பாக்கியை ஏந்தியபடி கம்பீரமாக நிற்கும் தன்னுடைய இந்திய தேசிய ராணுவ காலப் புகைப்படத்தைப் பெருமிதத்தோடு காட்டுகிறார்.





