அந்தக் கொடியை தாலுகா அலுவலகத்தில் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறார்கள். அதை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 18 அன்று பறக்க விடுவார்கள். அந்தப் பொன்னாளில் தான் 1942-ல் காஜிபூர் மாவட்டம் ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்றதாக அறிவித்துக் கொண்டது. முகமதாபாத் தாலுகா அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்ற மக்கள் கூடியிருந்தார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்கள் ஷிவ் பூஜான் ராய் தலைமையில் ஷெர்பூரில் கொடியேற்ற கூடியிருந்தார்கள். முகமதாபாத்தின் தாசில்தார் கூடியிருந்த கூட்டத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
காஜிபூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1௦ அன்று 129 தலைவர்களுக்குக் கைது ஆணையைப் பிறப்பித்து இருந்தது ஆங்கிலேய அரசு. அதனால் கொதித்துக் கொண்டிருந்த மாவட்டத்தில் இந்தத் துப்பாக்கிச்சூடு விடுதலைக் கனலை கொழுந்து விட்டு எரியச் செய்தது. 19-ம் தேதி அன்று ஒட்டுமொத்த காஜிபூரும் பொதுமக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து சேர்ந்தது. அம்மக்கள் மூன்று நாட்களுக்கு ஆட்சி புரிந்தார்கள்.
அக்காலத்தின் மாவட்ட ஆவணத்தொகுப்பு, “ஆங்கிலேய அரசு கடுமையான அடக்குமுறையை ஏவியது. ஒவ்வொரு கிராமம், கிராமமாகக் கொள்ளையடித்து, பொருட்களைச் சூறையாடினார்கள், தீயிட்டு கொளுத்தினார்கள்.” என்று குறிக்கிறது. அடுத்தச் சில நாட்களில் கிட்டத்தட்ட 15௦ மக்களைச் சுட்டுக் கொன்றார்கள். ஆவணங்களின் கூற்றுப்படி இந்தக் காலகட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் 35 லட்சம் ரூபாயை பிடுங்கிக் கொண்டார்கள். 74 கிராமங்கள் கொளுத்தப்பட்டன. கிளர்ச்சியில் ஈடுபட்டதற்காகக் காஜிபூர் மக்கள் மொத்தமாக நாலரை லட்சம் ரூபாயை அபராதமாகச் செலுத்தினார்கள். அக்காலத்தில் அது மிகப்பெரிய தொகை.
அதிகாரிகள் ஷெர்பூரை தனியாகக் குறிவைத்து தாக்கினார்கள். ஷெர்பூரின் மிக வயதான தலித்தான ஹரி சரண் சிங் அந்தக் கொடிய நாட்களை நினைவுகூர்கிறார். “ஒரு ஈ காக்கை கூடக் கிராமத்தில் இல்லை. முடிந்தவரை மக்கள் இங்கிருந்து ஓடிவிட்டார்கள். ஆங்கிலேயரின் கொள்ளை நீண்டுகொண்டே இருந்தது.” என்கிறார். ஆனாலும், காஜிபூர் மாவட்டத்துக்கே பாடம் கற்பிக்க வேண்டும் என்று கறுவிக்கொண்டு இருந்தது ஆங்கிலேய அரசு. 1850-களிலேயே இண்டிகோ தோட்ட முதலாளிகளைத் தாக்கிய வரலாறு இந்த மாவட்டத்துக்கு உண்டு. இப்போது குண்டுகள், தடியடிகள் அவர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டு இருந்தன...






